Wednesday, November 14, 2012

ஆதலினால்...... காமம் கொள்வோம் உலகத்தீரே

காதல்
காற்று வெளியிடை
அவள் சௌந்தர்ய ரூபங்களை
உன்னதங்களுடன் ஒப்பிட்டு மகிழுகையில்..

காமம்
தனிமையில் இருளில்
அவள் அங்கங்களின் திரட்சியில்
ஆழ்ந்துக் கிறங்கி உன்மத்தம் கொள்கிறது

காதல்
கொடுப்பதிலும் பகிர்வதிலும்
அவசியமானால் இழப்பதிலும்
தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கையில்

காமம்
ஆக்கிரமிப்பதிலும் எடுப்பதிலும்
அவசியமானால் அழிப்பதிலும்
எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது

காதல்
ஆற்று நீராய் பரவி
ஆழமாய் ஊடுருவி
அன்பு வேரை உயிர்ப்பிக்க முயலுகையில்

காமம்
கொடும் நெருப்பாய்ப் பற்றி
உடலெரித்து உணர்வெரித்து
வாழ்வெரிக்க முழுமூச்சாய் முயல்கிறது

காதலில் காமம்
உப்பாய் சுவைசேர்த்து
சுவை சேர்த்து சுகம் சேர்த்துப் போக

காமமோ காதலில்
விஷமாய் ஊடுருவி
புயலாய் சிதைத்தும் சீரழித்துமே போகிறது

காமத்தில் காதல்
விஷக் குட த்தில் துளிப் பாலாக

காதலில் காமமோ
பாற்குடத்தில்  தேனாகிப் போகிறது

ஆகையினால்
 உலகத்தீரே
காமத்தை அடியோடு வேரறுப்போம் வாரீர்
காதலின் மேல்
மாறாத காமமது கொண்டிடுவோம் வாரீர்

23 comments:

பால கணேஷ் said...

காதலின் மீது காமம்... காதலுக்கும் காமத்துக்குமான வித்தியாசத்தையும் காதலின் அருமையையையும் அழகாய் எடுத்துரைத்த கவிதை அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பாக முடித்துள்ளீர்கள் சார்... அருமை...

நன்றி...
tm3

Unknown said...

காதல் பாதி..காமம் மீதி..
இரண்டும் சேர்ந்த கலவை நாம்!

Thozhirkalam Channel said...

அழகான கவிதை வரிகள் அற்புதமாக முடித்துள்ளீர்கள்

”தளிர் சுரேஷ்” said...

காதல் மீது காமம்! அருமை! அருமை! பகிர்வுக்கு நன்றி!

கவியாழி said...

அருமையான சிந்தனை,காதலன் காதலி பேசுவதும் காம விளையாட்டு செய்வதும்கூட ஒரு மனம் சம்மந்தப்பட்டவிஷயமே அதுவும் ஒரு மௌனமான மெய்ஞானமே ஆதலால் காதல் செய்வீர்,காமம் செய்வீர்

Admin said...

காதல்+காமம்=சிறப்பு..

G.M Balasubramaniam said...


காதல் காமம் ஒப்பீடு அருமை. காதல் பாதி ,காமம் பாதி சேர்ந்து செய்த கலவை உங்கள் கவிதை. பாராட்டுக்கள்.

ராஜி said...

காதலோடு வரும் காமம் மட்டுமே அழகானது ஐயா!

அருணா செல்வம் said...

வயதானால் எனக்கும் இப்படித்தான் பாடத் தோன்றும் என்று நினைக்கிறேன் இரமணி ஐயா.

Subramanian said...

அய்யா எனக்கு ஒன்று புரியவில்லை. காமத்தை பல வகைகளாக பிரிக்கலாம். அதில் எந்தவகையான காமத்தை வேரறுப்பது?...

சசிகலா said...

முடித்த விதம் சிறப்பு ஐயா.

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு

கே. பி. ஜனா... said...

காதலையும் காமத்தையும் மிக அழகாக ஒப்பிட்டு எழுதிய கவிதை மீது காதல் பிறக்கிறது ஒரு கணம்!

Nagendra Bharathi said...

உப்பாய்ச் சுவை சேர்க்கும் காமம் தேவை தானே ; நல்ல பகிர்வு

Unknown said...

காதலின்றி காமம் இல்லை, காமம் மட்டுமே காதல் இல்லை... அருமை அய்யா....

Anonymous said...

தன்னலம் மட்டும் கண்டால் காமம், துணைநலம் கருதினால் காதலாகும்.

மகேந்திரன் said...

தெளிவான கண்ணோட்டம் ஐயா..
பால் கலந்த விடத்தை குடிப்பதை விட...
தேன் கலந்த பால் அருந்தி...
காதலைக் கொண்டாடுவோம்...

அப்பாதுரை said...

காதல் பொய், காமம் மெய்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ரமணி சார் இன்பத்துப் பாலை கரைத்துக் குடித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.அழகாக அதன் சாரத்தை புதுக் கவிதை வடிவத்தில் தந்திருக்கிறீர்கள். நிறைவு வரிகள் மிக நன்று.

Avargal Unmaigal said...

காதலையும் காமத்தையும் மிக அழகாக ஒப்பிட்டு எழுதிய கவிதை. மிக அருமை...

காமம் இல்லாத காதல் உப்பில்லா பண்டம் போலத்தான்

r.v.saravanan said...

காமத்தை அடியோடு வேரறுப்போம் வாரீர்
காதலின் மேல்
மாறாத காமமது கொண்டிடுவோம்

அருமை சார்

Anonymous said...

சேமமுடன் காதலை காமத்துடன் சேர்த்தால்....
நல்ல பதிவு!
நல்ல கருத்து!
இனிய நல்வாழ்த்து!
வேதா. இலங்காதிலகம்.

Post a Comment