Tuesday, November 27, 2012

முக நக அக நக


ஒவ்வொரு முறை
அவனைச் சந்திக்கையிலும்
மகிழ்ச்சியினை புன்னைகையாய்
வெளிப்படுத்த முயல்வேன்  நான்

நான் புன்னகைத்ததை
உறுதி செய்து கொண்டபின்
மிக மிக யோசித்து
மெல்ல இதழ் விரிப்பான் அவன்

ஒவ்வொருமுறை
அவனை நெருங்குகையிலும்
ஆர்வமாய் அழுத்தமாய்
கை குலுக்க முயல்வேன் நான்

எனது ஆர்வத்தை
தவிர்க்க முடியாதவன் போல்
செய்யக் கூடாததைச் செய்பவன்போல்
சோர்வாய் கை நீட்டுவான்

ஒவ்வொருமுறை சிந்திக்கையிலும்
அவனை சந்தித்தது முதல்
அதுவரை நடந்தவைகளை
விஸ்தாரமாய்ச் சொல்லி
மனம் கவர முயல்வேன் நான்

தவிர்க்கமுடியாதவன்போல்
ஒரு சிறிய நிகழ்வை
பதிலுக்குச் சொல்லவேண்டுமே என்பது போல்
சுருக்கமாய் சொல்லி முடிப்பான் அவன்

சிலநாளாய் எனக்குள்ளும்
மிக லேசாய்  இவன் நமக்கு நண்பன்தானா
இவன் தொடர்பு தேவைதானா எனும் நினைவு
மனத்தைத் தொட்டுத் தொட்டு விலகிப் போக
குழம்பிக் கிடந்தேன் நான்

திடுமென்று எதிர்பாராது தேடிவந்த அவன்
தன்னை பாதித்த ஒரு நிகழ்வினை
மிக மிக  விஸ்தாரமாய்
தொடர்ந்து பேசி முடித்தான்

திரும்பிப் போகையில்
"ஏதோ உன்னிடம் மட்டும்
சொல்லவேண்டும் போல இருந்தது "என்று
கண் கலங்கிப் போனான்

முக நக என்பதற்கும் அக நக என்பதற்கும்
உண்மையான அர்த்தம் மெல்லப் புரிய
நன்பர்களைப் பெறுவதும் வெல்லுவதும் குறித்து
புத்தகத்தில் கற்றுத் தெரிந்து கொண்டதற்கு
வெட்கித்தலை கவிழ்ந்து போனேன்


31 comments:

Avargal Unmaigal said...

நட்பைபற்றிய ஒரு நல்ல பதிவு

வெங்கட் நாகராஜ் said...

நட்பு பற்றிய சிறப்பான கவிதை. தலைப்பு மிக மிக அருமை...

த.ம. 2

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பெரும்பாலான நடபுகள் தற்போது இப்படித்தான் இருக்கிறது...

அழகிய அர்த்தமுள்ள ஆழமான கவிதை...

Admin said...

ஏதோ எங்களிடமும்
சொல்லவேண்டும் போல இருந்ததே..

நன்றாகச் சொன்னீர்கள்..

கதம்ப உணர்வுகள் said...

அன்பின் ரமணி சார்,

நம் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கு...

http://www.blogintamil.blogspot.com/

ராமலக்ஷ்மி said...

அருமை.

r.v.saravanan said...

நட்பு கவிதை சிறப்பு ரமணி சார்

சசிகலா said...

சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...

” குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை “ என்ற பண்பினை விளக்கிய கவிதை. நட்பில் பிழை பொறுத்தல் பர்றி ஒரு நாலடியார் பாடல்.

நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,
அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-
நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;
புல் இதழ் பூவிற்கும் உண்டு ( - நாலடியார் 221 )

ADHI VENKAT said...

நட்பை பற்றிய கவிதை அருமை...

ஆத்மா said...

மிக அருமை
சில சந்தர்ப்பங்களில் என்னாலும் சிலர் இப்படியாய் நோக்கப்பட்டிருக்கிறார்கள்

அவர்களில் ஒருவர் கூட இன்னமும் திருபிவந்து எதுவும் சொல்லவில்லை என்பது தான் இதுவரையில் உள்ளது இனிமேலும்...?

Thozhirkalam Channel said...

உங்களது தலைப்பும் நட்பை பற்றி உங்களின் கவிதையும் அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

நட்பின் வரிகள் அருமை...tm7

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாக சொன்னீர்கள்..

எல்லோரும் சூழ்நிலைக்கைதிகளே..

உண்மையான மனிதர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல..

குறையொன்றுமில்லை. said...

நட்புக்கவிதை நல்லா இருக்கு பிடித்தவரிகல் கீழே

முக நக என்பதற்கும் அக நக என்பதற்கும்
உண்மையான அர்த்தம் மெல்லப் புரிய
நன்பர்களைப் பெறுவதும் வெல்லுவதும் குறித்து
புத்தகத்தில் கற்றுத் தெரிந்து கொண்டதற்கு
வெட்கித்தலை கவிழ்ந்து போனேன்

அருணா செல்வம் said...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. குறள்- 786

இந்தக் குறளுக்கு அழகான ஆழ்ந்த விளக்கத்தைத் தந்திருக்கிறீர்கள் இரமணி ஐயா.

முகத்திற்கு நாம் எப்பொழுதுமே அரிதாரம் புசிக்கொண்டே வாழ்ந்தாலும் மனம் எப்பொழுதும் உண்மையாகத் தானே இருக்கிறது.

அருமையான கவிதை ஐயா.

மனோ சாமிநாதன் said...

கவிதை மிக அருமை!

குட்டன்ஜி said...

த.ம.9

Unknown said...

சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்!நானும் கண்டிருக்கிறேன்!

காரஞ்சன் சிந்தனைகள் said...

"ஏதோ உன்னிடம் மட்டும்
சொல்லவேண்டும் போல இருந்தது "என்று
கண் கலங்கிப் போனான்
// நட்பினைப் போற்றும் வரிகள் அருமை! நன்றி ஐயா!

semmalai akash said...

நடப்புக்கு இலக்கணம் எழுதியதுபோல் இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.tm 11

Anonymous said...

நட்பு எங்கே எப்போது மனம் திறக்கும் என்புதும் புரியாத புதிர் தான்.
நல்ல வரிகள் .மிக்க நன்றி.
தாங்கள் எனக்குக் கருத்திடுவது. இரண்டு பெயரில் வந்து விழுகிறது.
ரமணி என்றும் எஸ் வெங்கட் என்றும் (இரண்டு தடவை இப்படி வந்துள்ளது.)
அப்படியே விட்டுள்ளேன். வரும் போது பாருங்கள்.
வேதா. இலங்காதிலகம்.

கரந்தை ஜெயக்குமார் said...

நட்பின் உண்மை உருவத்தைக் காட்டும் அருமையான பதிவு அய்யா

கோமதி அரசு said...

அன்பின் ஆழத்தையும், நட்பின் ஆழத்தையும் , சொல்லும் கவிதை அற்புதம்.
நமக்கு மிகவும் நெருங்கியவர்களை கண்டால் தான் கண்கள் ஊற்றெடுக்கும்.

கதம்ப உணர்வுகள் said...

தலைப்பே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது ரமணிசார்... சிந்தனைச்சிற்பியின் செயல்கள், எண்ணங்கள், பேச்சுகள் எல்லாமே நல்லவை, உலகுக்கு அவசியமானவை, பயன்படக்கூடியவை என்று எதாவது சிந்தித்துக்கொண்டே இருக்கும்...

உறக்கத்தில் கண் இமைகள் மூடினாலும் உறக்கம் ஆழ்மனதை தொடும்வரை சிந்தனையின் சிறகுகள் விரித்தபடியே கருவுக்கான இரைக்காக அலைந்துக்கொண்டே இருக்கும்... இரைக்கிடைத்ததும் பறவை எப்படி தன் கூட்டுக்கு ஓடிவந்து தன் குஞ்சுகளுக்கு இரையை பகிர்கிறதோ அதுபோல கரு கிடைத்ததுமே அழகிய சொற்களால் அலங்காரமின்றி எளிய அமைப்புடன் கவிதை படைத்து சுடச்சுட பரிமாறிவிடுகிறீகள் வாத்ஸல்ய அன்புடன் வாசகர்களுக்காக.... தலைப்பை வெகு நேரம் உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தேன் ரமணிசார்....

நட்பை நாடி நாம் சென்று கிடைக்கும் சந்தோஷமும் நல்லவையும் நம்மைத்தேடி நம் நல்லவை விரும்பி வந்து ஏற்கும் நட்பு நம் மனதுக்கு பலம் சேர்க்கும்.. நம் நல்லவைகளில் சந்தோஷிக்கும்.. நம் துன்பங்களில் சட்டென தன் துயரங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஓடிவந்து தோளணைக்கும்.... தன் கண்ணீரை மறைத்துவைத்துக்கொண்டு தன் நட்பின் கண்ணீர்த்துளியின் உப்பினை சுவைத்து கண்ணீரை நிறுத்தும்... சிப்பிக்குள் இருக்கும் முத்தாய் பொக்கிஷமாய் நெஞ்சினில் எப்போதும் நிலைத்து நிற்கும்....

எப்போதுமே நட்பைப்பற்றி சொல்லும்போது நான் மேற்சொன்னபடி தான் எதார்த்தமாய் பலர் எழுதி வாசித்திருக்கிறேன். ஏன் நானுமே அப்படி தான் எழுதி இருக்கிறேன்.. ஆனால் ரமணி சார் உங்க வித்தியாசமான சிந்தனையே உங்க ஸ்பெஷாலிட்டி.. எப்போதும் உங்கள் படைப்பின் கருத்தை ஆழ்ந்து கவனித்தால் நுணுக்கமான ஒரு விஷயம் புலப்படும்... நார்மலாக நாம் கதையோ கவிதையோ எழுதும்போது நம் உணர்வுகள் எண்ணங்கள் நம் யோசனைப்படியே தான் படைக்கப்படும்... ஆனால் நீங்கள் எதிராளியின் நிலையில் நின்று...

தீர்க்கமான யோசனைகளின் ஊடே அவன் இப்படி தான் பேசுவான், நடப்பான், அவன் செயல்களின் தீர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்று கிரஹித்து எழுதுவது உங்களுடைய தனித்தன்மை ரமணி சார்.. அதுக்கு முதல்ல ஹாட்ஸ் ஆஃப் உங்களுக்கு....

கவிதையில் சொல்லவந்ததை பார்க்கும்போது....

தினப்படி வாழ்க்கையில் நாம் எந்திரமாய் சுழன்று காலை எழுகிறோம் நம் அன்றாடப்பணிகளை செய்கிறோம் ரோட்டில் நடக்கிறோம். நம்மை கடப்பவர்களை உன்னிப்பாய் கவனிக்கும் எத்தனத்திற்கு முயலாமல் நம் வேலைகளில் மூழ்கிவிடுகிறோம்.. பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருக்கும்போதும் சரி, பஸ்ஸில் நம்முடன் பயணிக்கும் நம் அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்போரிடமும் சரி ஒரு சின்ன புன்னகைக்கீற்றோ அல்லது சாதாரணமாய் பேச்சுக்கொடுக்கும் எண்ணமோ இல்லாமல் பாட்டுக்கேட்டுக்கொண்டோ அல்லது மொபைலில் பேசிக்கொண்டோ அல்லது எதையாவது சிந்தித்துக்கொண்டோ அல்லது அன்றைய நம் பார்வைக்கு ஆளாகும் வேடிக்கைக்காட்சிகளை பார்த்துக்கொண்டோ இருப்போம்... ஆனால் சிநேக பாவத்துடன் ஒரு சின்னப்புன்னகை அடுத்தவரைப்பார்த்து புன்னகைத்தாலே போதுமானது.... அது செய்கிறோமா?? இல்லை என்று தான் தோன்றுகிறது....

சிநேகபாவம் தான் நம்மை அடுத்தக்கட்ட நிலைக்கு உயர்த்தும் உதவிடும் குணமாக.... யாராவது நின்றுக்கொண்டிருப்போரின் கையில் இருக்கும் சுமக்க முடியாத ஸ்கூல் பேகோ கூடையோ வயர்ப்பையோ மூடையோ குழந்தையையோ வாங்கி நம் மடியிலோ அல்லது நமக்கு அருகிலோ வைத்துக்கொண்டு பொறுப்பாய் பார்த்துக்கொண்டு நமக்கு முன் அவர் இறங்கும் தருணத்தில் அதை ஒப்படைப்பது....

கதம்ப உணர்வுகள் said...

நம் நற்செயல்களின் பலன் எப்படி நீட்டிக்கும்?? அவரின் முகத்தில் புன்னகை மலரும் அடுத்த நாள் நம்மைப்பார்க்கும்போது... அப்படியே புன்னகையின் தொடர்ச்சியில் நட்பு மலரும்.... நட்பு நமக்கு மட்டும் என்றானது போய் நம் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நட்பு பலப்படும்... நம் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் அறிமுகப்படுத்துவோம்.. அவர் மனைவி மக்களை நமக்கு அறிமுகப்படுத்துவார்.. இப்படியாகத்தொடரும் நட்பு நாளாவட்டத்தில் நமக்கு நல்ல ஆசானாகவோ தாயாகவோ அமையும் அற்புதமான பாக்கியமும் கிடைக்கும்....

மிக அருமையான தொடக்கம் ரமணி சார்....

எதிர்ல நிக்கிறவர் சிரிக்கலைன்னாலும் நம் மனதில் இருக்கும் நிறைந்த அன்பு எப்படின்னா நாம் யாரையாவது எதிர் எதிரா அகஸ்மாத்தா பார்க்க வேண்டி வரும்போது சட்டுனு புன்னகை நம் முகத்தில் மலரும்.... அந்த புன்னகையின் மகிழ்வு எதிராளியை தொற்றிக்கொள்ளும் அளவுக்கு ஆத்மார்த்தமான புன்னகையாக.....

ஆனால் எதிராளி எதற்கும் மசியாதவனாகவோ அல்லது தன் குடும்பப்பிரச்சனை அல்லது அலுவல் ப்ரச்சனை கடன் பிரச்சனை இத்தனையும் மனதில் போட்டு உருட்டிக்கொண்டு இருக்கும்போது சட்டுனு நம் புன்னகை அவனுக்கு “ நம்மைப்பார்த்து தான் சிரிக்கிறாரா? நமக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவரா? நம் சொந்தமா? ஒன்னு விட்ட பந்தமா இப்படி குழப்பி ஒருவழியா சரி சிரிக்கிறார் நம்மைப்பார்த்து நாமும் சிரிச்சு வைப்போம் சும்மா “ என்று மெல்ல இதழ் விரிக்கிறார்....

நம் முதல் சந்திப்பு புன்னகையில் மகிழ்வான புன்னகையில் தொடங்கி அடுத்த நாள் காணும்போது இன்னும் கொஞ்சம் முன்னேறி “ என்னப்பா எப்படி இருக்கீங்க என்று கேட்க இயலவில்லை என்றாலும் நமக்கு தெரிந்தவர்களை நண்பர்களை கண்டதுமே கைக்குலுக்க முனைவோமே அது போல கைக்குலுக்க கை நீட்டுவோம்...

என்னது இது போனாப்போகுதுன்னு நேத்து சிரிச்சு வெச்சா இன்னைக்கு இதை அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு கைக்குலுக்க வந்துட்டாரே என்று நினைப்போரும் உள்ளனர்... ஒருசிலர் ஐயோ இவரை எனக்கு தெரியவே தெரியாது.. சும்மா சிரிச்சதுக்கு கைக்குலுக்க வராரே நாளை நம்மிடம் பணமோ கடனோ உதவியோ எதுனா கேட்டுட்டா? என்ற அவர் சிந்தனை நீட்டிய கைக்கு குலுக்க தன் கையை நீட்ட தாமதிக்கும் ஒரு நொடி..... ஒரு சிலரோ பிரச்சனைகளில் நானே உழன்று அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் இதுல இது ஒன்னு தான் குறைச்சல் என்பது போல ஆயாசமாய் நீட்டுவார்கள் இஷ்டமே இல்லாமல்...

நம் மனதில் அன்பு தான் பெருகி இருக்கிறதே.. அதனால் அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அந்த நினைப்பு கண்டிப்பாக தவறாமல் நமக்கு வந்துக்கொண்டே இருக்குமே.. அதை அவரிடம் பகிர்ந்தால் இன்னும் நம் மனம் சந்தோஷம் அடையுமே என்று ஆசையாக சொல்ல ஆரம்பித்தால்.. வந்துட்டாண்டா கிளம்பி கதைச்சொல்ல என்பது போல எரிச்சலை மனதுள் அடக்கிவைத்துக்கொண்டு வெளியில் ம்ம்ம்ம் சொல்லுங்க என்று வேண்டாவெறுப்பை சின்ன புன்னகையில் மறைத்து அவஸ்தையாய் நெளிந்துக்கொண்டே நம் பேச்சுகளை கேட்பதாக பாவனைச்செய்வார்....

நாம இவ்ளோ பேசினோமே மனம் விட்டு கேட்டிருப்பானோ என்ற சந்தேகத்தில் நாம் தலை உயர்த்தினால் ஒரு அசட்டு சிரிப்புடன் அதை ஆமோதிப்பது போல தலையாட்டிக்கொண்டே ஒருவேளை நம் மனதை இவன் படித்துவிடுவானோ என்ற பயத்தில் சம்மந்தமே இல்லாத எதுனா சொல்லவேண்டுமே என்ற ஒரு விஷயத்தை சுவாரஸ்யம் இல்லாமல் நம்மிடம் சொல்ல முனைவார்....

இப்படி இவரின் எல்லாச்செயல்களும் நடவடிக்கைகளும் பேச்சுகளும் நம் மனதை அசைக்காமல் இருக்குமா?? யோசிக்காமல் இருக்குமா?? நாமும் மனுஷப்பிறவி தானே?? எதையுமே எதிர்ப்பாராமல் நட்புக்கொள்ள நாம் தெய்வப்பிறவி இல்லையே... எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் வைக்கும் நட்பு தான் இறுதிவரை நிலைக்கும் என்றாலும்.... நம் நட்பு அவன் எல்லைத்தொடர்புக்குள் இருக்கிறதா என்பது தானே இப்போதைய கேள்வி.... இப்படி அவனின் சுவாரஸ்யமில்லாத விருப்பமில்லாத செய்கைகளைப்பார்க்கும்போது நாம் அவனிடம் தான் இத்தனைநாட்கள் பேசினோமா அல்லது சுவற்றோடு பேசிக்கொண்டிருந்தோமா என்று எண்ண வைத்துவிடுமே.. அப்ப நம் மனம் விழித்துக்கொண்டு யோசிக்கவைக்கும்.... இவன் தொடர்பு நமக்கு அவசியமா என்று.... நம் வரவை விரும்பாதவன், நம் பேச்சை காதுகொடுத்து கேட்காதவன்... விருப்பமே இல்லாமல் ஏதோ பேசவேண்டுமே என்பதற்காக தலையாட்டுபவன் எப்படி நட்பு வட்டத்தில் இருக்கமுடியும் இப்படியெல்லாம் நாம் நம்மைக்குழப்பிகொண்டிருக்க... அங்கே நிலை வேறு மாதிரி....

கதம்ப உணர்வுகள் said...

மிக அருமையான பத்தி சார் இது... ரசித்து மீண்டும் மீண்டும் வாசித்தேன்... வாசிச்சு முடிச்சப்ப எனக்கு தோணினது என்னன்னா....

நம் வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ நண்பர்கள் உறவுகள் இருப்பார்கள்.... ஒருத்தர் நம் மனசுக்கு நெருக்கமாக இருக்க ரொம்ப காலம் பழகி இருக்கணும்னு அவசியம் இல்லை... ஒரு நொடி போதும் நம் மனசுல நிலைத்து ஆழ்ந்து இருந்துவிட... சந்தோஷத்தை மட்டும் நாம எல்லார் கிட்டயும் பகிர்வோம்.. ஆனால் நமக்கு ஒரு அவஸ்தை, இடையூறு, துன்பம், ப்ரச்சனை எனும்போது மட்டும் வெறும் வாய் வார்த்தைகளால் ஆறுதல் சொல்லுவோரிடம் நம் மனசு போகாது... நம்மிடம் ஆத்மார்த்தமாக உள்ளார்ந்த அன்புடன் பழகும் நம் நலனை மட்டுமே கோருவோரிடம் தான் நம் அவஸ்தைகளை பகிரத்தோணும்... வெட்கப்படமாட்டோம், அழ யோசிக்கமாட்டோம், தோளணைத்து ஆறுதல் சொல்வாரோ என்று காத்திருந்து அவர் மடியில் தலை புதைத்து மனம் ஆறும் வரை அழுது தீர்ப்போம்... ஆனால் அந்த அழுகையை மெல்லக்குறைத்து நம் மனதை ஆசுவாசப்படுத்தி அதற்கான தீர்வைத்தருவது கண்டிப்பா நம் ஆத்மார்த்தமான நட்பால் மட்டுமே இயலும் என்பதை மிக எளிய வார்த்தைகளில் புரியவெச்சுட்டீங்க ரமணி சார்.... எந்த ஒரு நெருக்கமான உறவால் கூட முடியாத ஆறுதலை ஒரு ஆத்மார்த்தமான நட்பு தருகிறது என்றால்..... அந்த நட்பைத்தேடி எவ்வளவு தூரம் என்றாலும் ஓடிவந்து தன் சிரமங்களை சொல்லி முடிக்கும்போது மனசுல ஒரு நிம்மதி அலை பரவிடுமே.. அதை உணர்வோரால் மட்டுமே புரிந்துக்கொள்ளமுடியும்... முக நக நட்பு என்பது சும்மா வெளிப்பூச்சுக்காக இதோ பார் எனக்கும் இருக்கு நட்பு என்று பறைச்சாற்றிக்கொள்ள மட்டுமே... சினிமாவுக்கும், உல்லாசத்துக்கும் மட்டுமே அது ஒத்துக்கொள்ளும் நட்பு.. நமக்கு ஒரு துன்பம் என்று சொல்லி அழும்போது அது நம் அழுகையை கூட தொந்திரவாய் நினைத்து நம்மை விரட்டும் நொடிக்காக காத்திருக்கும்....அது நிலைக்கவும் நிலைக்காது... அக நக நட்பு என்பது நம் மனதிலேயே ஆழ்ந்து நிலைத்து நம்முள் கரைந்து நம்முள் நாமாய் இருந்து நம்மை வழிநடத்தி நம் காலம் வரை நம்முடனே இருந்து நம் காலத்திற்கு பிறகும் நம் நட்பைச்சொல்லி சந்ததிகளும் சொல்லி பெருமைப்படும் நட்பு.... இப்படிப்பட்ட ஒரு நட்பை தான் நாம் அவனுக்கு தந்திருக்கிறோம் என்ற கம்பீரம் நமக்குள் எழும்.....

அதை மிக அருமையாகச்சொல்லி எங்கள் எல்லோரையும் ஒரு நிமிடம் கனக்கும் மௌனத்தில் ஆழ்த்திவிட்டீர்கள் ரமணி சார்... நானும் பெருமையுடன் சந்தோஷத்துடன் சொல்கிறேன்.. ரமணி சாரின் நட்பு எனக்கு கிடைத்தது பெரும் பேறு.... தொலைபேசியில் பேசும்போது தந்தையின் வாத்ஸல்யத்துடன் நீங்கள் அன்பை பகிரும் அந்த அற்புதமான தருணங்களை எப்போதும் பொக்கிஷம் போல் வைத்திருப்பேன் ரமணி சார்... மனதை அசைத்த அற்புதமான கவிதை வரிகள்...

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார் உங்கள் நட்பு வட்டத்தில் நானும் இருப்பதால்.....

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //


நம் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கு...//

நம் தளம் எனச் சொல்லிப்போனது
அதிக மனம் மகிழச் செய்தது
மிக்க நன்றி

அப்பாதுரை said...

சுலபமாகச் சொல்லிப் போகக்கூடிய கரு இல்லை. எனினும் சுலபமாகச் சொல்லியிருக்கிறீர்கள். படித்ததும் மிக நிறைவாக உணர்ந்தேன்.

Seeni said...

natpu !

sirappu!

ஹேமா said...

கவிதையை முழுதாக வாசித்தபின் இன்னொருமுறை தலைப்பைப் பார்த்தேன்.....மிக மிக அருமை ஐயா !

Post a Comment