Monday, December 31, 2012

வாழ்த்தி வளமாய் வாழ்வோம்

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

Friday, December 28, 2012

காலமும் கவிஞனும்

கலைஞனுக்கேயுரிய மென்மையையும்
கொலைகாரனுக்கேயுரிய கோடூரத்தையும்
ஒன்றாய்க் கொண்டவனை
நீங்கள் பார்ப்பதுண்டா ?
கவிஞன் தினமும் பார்க்கிறான்

ஒரு கையில் தூரிகையையும்
மறுகையில் கூர்வாளையும்
ஏந்தித் திரிபவனை
நீங்கள் சந்திப்பதுண்டா ?
கவிஞன் தினமும் சந்திக்கிறான்

ரசித்து ரசித்து
ஒரு படைப்பை உருவாக்கி மெருகேற்றி
பின் அதை சிதைத்து அழித்து ரசிப்பவனை
நீங்கள் உணர்ந்ததுண்டா ?
கவிஞன் தினமும் உணர்கிறான்

பருவ உருவ மாறுதல்மட்டுமின்றி
அத்தனை மாறுதலுக்கும் காரணமாயிருந்தும்
பிடிபடாது திரிபவனை
நீங்கள் புரிய முயன்றதுண்டா ?
கவிஞன் புரிந்து கொண்டிருக்கிறான்

காலனுக்கு ஏதுவாக
காரிய மாற்றிக் கொண்டிருந்தும்
பழியேற்கா பாதகனை
நீங்கள் அறிய முயன்றதுண்டா ?
கவிஞன் தெளிவாய் அறிந்திருக்கிறான்

அதனால்தானே
எதனையும் எளிதாய் மென்று விழுங்கி
ஏப்பமிட்டு ரசிக்கும் அவன்
"காலமான"தாக்கிச் சிரிக்கும் அவன்
கவிஞனிடம் மட்டும் காலிடறி விழுகிறான்

அதனால்தானே
காலத்திற்கே காலனாகும் கவிஞன் மட்டுமே
காலம் கடந்தவனாகிப் போகிறான்
காலத்தை வென்றவனாகிப்  போகிறான்
காவியமாகியும் போகிறான்

Tuesday, December 25, 2012

தொடர் பயணம்

தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொண்டவர்கள்
எப்போதும்
அலுத்து அமர்வதோ
சலித்து ஒதுங்குவதோ  இல்லை

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்பவர்கள்
என்றுமே  
தேங்கி நிற்பதோ
சோர்ந்து சாய்வதோ இல்லை

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்பவர்களுக்கு 
எச் சூழலிலும்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ இல்லை 

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
 என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.

Monday, December 24, 2012

"காலத்தை வென்றவன் காவியமானவன் "

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும் காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
நல்லவன் வாழ்வான் தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்


Saturday, December 22, 2012

உபதேசம்


அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்


Monday, December 17, 2012

உலகம் அழிவது நல்லதுதானோ ?


எதிர்படுபவர்கள் எல்லோருடைய பேச்சிலும்
உலக அழிவு குறித்த பேச்சு இருந்தது

அவர்கள் உரையாடலில்
பார்த்து முடித்த திரைப்படம் போல
படித்து முடித்த புத்தகம் போல
இதுவரை வாழ்ந்த வாழ்வு குறித்த
அங்கலாய்ப்பே  அதிகம் இருந்தது
அதில் சந்தோதோஷமானது அதிகம் இல்லை

இருபத்தொன்றுக்குள் செய்து முடிக்கவேண்டிய
நீண்ட பட்டியல் இருந்தது
அதில் உடலால் அனுபவிக்க வேண்டியதே
அதிகம் இருந்தது
சுய நலமே கூடுதலாக இருந்தது
பொது நலமென்பது அறவே இல்லை

அவர்களது உடல் மொழியில்
பரபரப்பு இருந்த அளவு
எதிர்பார்ப்பு தெரிந்த அளவு
மயன் காலண்டரின் மீது கொண்ட
நம்பிக்கை தெரிந்த அளவு
பயமோ வருத்தமோ துளியும் இல்லை

காரணமறிய முயன்ற போது
எல்லோரும்  மிகத் தெளிவாக இருந்தார்கள்
"நாம் மட்டும் அழிந்து உலகம் இருந்தால்
கவலை கொள்ள வேண்டும
நாம் மட்டும் இருந்து உலகம் அழிந்தாலும்
கவலை கொள்ள வேண்டும்
எல்லோரும் அழிந்து போகையில்
கவலைப் பட என்ன இருக்கிறது
ஒரு வகையில் நாம் இல்லாத உலகில்
யாரும் இல்லை எதுவும் இல்லை என்பது கூட
ஒரு வகையில் சந்தோஷம்தான் " என்றார்கள்

மனதையும் உலகையும்
இனியும் பயன்படுத்த இயலாதபடி
அதிகம் முறைகேடாய்ப் பயன்படுத்தி
கழிவாக்கிவிட்டாமோ என பயமாய் இருக்கிறது
மயன் காலண்டர்படி  உலகம் அழிந்தால் கூட
நல்லதுதானோ எனப் படுகிறது எனக்கு

Friday, December 14, 2012

புலம்பி அலையும் பொது நலம்


உணவைத் தீர்மானிக்கும் அதிகாரம்
நாவுக்கும் நாசிக்கு போக
எகத்தாளம் போடுகிறது மனது
குடலும் உடலும் நாசமாவதறிந்து
குழம்பித் தவிக்கிறது அறிவு

வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
துள்ளிக் குதிக்குது பண நாயகம்
நேர்மையும் நியாயமும் புலம்புதல் கண்டு
நொந்துத் துடிக்குது ஜன நாயகம்

நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
மீசை முறுக்குது சட்டம்
உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
கதறித் திரியுது நியாயம்

மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
பணத்திற்கும் பதவிக்கும் போக
எகிறிக் குதிக்குது அராஜகம்
எளிமையும் ஏழ்மையும்  ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்

வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரோடு வளருது சுய நலம்
மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்


Wednesday, December 12, 2012

பாரதியும் சூப்பர் ஸ்டாரும்


நமக்கு உயிரளித்து
உலகில் உலவவிட்டவர்களை விட
நமக்கு கல்வி கொடுத்து
செம்மைப் படுத்தியவர்களை விட
நாம் சறுக்கியபோது
விழாது காத்தவர்களை விட
நாம் சோர்ந்தபோது
நமக்கு ஊக்கமளித்தவர்களை விட

நம் பொழுதை நாமே அறியாது
நம்மிடமே களவாடியவர்கள்
நம் சிறுவாட்டுப் பணத்தை
சிதறாது பறித்தவர்கள்

சுயமாக ஏதுமின்றி
ஆட்டுபவனுக்கு ஏற்றார்ப்போல
ஆடம் மட்டுமே தெரிந்தவர்கள்

குரலெத்துப் பாடாது
சிறந்த பாடகனுக்கு
வாயசைப்பு  கொடுப்பவர்கள்

முதலீடு ஏதுமின்றி
அடுத்தவன் முதலீட்டில்
ஆட்டம் காட்டுபவர்கள்

வாலிபம் இருக்கிறவரையில்
காதல் காட்சிகளில்
புகுந்து விளையாடி

நடுவயதில் தவறாது
சமூக அக்கறையை
வசனத்தில் மட்டுமே காட்டுபவர்கள்

சேர்த்த பணத்தைப் பாதுகாக்க
அவ்வப்போது வாய்ஸ் கொடுத்து
தன்னை பலப்படுத்திக் கொள்பவர்கள்

பாலுக்கும் பூனைக்கும்
பாதுகாவலாய் இருப்பதுபோல்
இரு துருவங்களுக்கும்
இதமாய் இருப்பவர்கள்

எப்படி இப்படிக்
கொண்டாடப்படுகிறார்கள்
எப்படி யோசித்த போதும்
காரணம் விளங்கவே இல்லை

என்ன செய்வது
கூடலழகர் பெருமாள் கோயில் கூட
ஒயின்ஸ் ஷாப்புக்குப் பின்னால் என
அடையாளம் காட்டப் படுவது போல

மகாகவி பிறந்தது கூட
சூப்பருக்கு முதல் நாள் என
ஞாபகம் வைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது

ஒரு வகையில் இந்தப்
பதிவின் தலைப்பைப் போலவும்

Monday, December 10, 2012

கவிதை என்பது உணர்வு கடத்தி


" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்

"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே  கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?


Sunday, December 9, 2012

நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

Saturday, December 8, 2012

நிஜமும் நிழலும்


வனவாசம் முடிந்து திரும்பும் ஸ்ரீராமனுக்காக
மாலைக்குப் பின் முதன் முதலாய்
மீண்டும் பகலைக் கண்ட அயோத்தி
ஒலி ஒளி வெள்ளத்தில் தத்தளிக்க

ஒழிய இடமில்லா நிசப்தமும் இருளும்
ஒதுங்கியிருந்த அந்தப்புரத்துள்
புகைப் போல் மெல்லப் பரவி
திடப் பொருளாய் உருமாறத் துவங்க

தலைவிரி கோலமாய் இருளோடு இருளாக
இறுகிப் போய்க் கிடந்தாள்
இளமையை யும் அழகையும் உணர்வையும்
காலக் கரைசலில் கரையவிட்ட ஊர்மிளை

அடக்குமுறைக்குப் பயந்திருந்த அடிமையாய்
அதுவரை அடங்கிக் கிடந்த பணிப்பெண் மெல்ல

"மகாராணி அச்சமாய் இருக்கிறது
மன்னரை வரவேற்கும் விதமாய்
ஒரு சிறு அகல் விளக்காவது ஏற்ற
அடிமையை அனுமதிக்க வேண்டும்"எனப் பணிகிறாள்

மெல்லப் புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "என்கிறாள்

அரண்மனை வாயிலில்
ஸ்ரீ ராம ஜெய கோஷம்
விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது


Tuesday, December 4, 2012

நிஜமாகும் கட்டுக்கதை

ஏழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

Monday, December 3, 2012

சில சந்தேகங்கள்


 சராசரிகள் எல்லாம் பள்ளி நாட்களில்
புத்திசாலிகளாய் ஜொலிக்க
உலகுக்கு பல அபூர்வ கண்டுபிடிப்புகளைக்
கொடுத்தவர்கள் எல்லாம் ஏன்
பள்ளியில் சேரவே
தகுதியற்றவர்களாய்க் கருதப்பட்டார்கள் ?

கல்வித்திட்டம் சரியில்லையா அல்லது
நம் அனுமானங்கள் சரியில்லையா ?

சராசரிகள் எல்லாம் இளமைக்காலங்களில்
அறிவுப் பெருக்கத்திற்கு
நூல்களையும் சான்றோர்ளையும் சார்ந்திருக்க
தீர்க்கதரிசிகள் எல்லாம் ஏன்
தனிமையையும் காடு மலைகளையும்
விலங்கினங்களையும் சார்ந்தே இருந்தார்கள் ?

நூல்களைவிட தனிமையும் விலங்கினங்களும்
அதிகம் சொல்லித் தருமோ ?

அறிஞர்களும் சான்றோர்களும்
தங்கள் உணர்வுகளை எண்ணங்களை
நேரடியாக வெளிப்படுத்திப் போக
எல்லையற்ற சக்திமிக்கவனுக்கு மட்டும் ஏன்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
ஒரு அவதாரமோ ஒரு தூதுவனோ
அவசியத் தேவையாக இருக்கிறது ?

ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு
மட்டும்தானா ? அல்லது
மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா ?