Saturday, November 30, 2013

மரபுக் கவிதையும் ரவை உப்புமாவும்

எப்பொழுதும் எம்வீட்டில் குறைவு இன்றி
எப்பொருளும் எந்நாளும் இருக்கும் அதனால்
முப்பொழுதும் தப்பாது குறைகள் இன்றி
நளபாகம் படைத்திடுவாள் எந்தன் துணைவி

எப்படித்தான் சுதாரித்து இருந்தால் கூட
என்றேனும் ஒர்நாளில் சமையல் செய்ய
எப்படியோ பொருளொன்று குறைந்து போகும்
அப்போது சிலநிமிடம் குழப்பம் சூழும்

மல்யுத்தப் போட்டியிலே கீழே வீழ
மறுகணமே துள்ளியெழும் வீரன் போல
இல்லாத பொருள்குறித்தே எண்ணி இராது
சட்டெனவோர் முடிவெடுப்பாள் இல்லக் கிழத்தி

எதிர்க்கடைக்கு உடனடியாய் என்னை அனுப்பி
வறுத்தரவை அரைக்கிலோவும் அதற்குத் தோதாய்
கிளிநிறத்து மிளகாயும் வாங்கச் சொல்லி
உடனடியாய் செய்திடுவாள் உப்பு மாவே

நினைத்தவுடன் உடனடியாய் செய்யும் உணவு
உப்புமாபோல் உலகினிலே ஏதும் இல்லை
மனைவியர்க்கும் அவசரத்தில் உதவும் பதார்த்தம்
நிச்சயமாய் உப்புமாபோல் எங்கும் இல்லை

அதுபோல

எழுதுவது என்றெண்ணி அமர்ந்த பின்னே
எல்லாமே கற்பனையில் வந்து போகும்
எழுதிவிடத் துவங்கியதும் ஊற்று நீராய்
வார்த்தைகளும் சரளமாக வந்துச் சேரும்

எப்படித்தான்  ஆர்வமாக இருந்தால் கூட
என்றேனும் ஒருநாளில் கவிதைப் புனைய
எப்பொருளும் அமையாதுப் பூச்சிக் காட்டும்
எரிச்சலிலே எனைநிறுத்தி ஆட்டம் காட்டும்

வள்ளலுக்கு வருகின்ற வறுமை போல
வீரனுக்குள் வளர்கின்ற சோர்வு போல
உள்ளமதில் வெறுமையது சூழ்ந்த போதும்
அறிவதுவோ வேறுவழி ஒன்றைக் காட்டும்

"அச்சதற்குள் களிமண்ணைத் திணித்து எடுக்க
அழகான பொம்மையது வருதல் போல
சட்டத்துள் வார்த்தைகளை அடுக்கி எடுநீ
அழகான கவியொன்று கிடைக்கும்  "என்கும்

அதன்வழியே ஏழெட்டு எதுகை எடுத்து
அதற்கீடாய் மோனையையும் சேர்த்து எடுத்து
உடனடியாய் கவியொன்றைச்  செய்வேன் நானே
ஒருநொடியே ஆகுமதைச்  செய்யத் தானே

அதனால்

நினைத்தவுடன் செய்கின்ற உப்பு மாபோல்
உடன்கவிதை வேண்டுமெனில் தடங்கல் இன்றி
அனைவருக்கும் உதவுவது மரபு ஒன்றே
இளைஞரெல்லாம் இதையறிந்தால் நன்மை உண்டே

30 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் ருசிக்க வைக்கும் அழகான கவியொன்று கிடைத்து விட்டது... வாழ்த்துக்கள் ஐயா...

Anonymous said...

''..ஒருநாளில் கவிதைப் புனைய
எப்பொருளும் அமையாதுப் பூச்சிக் காட்டும்
எரிச்சலிலே எனைநிறுத்தி ஆட்டம் காட்டும்...''
உண்மை தான். எப்படி என் மனது படம் பிடிக்கப் பட்டது.
நன்றி ஐயா!.
பணி தொடர இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஸாதிகா said...

கவிதையை மிகவுமே ரசித்தேன்.ராவாவும் நெய்யும் சேர்த்துக்கிளறி சுடச்சுட உப்புமாவை ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டால் ஏற்படும் உணர்வு உங்கள் கவிதையில்.இதை வாசித்தீர்ர்களா?

http://shadiqah.blogspot.in/2010/07/blog-post_5021.html

tha.ma 3

PARITHI MUTHURASAN said...

ஹா...ஹா...அய்யா மரபு வழி தரணியாளும் ரமணி புலவரே.....உமது உப்புமா கவிதை உப்பும் உரைப்புமாக நல்ல சுவை

தி.தமிழ் இளங்கோ said...

// நினைத்தவுடன் செய்கின்ற உப்பு மாபோல்
உடன்கவிதை வேண்டுமெனில் தடங்கல் இன்றி
அனைவருக்கும் உதவுவது மரபு ஒன்றே
இளைஞரெல்லாம் இதையறிந்தால் நன்மை உண்டே //

கவிஞர் அவர்களின், இந்த வரிகளில் நான் மாறுபடுகின்றேன். புதுக் கவிதையை சட்டென்று இயற்றுவது போல் மரபுக் கவிதையை எழுத இயலாது. அதற்கு தொடர்ச்சியான பயிற்சி வேண்டும். நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் வெண்பா, ஆசிரியப் பா என மரபுக் கவிதைகளை ந்ன்றாக எழுதுவேன். (நோட்டில் எழுதி வைத்து இருந்த அனைத்தும் 1977 வெள்ளத்தில் சேறாகி அழிந்து விட்டன) நான் மரபுக் கவிதை எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன. இப்போது எனக்கு புதுக் கவிதைதான் சட்டென வருகிறது.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

அது என்னமோ தெரியவில்லை ஐயா இந்த இடத்தில் எனக்கு எப்போதும் கைகொடுப்பது
என் ஆதி பராசக்தித் தாயவள் மட்டுமே தான் .வரிகளுக்குப் பஞ்சம் வந்தால் அன்று
நிட்சயமாக பக்திப் பாடல் ஒன்றினைப் புனைந்திருப்பேன் .நொடிப் பொழுதில் மலரும்
கற்பனைக்குள் தான் அதிக சுவாரஸ்யம் கலந்திருப்பதாகவும் நான் உணர்கின்றேன் .
வாழ்த்துக்கள் ஐயா எப்போதும் தங்கு தடை இன்றி வார்த்தைகள் உங்களிடம் வசப்பட .

சந்திரகௌரி said...

நினைத்த போது கவி எழுத நினைக்கு முன்னே வந்துவிடும் கவிஆற்றல்பெற்றதனால் படைக்கின்றீர் அருங்கவிகள் . உப்புமாக்கு ஒப்பாமோ உங்கள் கவி . செப்புவீர் அதன் உண்மை

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வறுத்தரவை அரைக்கிலோவும் அதற்குத் தோதாய்
கிளிநிறத்து மிளகாயும் வாங்கச் சொல்லி//

கிளி நிறத்து மிளகாயை மிகவும் ரஸித்தேன்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அதன்வழியே ஏழெட்டு எதுகை எடுத்து
அதற்கீடாய் மோனையையும் சேர்த்து எடுத்து
உடனடியாய் கவியொன்றைச் செய்வேன் நானே
ஒருநொடியே ஆகுமதைச் செய்யத் தானே//

யாதோ ரமணி சாருக்கு அரை நொடியே போதும்.

மற்றவர்களுக்குத்தான் மாதக்கணக்காக ஆகும். அதுவும் அந்த உப்புமா சரியாக வெந்திருக்காது. அதைத்தான் அரை வேக்காடு என்பார்களோ ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உப்புமா கவிதையாகத் தெரியவில்லை.கருத்தும் சந்தமும் கலந்து ஜொலிக்கிறது கவிதை
//வள்ளலுக்கு வருகின்ற வறுமை போல
வீரனுக்குள் வளர்கின்ற சோர்வு போல//
உவமைகள் சூப்பர்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.6

அருணா செல்வம் said...

கவிதையைப் படிக்க மிகவும் ஜாலியாக இருந்தது இரமணி ஐயா.

கவியாழி கண்ணதாசன் said...

உப்புமாக் கவிதை அபாரம் !

s suresh said...

நல்ல ஓப்பீடு! ஆனால் மரபுக்கவிதைக்கு இலக்கணம் நிறைய வேண்டுமாமே! நன்றி ஐயா! அருமையாக வந்துள்ளது உங்கள் கவிதை!

PSD Prasad said...

உப்புமாவுடன் நீங்கள் செய்த‌
ஒப்பீடு அருமை !
ஒப்புதலும் தருகிறேன்...
வரிகளெல்லாம் எளிமை !

ஸ்ரீராம். said...

உப்புமா என்றவுடன் பாதிப்பேர் ஓடிவிடுகிறார்கள். மரபுக் கவிதை என்றாலும் அப்படித்தானோ!

Iniya said...

இந்த மன நிலை எனக்கு மட்டும் தானோ என்று நினைத்தேன். எவ்வளவு அருமையாக சமயத்தில் கை கொடுக்கும் உப்புமாவை ஒப்பிட்டு சொன்ன மரபுக்கவிதை அருமை....! உப்புமாவின் சுவையோடு சுவைத்தேன் உம் மரபுக் கவிதையும்
பகிர்வுக்கு நன்றி ...! தொடர வாழ்த்துக்கள் .....!

rajalakshmi paramasivam said...

ரவை உப்புமா கவிதை ஆனது. (உப்புமாவே கவிதை தானே! . மனைவியை கேட்டுப் பாருங்கள் உண்மையென்று ஒத்துக் கொள்வார்கள் .)
மரபுக் கவிதை மகிமையும் தெரிந்தது.

Seeni said...

mmmm....
aamaangayyaa...!

கோமதி அரசு said...

மரபு கவிதையும், உப்புமாவும், ஓப்பிடு கவிதை அருமை.
//எப்பொழுதும் எம்வீட்டில் குறைவு இன்றி
எப்பொருளும் எந்நாளும் இருக்கும் அதனால்
முப்பொழுதும் தப்பாது குறைகள் இன்றி
நளபாகம் படைத்திடுவாள் எந்தன் துணைவி//
உங்கள் துணைவிக்கு வாழ்த்துக்கள்.

என் பாட்டி சொல்வார்கள் ”ஐந்தும், மூன்றும் அடுக்காய் இருந்தால் அறிய பெண்ணும் கறி சமைப்பாள் என்று.”
வீட்டில் எல்லாம் குறைவு இல்லாமல் ஆண்மகன் வாங்கி கொடுத்தல் நல்லது என்பதற்கு பெரியவர்கள் அப்படி சொல்லி இருப்பார்கள் போலும்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
ஆனால் மரபுக் கவிதை எல்லோராலும் எழுத இயலாது.
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.10

Sasi Kala said...

நினைத்தவுடன் செய்கின்ற உப்பு மாபோல்
உடன்கவிதை வேண்டுமெனில் தடங்கல் இன்றி
அனைவருக்கும் உதவுவது மரபு ஒன்றே
இளைஞரெல்லாம் இதையறிந்தால் நன்மை உண்டே...தங்கள் சிந்தையை சொல்லிப்போன விதமும் வரும் தலைமுறைக்கு மரபை பழக்கும் விதமும் சிறப்புங்க ஐயா.

G.M Balasubramaniam said...

உப்புமா செய்தல் எளிது. மரபுக்கவிதை எளிதல்ல என்பது என் கருத்து. கிளி நிறத்து மிளகாயை நானும் ரசித்தேன். அது சரி, நீங்கள் எழுதி இருப்பது மரபுக் கவிதையா புதுக்கவிதையா.?

Ramani S said...

G.M Balasubramaniam said...
அது சரி, நீங்கள் எழுதி இருப்பது மரபுக் கவிதையா புதுக்கவிதையா.?

மிக மிக எளிமையாக இருந்தால்
இதுபோன்று சந்தேகம் வருவது இயல்பே
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

ருசியாக இருந்த உப்புமா.... இல்லை இல்லை கவிதை.....

த.ம. 12

Jeevalingam Kasirajalingam said...

"ரவை உப்புமாவைப் போல
மரபுக் கவிதை ஆக்கலாம் போல
உடன்கவிதை வேண்டுமெனில்
தடங்கல் இன்றி அனைவருக்கும்
உதவுவது மரபு ஒன்றே" என
நன்றாகச் சொன்னீர்கள்...
இளைஞரெல்லாம்
இதையறிந்தால் நன்மையே!

Ramani S said...

Jeevalingam Kasirajalingam said.

..யாதோவுக்கான தங்கள் பின்னூட்டமே
இதை எழுதத் தூண்டியது
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

விமலன் said...

மரபு தந்த புதுமை.உப்புமா தந்த கிச்சடி/

Mathu S said...

என்ன தெனாவெட்டு
மரபுக் கவிதை
உடனடி உப்புமாவா?
தமிழை சுவாசிப்பவர்களால் மட்டும்தான்
இப்படி சொல்ல முடியும்...
வாழ்த்துக்கள்

Post a Comment