Monday, December 23, 2013

இன்றுபோல் என்றும் வாழ்க

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

29 comments:

இராய செல்லப்பா said...

சாதிகளுக்கு அப்பாற்பட்ட தலைவராக அவரை ஆண்கள் பார்த்தார்கள். செக்ஸ் கவர்ச்சியுள்ள ஆண்மகனாக அவரைப் பெண்கள் பார்த்தார்கள். சினிமாவில் ஆறு பேரை ஒரே சமயத்தில் தாக்கி வெல்லுகின்ற வீரராக அவரைச் சிறுவர்கள் பார்த்தார்கள். ஆபத்தில்லாத அரசியல்வாதியாக அவரை வயது முதிர்ந்தோர் பார்த்தார்கள். எனவே அவரால் ஒரு ஈர்ப்புசக்தி கொண்ட மாமனிதராக உயரமுடிந்தது.

Unknown said...

தன்னால் முடியும் என்ற நம்பிக்கைதான் அவரின் ரகசியம் ,சூட்சுமம் ,சூத்திரம் !
+1

Iniya said...

அவருடைய மனிதாபிமானமும் தன் நம்பிக்கையும் தான். நினைவு கூர்ந்தது நன்றே.
பகிர்வுக்கு நன்றி ....!
வாழ்த்துக்கள்....!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றும் பலரின் இதயத்தில் ‘இதயக்கனி’யாகவே விளங்கிடும் மாமனிதரைப்பற்றி மிகச்சிறப்பாகச் சொல்லியுளீர்கள்.

சிலர் வாழும் காலத்திலேயே இறந்த பிணமாகக் காட்சியளிக்கிறார்கள். ஆனால் இவரோ இறந்த பின்னும் இன்னும் வாழ்வதாகவே தோன்றுகிறார்.

அது தான் எம்.ஜி.ஆர். அவர்களின் தனித்தன்மை. ;) .

kowsy said...
This comment has been removed by the author.
kowsy said...

காரணம் என்னவாகும் என்று வரிக்கு வரி நினைத்தேன். இறுதியில் உண்மைதான். நடிப்பையும் வாழ்வையும் ஒன்றாய் காட்டினார்.அதனால் சொல்லும் செயலும் ஒன்றான அவர் இன்றும் பலர் மனதில் என்றும் வாழ்வார்

கரந்தை ஜெயக்குமார் said...

எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி அருமையானதொரு கவி. நன்றி ஐயா. நல்லவர்கள் என்றுமே போற்றப்படுவார்கள்.
த.ம.4

Anonymous said...

வணக்கம்
ஐயா
உலகம் போற்றும் மா மனிதர் பற்றிய கவிதை மிகச்சிறப்பாக உள்ளது அவரிடம் தன்நம்பிக்கை விடமுயற்ச்சியும்.
இவை இரண்டும் அவரின் வாழ்வோடு பின்னி பினைந்தவை..இன்னும் சொல்லமுடியும் அவரி நினைவு கூர்ந்த கவிப்பா மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா.

த.ம 4வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

அவர் மறைந்து இவளவு வருடங்களாகியும் அவருடைய கட்சிக்கு அவர் பெயரே தாரக மந்திரம். இன்றும் அவரது சமாதிக்கு வருபவர்கள் அந்தப் பளிங்கு மேடை மேல் காதை வைத்து உற்றுக் கேட்டு, "வாத்தியாரோட வாட்ச் ஓடற சத்தம் கேக்குது" என்று பூரித்துப் போகிறார்கள்!

ADHI VENKAT said...

சிறப்பான வரிகள்...

MANO நாஞ்சில் மனோ said...

ஏழையாக இருந்து உயர்ந்தவர் என்பதால் எப்போதும் ஏழைகள் நினைவாகவே வாழ்ந்து சரித்திரம் படைத்த காவியத்தலைவன்....!

இப்பூமி உள்ளவரை அவர் பெயரும் இருக்கும் சரித்திரமாக....!

உஷா அன்பரசு said...

காலத்தை வென்று ஏழைகளின் மனதில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்... நினைவு கூர்ந்தது சிறப்பு!

G.M Balasubramaniam said...

வல்லவரோ இல்லையோ நல்லவராக வாழ்ந்தார் என்பதே என் கணிப்பு

Unknown said...

உண்மைதான்!

இளமதி said...

செம்மனச் செம்மல் எனக் காரணமின்றியா அவரைச் சொன்னார்கள்... எங்களுக்கும் எவ்வளவோ செய்திருந்தார் என அறிந்திருக்கின்றேன்.

அருமையான கவிதை! ரசித்தேன்!

வாழ்த்துக்கள் ஐயா!

RajalakshmiParamasivam said...

நிஜ வாழ்வில் நடிக்காமல் மக்களின் தொண்டனாகவே வாழ்ந்து மறைந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்தது விட்டார் .
கவிதை அருமை ரமணி சார்.

VVR said...

MGR....Man of Grate Revolution

VVR said...

MGR....Man of Grate Revolution

தி.தமிழ் இளங்கோ said...

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ஒரு நல்ல கவிதாஞ்சலி!

http://bharathidasanfrance.blogspot.com/ said...

tamilmanam 10

Thulasidharan V Thillaiakathu said...

இதயக் கனிதான் அவர்! இன்னும் கூட பலர் அவர் இறக்கவில்லை என்றே நம்புகின்றார்கள்!இறந்து பலவருடங்கள் ஆனாலும் அவருக்குப் இன்னும் சிறப்புதான்!! அருமையான வரிகள், மக்கல் மனதில் வாழும் மக்கள் திலகத்தைப் பற்றி!!

Thulasidharan V Thillaiakathu said...

tha.ma.+

kingraj said...

காலத்தை வென்றவன் நீ.....கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப காலம் வென்று இன்றும் அழியா புகழ் கொண்ட.... அழியா புகழுக்கு அன்பின் பாமாலை நன்று... வாழ்த்துக்கள்..

கவியாழி said...

தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய் இருந்தார் //உண்மைதான்

Unknown said...

சாமானியர்களைக் கவர்ந்த ஆளுமைகளில் மிகச்சிறந்த ஆளுமை...

கவிதை அருமை ஐயா...

மாதேவி said...

நினைவு கூறுவோம்

Yarlpavanan said...

நல்லவன் வாழ்வான் தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
நாமும் வாழ்த்துவோம்.
சிறந்த பகிர்வு

வெங்கட் நாகராஜ் said...

அவரது நினைவு நாளில் நல்லதோர் கவிதாஞ்சலி.

கீதமஞ்சரி said...

தங்கள் கவிதாஞ்சலி அருமை. இன்றும் கிராமப்புறங்களில் தங்கள் வீட்டுப் பிள்ளையைப் போல பிறந்தநாள் கொண்டாடப்படும் பெருமைக்குரியவர் அவர். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர் நினைவுநாளில் அவரைநினைந்து ஒப்பாரி பாடிக் கேட்டிருக்கிறேன். மக்கள் மனத்தில் நிறைந்திருப்பதற்கு இதைவிட வெறன்ன சான்று வேண்டும்.

Post a Comment