Monday, April 21, 2014

கவிதையும் கருவும் ( 2 )

" புடைத்து எடுத்து
பொறுக்கி எடுத்து
தேர்ந்தெடுக்கும்
அற்பப் பொருளல்ல
கவிஞனின் படைப்பு

மலர்தல் போல்
விடிதல் போல்
மறைதல் போல்
மிக இயல்பானது
மிக இனிதானது அது

தோண்டி எடுத்து
பிசைந்துக் களைத்து
உருட்டிச் சேர்த்து
உருவாக்கி ரசிக்கும்
பாண்டமல்ல படைப்பு

கருவாதல் போல்
நிலையாதல் போல்
உருவாதல்போல்
அதிசயமானது அது
அபூர்வமானது அது

ஆள்துளை அமைத்து
எடுத்த கிணற்று நீரோ
ஆழத் தோண்டி எடுத்த
அற்புத உலோகத் தகடோ
நிச்சயம் இல்லை அது

காற்றுப் படப் பெய்யும்
கனத்த மழையினைப் போல
தரை பிளந்து எழும்
அழகிய செடியினைப் போல
என்றும் புதிரானது அது

மொத்தத்தில்
எடுத்து இறுக்கித்
தருவதல்ல்ல அது
இருப்பில் எடுக்க
வருவது அது "என்றது

"எனக்குப் புரியவில்லை "என்றான அவன்

"நீ கவிதை எழுதி
கவிஞனானவன்
எனவே  புரிய வாய்ப்பில்லை
நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் "என்றது

லேசாகப் புரிவது
போலிருந்ததது அவனுக்கு
புரிய வைத்த திருப்தியில்
கருவும் மெல்லக்
கலையத் துவங்கியது

27 comments:

ஸ்ரீராம். said...

கவிதை எழுதி கவிஞனாவதும், கவிஞனாகி கவிதை எழுதுவதும்! அருமை.

கோவை ஆவி said...

நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் "// ஹஹஹா உண்மை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அடேயப்பா எவ்வளவு உவமானங்கள் .
கணையாழித் தரத்தில் அமைந்த கவிதை

திண்டுக்கல் தனபாலன் said...

"சொல்வது அனைவருக்கும் எளிது தான்... செய்து பார்த்தால் தானே பலதும் புரியும்" என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா...

இராஜராஜேஸ்வரி said...

மலர்தல் போல்
விடிதல் போல்
மறைதல் போல்
மிக இயல்பானது
மிக இனிதானது அது/

இனிதான நினைவுகள்...

இராஜராஜேஸ்வரி said...

"நீ கவிதை எழுதி
கவிஞனானவன்
எனவே புரிய வாய்ப்பில்லை
நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும்

ஆழ்ந்த பொருள் அமைந்த
அற்புத கவிதை..பாராட்டுகள்..

Bagawanjee KA said...

கவிதை வந்ததும் கவிஞன் பிறந்தானா ,
கவிஞன் பிறந்ததும் கவிதைப் பிறந்ததா ?
சிந்திக்க வைத்தது உங்கள் கவிதை !
த ம 6

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை...அருமை...

Iniya said...

கருவாதல் போல்
நிலையாதல் போல்
உருவாதல்போல்
அதிசயமானது அது
அருமையான உவமானங்களுடன் சிறப்பான விளக்கங்கள். நன்றி வாழ்த்துக்கள் ...!
அபூர்வமானது அது

Dr B Jambulingam said...

புதிதாகக் கவிதை எழுதுபவர்கள் அவசியம் படிக்கவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள். என் பதிவைக் காண உங்களை அன்போடு அழைக்கிறேன்.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

இயற்கையாகவே வார்த்தைகள் வசப்பட வேண்டும் அது தான் கவிதை என்று
உணரவைத்த சிறப்பான படைப்பிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

Anonymous said...

''.."நீ கவிதை எழுதி
கவிஞனானவன்
எனவே புரிய வாய்ப்பில்லை
நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் "என்றது
SUPER VATIKAL SIR....
congratz.
Vetha.Elangathilakam.

Anonymous said...

வணக்கம்
கவிஞர்(ஐயா.)

சொல்வடிவம் யாரும் கொடுக்கலாம் ஆனால் செயல்வடிவம் சொல்வடிவம் இரண்டும் தங்களின் கவியில் உள்ளது....கருத்து மிக்க உவமைகள் துள்ளி விளையாடுகிறது....நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா

நன்றி
அன்புடன்
ரூபன்

‘தளிர்’ சுரேஷ் said...

நீ கவிதை எழுதி
கவிஞனானவன்
எனவே புரிய வாய்ப்பில்லை
நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் "என்றது// கலக்கலான உதாரணம்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

கவிஞா் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

கருவும் கவிஞனும் பேசும் கவியில்
உருகும் உயா்ந்தோர் உளம்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Gowri Hariharan said...

"காற்றுப் படப் பெய்யும்
கனத்த மழையினைப் போல
தரை பிளந்து எழும்
அழகிய செடியினைப் போல
என்றும் புதிரானது அது" அருமையான வரிகள்...

கவிஞா் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

உங்கள் எழுத்தின்மீது கொண்ட ஆசையாலும், தமிழ்மீது கொண்ட பற்றாலும்,
கவிதைமீது கொண்ட காதலாலும்
தங்களின் ஐந்நுாறாம் பதிவுக்கு
வெண்பா பாடி மகிழ்ந்தேன்!

அவ்வெண்பாவை முகப்பில் வெளியிட்டு
என்னை மிகவும் இன்புறச் செய்துள்ளீா்
மிக்க நன்றி! வாழ்க வளத்துடன்!

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னம் சோ்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவா்! - பொற்புடன்
மூதுரை முன்மொழியும்! இன்ரமணி நட்பொளிர
மாதுறை மாா்பா வழங்கு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

G.M Balasubramaniam said...

/நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் "என்றது/ ஒரு ஐயம் கவிதை எழுதிக் கவிஞனாவதா ....கவிஞனாகிக் கவிதை எழுதவா.....!

Expatguru said...

//நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் //

அற்புதம்!

Regan Jones said...

நீ கவிஞனாகி கவிதை எழுது புரியத் துவங்கும் --- அருமையான வரிகள்.

Ramani S said...

G.M Balasubramaniam said...
/நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் "என்றது/ ஒரு ஐயம் கவிதை எழுதிக் கவிஞனாவதா ....கவிஞனாகிக் கவிதை எழுதவா.....!//

கவிஞனாய் இருப்பது
ஒரு உன்னத மன நிலை
அதை அடந்தபின்
கவிதை எழுதுவது
கவிதைக்கு கூடுதல் சிறப்புச் சேர்க்கும்
என்பது என் கருத்து

King Raj said...

என்றும் புதிரானது......ஆமாம் ஐயா கவிதைகள் என்றுமே புதிரானதுதான். படிக்க படிக்க புதுப்புது அர்த்தங்களை தந்துக்கொண்டே இருக்கும் நல்ல கவிதைகள்..உங்கள் கவிதைப்போல.... வாழ்த்துக்களுடன்..

rajalakshmi paramasivam said...

மனதில் தோன்றிய உங்கள் உணர்வுகள் அருமையான கவிதை வடிவம் ஆனதே! அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.......

கவியாழி கண்ணதாசன் said...

கவிஞனாய் இருப்பது
ஒரு உன்னத மன நிலை
அதை அடந்தபின்
கவிதை எழுதுவது
கவிதைக்கு கூடுதல் சிறப்புச் சேர்க்கும்///
உண்மைதான் சித்தர்களால் மட்டுமே புரிந்துகொள்ளும் தகவலைச் சொல்லும் நீங்கள் கவிங்ஞான ? இல்லை கவிதை கடவுளா?

அருணா செல்வம் said...

அருமையான விளக்கம்!!

நானும் கவிஞனாக முயற்சிக்கிறேன் இரமணி ஐயா.

வெங்கட் நாகராஜ் said...

//நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் "//

அற்புதம்.... எத்தனை எத்தனை ஒப்புமை. ரசித்தேன் ஐயா.

கோமதி அரசு said...

மலர்தல் போல்
விடிதல் போல்
மறைதல் போல்
மிக இயல்பானது
மிக இனிதானது அது//

மிக அருமை.

Post a Comment