Friday, June 12, 2015

முள்ளை முள்ளால் ( 3 )

என் நண்பனின் அன்றைய நிலையை
அவனிருந்த சூழலை அவன்
சொல்லிப் போவதை வைத்தே மிகத் தெளிவாக
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

வீட்டில் யாரும் இல்லாதது , அவனும்
அன்று லீவு எடுத்து இருக்க முடியாதிருந்தது
அன்றே வேலை நடக்க இருந்தது,
பள்ளம் தோண்டப்பட்டால் இரவுதான் அலுவலகம்
விட்டு வந்தால் வண்டியை
வீட்டில் ஏற்றமுடியாத நிலை...

இத்தனையும் ஒருசேர வந்தால் நிச்சயம்
ஏதாவது செய்தாகவேண்டுமே என வரும் பதட்டம்
யாராக இருந்தாலும் நிச்சயம் வரக் கூடியது
இயல்புதான் இல்லையா ?

முதலில் சொல்லத் துவங்குகையில்
என் நண்பனிடம்இருந்த கோபம் இப்போது இல்லை
கொஞ்சம் குறைந்திருந்தது

அதற்குக் காரணம் இத்தனை நாள்
இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதலும்
இருக்கலாம் எனப் புரிந்து கொண்டேன்

பின் அவன் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்து
"அப்புறம் " என்றேன்

அவன் தொடர்ந்தான்

"நான்தான் என்னசெய்யலாங்கிற பதட்டத்தில
இருந்தேன்.அவன் ரொம்ப இயல்பாக இருந்தான்
அதுவே கூட எனக்கு அவன் பேரில் சந்தேகம்
வராததுக்குக் காரணமாயிருக்கலாம்னு
இப்போ நினக்கிறேன்

நான் அவங்கிட்டே வீட்டில் ஊருக்குப் போயிருக்கிற
விஷயத்தைச் சொல்லி நானும் இருக்கமுடியாத
நெலமையைச் சொல்லி என்ன செய்யலாம் என
அவங்கிட்டேயே கேட்டுத் தொலைச்சேன்

சார் நான் தான் இந்த வேலைக்குச் சப் -காண்டிராக்ட்
நீங்களும் எஞ்சினியர் அதுல எங்க எஞ்சினியருக்குத்
தெரிந்தவர் வேற.நீங்க ஏன் சார் பதறுறீங்க

உங்க வீட்டு வாசல் பத்து மீட்டர் வரும் சார்
இரண்டடி உள்கூடு பைப் நாலும் மூணு காலரும்
வாங்கிக் கொடுத்துப் போங்க சார்
நான் கையோட பதிச்சு வைக்கிறேன்

அதுக்கான கூலியை மட்டும்
நாளைக்குக் கொடுங்க சார்னு போதும்னு
சொன்னான்

அவன் காசு கேட்காம சாமான் வாங்கிக்
கொடுங்க சார்னுசொன்னதுமே அவன்
உண்மையாகவே காண்டிராக்ட்காரன்
ஏமாத்துப் பேர்வழி இல்லைங்கிற ஒரு
அசட்டு முடிவுக்குநான் வந்துட்டேன்

சரி பைப் விலை என்னவரும்னேன்

சார் ஒரு பைப் காலரோட இரண்டாயிரத்து ஐநூறு
வரும் சார் அப்புறம் ஏத்துக் கூலி இறக்குக் கூலி
ஒரு ஐநூறு வரும் சார்.ஆக மொத்தம்
லேபர் கூலியோட ஒரு பன்னிரண்டாயிரம் வரும் சார்

அடுத்த தெருச் செட்டியாரு கூட எங்கிட்டதான் சார்
பைப் வாங்கச் சொல்லி காசு கொடுத்திருக்கார்
வேண்டுமானா சொல்லுங்க அந்தக் கடையிலேயே
இருந்து இறக்கச் சொல்றேன்.
பாதிக் காசு கொடுத்துப் போங்க
மீதியையும் கூலியையும் கூட நாளைக்குக்
கொடுங்க சார்னு சொன்னான்

எனக்கு அடுத்தத் தெரு செட்டியாரைப் பத்தித் தெரியும்
படு கெட்டி.அவரே நம்பி கொடுத்திருக்கார்னா
நம்ம சந்தேகப் படவேண்டியதில்லைன்னு
முடிவுக்கு வந்துஅதுலேயும் ரொம்பப் சுதாரிப்பா
இருக்கறதா நினைச்சுஉள்ளேயிருந்து
ஒரு ஆறாயிரத்தை மட்டும்எடுத்துக் கொடுத்திட்டு
மீதியை நாளைக்கு வேலை முடிஞ்சதும்
தர்றேன்னு சொன்னேன்

அவனும் பெருந்தன்மையா உங்க கிட்ட இருந்தா
பேங்கில கிடக்கிறமாதிரின்னு சொல்லிப்புட்டு
நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க சார்னு
சொல்லிப்புட்டு கிளம்பிப் போயிட்டான்

அவன் போனவுடனேதான் அவன் செல் நம்பரை
வாங்கித் தொலைச்சிருக்கலாமே ,வேலை
நடக்குதாங்கிற விஷயத்தை மதியம் கூட
கேட்டுத் தொலைக்கலாமேன்னு நினைச்சேனே தவிர
அப்பக் கூட அவன் மேல லேசாகக் கூட
சந்தேகம் வரல"ன்னு சொல்லி நிறுத்தினான்

இப்போது எனக்கு ஓரளவு ஏமாந்த கதையும்
ஏமாந்த தொகையும் தெரிந்து போனதால்
கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து போனது

ஆனாலும் ஏமாந்தது எப்படித் தெரிந்தது
எனத் தெரிந்தால்தானே கதை முழுமையடையும்
என்கிற எண்ணம் லேசாக கிளம்ப
"அது சரி அவன் ஏமாத்தினாங்கிற எப்படித் தெரிஞ்சது
என்னக்குத் தெரிஞ்சது " என்றேன்

"அதையேன் கேட்கிற " என முதலில்
மெல்ல முனங்கியவன்
பின் சரளமாய்ச் சொல்லத் துவங்கினான்

(தொடரும் )

12 comments:

சென்னை பித்தன் said...

சீக்கிரம் சொல்லுங்க!
த ம 1

G.M Balasubramaniam said...

ஒவ்வருவரிடத்தும் ஏமாந்த கதைகள் இருக்கும். இருந்தாலும் சுவைபடச் சொல்லிப்போகிறீர்கள். வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. பாதிக்கதை தெரிந்ததில் ஓர் நிம்மதி. மீதி முழுக்கதையும் கேட்க உங்களைப்போலவே நானும் காத்திருக்கிறேன். :)

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்து...?

காத்திருக்கிறேன்...

Unknown said...

தோண்டியே இருக்க மாட்டார்கள்! அப்படித்தானே!

UmayalGayathri said...

அப்புறம் என்ன ஆச்சு..?

தம +1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இதுபோன்ற சமயங்களில் ஏமாறக் கூடாது என்று நினைத்தாலும் அவர்களது பேச்சு நம்மை எப்படியோ ஏமாற்றி விடுகிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முடிவு என்ன ஆயிற்று?

இராய செல்லப்பா said...

சிலநேரங்களில் மனமே விரும்பி ஏமாறச் சொல்கிறது. என்ன செய்வது?

சசிகலா said...

அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்.

”தளிர் சுரேஷ்” said...

ஏமாற்றுபவர்களின் வார்த்தை ஜாலம் கண்டு வியந்து போய் இருக்கிறேன்! கொஞ்சம் கூட சுதாரிக்க விடமாட்டார்கள்! பாவம் உங்கள் நண்பர்!

Thulasidharan V Thillaiakathu said...

தொடர்கின்றோம்....காத்திருக்கின்றோம் அடுத்த பாகத்திற்கு....

Post a Comment