Saturday, January 30, 2016

கொஞ்சம் பின்னோக்கி.....

2010 இல் துவங்கி இன்று வரை
ஏறக்குறைய 800 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டேன்

முதலில் எழுதுவதை விட பின்னூட்டமிடுவதில்
அதிக ஆர்வம் இருந்தது.அந்த விஷயத்தில் திண்டுக்கல்
தனபாலன் அவர்களுக்கும் எனக்கும்
ஒரு மறைமுகப் போட்டியே இருக்கும்

நிறைய புதிய பதிவருக்கு முதலில் பின்னூட்டமிட்டதும்
நல்ல பதிவர்களின் பதிவுகளை விடாது
முழுவதும்  படித்து சுருக்கமாக எனினும்
நேர்மையாகப் பாராட்டி எழுதியதும் ,
கூடுமானவரையில் மாற்றுக் கருத்து
என்றாலும் நாசூக்காக எதிர்ப்பைப் பதிவு செய்ததும்
நிறையப் பதிவர்கள் இணைவதற்கும்
தொடர்வதற்கும் காரணம் என நினைக்கிறேன்

இன்று ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் என்
வலைத் தளத்தில் இணைந்ததுடன்
113 நாடுகளைச் சார்ந்தவர்கள் என்
வலைத் தளத்தைப் பார்வையிடுகிறார்கள் என்பது
பெருமையாக மட்டும் இல்லை
கொஞ்சம் கூடுதல் பொறுப்போடு
எழுத வேண்டும்என்றும்,
எழுதவும் வேண்டும் எனவும் தோன்றுகிறது

என் மனம் கவர்ந்த பதிவர்களின் எழுத்துக்களை
(இப்போது அதிகம் எழுதா விட்டாலும் முன்பு
எழுதியதை )தொடர்ந்து படிக்கத் துவங்கி இருக்கிறேன்
அந்தப் பதிவர்கள் பட்டியல் குறைந்த பட்சம்
 ஐம்பதுக்கும்  குறையாமல் இருக்கும்

நிறையப் பதிவர்கள் எழுதவில்லை என
ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்காமல் முன்பு
சிறப்பாக எழுதியவர்களின் பதிவுகளைப் படித்து
பின்னூட்டமிடுவது அவர்களே அவர்களது
எழுத்துத் திறமையை உணரவும், அவர்கள் எழுதாது
இருப்பது பதிவுலகிற்கு ஒரு இழப்புதான் என்பதை
அவர்களே உணரவும் செய்து விட்டால்
பதிவுலகு மீண்டும் புதுப்பொலிவுறும் என்பது
எனது நம்பிக்கை

வாழ்க்கை என்பதே நம்பிக்கை தானே
நம்பிக்கைக்கு மறுபெயர்தானே வாழ்க்கை என்பதே

வாழ்த்துக்களுடன்....

Wednesday, January 27, 2016

அடியாருக்குச் செய்கிற சேவை....

 நான் சார்த்திருக்கிற அரிமா  சங்கத்தின் கொள்கை  
தொண்டும் தோழமையும் தான் .
அதன் காரணமாகவே அதன் லோகோவில்
we serve  என்கிற ஆங்கில  வாசகங்கள்
குறிக்கப் பட்டிருக்கும் .

தனியாகச் செய்கின்ற சேவைகளை விட
கூட்டாகச் செய்கையில்மிகப்  பெரிதாகவும்
செய்ய முடிவதோடு மட்டும் அல்லாது
தன்  முனைப்பும்  ( ego )இல்லாமல் போய்விடும்  வாய்ப்பதிகம்

அத்துடன் ஆண்டவனுக்குச் செய்கிற   சேவையினும்
அவரின்அடியாருக்குச் செய்கிற சேவை
சாலச் சிறந்தது என்பதைப் போல..

சமூகத்திற்கு  எதையும் எதிர்பாராது  தன்  பங்கை
அளிக்கிறவர்களைஅழைத்துக் கௌரவிப்பது  ,
அவர்களுக்கு  தொடர்ந்து   சேவை செய்ய
ஊக்கமளிக்கும் என்பதால்  ....

ஒவ்வொரு அரிமா சங்கமுக்கிய நிகழ்வுகளிலும்
சமூகச் சிந்தனையாளர்கள், ஆர்வலர்கள் ,
மற்றும் ,சிறந்த சமூகச் சேவகர்களை அழைத்துக் 
கௌரவிப்பது   வழக்கம்

அந்த வகையில் இந்த முறை ,ஆழ்துளை  கிணற்றில்
விழுந்தகுழந்தைகளை மீட்கும் ரோபோ   கருவியைக்
கண்டுபிடித்தஇளம் விஞ்ஞானி
திரு மணிகண்டன் அவர்களைஅழைத்துக்
கௌரவிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது .

அந்த நிகழ்வின் புகைப்படத்தைத தங்களுடன் 
 பகிர்ந்து கொள்வதில்  மிக்க மகிழ்வு கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...




விருது வழங்கி கௌரவிப்பவர்
 324  B3 அரிமா மாவட்ட  ஆளு நர்
லயன் .S.ராமசுப்பு P.M.J.F  அவர்கள் ..

Sunday, January 24, 2016

முயற்சியும் வெற்றியும்

அந்தச் சிறு குன்றின் முன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்

நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்

"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்

"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்

"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்

நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது

"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்

அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்

ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது

நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்

Friday, January 22, 2016

கேளுங்கள் ...தட்டுங்கள்.தேடுங்கள் ..

கேளுங்கள் தரப்படும்
எனச் சொன்னவர்
தருவேன் என்றோ
தருவார் என்றோ
ஏன் உறுதி அளிக்கவில்லை

தட்டுங்கள் திறக்கப்படும்
எனச் சொன்னவர்
திறப்பேன் என்றோ
திறப்பார் என்றோ
ஏன் நம்பிக்கை அளிக்கவில்லை

தேடுங்கள் கிடைக்கும்
எனச் சொன்னவர்
கிடைக்கச் செய்வேன் என்றோ
கிடைக்கச் செய்வார் என்றோ
ஏன் அழுந்தச் சொல்லவில்லை

ஒருவேளை....

கேட்கும்
தட்டும்
தேடும்
திறம்பொருத்தே

தருதலும்
திறத்தலும்
கிடைத்தலும்
இருக்கும் என்பதை
சூட்சுமமாய் உணர்த்தத்தானோ ?

Wednesday, January 13, 2016

மெல்வின் ஜோன்ஸ் (13.01.1879 ).



உலக அரிமா சங்க நிறுவனர்  மதிப்பிற்குரிய
மெல்வின் ஜோன்ஸ்  அவர்களின்  அவர்களின்
 பிறந்த தினம் இன்று  (13.01.1879 ).

நூறு ஆண்டுகளைக் கடந்து  இந்த இயக்கம்
இரு நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில்
 பதினான்கு  இலட்சத்திற்கும்  மேற்பட்ட
உறுப்பினர்களைக் கொண்டு  இன்னும் இளமையான
இயக்கமாகவும் ,மதிக்கத் தக்கமுதிர்ச்சியான  சேவை
மனம்  கொண்ட அங்கத்தினர்களைத் தொடர்ந்து
இணைத்துக் கொண்டுள்ள இயக்கமாக இருக்கிறது
எனில்  அதுதனது தாரக மந்திரமான
தொண்டும் தோழமையும்   என்கிற  நிலையில்
சற்றும் விலகாது தொடர்ந்து
பயணிப்பதால்தான்  என்றால் அது மிகை இல்லை

இன்று அவரது நினைவினைப் போற்றும் விதமாக
உலகெங்கும்பசிப்பிணி அகற்றும்  சீரிய பணியாக
10 மில்லியன்   ஏழை மக்களுக்கு உணவளிக்கும் திட்டம்
அறிவிக்கப்பட்டுளது

அதற்குரிய  எங்களின்  சிறு துளிப் பணியாக
எங்கள் பகுதியில் 10,000 பேருக்கு  உணவளிக்க  ஆவன
செய்வதன் மூலம்   எங்கள்அஞ்சலியைக்
காணிக்கையாக்குகிறோம் என்பதைப் பணிவுடன்
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும்
 மகிழ்ச்சி  கொள்கிறோம்








Tuesday, January 5, 2016

நிறைவாகவும் ,விரைவாகவும் நிறையவும்


நிறைவாகச்  செய்ய  அனுபவமும் விரைவாகச் 
செய்யஇளமையும் ,நிறையச்  செய்ய இரண்டும்  சேர்ந்து  
இருத்தலும் அவசியம் என்பதை  சமீபத்தில் நாங்கள்  
முயற்சி எடுத்து  புதிதாக அமைத்த  
அரிமா லியோ சங்க
இளைஞர்கள்  மூலம்  புரிந்து கொண்டோம் .

எங்கள் குடியிருப்புப் பகுதியில்(சுமார் 6000 வீடுகள் )  
பாதுகாப்புக்குறித்த விஷயங்களில்  பெரியவர்கள் 
கவனம் செலுத்த  இளைஞர்களைசுற்றுச் 
சூழல்குறித்த விஷயங்களில்  கவன ம் செலுத்துமாறு 
கேட்டுக் கொண்டோம்


நாங்கள்  கேட்டு க் கொண்ட ஒரே வாரத்தில் 
ஒரு குறிப்பிட்டச் சாலையைத் தேர்ந்தெடுத்து 
புதர்களை நீக்கி நூறு பூமரக் கன்றுகளை நடவும் 
அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியாகவும் 
ஒரு சிறப்பு விழாவுக்காகவும்உடனடியாக மிகச் 
சிறப்பாக ஏற்பாடு செய்துவிட்டார்கள்  

இதுவரை அப்பகுதியில் அனைவரையும் 
 மிரட்டுபவராகவும் அதன் காரணமாக 
பொது இடத்தைச சுய  நலமாகவும்
பயன்படுத்தியவருமான  ஒரு ஜாதி 
 அடிப்படைவாதி விழா நடக்கவிடாதும் 
அப்பகுதி மக்களைஒன்று சேரவிடாதும்செய்ய 
அடாவடித்தனத்தனமாய்  முயற்சிக்க அதனை  
அனுபவசாலியான  பெரியவர்கள் காவல்துறையின் 
முயற்சியுடன் தடுத்து விழாசிறப்பாக நடைபெறவும்
ஒற்ற்றுமையின்  மேன்மையை அப்பகுதி மக்கள் 
உணர்ந்து தெளியும்படியாகவும் செய்தார்கள் 

அப்பகுதி மக்கள் அனைவருக்கும் மட்டுமல்லாது 
இயக்கத்தில் பட்டும் படாமலும் இருக்கும் சிலருக்கும்
அனுபவமும் இளமையும் ஒன்று சேர்ந்தால்  
எதனையும்சாதிக்க இயலும் என்கிற  நம்பிக்கையையும்
போனாசாகஇந்த நிகழ்வு    கொடுத்துப் போனது  

அந்த  விழா குறித்தான சில புகைப்படங்கள் 
தங்கள் பார்வைக்காக 






Sunday, January 3, 2016

மின்னெழுத்தின் சக்தியறிவோம்


சக்கை எதுக்கு மொக்கை எதுக்கு
சரக்கு இருக்கையிலே-வெட்டி
குப்பை எதுக்கு கூளம் எதுக்கு
ஞானம் இருக்கையிலே

வித்தை தெரிந்த பதிவர் இங்கே
நிறைய இருக்கிறோம்-எனவே
முத்தைப் போல மின்னும் பதிவு
நிறையப் பண்ணுவோம்

பதிவர் நிறைய பெண்கள் இருக்க
பண்பாய் எழுதுவோம்-மூத்த
பதிவர் இங்கு நிறைய இருக்க
புரிந்து  எழுதுவோம்

புதிய பதிவர் நிறைய எழுத
ஊக்கம் கொடுப்போம்-அவர்கள்
உரியமதிப்பை   எட்ட நாளும்
வாக்கும் அளிப்போம்

நொடியில் உலகை சுற்றும் வலிமை
பதிவுக்  கிருக்குது-எதையும்
எளிதாய் மாற்றும் சக்தி  வலிய
பதிவுக் கிருக்குது

எடிட்டிங் கட்டிங் சென்ஸார்  எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க

சக்தி கூடச்  சக்தி கூட
பொறுப்பும் கூடணும்-அந்த
"ஸ்பைடர் "மேனின் கருத்தை நாமும்
மனதில் கொள்ளணும்

கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
பதிவு எழுதுவோம்-புதிய
சக்தி யாக பதிவர் உலகை
மாற்ற முயலுவோம்

Saturday, January 2, 2016

Award night


உலகின் முதன்மையான சேவைச் சங்கமாக
அங்கீகரிக்கப்பட்டுள்ள அரிமா சங்கம்...

சேவை மற்றும் நிர்வாக ரீதியான பல துறைகளில் 
மதுரை திண்டுக்கல் தேனி சிவகங்கை வருவாய்
மாவட்டங்களை உள்ளடக்கிய 324 பி3  மாவட்டமே
உலக அளவில் சிறந்தமாவட்டமாக தெரிவு செய்து...

அதன் ஆளு நரான லயன். பி ரெகுவரன் பி எம் ஜே எஃப்
அவர்களை அம்பாசெடர் ஆஃப்  குட் வில் விருது
கொடுத்துச் சிறப்பித்தது.

உலக அரிமா சங்கம் துவங்கப்பட்ட 
ஆண்டிலிருந்து ,
(இது நூறாவது ஆண்டு ) 
இந்தியாவில் இந்த  விருதினைப் பெறும் 
முதல் அரிமா ஆளு நர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது   


அவர் அந்த  பெறுதற்கரிய விருது பெறுவதற்குக் 
காரணமாக இருந்தசங்கத் தலைவர்களை 
விருது இரவும் நடத்தி இன்று கௌரவம் செய்தார்

இந்த அரிமா மாவட்டத்தில் எல்லா சங்கங்களும்
( 130 )மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அதில்
மிக முக்கியமான பதினாறு சங்கங்களைத் 
தேர்ந்தெடுத்து

அதிலும்  இன்னும் சிறந்த நான்கு சங்கங்களைத்
தெரிவு செய்து அவர்கள் மூலம் அந்த  உலகளாவிய்
விருதினைப்பெற்றுக் கொண்டார்

அந்த நான்கு சங்கங்களில் நான் தலைமைப் 
பொறுப்பில்இருந்த சங்கமும் இருந்தது என்பதால் 
நானும்
அந்த விருதினைக் கொடுக்கும் குழுவில் இருந்து
அந்த விருதினைக் கொடுக்கும் கௌரவம் பெற்றேன்.

நானும் என் சங்க சார்பாக   கீழ்கண்ட 
பெருமைக்குரிய 
விருதுகளைப் பெற்றேன்

அந்த நிகழ்வுகளைத்  தங்களுடன் பகிர்ந்து 
கொள்வதில்
மிக்க மகிழ்வு கொள்கிறேன்.












எ னது  சங்க நிர்வாகிகளுடன் ...




விழாவில் விஜய்  தொலைக்காட்சிப் புகழ்
நடனக்   குழுவினரின்  கலை நிகழ்ச்சி 

இசை அமைப்பாளர்  ஜீப்ரான்  அவர்களுடன்