Saturday, December 3, 2016

சுகப்பிரசவ சுகம்வேண்டி........

எதிர்பாராது
நாவில் தித்திப்பாய்
ஒரு வார்த்தை
நர்த்தனமாடி
இப்போதே
என்னை அரங்கேற்று என்கும்

சட்டென
உள்மனதில்
ஓர் உணர்வு
நிர்வானமாய் நின்று
உடனடியாய்
எனக்கு ஆடை அணிவி என்கும்

திடீரென
அடிமனதில்
ஒரு இராகம்
சுயம்புவாய்த் தோன்றி
மிகச் சரியாய்
எனக்கு வடிவு  கொடு என்கும்

சில நொடியில்
இமை இடுக்கில்
ஒரு நிகழ்வு
காட்சியாய் விரிந்து
அப்படியே
என்னைக் காட்சிப் படுத்து என்கும்

வார்த்தையா
உணர்வா
இராகமா
நிகழ்வா
எது சரிவரும்
நான் குழம்பித் தவிக்கையில்

உள்ளுணர்வு
"கண்டுகொள்ளாது விட்டுவிடு
வலுவுள்ளது ஜெயிக்கட்டும்"என்கும்

வழக்கம்போல்
சுமையும் வலியும்
தாங்கும் அளவைத் தாண்டினும்
இமைமூடித்
தாங்கிக்கொண்டிருக்கிறேன்
சுகப்பிரசவ சுகம்வேண்டி...

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

வார்த்தையா, உணர்வா, இராகமா, நிகழ்வா, எது சரிவரும் எனத் தாங்கள் எப்போதுமே குழம்பித் தவிப்பதில்லை. தங்களின் எழுத்துக்களிலும், படைப்புக்களிலும், வார்த்தை விளையாட்டுக் கோர்வைகளிலும் எப்போதுமே ஸ்ரீ கலைவாணி நடனமாடுகிறாள்.

குழப்பங்கள் ஒருவேளை அரை வேக்காடான என்னைப்போன்ற வாசகர்களுக்கு ஏற்படலாமோ என்னவோ! :)

நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

kowsy said...

நிறைவான மகிழ்வைத் தரும் வார்த்தைகள். சொற்கள் உங்களிடம் அற்புத நடனமாடுகின்றன.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

கரந்தை ஜெயக்குமார் said...

அற்புதம் ஐயா
தங்களால் மட்டும்தான் இந்த வார்த்தைஜாலம் சாத்தியம்
நன்றி ஐயா

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு கவிதையும் ஒரு சுகப் பிரசவத்திற்குத் தானே ஆசைப்படும் - கவிஞனைப் போலவே!

கோமதி அரசு said...

அருமை.

G.M Balasubramaniam said...

ஒவ்வொரு எழுத்தாளனும் படும் வேதனை சுகப் பிரசவம் வேண்டி, வயதாகும் போது அந்தச் சிரமம் இன்னும் அதிகம் இதையே செய்யாத குற்றம் என்னும் பதிவில் கூறி இருந்தேன்

Thulasidharan V Thillaiakathu said...

அடடா!!! அருமை!எழுதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிவும் எழுதும் போதும் இப்படித்தான் சுகப்பிரசவத்திற்கு ஆசைப்பட்டு!!!!

Post a Comment