Sunday, January 29, 2017

வாழ்த்தி வளமாய் வாழ்வோம்..

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

"வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் "
என்கிறேன்

 சரியாகப்  புரியாது விழிக்கிறான்
எப்போதும்
வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

9 comments:

ஸ்ரீராம். said...

பரவும் மகிழ்ச்சியில் ஒரு மகிழ்ச்சி.

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ச்சி பரவட்டும்
அருமை ஐயா
நன்றி

வெங்கட் நாகராஜ் said...

மகிழ்ச்சி எங்கும் பரவட்டும்....

நல்லதொரு பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் said...

இதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தான்...

மனோ சாமிநாதன் said...

//"வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் "//

மிகவும் அருமை!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"வரவேற்பாளராய் இருந்து சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார். அதிக மணம் உன் மேல்தான் இருக்கும்"//

பொதுவாக எல்லோருக்குமே தெரிந்ததோர் மிகச்சிறிய விஷயத்தை, தங்கள் மூலம் இப்படிக் கேட்கும்போது, அதில் மேலும் எனக்கு மணம் வீசுகிறது. பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள். :)

G.M Balasubramaniam said...

உங்களது இந்த நிலைப்பாடு எனக்கு சரியாகப் புரிவதில்லை பாராட்டுக்கு உண்மையிலேயே உரியவராய் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

எப்படிப்பட்டவராயினும்
அவரிடம் பாராட்டும்படியான ஒரு விஷயம்
நிச்சயம் இருக்கவே செய்யும்
பாராட்ட விரிந்த விசாலமான
மனம் இருந்தால் அதற்குப் போதும்
என்பது என் அபிப்பிராயம்

Post a Comment