Monday, October 5, 2020

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரனாய்...

 மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

6 comments:

ஸ்ரீராம். said...

ஓ...   அதுவா?  கவிஞர் விடை சொல்லி இருக்கிறாரே...   "இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்...  இக்கரைக்கு அக்கறை பச்சை..."

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
உண்மை

அருமை
அருமை

KILLERGEE Devakottai said...

உச்சந்தலையில் அடித்தது போலிருக்கிறது பதிவு அருமை கவிஞரே...

மனம் போல் வாழ்வு.

வெங்கட் நாகராஜ் said...

சிம்மாசனத்தில் அமர்ந்த புத்திகெட்ட பிச்சைக்காரன் மன நிலை! சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். நல்லதொரு பகிர்வு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான பதிவு. வார்த்தைகளை வசப்படுத்தி உண்மை நிலையை விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். அத்தனையிருந்தும் ஏதுமில்லா உணர்வு வர காரணம் தாங்கள் சொல்வது போல், இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஆசைப்படுவதுதான். அருமையான வரிகளை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா... உண்மை...

Post a Comment