Wednesday, May 12, 2021

அனுமார் வால்..

சொல்ல வேண்டியவைகளையெல்லாம்

நிறையச் சொல்லிவிட்டார்கள்

எழுத வேண்டியவைகளையெல்லாம்

தெளிவாக எழுதிவிட்டார்கள்

நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு

அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறாய்  "


மனதின் மூலையில் புகையாய்

மெல்லக் கிளம்பிய சலிப்புப் புகை

மனமெங்கும் விரிந்து பரவி

என்னை திணறச் செய்து போகிறது

நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்


என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி

" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்

நிஜமாகவே பீட்ஸா கிடையாதா

 சுடிதார் கிடையாதா ?

அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"

என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்


" இல்லை அவையெல்லாம்  அப்போது

தேவையாய் இருக்கவில்லை " எனச் சொல்லி

பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்

நான் அதிர்ந்து போகிறேன்


ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்

 வாழ்வினையொட்டி

எப்படியெல்லாம மாறிவிட்டன

வாழ்வின் போக்கில்

உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி

கலை பண்பாடு கலாச்சாரம

அனைத்திலும்தான்  பதிவு செய்யப்படாத

எத்தனை மாறுதல்கள் ?


தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய

தேவைகளுக்கான இடத்தைக் கூட

பொழுது போக்கும் ஆடம்பரமும்  ஒதுக்கிக் கொடுக்க

உறவுகளைக் கூட அவர்களின் பயன் முடிவு செய்ய

உணவினை கிடைக்கும் நேரம் முடிவு செய்ய

உடலுறவைக் கூட கிழமை முடிவு செய்ய...


தொடர்ந்து சிந்திக்க சிந்திக்க

மனதின் மூலையில்

நெருப்புப் பற்றி எரியத் துவங்க

இப்போது புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்

 இந்த அவசரக் காலத்தைப் பதிவு செய்ய வேண்டிய

 இதுவரை பதிவு செய்யப்படாத

 புதிய பட்டியல்

அனுமார் வாலாய் நீண்டு தெரிகிறது

என்னுள்ளும் இதுவரை இல்லாத

அதீத உற்சாகம்

காவிரி நீராய் பரந்து விரிகிறது

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆனால் பழமை பற்றி மனம் ஏங்கும்...

கரந்தை ஜெயக்குமார் said...

உற்சாகம் காவிரி நீராய் தொடர்ந்து பரந்து விரியட்டும்

வெங்கட் நாகராஜ் said...

உற்சாகத்துடன் தொடருங்கள்.

சில நாட்களாக பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் உறவுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

பதிவுகளுக்கு காத்திருக்கிறோம். 

ஸ்ரீராம். said...

காலம் செய்த கோலமடி என்று பாடி விடலாம்!

Post a Comment