உலகளாவிய சேவை இயக்கமான
அரிமா சங்கத்தில் கடந்த பதினைந்து
ஆண்டு காலமாக என்னையும் இணைத்துக் கொண்டு
முடிந்த அளவு சேவைகள் செய்துவருகிறேன்
சங்கத்தில் உறுப்பினராக /
பொருளாளராக\ செயலாளராக/ தலைவராக
பின் மாவட்டத் தலைவராக பணி செய்த
பாங்கை உத்தேசித்து சில வருடங்களுக்கு
முன்பு அப்போதைய
அரிமா மாவட்ட ஆளுநர் அவர்கள்
எனக்கு வட்டாரத் தலைவராக சேவைசெய்யும்
வாய்ப்பினைக் கொடுத்தார்கள்..
அரிமா இயக்கத்தில்
வட்டாரத் தலைவர் என்பது கொஞ்சம்
கௌரவமான பதவி மட்டும் அல்லாது
பிற சங்கங்களை ஒருங்கிணைத்து
கூடுதலாகச் சேவை செய்ய
வாய்ப்பும் உள்ள பதவி.
எனவே இப்பதவியில்
தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கும் இன்னும் சில
முக்கியஸ்தர்களுக்குமாகச் சேர்த்து
தலைமைப் பண்பு பயிற்சிக்கு எப்போதும்
ஏற்பாடு செய்வார்கள்..
பயிற்சி தரமானதாக இருக்கவேண்டும்
என்பதற்காக மிகச் சிறந்த தலைமைப் பண்புப்
பயிற்சியாளர் மூலம் பயிற்சிக்கு ஏற்பாடு
செய்வதோடு பயிற்சி இடையூறுன்றியும்
என்றும் நினைவில் பசுமையாய்
இருக்கவேண்டும் என்பதற்காக மிகச் சிறந்த
இடமாகவும் தேர்வு செய்வார்கள்..
கூடுமானவரையில் அது வெளி நாடாக இருக்கும்
நான் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில்
இந்த நிகழ்வினை மலேசியாவில்
சுற்றுலாவுக்கெனவே பெயர்பெற்ற அருமையான
கொடாக்கின பாலு
தீவைத் தேர்வுசெய்திருந்தார்கள்..
பயிற்சி மிகச் சிறப்பாக ஐந்து நாட்கள்
நடைபெற்று முடிந்ததும் கடைசி நாளில்
பயிற்றுநர் பயிற்சி குறித்த அனுபவங்களை
தனித்தனியே கேட்டு அறிந்து கொண்டு
வந்தார்..அந்த வகையில் என் முறையும்
வந்தது..
நான் என் கருத்தைப் பதிவு செய்யும்
முன்பு எனது சந்தேகமாக
"எனக்கு தலைமைப் பண்புத் தகுதிகள்
இருப்பதால்தான் இந்தப் பதவியே
கொடுத்துக் கௌரவித்திருக்கிறார்கள்
பின் எனக்கு எதற்கு மீண்டும் தனியாக ஒரு
பயிற்சி "என்றேன்
என் கேள்வி அவருக்குப் பிடித்திருந்தது
அதற்கு அவர் " ஏற்கிற பணியினை
மிகச் சிறப்பாகச் செய்யவும் அதன்
காரணமாக இதற்கு அடுத்த நிலைக்கு
தகுதியடையவும் " என்றார்..
"உங்கள் பதில் சரியானதுதான் என்றாலும்
இதையும் தாண்டி இன்னொன்றும்
உள்ளது...இயல்பாகப் பதட்டமின்றி
இரசித்துப் பணியாற்றவும்...."
என்றேன்
அவர் இதை மிகவும் இரசித்தார்..
" பின்இதனைச் சரியாக விளங்கிக் கொள்ளும்படியாக
இன்னும் விளக்கமாகச் சொல்லமுடியுமா "
என்றார்
"கவிதை வடிவில் சொல்லட்டுமா " என்றேன்
"சந்தோஷமாக....." என்றார்
நான் அவருக்கு பயிற்சியின் போதே
எழுதி வைத்திருந்த
இந்தக் கவிதையைச் சொன்னேன்
"அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
அனைவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில்
நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
நீச்சல் அறியாதவர்களும் இருந்தார்கள்
நீச்சல் அறிந்தவர்கள் எல்லாம்
ஏரியின் குழுமையையும் அழகையும்
வெகுவாக இரசித்தபடிப் பயணிக்க
நீச்சல் அறியாதவர்களோ
ஏரியின் ஆழம் குறித்தும்
இதற்கு முன் அங்கு நடந்த விபத்துகள் குறித்தும்
எண்ணிப் பயந்தபடி பயணித்துக் கொண்டிருந்தார்கள்
படகில் பயணம் செய்ய
நீச்சல் தெரிந்திருக்க வேண்டியது
நிச்சயம் அவசியம் இல்லைதான்
ஆயினும்
இரசித்துப் பயணிக்க
நீச்சல் அவசியம் தெரிந்திருக்கவேண்டும்..."
எனச் சொல்லி முடிக்கவும்
சந்தோஷத்தில் உற்சாகமாக என்னைக்
கட்டிப்பிடித்துப் பாராட்டியதுடன்
" ஆம் இரசித்துப் பணி செய்ய
என்பது மிக மிக முக்கியம்...
இந்தக் கவிதையை நான் பயன்படுத்திக்
கொள்ளலாம் தானே " என்றேன்
"தாராளமாக..என்றேன்
பின் அவரே
"ஆம் திருநெல்வேலிக்கும் அல்வா
வேண்டும் தானே " என்றார்
சப்தமாகச் சிரித்தபடி..
5 comments:
உணர்த்திய வரிகள் அருமை...
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
துளசிதரன்
கீதா
சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
சிறந்த இடுகை
Post a Comment