எங்களூரில்
கொடிகளின் சலசலப்பில்எட்டாகச் சுருங்கிக் கிடந்த
ஜாதீயப் பிளவுகள் தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்
எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்
கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்
கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்
அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்
பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்
துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்
நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
2 comments:
"எப்படியும் கொள்ளை அடிக்கப் போறான். அதுல கொஞ்சம் இப்ப கொடுக்கட்டுமே" "அவன் காசயா கொடுக்கறான்? கொள்ளை அடிச்சதைத் தானே கொடுக்கறான். கொடுக்கட்டுமே" என்ற மனநிலைகளுக்கு மக்கள் செட் ஆகிவிட்டார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இந்த மனநிலைகளுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்த கவுன்சிலர் தேர்தலிலும் பணத்தை அள்ளி இறைக்கிறார்கள்! அடுத்த தேர்தலில் ஓட்டும் போஸ்டரில் QR code அடித்து googe pay மூலம் கொடுத்துவிடும் சாத்தியம் தெரிகிறது!
ஓ...
Post a Comment