*பழைய கதை... அறியாதவர்களுக்காக...*👇
*மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தொடங்கப்பட்ட *'அபிநவ பாரத்'* இயக்கத்தின் கிளையை தமிழகத்தில் துவங்க சங்கர கிருஷ்ணய்யரும் நீலகண்ட பிரம்மச்சாரியும் வாஞ்சிநாதனை தங்களது இயக்கத்தில் சேர்த்தனர். சங்கர கிருஷ்ணய்யரின் சகோதரியை சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்திருந்த வாஞ்சிநாதன், இயக்கத்தின் பால் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்த சமயமது. அப்போது *வ.உ.சி* , *சுப்பிரமணிய சிவா* ஆகியோரை ( 12/03/1908 ) ஆங்கிலேய அரசு கைது செய்தது. அதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் போராட்டம் தீயெனப் பரவியது. துணைக்கலெக்டரான *ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ்* போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதன் பேரில் 4 போராட்டக்காரர்கள் பலியானார்கள். இதில் கோபமடைந்த அபிநவ பாரத் இயக்கத்தினர், அதற்கு காரணமானவனை பழிக்கு பழிவாங்க உறுதி பூண்டனர். 25 வயதேயான வாஞ்சிநாதன், தன் மைத்துனர் சங்கர கிருஷ்ணய்யர் மூலமாகவும் நீலகண்ட பிரம்மச்சாரி மூலமாகவும் புதுச்சேரியில் ஒரு மாத காலம் தங்கியிருந்து தன்னை உடலளவிலும் மனதளவிலும் தயார் செய்து கொண்டு, துப்பாக்கி சுடும் பயிற்சியையும் மேற் கொண்ட வாஞ்சிநாதன், 1911 ஆம் ஆண்டு மே மாதம் திருநெல்வேலி வந்து சேர்ந்தார். அப்போது திருநெல்வேலி கலெக்டராக பதவி உயர்வு பெற்றிருந்த ஆஷ், *17-06-1911* அன்று தன் மனைவியுடன் திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து காலை 10 மணிக்கு ரயிலில் புறப்பட்டு காலை 10-45 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி, தூத்துக்குடியிலிருந்து காலை 11 மணிக்கு வரும் ரயிலில் ஏறி கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க பயணிக்கும் தகவல் வாஞ்சிநாதனுக்குக் கிடைத்தது. கொடைக்கானல் வரை செல்லாமல் மணியாச்சியிலேயே ஆஷ் க்கு நிரந்தர ஓய்வு கொடுக்க திட்டமிட்ட வாஞ்சிநாதன். துப்பாக்கி, துண்டு பிரசுரங்கள் சகிதமாக காலை 10 மணியிலிருந்தே காத்திருக்கத் தொடங்கினார். கலெக்டர் திட்டமிட்டபடி தூத்துக்குடியிலிருந்து வந்த ரயிலில் ஏறி முதல்வகுப்பு பெட்டியில் அமர்ந்து ரயில் புறப்பட காத்திருந்தான். அவனுக்கு எதிரே அவனது மனைவி அமர்ந்திருந்தார். ரயில் புறப்பட சில நிமிடங்கள் இருந்த நிலையில் துப்பாக்கியுடன் பாய்ந்து சென்று, ஆஷ் இருந்த பெட்டியில் ஏறிய வாஞ்சிநாதன். சற்றும் காத்திருக்காமல் ஆஷை நோக்கிச் சுடத்துவங்கினார், முதல் குண்டு கலெக்டர் ஆஷின் இடது தோள்பட்டையில் பாய்ந்தது. அலறிய அவன், தனது துப்பாக்கியை எடுத்து வாஞ்சிநாதன் மீது வீசினான். அதிலிருந்து விலகிக் கொண்ட வாஞ்சிநாதன், அடுத்தடுத்து 2 குண்டுகளை ஆஷை நோக்கிச் சுட, அந்த இடத்திலேயே அவன் தன் மனைவி முன்னே சரிந்து விழுந்தான். கூச்சலிட்டுக் கொண்டே அவனது மனைவி கீழே இறங்கி நடைமேடையில் ஓட, வாஞ்சிநாதனை, ஆஷின் உதவியாளர் ஒருவரும் காவல்துறையினர் சிலரும் பிடிக்க முயல, *"வெள்ளையனை சுடுவதுதான் என் லட்சியம், என்னை பிடிக்க முயன்றால் உங்களையும் எமலோகம் அனுப்பிவிடுவேன்"* என்று துப்பாக்கியைக் காட்டி எச்சரிக்க, மொத்த கூட்டமும் பின்வாங்கியது. *தப்பியோட வாய்ப்பிருந்தும் அதை விரும்பாத வாஞ்சிநாதன், அங்கிருந்த கழிவறைக்குள் நுழைந்த அடுத்த வினாடி துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.* பீதியில் இருந்த காவல் துறையினர், ஒரு மணிநேரத்துக்கு பின்னர் உள்ளே நுழைந்து பார்த்தபோது, *வாயில் துப்பாக்கியை வைத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தன் இன்னுயிரை தேசத்திற்காக தியாகம் செய்த நாள் இன்று....!*
( நன்றி # தினமலர் )
1 comment:
இன்றும் பல 'ஆஷ்'கள் உள்ளனவே...
Post a Comment