Monday, March 18, 2024

தேர்தல்...

 எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்

கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
(ஐம்பதாண்டுகளுக்கு‌ முன்னால் சிகரம் முற்போக்கு மாத இதழில் நான் எழுதியது.திருத்தம் ஏதும்‌ செய்ய வேண்டி‌இல்லாது  சூழல் அப்படியே இருப்பது ஆச்சரியமே.  )

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் பொருந்தும் கவிதை - சிறப்பு. திருவாளர் பொதுஜனம் எப்போதும் போல் அப்படியே!

Post a Comment