Wednesday, August 14, 2024

கவிதை என்பது உணர்வு கடத்தி

 


" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்

"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே  கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?

4 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவின் கவிதை அருமை. ஆம். உண்மை. கவிதை ஒரு உணர்வு கடத்திதான். அழகாக சொல்லியுள்ளீர்கள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Jayakumar Chandrasekaran said...

நீங்க எழுதியிருப்பது கவிதை என்றால் அது கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் என்று தோன்றுகிறது.

Yaathoramani.blogspot.com said...

என் படைப்பு கவிதையில் சேர்த்தி இல்லை..எதுவோ என்கிற பொருள்தரும் யாதோ...

வெங்கட் நாகராஜ் said...

உணர்வு கடத்தி - சிறப்பு.

Post a Comment