வானம் பார்த்து மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்
ஞானம் தேடி காடு மலை ஓடி
இன்னும் எத்தனை யுகம்
வாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்
நான் இருப்பதும் இல்லாதிருப்பதும்
உலகுக்கு பிரச்சனையே இல்லை
என்னை வைத்துப் பிழைப்பவனும்
என்னை "வைதுப் " பிழைப்பவனும் தான்
உலகில் பெரும் பிரச்சனை
வேண்டுதல் நிறைவேற்ற அள்ளிக் கொடுக்கவோ
செருப்படி கொடுத்தால் சீரழித்துப் போகவோ
நான் அற்ப மனிதனில்லை
ஒலியாக ஒளியாக பொதுவாக இருந்தவனை
நீங்கள்தான் உங்கள் வசதிக்காகப்
பிரித்துத் தொலைத்தீர்கள்
வெளியாக எனினும் தெளிவாக யாவர்க்கும் பொதுவாக இருந்தவனை
மதம் பிடிக்க என்னைப்
சின்னாபின்னப்படுத்திவிட்டீர்கள்
நான் ஒருவனே என்று சிலரும்
நானே எல்லாம் என்று சிலரும்
என்னை நீங்களாகவே உருவகப் படுத்திக்கொண்டீர்கள்
மிகப் பெரியவனான எனக்கு
ஊடகமும் ஏஜேண்டுகளும் தேவையென நீங்களாகவே முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்
உறுதியாகவும் சொல்கிறேன்
இறுதியாகவும் சொல்கிறேன்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்
என்னைப் படைத்து என்னைப் புகழ்ந்து
நீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை
என்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை
உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும் என்னை சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்
5 comments:
நிம்மதிக்காக, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி கசடவுளே அலைகிறார் போல! :))
வித்தியாசமான சிந்தனை. அவருக்கும் நிம்மதி தேவைப்படும்படி செய்துவிட்டதே இந்த மனித குலம்!
சிறப்பான சிந்தனை கவிஞரே...
வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. அருமையான சிந்தனை. கடவுளே நொந்து போகும்படிக்கு செய்து விடுகிறார்கள் இந்த மனிதர்கள். நல்ல சிந்தனையுடன் கூடிய பதிவு.ரசித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அதெப்படி கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியும் இப்படி வெளிப்படையாக வேண்டுகோள் வைத்தால். உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை என்று நீங்கள் தானே ஒப்புக் கொண்டீர்கள். அதனால் உண்டு என்பவர்களும் இல்லை என்பவர்களும் நன்றாக பிழைக்கவில்லையா?
நிம்மதி மனிதனுக்கு மட்டும் தான். இயக்குபவனுக்கு தேவை இல்லை. அவன் நிம்மதிக்கு அப்பாற்பட்டவன். உணர்ச்சிகள் இல்லாதவன்.
Post a Comment