Friday, August 23, 2024

குழந்தைகளோடு குழந்தைகளாய்..

 அதிகாலைச் சூரியனோடு

கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவை  உணரச் செய்து போகும்

காடோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

இவை எதற்கும் நேரமில்லையெனில்
கவலை கொள்ளவேண்டாம்
குழந்தைகளோடு  குழந்தைகளாய்.                    ‌ ( குழந்தைகளோடு பெரியவர்களாக அல்ல ) இருக்க முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா.
பெயர்த்தியுடன் விளையாடும் போது உணர்ந்தேன்

ஸ்ரீராம். said...

நன்று.

வெங்கட் நாகராஜ் said...

குழந்தைகளோடு குழந்தைகளாக.... இது ஒரு வரம்... அப்படி இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி.

Post a Comment