Sunday, August 18, 2024

நயமுடன் உரைத்திடும்....

...சீர்மிகு கவிகள் செய்ய

சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்



4 comments:

ஸ்ரீராம். said...

நன்று.  ஆனால் கடைசி வரி மிஸ்ஸிங்கோ?  ஒரு வரி குறைகிறதோ?

ஸ்ரீராம். said...

கடைசி வரி என் முயற்சியில்...


"உரைத்திட நீயும் காண்பாய்!"

வெங்கட் நாகராஜ் said...

நன்று.

கரந்தை ஜெயக்குமார் said...

நயமுடன் உரைத்திட்டீர்.அருமை

Post a Comment