Sunday, September 15, 2024

ஆனந்தத்தின் அற்புதம்..

 அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்


யானையைக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்கப் பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடி
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேட்டையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Saturday, September 14, 2024

முடிவின் விளிம்பில்...

 குழப்பம் என்னுள் சூறாவளியாய்

சுழன்றடிக்கிறது

நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?


இருக்கிறேன் என்பது சரியா?
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உண்ர்வு அற்றுப்போனதா? 


கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாதிருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் 

புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன


பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறல்களே பரவிச் சிரிக்கின்றன


பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்


மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி


முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது


விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்


என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன


எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எரிந்துகொண்டிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்துணை  அவஸ்தைகளுக்கும் மத்தியில்


இவைகளுக்கெல்லாம்

 தொடர்பே இல்லாததுபோல்

தென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோடு

 தங்கத்தின் தகதகக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்
கொத்தின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்துணை வலிகளும்
அத்துணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர


அது கடந்த வழியெல்லாம்

 சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம்

 பரவசம்  பரந்து விரிய

நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே

 திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் 

சேரவேண்டிய வெட்டவெளிக்கும்

இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது


இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி


"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்ப்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்


கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?


காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?


காலவெளியில் காலத்துளி

 மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது


நான் பிணமாகிறேன்


அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது(சொல்ல முடியாத அந்த கடைசி நொடியை சொல்ல முயன்றிருக்கிறேன் )

Friday, September 13, 2024

ஜென் சித்தப்பு

 "எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "

கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை ஆசை கெடுக்கும்
நாலாம் இருபதை  பயம் தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

Tuesday, September 10, 2024

பாட்டுக் கொருவனின் பாதம் பணிவோம்

 நல்லதோர் வீணையாய் அவனிருந்தான்

அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

சுடர்மிகும் அறிவுடன் அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

எமக்குத் தொழிலே கவிதை யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

ஊருக்குழைத்தலே தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

இருக்கும்வரை இமைப்பொழுதும் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனாய் இன்றளவும்
 பரிமளிக்க முடிகிறது

Sunday, September 8, 2024

மனித்த பிறவியும் வேண்டும்..

கவித்துவம்

நிரம்பி வழியும் கவிதைகள்

படிக்கப் படிக்க

மனம் மகிழ்வித்துப் போனாலும்...


மிக லேசாகத்தான் என்றாலும் தவறாது

நீ எழுதத்தான் வேண்டுமா என

அச்சுறுத்தியும் போகிறது...


உருவில் மட்டும்

கவிதையாய் இருக்கிற உளறல்கள்

படிக்கப் படிக்க

எரிச்சல் கொடுத்த போதும்


தவறாது மிக உறுதியாய் நீ

எழுத்தத்தான் வேண்டும் எனத்

தைரியமளித்தும் போகிறது..


கவனமாய் எழுத

அச்சுறுத்தலும் அவசியமே என்பதால்

தவறாது அன்றாடம்

சில நல்ல கவிதைகளையும்


தொடர்ந்து எழுத

தைரியமும் அவசியமே என்பதால்

தவறாது நாள்தோறும்

பல மோசமான கவிதைகளையும்


இரசித்துப் படிப்பதை

கடமையாகக் கொள்கிறேன்


ஆம்....

மனித்தப் பிறவியும்

வேண்டுவதே இந்த மாநிலத்தே.

என்பதைப் போலவே...


Thursday, September 5, 2024

படித்ததில் பிடித்தது

 படித்து நெகிழ்ந்தேன்.

நீங்களும் கொஞ்சம் நெகிழ்ந்து போங்கள்!


புதிய வேலையில் சேர்ந்து இருந்தேன், வேலை முடிந்ததும் பெங்களூர் மாநகராட்சி வாசலில் பேருந்துக்காக காத்து நிற்பேன்.


Electronic City க்கு பணியாளர்களை நகருக்குள் திரும்ப அழைத்து வரும் Tempo Traveller வண்டிகள் நின்று 5 ரூபாயில் பயணிகளை அழைத்துப் போவார்கள்.


ஒரு மாதக் கடைசி நாளில் கையில் காசில்லை, சில நேரங்களில் நடந்து போயிருக்கிறேன், அன்றைய நாளில் அத்தனை தெம்பில்லை என்று நினைக்கிறேன். 


எப்படி வீடு திரும்புவது என்பது குறித்து நீண்ட நேரம் யோசித்தபடி நின்றிருந்தேன். பிறகு பொம்மனஹள்ளியில் இறங்கி புத்தகங்கள் விற்கும் கடைக்காரத் தம்பியிடம் காசு வாங்கிக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து ஒரு Tempo Traveller வண்டியில் ஏறி அமர்ந்து விட்டேன்.


பயணம் முழுவதும் பலவிதமான குழப்பங்கள், தம்பியின் கடை திறந்திருக்க வேண்டும், கேட்டவுடன் அவன் 5 ரூபாயைக் கொடுத்து விட வேண்டும். 


ஓட்டுனர் ஏதாவது கோபத்தில் திட்டி விடக்கூடாது, இதுபோன்ற ஒரு சூழலில் பயணிக்கத் கூடாது, என்றெல்லாம் குழப்பமான துயர் படிந்த அச்சத்தோடு அந்தப் பயணம் முடிவுறும் நேரம் வந்து விட்டது.


எல்லாப் பயணிகளும் இறங்கும் வரை காத்திருந்து விட்டு அந்த ஓட்டுனரிடம் வந்து நின்று, "அண்ணா, மன்னியுங்கள், கடை வரைக்கும் போய் காசு வாங்கிக் கொண்டு வருகிறேன்".


அந்த ஓட்டுனர்‌ என்னை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார், அமைதியாக இருந்தவர், "பரவாயில்ல தம்பி, கதவை நல்லா சாத்தீட்டுப் போய்ட்டு வாங்க". அந்த மனிதரின் பார்வையில் சக மனிதனின் துயரத்தைப் படிக்கும் ஒரு மெல்லிய நேசமிருந்தது. 


அந்த அனுபவம் எனக்கு ஒருவிதமான நெகிழ்ச்சியை உருவாக்கி இருந்தது. மனிதர்கள் எங்கிருந்தாலும் சலனமற்றுப் பிற மனிதர்களின் துயரங்களைப் புரிந்து கொள்கிறார்கள். 


இந்த நேசத்தின் நிழல்தான் பேரண்டத்தின் அச்சாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. இந்த அச்சைத்தான் மனிதர்கள் கடவுள் என்று பெயரிடுகிறார்கள் போல என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.


ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஒரு நவீன மகிழுந்து வாங்கி இருந்தேன், அதே சாலையில் நாள்தோறும் அலுவலகத்துக்குப் பயணம் செய்வேன்.


நாள்தோறும் அந்த Tempo Traveller ஓட்டுனரை நினைத்துக் கொள்வேன், வீடு திரும்பும் போது பேருந்து நிறுத்தங்களில் நிற்கிற முதியவர்களை "நீங்கள் எங்கே போக வேண்டும்" என்று கேட்டு ஏற்றிக் கொள்வேன். அவர்களது நிறுத்தங்களில் இறக்கி விடுவேன். அது அந்த ஓட்டுனருக்கு செய்கிற நன்றிக் கடன் என்று நினைத்துக் கொள்வேன்.


ஏறத்தாழ மறுபடி 10 ஆண்டுகளுக்குப்‌ பிறகு அதே சாலையில் "Kendriya Sadhan" இல் ஒரு வேலையை முடித்துக் கொண்டு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த போது பின்னாலிருந்து "ஐயா" என்றொரு குரல். 


விசுக்கென்று திரும்பிப் பார்த்தால் மெலிந்த எலும்புகள் வெளியே தெரிகிற மாதிரியான தோற்றத்தோடு ஒரு அம்மா என்னை அழைத்தார். அவர் யாசகம் கேட்கிறவரைப் போல இல்லை.


அருகில் போய் "என்ன ஆச்சு அம்மா?" என்றேன். என் கையில் ஒரு மருந்துச் சீட்டைக் கொடுத்தார், St.Johns மருத்துவமனையின் இலவச மருத்துவப் பிரிவு சீட்டு, நான்கைந்து மருந்துகளும் ஒரு Protinex டப்பாவும் எழுதி இருந்தார்கள். அவர் ஏன் என்னைத் தேர்வு செய்து அழைத்தார், என்னிடம் ஏன் அந்த மருந்துச் சீட்டைக் கொடுத்தார்‌  என்று தெரியவில்லை.


சட்டைப் பைக்குள் கையை நுழைத்து ஒரு இருநூறு ரூபாய்த்தாளை எடுத்து அவரிடம் கொடுக்கப் போனேன், அவர் மெல்லிய குரலில் என்னால் நடக்க முடியவில்லை தம்பி, நீயே இதிலிருக்கும் மருந்தை வாங்கிக் கொடுத்தால் நன்றியுடையவளாக இருப்பேன், பணம் வேண்டாம்"


வறுமை, பிணி, மூப்பு எல்லாவற்றையும் தாண்டி அவரிடம் பணம் வேண்டாம் என்று சொல்கிற ஒரு சுயமரியாதை இருந்தது, 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஓட்டுனரிடம் பேசும்போது எனக்கிருந்த அதே ததும்பும் கூச்சமும், துயரமும் அவரது முகத்தில் இருந்ததைப் பார்த்தேன்.


அந்த 20 வருடத்துக்கு முந்தைய உரையாடல் திரும்ப நிகழ்ந்து கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன், நான் அந்த ஓட்டுனரிடம் கைகளைக் கூப்பவில்லை, ஆனால் இந்தத் தாயோ கைகளை என்னை நோக்கிக் கூப்பியபடி  இருந்தார். 


அவரது கைகளைப் பிடித்து மெல்லக் கீழறிக்கி விட்டு, "அம்மா, இங்கேயே அமர்ந்திருங்கள், நான் மருந்துகளை வாங்கி வருகிறேன்" என்றபடி மூடியிருந்த ஒரு கடையின் படிகளைக் காட்டிவிட்டு மருந்துக் கடையைத் தேடி நடந்தேன். 


பகல் உணவுக்குப் பிறகு பெரும்பாலான கடைகளை இரண்டு மணிநேரம் மூடி விடுவார்கள். அலைந்து திரிந்து கடைசியாக ஒரு குறுகிய சந்தில் திறந்திருந்த மருந்துக் கடையைப் பார்த்தேன்.


இரண்டு மார்வாடி இளைஞர்கள், மருந்துகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள், மருந்துச் சீட்டைக் கொடுத்தவுடன்‌ "எல்லா மருந்தும் கொடுக்கவா சார்", என்றவனிடம் "எவ்வளவு ஆகும் தம்பி?" என்றேன்.


அமர்ந்தவன் கணக்குப் போட்டபடி, Protinex சிறியதா? பெரியதா? என்றான். "பெரியதென்றால் ஒரு மாதம் வரும்" என்று கூடுதல் தகவல் கொடுத்தான். 


"பெரியதே இருக்கட்டும் தம்பி".


"776 ரூபாய், இந்த மூன்றாவது மருந்து மட்டும் வேறு Company இருக்கிறது? கொடுக்கட்டுமா?"


"தெரியலையே தம்பி, போய்க் கேட்டுவிட்டு வரட்டுமா?"


"யாருக்கு வாங்குறீங்க சார்?"


"தெரியல தம்பி, ஒரு வயசான அம்மா, வாங்கி வரச்சொன்னார்கள்."


என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தவன், அமைதியாக கணிப்பொறியில் ஏதோ தட்டச்சினான். கையில் இரண்டு சீட்டுகள் கொடுத்தான்.


Wallet இல் இருந்து இரண்டு 500 ரூபாய்த்  தாள்களை எடுத்து நீட்டினேன், ஒன்றை வாங்கிக் கல்லாவில் போட்டுவிட்டு சிரித்தான். இன்னொரு தாளை என்னிடமே திருப்பிக் கொடுத்தான். 


அவன் பங்குக்கு 276 ரூபாய். நான் அமைதியாக நின்று அவன் முகத்தைப் பார்த்தேன். நானாவது நேரடியாக உதவி கேட்கப்பட்டவன், ஆனால், அவன் எனது சொற்களை மட்டுமே நம்பினான்.


சக மனிதர்களின் துயரத்தை நேரடியாக உணர்ந்து உதவுகிற நம்மைப் போன்றவர்களை விட, வெறும் சொற்களை நம்பி, அந்த சொற்களின் ஈரத்தை உணர்ந்து எடுத்துக் கொடுக்கிற மனிதன் மகத்தானவன் இல்லையா?


நான் நெகிழ்ந்து நீண்ட நேரம் அங்கே நிற்க முடியாதவனாக அந்த இளைஞனைப் பார்த்துக் கைகளைக் கூப்பியபடி நகரத் துவங்கினேன்.


அந்த முதிய தாய் அங்கேயே அமர்ந்திருந்தார்கள், மருந்துகளைக் கொடுத்து விட்டு மீண்டும் அந்த சட்டைப்பையிலிருந்த 200 ரூபாய் நோட்டையும் கைகளில் வைத்து அழுத்திவிட்டு நடக்கத் துவங்கினேன்.


அந்த சாலை கடந்த 20 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது, அந்த சக மனிதர்களின் வலியை உணர்ந்து கொஞ்சமாக நெகிழ்ந்து போகிற மனிதர்கள் இன்னமும் அந்த சாலையில் நடக்கிறார்கள். 


பூமியின் உள்ளிருக்கும் குழம்பு இப்போது எதிர்த்திசையில் சுழலத் துவங்கி இருப்பதாக யாரோ சில விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.


ஆனால், கருணையும், இரக்கமும், சக மனிதர்களின் துயரத்தை உணர்ந்து கொள்கிற பேரண்டத்தின் அச்சும் ஒரே திசையில் தான் சுழல்கிறது அல்லவா?


அந்த ஓட்டுனரிடம் இருந்துதான் நான் அந்த உடைக்க முடியாத மாய அச்சைப் பிடித்துக் கொண்டு வந்தேன், பிறகு என்னிடம் இருந்து அந்த அச்சை லாவகமாகப் பிடித்துக் கொண்ட அந்த மார்வாடி இளைஞனின் புன்னகை, அதுதான் கடவுளின் சாயல் என்று பலரும் சொல்கிறார்கள்.


எதிர்பார்ப்புகளற்ற கருணையைப் புரண்டோடச் செய்கிற பேரன்பு தான் கடவுள்.  எழுத்தாளர் -சுஜாதா

Monday, September 2, 2024

தீர்மான மாற்றம்..

 ஆடைகளை

பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினைப்
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் செல்வாக்கும்  தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்

தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க

கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச்  சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....

சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு 

Sunday, September 1, 2024

முகவரி..

 கடலுக்கு அலையது முகவரி

நிலவுக்கு பனியது முகவரி
மலருக்கு  மணமது முகவரி-என்
மகிழ்விற்கு "அவள்தான்" முகவரி

கொடையதற்கு கருணையே முகவரி
காதலுக்கு அன்பதே முகவரி
படையதற்கு தலைவனே முகவரி-என்
புகழுக்கு "அவள்தான் " முகவரி

மனதுக்கு நினைவதே   முகவரி
நினைவுக்கு மொழியதே  முகவரி
பகலுக்கு ஒளியதே  முகவரி-என்
உயர்வுக்கு  "அவள்தான்" முகவரி

கடவுளுக்கு கோவிலே முகவரி
கனியினுக்கு சுவையதே   முகவரி
உடலுக்கு முகமதே  முகவரி-ஆம் 
எனக்கென்றும் "கவிதையே   " முகவரி

சந்தமே முதன்மை என அறிந்தாலே..

 விளமதும் மாவும் தேமா

வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்