Tuesday, October 15, 2024

மாறாத ஒன்றே நிலையானது....

 


வெறித்துப் பயந்து ஓடும்
தன்மை கொண்ட பூனையாயினும்
முழு வழியையும் அடைத்துத்
தாக்கக் கூடின்
அது தப்பிக்கக் கழுத்தில்தான் பாயும்

பள்ளம் பார்த்து
தானே ஒதுங்கி ஓடும் நீராயினும்
அதன் போக்கனைத்தும் அடைத்துத்
தொலைப்போம் ஆயின்
அது நம் போக்கை அடைக்கத்தான் செய்யும்

வறுமையில் வயிறு
ஒட்ட ஒட்டக் கிடப்பவன்
பாடம் கற்காது போயின்
செல்வச் சேர்க்கையின் போது
அது நிச்சயம் வீணாகித்தான் போகும்

கோடையில் நீர்த்தேடி
தினம் அலைந்துத் தொலைப்பவன்
அதன் தன்மை அறியாது போயின்
அது அதிகம் கிடைக்கையில்
நிச்சயம் அது பகையாகித்தான் போகும்

ஓட்டைப் பானையில்
நீர்ப்பிடிக்கும் மூடனாய்
இயற்கையின் பால பாடங்களையே
அறியாத மூடனாய்
இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறோம் ?

வலியக் கிடைக்கும்
வரங்களைக் கூட
கொடிய சாபமாக்கி
அவதிப்படும் மூடர்களாய்
இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறோம் ?(மாறுதல் ஒன்றே மாறாதது என்பது தத்துவம்.. மாறாதது ஒன்றே நிலையானது என்பதே இங்கு யதார்த்தம்)

4 comments:

Anonymous said...

அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது இந்த வினைக்கு காரணம்.


எந்த திட்டமிடல் இல்லை.

மக்கள் மீது திணிக்கப்பட்ட வரிச்சுமை இன்னும் அதிகமாக கொண்டே இருக்கிறது..

Anonymous said...

உண்மை..

Jayakumar Chandrasekaran said...

மாற்றம் ஒன்றே மாறாதது எனினும்
இயல்பு மாற்றத்தை தடுத்தால்
மாற்றம் இயல்பை மாற்றிவிடும்.
ஆதலால் மாறுவீர் சென்னை மக்களே
குளம் ஏரி வெட்டி நீரை சேகரிப்பீர்.
Jayakumar

ஸ்ரீராம். said...

சரியானவர்களை, பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்தால் பரவாயில்லை.  நாம்தான் அப்படி செய்வதில்லையே...   ஆளத்தகுதி இலலாதவர்களைதான் தேர்ந்தெடுக்கிறோம்.

Post a Comment