Sunday, May 31, 2020

இது ஒரு கொரோனா காலம்...

"ஹலோ"

"ஹலோ சார் குட்மார்னிங்"

"வெரி குட் மார்னிங் சார்...😊"

"சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க"

"அமோகமா இருக்கோம்,  நீங்க எப்டி இருக்கிங்க, வீட்ல அண்ணி பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க..."

"எல்லா நல்லா இருக்கோம் சார்..."

"அப்றம் வேலைலாம் எப்படி போயிட்ருக்கு"

"சார் உங்களுக்கு ப்ரைவேட் செக்டார் பத்தி தெரியாததா, கோரனாவால, 50% வொர்க்கர்ஸ், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒர்க், 50% சாலரி😔"

"ஆமாம் சார், ஆமாம் சார், எல்லாருக்குமே காமனா இன்கம் பாதியா கம்மியாயிடிச்சி, இயல்பு வாழ்க்கை திரும்புற வரைக்கும் கொஞ்சம் சிரமம் தான், கவலப்படாதீங்க சார், இதுவும் கடந்து போகும்"

"நிச்சயமா சார்"

"அப்றம், சார் திடீர்னு போன் பண்ணிருக்கீங்க, எதுவும் விசேசமா"

"கரெக்டா சொல்லிட்டீங்க சார், ப்ரில்லியன்ட் சார் நீங்க,
என் பொண்ணுக்கு மேரேஜ் வச்சிருக்கோம்"

"வெரி குட் சார், என்னவோ நேத்து ஃபர்ஸ்ட் பர்த்டே கொண்டாடுன மாதிரி ஞாபகம், கடகடனு வருசம் ஓடிடுது"

"ஆமா சார்,  நெஜந்தான அது😊,  அப்றமா, மாப்ள நல்ல இடம், அதான் டக்குனு செட்டாயிடிச்சி, அப்றம், லாக்டவுன் 1.0ல பேசி முடிச்சோம், ஆனா லாக்டவுன் தான் 2.0, 3.0, இப்ப 4.0,🤓, போகுற போக்க பார்த்தா இதோட முடிஞ்சிடுற மாதிரி தெரில😇, அதான் தள்ளிப்போட வேணாம்னு வச்சிட்டோம்😊, உங்களுக்கு தெரியாதது இல்ல, இப்ப உள்ள சூழல்ல ஊர் ஊரா பத்திரிகை வைக்க அலைய முடியாது, இ பாஸ் சில இம்பார்டன்ட் ட்ராவல்க்கு தான் அலோவ் பண்ட்றாங்க..."

"ஆமா சார், பக்கத்து ஏரியாவுக்கு கூட ஈவ்னிங் 7மணிக்கு மேல போக முடியல..."

"அடுத்தது,  ஃபோன்ல சொல்ட்றத நேர்ல வந்து சொல்ட்றதா நினைச்சுக்கங்க...🤗"

"அதனால என்ன சார், நாம என்ன அப்புடியா பழகுறோம், நமக்குள்ள என்ன சார் பார்ஃமாலிட்டி...😎"

"தேங்க்யூ சார், தேங்க்யூ சார், அப்றம் நீங்களும் பங்க்சனுக்கு வர்றது சிரமம் தான், அடுத்தது பங்சனுக்கு எங்க சைடுல 25பேரு, அவங்க சைடு 25பேரு தான், அவ்ளோ தான் அலோவ்டாம், அதனால வீட்லயே பண்ட்றோம்"

"அதுவும் சரி தான் சார், இப்ப உள்ள சூழல் அவ்வளவு  சரியாயில்ல"

"அப்றம்..."

"சொல்லுங்க சார்"

"நான் உங்க வீட்ல நடந்த பெரும்பாலான ஃபங்க்சன்ல கலந்துக்காம விட்டதில்ல, போன வருசம் உங்க வீட்ல நடந்த காது குத்து வரைக்கும் வந்திருக்கன்"

"என்ன சார் நீங்க, எங்க ஃபேமிலி ப்ரெண்ட் சார் நீங்க"

"தேங்க்யூ சார், ஆனா என் லைஃப்ல இப்ப தான் நான் ஃபர்ஸ்ட் ஃபங்சன் என் பொண்ணுக்கு பண்ட்றன், அதனால...😍"

"சொல்லுங்க சார்...🙂"

"ஃபங்சன் ஃபுல்லாவும்  நாங்க ஃபேஸ்புக்ல லைவ் வீடியோ போட்ருவோம், நீங்க கண்டிப்பா பார்க்கணும், விஷ் பண்ணணும்,
அப்றமா..."

"சொல்லுங்க சார்...😒"

"என அகௌண்ட் நம்பர் குடுத்துடுறன், நீங்க அதுக்கு மொய் அமௌன்ட ட்ரான்சர் பண்ணிடுங்க, அப்றமா, உங்க அட்ரச சொல்லிடுங்க😊, நீங்க வெஜ்ஜா, நான் வெஜ்ஜா சொல்லிட்டீங்கனா, நாங்க ஸ்விக்கி, ஜொமாட்டோ எது உங்க ஏரியா நியர் ல இருக்கோ அதுல ஆர்டர் பண்ணி உங்க வீட்டுக்கு அனுப்பிருவோம்...🤗"

"😕😯😒 ச...சர்ரீங்க சார்😐"

#படித்ததில்_ரசித்துச் சிரித்தது.

Thursday, May 28, 2020

அதீத பலம் எப்போதுமே ஜெயிப்பதில்லை

அதீத உடல் பலமும்
அனைத்தையும் அழிக்கும்
ஆதிக்கவெறியும் கொண்டு திரியும்
சிங்க இனமும் புலி இனமும்
தொடர்ந்து சிறுத்துக் கொண்டே போக

காற்றிடைப்பட்ட கற்பூரமாய்
தானே கரைந்து போக

காட்சிபொருளாக வேணும்
காத்துவைக்க வேணும்  என்கிற
அவல நிலைக்குப் போக

பயமொன்றே
பதுங்குதல் ஒன்றே அறிந்த
பலமற்ற
பாவப்பட்ட
அணில்களும் மான்களும்
பல்கிப் பெருகுவது கூட

வன்முறை குறித்த
அதீத பலம் குறித்த
ஆணவம் குறித்த
ஏதோ ஒரு செய்தியை
சொல்லித்தான் போகிறது

எளியவர்களுக்கும் நல்லவர்களுக்கும் புதியநம்பிக்கையைக்
கொடுத்துத்தான் போகிறது


கொடுப்பதன் மூலம் பெறுவோம்..

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

Tuesday, May 26, 2020

புலிவேட்டை...

அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்

யானையைக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேட்டையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Thursday, May 21, 2020

கவிதை என்பது உணர்வு கடத்தி...


" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்

"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே  கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?


Wednesday, May 20, 2020

வாழ்வை இரசித்து வாழ்வோம்

நிழலைத் தொடர்பவனோ
அது குறித்த நினைவிலேயோ
பயணத்தைத் தொடர்பவனோ
நிச்சயம் இலக்கினை அடைவதில்லை

நிழல் தொடரத்தான் வேண்டும்
அது விதி என்றுணர்ந்தவனே
எல்லையினைக் கடக்கிறான்

கூலி குறித்தோ
பயன் குறித்த கற்பனையிலோ
கடமையினைச் செய்கின்றவன்
நிச்சயம் உயர்வடையச் சாத்தியமில்லை

உழைப்பின் மதிப்பின் கீழ்
கூலியிருக்க விரும்புபவனே
அடையாததையெல்லாம்  அடைகிறான்

நேற்றைய சுகங்களில்
நாளைய கற்பனையில்
இன்றினைத் தொலைப்பவன்
நிச்சயம் வெற்றிகாண வாய்ப்பேயில்லை

நேற்றும் நாளையும்
இன்றின் விளைவெனத் தெளிந்தவே
என்றும் எப்போதும் வெல்கிறான்

அந்த அந்த நொடியில்
விழித்து உயிர்த்து இருத்தலே
ஞானம் எனத் தெளிவோம்

என்றும் எங்கும் எப்போதும்
உடலிருக்குமிடத்தில் மனம் வைத்து
தொடர்ந்து வாழ்வை ரசிப்போம்

Monday, May 18, 2020

நாலாந்தரம்...

"நாலாந்தரம் என்பதென்ன "
விள்க்கம் கேட்கிறான் நண்பன்

"நல்லதை
நல்லவிதமாகக் கொடுப்பது
முதல் தரமெனச் சொல்வதும்

நல்லதை
மோசமாகக் கொடுப்பது
இரண்டாம் தரமெனச் சொல்வதும்

நல்லதல்லாததை
மோசமாகக் கொடுப்பது
மூன்றாம் தரமெனச் சொல்வதும்
புரிகிறது

அது என்ன
நான்காம் தரம்
அதுவும் மூன்றைவிட
மிக மோசமானதாய்..."

நல்ல கேள்வியாய்ப்படுகிறது எனக்கும்

நான் இப்படிச் சொன்னேன்

"அரசியல், சினிமா,பண்பாடு
கலாச்சாரம் மற்றும் இலக்கியம் என
அனைத்திற்கும்பொருந்தும்படியாய்
சொல்லட்டுமா " என்கிறேன்

"முடிந்தால் சுருக்கமாகச் சொல் " என்றான்

"நல்லதல்லாததை
மிகச் சிறப்பாகத் தருவது
அதுவும்
நாம் விரும்பும்படியாகவும்
நாம் படிப்படியாய்
நம்மையறியாது அதற்கு நாசமாகும்படியாகவும்"
என்கிறேன்

அவன் யோசிப்பதுப் புரிந்தது

ஒருவேளை ஒப்புக்கொள்ளக் கூடும்