Friday, February 11, 2011

பழநிமுருகனும் நானும்

எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

அதைப் போலவே
வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
எனக்கும்
பழநி முருகனுக்கும்
பழக்கம் ரொம்ப நெருக்கம்

திருவிழா நாட்களில் அவன்
எப்போதும் கோவிலில் இருப்பதில்லை
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்
நடை  சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

இன்றும் அப்படித்தான்
மயிலினை உலாவவிட்டு
என் எதிரில்தான் அமர்ந்துகொண்டான்

தக்க சமயம் இதுதானென
மெதுவாக காரணம் கேட்டேன்
சிரித்த முகத்துடன்தான்
என்னோடு பேசத் துவங்கினான்

"உண்மையில் எனக்கு
ஆத்திகர்களை விட
நாத்திகர்களைத்தான்
ரொம்பப் பிடிக்கும் "என்றான்
நான் அதிர்ந்து போனேன்
அவனேதான் தொடர்ந்து பேசினான்

"ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.
 காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்  வைத்து என்னை
இம்சை படுத்துவதில்லை " என்றான்

நான் பணிந்து வணங்கிச் சொன்னேன்
" நீ கொடுப்பவன் என நம்பித்தான்
உன் கோவில் தேடி வருகிறார்கள்
வருகிறவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்
தகுதியானவர்களாகப் பார்த்து நீ
கொஞ்சம் தயை செய்யலாமே" என்றேன்

முருகனின் முகத்தில் லேசான
மாறுதல் தெரிந்தது

"இந்த மனிதர்களுக்கு நான்
எதை கொடுக்காது இருக்கிறேன்
பஞ்ச பூதங்களைப்
படைத்துக் கொடுத்துள்ளேன்
அதை அடக்கி ஆளும்
அறிவினைக் கொடுத்துள்ளேன்
சக்தியைக் கொடுத்துள்ளேன்
சிந்திக்கும் திறனும் கொடுத்துள்ளேன்
இன்னும் போதாது போதாது என
என் வாசல் வந்து நின்றால்
நான் என்ன செய்யக்கூடும்
நிலம் கொடுத்து
விதை கொடுத்து
நீரும் கொடுத்து
சக்தி கொடுத்து
பயிரிடும் அறிவும் கொடுத்து
பிழைத்துகொள் என அருளினால்
மீண்டும் என்னிடமே வந்து
அடிவயிற்றில் பசி
அனலாய் எரிகிறது
எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாக
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்

நான் கொஞ்சம் பழக்கத்தை
கெடுத்துக் கொண்டேனோ என
பயந்துதான் போனேன்.

பின் தீர்க்கமான குரலில்
சண்முகனே பேசினான்
"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்

திருமுருகன் முகத்தில் தாண்டவமாடுவது
கோபமா கவலையா
என்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை

அதற்குள்
சன்னதியின் மணியோசைச் சப்தமும்
பக்தர்களின் அரோகரா சப்தமும்
குன்றெங்கும் பட்டுத் தெறித்தது
நானும் விழிமூடித் தியானித்து
லேசாக விழி திறந்தேன்
பழநி முருகன் எதிரில் இல்லை
அவன் இருந்து போனதன் அடையாளமாய்
எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது

29 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்//

உங்க பிளாக்கின் தலைப்பே இதுக்கு பதில் சொல்லுதே அண்ணா..............
அசத்தல்.....

MANO நாஞ்சில் மனோ said...

ஹய் நான் வடை திங்க போறேன்....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//திருவிழா நாட்களில் அவன்
எப்போதும் கோவிலில் இருப்பதில்லை
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்
நடை சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்//

இதுதான் கோயில்களில் கடவுளின் நிலை.

என் கவிதை “பாழ்” எழுதும்போதும் இதைத்தான் எண்ணி எழுதினேன்.நேரம் அமையும்போது பாருங்கள் இந்தச் சுட்டியை.

http://sundargprakash.blogspot.com/2010/05/blog-post.html

அற்புதமான தொடர் பதிவுகளில் இறைத்தன்மையின் சாரத்தை எளிமையாக கோர்த்திருக்கிறீர்கள் ரமணி சார்.படிக்கக் கிடைப்பது எங்கள் பாக்யம். தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. கோவில் செல்லும் 99.99 சதவீத ஆட்கள் எதையோ ஒன்றை வேண்டியே செல்கின்றனர். என்ன கொடுக்க வேண்டும் என்று கொடுக்கும் கடவுளுக்குத் தெரியாதா என்ன? ”எனக்கு இது தேவை” என்று சொல்லாமலே இருப்பதே மேல் என்ற எண்ணம் எனக்குள்ளும் உண்டு.

பகிர்வுக்கு மிக்க நன்றி ரமணிஜி!

raji said...

மிக மிக அருமை

உண்மையை மிகவும் அழகானதொரு
வீச்சில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்

பகிர்வுக்கு நன்றி

வசந்தா நடேசன் said...

//எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாக
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்//

நல்ல கவிதை, தொடருங்கள், நன்றி.

Chitra said...

உங்கள் கவிதைகள் அனைத்திலும் சிந்திக்க வைக்கும் விஷயங்கள் நிறைய உண்டு. தொடருங்கள்!

ShankarG said...

முயல்வதை மனிதன் செய்தால் அளிப்பதை இறைவன் செய்வான். மிக மிக அற்புதமான கவிதை. தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதை. இறைவனிடம் எந்தகோரிக்கைகளும் வைக்காமல் ஆத்ம சுத்தியுடன் போவதே சிறந்தது.

S.Venkatachalapathy said...

கடவுளை மனிதன் படைத்துவிட்டு அவரையும் ஒரு இயந்திரம் போல் ஆக்கி எப்பப்பார்த்தாலும் எதாவது ஒன்றைக் கேட்டுக் கொண்டு டீல் பேசும் ஆத்திகர்களுக்கு செல்லமாக ஒரு சூடு போட்டாற்போல் தெரிகிறது. ஆனாலும் அவர்களுக்கு ஒன்றும் உறைக்காது. இறைவன் என்பவர் நம்பிக்கையில் இருப்பவர் என்றால், உங்கள் நண்பரை எனக்குப்பிடித்திருக்கிறது. எப்போதாவது திருவிழா இல்லாத போது 24 இட்லிகள், தேங்காய் சட்னி எடுத்துக்கொண்டு நானும் நீங்களும் கோவிலுக்குப்போக வேண்டும். மூவரும் உண்டு களித்து ஆன்மீகம் என்ன என்று உணர வேண்டும் போல் இருக்கிறது.

சிவகுமாரன் said...

அருமை.
இறைபக்தியின் உச்சக்கட்டம் எதையும் இறையிடம் கேட்காமல் இருப்பது. நல்லா சொன்னீங்க..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவன் இருந்து போனதன் அடையாளமாய்
எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது//

உங்கள் இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் எனக்கு, அதே சந்தன மணம் கமழ்கிறது, ஸ்வாமி !

மிகவும் ரஸித்து மீண்டும் மீண்டும் படித்தேன். சொற்கள் யாவும் நகைச்சுவையுடன், அழகோ அழகு அந்த முருகனைப் போலவே ! பாராட்டுக்கள்.

vanathy said...

நல்லா இருக்கு. பல இடங்களில் வரிகளை மிகவும் அழகா எழுதி இருக்கிறீங்க. ஒவ்வொரு பதிவும் வித்யாசமா, அருமையா இருக்கு.

R. Gopi said...

சூப்பர்.

பக்தியை வெறும் பண்டமாற்றாக வைத்துள்ளவர்களுக்குச் சாட்டையடி

G.M Balasubramaniam said...

NOTHING IS DONE WITHOUT EXPECTING SOMETHING IN RETURN. THAT IS HUMAN NATURE. MAY BE THE EXPECTATIONS ARE LESS OR MORE. THERE IS A SAYING IN VOGUE."NO LUNCH IS FREE. "SO WHEN MAN BOWS BEFORE GOD IT IS NATURAL HE EXPECTS SOMETHING IN RETURN. BUT THE POOR MAN DOES NOT REALISE THAT GOD IS IN HIM.!

ம.தி.சுதா said...

////வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
எனக்கும்
பழநி முருகனுக்கும்
பழக்கம் ரொம்ப நெருக்கம்////

கடவுளிடம் நண்பராய் பழகும் ஒரு மனிதரை கண்டேன் நன்றிங்க.. ஔவையார் இருந்தால் உங்கள் மேல் பொறாமைப் பட்டிருப்பார்...

அகலிக‌ன் said...

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

குறளின் விரிவாக்கமாய் கண்டேன் உங்கள் கவிதையை வாழ்த்துக்கள் கவிதைக்கும், நன்றி என் பதிவிற்கு தொடர்ந்து விஜயித்துக்கொண்டிருப்பதற்கும்

அன்புடன் நான் said...

கதையாக விரிகிறது கவிதை
வித்தியாசமான சிந்தனைதான்... பாராட்டுக்கள்.அய்யா.

இராஜராஜேஸ்வரி said...

வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
மனதைத் தொட்ட வரிகள்.

Kavinaya said...

மிகவும் ரசித்தேன். நல்ல கருத்து. God helps those who help themselves என்பதை அழகாகத் தந்திருக்கிறீர்கள்.

Avargal Unmaigal said...

ரமணி சார் மிகவும் சிந்திக்க கூடிய பதிவு இது. இதே கருத்தை வேறு எங்கோ ஆங்கிலத்தில் படித்ததாக ஞாபகம். ஆனால் இதை தமிழில் வெகு அற்புதமாக அள்ளித் தந்துள்ள உங்களை நான் பாராட்டுகிறேன். இவ்வளவு நாள் நீங்கள் என் கண்ணில் படாமல் எங்கே ஒளிந்து இருந்தீர்கள். இன்று முதல் நான் உங்கள் பதிவுகளை பின் தொடர போகிறேன் ஒரு காதலன் போல......

மாய உலகம் said...

//"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்"//

மெய் சிலிர்க்க வைத்த வரிகளுடன் கூடிய நிகழ்வு...

மாய உலகம் said...

சப்தங்களை எழுப்பி ஆலயத்தின் அமைதியை கெடுத்து மனதின் ஒருமுக சிந்தனையை கெடுத்து... கடவுளை கல்லாய் பார்த்துவிட்டு வரும் பக்தர்களுக்கு பயனில்லை என்பதை பய்னோடு பகிர்ந்துள்ளீர்கள்... நன்றி

மாய உலகம் said...

//திருவிழா நாட்களில் அவன்
எப்போதும் கோவிலில் இருப்பதில்லை
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்
நடை சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்//

பல முறை கோயிலுக்கு செல்லும்போது தோன்றும் அதே வினா ..... பதில் கிடைத்துவிட்டது.

நமது மக்களுக்கு இறைவனை தரிசிக்கும் நல்முறையை சொல்லிகொடுக்கும் குருமார்கள் இல்லாமல் போய்விட்டார்களோ?

Anonymous said...

ஆன்மீகத்திற்கான அற்புத விளக்கம். அருமை.
பிடித்தவரிகள் - முருகன் சொன்னது.. "எனக்கு நாத்திகர்களைப் பிடிக்கும்".

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ahila said...

அழகான நிஜம்....
எல்லோரும் புரிந்துகொண்டால் சரி.....

Yaathoramani.blogspot.com said...

அகிலா said...

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Kamala Hariharan said...

உண்மையை எடுத்துரைத்த,
உமையவள் மைந்தனையும், அந்த
உண்மையை உலகெங்கும் பரவ செய்த
உண்மையான வரிகளையும் கண்டு
உவகையுடன் ஊக்கமும் அடைந்தேன். .

வழக்கப்படி வார்த்தைகள்
வால் முளைத்து நீண்ட வரிகளாய்,
பன்மடங்கு பெருகிவிட்டதால்
பதிவாக அதை அமைத்து
பத்திரமாக என் தளத்தில்,
இறக்கி விட்டேன்.தங்களால்
இயலும் போது,படிக்க வந்தால்,
இயற்றியதை விமர்சித்தால்,
இயன்ற வரை நன்றி ௯றுவேன்..

Post a Comment