Monday, February 14, 2011

கண் கெட்ட பின்னே.......

ஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில்
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே
வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்

சம்பாத்தியம் தந்த தெம்பில்
கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்
திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்
செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...
கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...
உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.

20 comments:

vanathy said...

வழக்கம் போலவே அருமை. இது உங்க அனுபவமா?

அகலிக‌ன் said...

பச்சை இலை போலவே அழுகிய மாம்பழம் சாப்பிட்ட ராஜா கதை என் பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன். அபோது அதன் அர்த்தம் முழுமையாய் விளங்கவில்லை இப்போது புரிகிறது. அருமை.

raji said...

//"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது//

முற்றிலும் உண்மை.வாழ்க்கை இப்படியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

கடைசி பாரா மிக அருமை

குறையொன்றுமில்லை. said...

மிக அருமை. நாம இப்பவும் வாட இலையில் தான் சாப்பிட முடிகிரது. பச்சை இல கிடைத்தும் கூட. பாட்டிகள் எல்லாரும் மிகவும் தீர்க்கதரிசிகள்தான்.

G.M Balasubramaniam said...

ஒரு நடுத்தர குடும்பத் தலைவரின் அங்கலாய்ப்புகளும், ஈடேறமுடியாத சின்னசின்ன ஆசைகளும் அழகாய் வெளிவந்திருக்கிறது. எதையும் அநுபவிக்க கொடுப்பினை வேண்டும்,ரமணி சார். அநுபவி ராஜா, அநுபவி, என்ற என் சிறுகதை வாசித்துப் பாருங்கள் இன்னொரு கோணம் தெரியும்.

நர்சிம் said...

ஹும்ம்ம்.

நேற்றுகளையும் இன்றுகளையும் நாளைகளுக்காக(அதுவும் நம் நாளைக்காக அல்ல)நோக்கி போய்க்கொண்டே இருக்கிறது..இன்றும் நேற்றின் நாளையே.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இந்தக் கவிதையை நிறையப் பேரைச் சென்றடையாததால் திரும்பவும் பதிவிட்டு விட்டீர்களோ ரமணி சார்?

ஆனாலும் மறுவாசிப்புக்கும் இன்னும் நிறைய வாசிக்கவும் இந்தக் கவிதையில் மீதமிருக்கிறது சாரம்.

இன்றைக்காக வாழ்பவர்களுக்கும் நாளைக்காக வாழ்பவர்களுக்குமான வித்தியாசம்தான் எல்லாவற்றையும் அளவிடுகிறது.

நல்ல கவிதை சார்.

R. Gopi said...

இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டேன். சில விஷயங்களை முன்கூட்டித் திட்டமிடுவதால் நிகழ்காலத்தில் அனுபவிக்க வேண்டிய விஷயங்களைத் தவற விடுவதில்லை. உதாரணங்கள்: வாசிப்பு, திரைப்படம், பயணம். இந்த விஷயங்களில் சமரசம் செய்துகொள்வதே இல்லை

Chitra said...

"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.


......"living for the moment" என்ற மன நிலை.... பல நடுத்தர குடும்பங்களுக்கு கனவாகவே போய் விடுகிறது. எளிய கவிதையில், ஆழ்ந்த கருத்தை தரும் உங்கள் பதிவுகளுக்கு, ரசிகையாகி கொண்டு வருகிறேன் .....

வசந்தா நடேசன் said...

//"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது//

தொடருங்கள், வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அப்படியே அனுபவப்பாடம் கவிதையாகச் சொல்லித் தருகிறீர்கள்.நன்றி ரமணி !

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது //

நெறைய பேரு இப்படி தாங்க இருக்கோம்... ரெம்ப நல்லா எழுதி இருக்கீங்க... வாசிக்க நிறைவா சில வரிகள்... சிந்திக்க செய்த சில வரிகள்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கிட்டத்தட்ட என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது உங்களின் இந்தக் கவிதை.

மிகவும் ரசித்த வரிகள்:
//"காய்ந்ததை இன்று எடு பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி கடைசி வரையில் பச்சை இலையில் சாப்பிடாமலே போன....”//

மகிழ்வுடன் பாராட்டுகிறேன். வாழ்த்துகள்.

காய்ந்ததோ பச்சையோ தொடர்ந்து தாருங்கள் நீங்கள் !
பசியுடன் சாப்பிடக் காத்திருக்கிறோம்
நாங்கள் !!

இராஜராஜேஸ்வரி said...

பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.//
I feel it.

ஆனந்தி.. said...

சார்...நீங்க நம்ம ஊரா??

ShankarG said...

ரமணி அவர்கள் யதார்த்தத்தையே அடியொற்றி படைப்புகளை தருவது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html

Thoduvanam said...

நாளையை எதிர் பார்த்தது இன்றையை இழக்கிறோம் நம்மில் பலர்.ஆயாசமும் அங்கலாய்ப்பும் தான் மிச்சம்.சொச்ச நாட்களையாவது விரும்பியபடி கழிக்க எத்தனிக்கலாம்.
வாழ்த்துக்கள்...

raji said...

வலைசரத்தில் தங்கள் அறிமுகம் கண்டேன்
வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

முறையான வாழ்வியல் என்று முட்டாள் தனமான சமூகத்தில் எந்திர வாழ்க்கையை கையில் பிடித்துக்கொடுத்த சூன்யமான வாழ்க்கயண்ணா இது...

கண் கெட்ட பின்னே -
கண் கெட்ட பின்னேவாவது கிடைத்தாலும் பரவாயில்லையே .. கண் கெட்ட பின்னும் பின்னுக்கு தள்ளி பெருமூச்சு ஒன்று ஏக்கத்தோடு முன்னோக்கியல்லவா செல்கிறது....

Post a Comment