Wednesday, February 23, 2011

மயில்களும் காகங்களும்

" நீ யார் பக்கம் "என
என் மனவெளியில்
எப்போதும் போல
எண்ணிக்கையும் தரமும்
போரிடத் தயாராகி
என்னைக் குழப்பின

இருவர் கைகளிலும்
கேடயங்கள்
விதம் விதமாய்
ஆயுதங்கள்

"எங்கும் எதிலும் எப்போதும்
வெற்றியை தீர்மானிப்பது நான்தான்"என
மீசையை முறுக்கியது எண்ணிக்கை

"த்ற்காலிக சந்தோஷமே
வெற்றி எனக் கொண்டால்
நீ சொல்வது சரி
ஆயினும்
நீடித்து நிலைத்து நிற்பது
வெற்றி எனச் சொன்னால்
அது நான்தான் "என
எப்போதும்போல
அடக்கமாகப் பேசியது தரம்

எகத்தாளமாகச் சிரித்தது எண்ணிக்கை
"நீடித்து நிலைத்து என்றால் எப்போது ?
போய்ச் சேர்ந்த பின்பா?
மூச்சுத் திணறி இறந்த பின்
வீசுகிற புயற் காற்று
பிணம் புரட்டித்தான் போகும்
உயிர் காக்காது " என்றது

பதிலேதும் பேசாது
புன்னகைத்து நின்றது தரம்
ஏற்கெனவே
குழப்பத்தை ரசித்து நின்ற மனம்
இப்போது
குரங்காட்டம் போடத்துவங்கியது

அன்றாட நிகழ்வுகளில்
அ நியாயக் காரனின் அட்டகாசங்கள்
களியாட்டம் போட
நியாயஸ்தனின் வாதங்கள்
தலை கவிழ்ந்து நிற்பது போல
எனக்குள்ளும் ஒரு சறுக்கல்

தரத்தோடு எண்ணிக்கையை
கூட்டலாமா என்ற
ஒரு பித்தலாட்ட எண்ணம்
என்னுள் தலை தூக்குவதை
என்னால் தவிர்க்க இயலவில்லை

17 comments:

வசந்தா நடேசன் said...

//மயில்களும் காகங்களும்//
//குழப்பத்தை ரசித்து நின்ற மனம்//

ரசித்த வரிகள்..

Chitra said...

தரமே நிரந்தரம்.

ஆனந்தி.. said...

தலைப்பு ரொம்ப பிடிச்சது ரமணி சார்...

இராஜராஜேஸ்வரி said...

வீசுகிற புயற் காற்று
பிணம் புரட்டித்தான் போகும்
உயிர் காக்காது " என்றது//
very true

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தரம்தான் நிரந்தரம் எத்தனை தரம் கேட்டாலும்-உங்கள் எழுத்துப் போல ரமணி சார்.

G.M Balasubramaniam said...

வாடிக்கையாளனின் திருப்துயே தரம் என்று ஒரு டெஃபினிஷன் தரத்துக்கு உண்டு. எண்ணிக்கை திருப்தி தந்தால் அதையே தரமாக கருதுவானா வாடிக்கையாளன். எது புயற்காற்று...தரமா, என்ணிக்கையா. ? இருமுறை படித்தும் எனக்குள் ஒரு கன்ஃபூஷன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தரம் என்னும் மயில்களும்,
எண்ணிக்கை என்னும் காகங்களும்
ஒப்பிட்ட விதம் அருமை தான் !

தரம் என்னும் மயிலை நாடுவோர் ஒரு சிலர் நடுவில்
எண்ணிக்கை என்ற காக்கைகளாய் விற்கவும் வாங்கவும் பறப்பவரே பலர் !!

நல்லதொரு பதிவு.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

raji said...

//குழப்பத்தை ரசித்து நின்ற மனம்
இப்போது
குரங்காட்டம் போடத்துவங்கியது//

மனித மனதின் சலனங்களை
வெளிக்காட்டும் வரிகள்

ஒப்பிடல் தலைப்பு அருமை

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. தரம் நிரந்தரம்! அது தானே தாரக மந்திரம்!

ShankarG said...

தரமான கவிதை, தரமான சொற்கள், தரமான மனிதரிடமிருந்து. வாழ்க.

vanathy said...

well written, Sir.

மனோ சாமிநாதன் said...

"நீடித்து நிலைத்து என்றால் எப்போது ?
போய்ச் சேர்ந்த பின்பா?
மூச்சுத் திணறி இறந்த பின்
வீசுகிற புயற் காற்று
பிணம் புரட்டித்தான் போகும்
உயிர் காக்காது " என்றது"
அக்னிக்குழம்பாய் சிதறும் வரிகள்!
தரத்துக்கும் எண்ணிக்கைக்கும் இடையிலான போர் அருமை!!
கவிதையின் வார்த்தை ஜாலங்களும் அருமை!!

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க தரம் தான் நிரந்தரம்.

S.Venkatachalapathy said...

தரமான விஷயங்கள் ரசிக்கப்படும் இடம் வேறு, எண்ணிக்கைகள் விரும்பப்படும் இடம் வேறு.

"தரத்தோடு எண்ணிக்கையை
கூட்டலாமா என்ற
ஒரு பித்தலாட்ட எண்ணம்..."

பித்தலாட்டம் என்று எப்பொழுது கவிஞர் எழுதினாரோ அப்போதே அவர் எண்ணிக்கையின் பக்கம் இல்லை என்பது தெளிவு.

தர உலக அன்பர்கள் எண்ணிக்கை உலகில் உபயோகப்படுவதில்லை.

எண்ணிக்கையின் எகத்தாளங்களை தரம் பொருட்படுத்துவதே இல்லை.

உதாரணமாக கேமரா மார்கெட்டில் Canon மற்றும் Nokia வின் நிலை.

இராஜராஜேஸ்வரி said...

எனது பூந்தோட்டத்தில்
மணமிக்க மலர்களையே வளர்க்கிறேன்
மயில்களை மட்டுமே ஆடவிட்டு ரசிக்கிறேன்
குயிகளைக் கூவ மட்டுமே அழைக்கிறேன் அனைவர்மீதும் பன்னீரைத் தெளிக்கும் போது என்மீதும் படும் துளிகளில் சிலிர்க்கிறேன்..
தீதும் நன்றும் பிறர் தர வாராதே -எனவே நல்ல செயல்களில் மட்டுமே பயின்று எங்கள் பிள்ளைகளையும் பழக்கும் முன்னுதாரணமாகிறோம்.
தங்களின் என் தள வருகைகளுக்கும் உற்சாகப் பின்னூட்டங்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்;நன்றிகள்;வாழ்த்துக்கள் -ஐயா.

Anonymous said...

தங்கள் கைவண்ணத்தில் காகமும்
மயிலாகிப் போகும் போது
கவலை எதுக்கு?

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment