Monday, April 25, 2011

கசாப்புக் கடை தேடும் வெள்ளாடுகள்..

பணிச்சுமை தாளாது
என் நண்பன் பரிதவித்தபோது
"கொஞ்சம் மென்திறன் வளர்
மன இறுக்கம் குறையும்" என்றேன்

சில நாட்களில்..
கார்பரேட் நண்பன்
கார்பரேட் கவியாகிப் போனான்
கவிதைகளும் சிறப்பாக இருந்தன.
அதுவரை பிரச்சனை ஏதும் இல்லை.

சக கவிஞர் ஒருவர்
"வரலாறு முக்கியம் அமைச்சரே"என
வடிவேலு சொன்னதைப்போல
"கவிதையில்
முற்போக்கு முக்கியம் தம்பி"எனச் சொல்ல
ரொம்பக் குழம்பிப் போனான்
லேசாக தடம் மாறியும் போனான்

அடுத்தமுைற் அவனை சந்தித்த போது..
நேர்வழியில்
அலுவலகம் சென்றுகொண்டு இருந்தவன்
சுற்றுவழியில் சுற்றிப்போனான்
காரணம் கேட்டேன்
"ஏழ்மையை வறுமையை
தெளிவாகப் புரிந்துகொள்ள
சேரிகளைக் கண்டுபோவதாகச்" சொன்னான்

புழுதி தூசி தாங்காதவன்
பல சமயங்களில்
தன் கார் கண்ணாடி இறக்கி
சேரிச் சண்டைகளை ரசிக்கத் துவங்கினான்
காரணம் கேட்க
"அவர்கள் வார்த்தைகளை
அதே உச்சரிப்போடு
கவிதையில் பொருத்தினால்தான்
சுருதி கூடும்"என்றான்

வார வேலை நாட்களில்
எப்போதும் பரபரப்பாயிருந்தான்
காரணம் கேட்க
"சனிக்கிழமைக்குள் பதிவினைப் போட வேண்டும்.
அப்போது தான்பின்னூட்டம் அதிகம் வரும்"என்றான்

"மாதம் ஐந்துவீதம்
ஒரு வருடம் பதிவு போட்டால்
அறுபது வரும்
அதில் பத்து பதினைந்து போனாலும்
ஒரு புத்தகம் தேத்தலாமா"என
பார்க்கும்போதெல்லாம் புலம்பத் துவங்கினான்

சனி மாலைகளில்
அவனை தொடர்புகொள்ளவே இயலவில்லை.
காரணம் கேட்டபோது
பதிர்வர்களை பில்டப் செய்வது குறித்தும்
பங்காளிகளாகப் பிரிந்துகிடக்கும்
பதிர்வர்கள் குழு குறித்தும்
அதற்குள் இருக்கும் அரசியல் குறித்தும்
வகுப்பெடுக்கத் துவங்கினான்

தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது

நாட்கள் செல்லச் செல்ல
தோட்டதில் பாதி கிணறாகிப் போக
விளைச்சல் பாதியான கதைபோல
உளைச்சல் தீர
வழிதேடிப் போனவன்
வழியிலேயே உழன்று திரிய
அலுவலக உளைச்சல்
இன்னும் அதிகமாகிப்போனது

வெகு நாட்கள் கழித்து
அவனைச் சந்தித்தபோது
கொஞ்சம் மெலிந்திருந்தான்
தாடி மீசை யோடு
ஒரு சாமியாரைப் போலிருந்தான்
"உடல் சரியில்லையா"என்றேன்
அதற்கு பதில் சொல்லாமல்
ஒரு சாமியாரைப் பற்றி
மிக உயர்வாய்ச் சொன்னான்
"அவர் அப்படியெல்லாம் இல்லையாமே
உனக்குத் தெரியுமா" என்றான்

நான் பதிலேதும் சொல்லவில்லை
எனக்கென்னவோ முன்பு
ஆப்பசைத்து மாட்டிக்கொண்ட
முட்டாள் குரங்குககள் எல்லாம்
புத்தி தெளிந்துவிட்டதைப் போலவும்
புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்பது போலவும் பட்டது

23 comments:

குறையொன்றுமில்லை. said...

நான் பதிலேதும் சொல்லவில்லை
எனக்கென்னவோ முன்பு
ஆப்பசைத்து மாட்டிக்கொண்ட
முட்டாள் குரங்குககள் எல்லாம்
புத்தி தெளிந்துவிட்டதைப் போலவும்
புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்பது போலவும் பட்ட

உன்மைதான்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பதிர்வர்களை பில்டப் செய்வது குறித்தும்
பங்காளிகளாகப் பிரிந்துகிடக்கும்
பதிர்வர்கள் குழு குறித்தும்
அதற்குள் இருக்கும் அரசியல் குறித்தும்
வகுப்பெடுக்கத் துவங்கினான்//

ஆஹா, அருமையான சமாசாரங்கள் தான். நான் கூட தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது, இதில் உள்ள பல அரசியல் ரகசியங்களை.

பதிவர்குழு பற்றி நான் இதுவரை
கற்றது கைமண் அளவே! ஆனால்
கல்லாதது உலகளவு மைனஸ் கைமண்ணளவு!!

Avargal Unmaigal said...

ரமணி சார் உங்களின் ஒவ்வோரு பதிவும் மிகவும் அருமை.. அதில் இதுவும் மிகவும் அருமை. உங்களின் தனித்தன்மையை நான் ரசிக்கின்றேன்.வாழ்க வளமுடன்

Avargal Unmaigal said...

பதிவர்களின் குழுவில் சேராத வரை நல்லது. அப்படித் தப்பி தவறி சேர்ந்துவிட்டால் சேருபவர்கள் அவர்களின் தனித்தன்மையை இழக்க நேரிடும். அதனால் சேருபவர்கள் பெறப் போவது உபயோகமில்லாத சில எக்ஸ்ட்ரா கமெண்ட்ஸ் அண்டு வோட்டுகள் மட்டுமே. சில சமயங்களில் அந்த குழுவில் உள்ளவர்கள் அல்லது சில வளைத்தள நண்பர்கள் நீங்கள் இந்த மாதிரி பதிவுகள் போடுங்கள் அல்லது அந்த மாதிரி பதிவுகள் போடுங்கள் என்று அட்வைஸ் தர ஆரம்பித்துவிடுவார்கள் /

சாந்தி மாரியப்பன் said...

//தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது//

மொத்த கவிதையின் சாராம்சத்தையும் இந்த வரிகளிலேயே அடக்கிட்டீங்க!!.. அருமை.

Unknown said...

நல்ல கவிதை..

RVS said...

பதிவுலகம் பற்றிய அற்புதமான கவிதை சார்!

ஹேமா said...

உண்மையைச் சொல்கிறது கவிதை !

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மீள்பதிவோ ரமணியண்ணா!முன்பே படித்த ஒரு நினைவு.

தோளில் கழுதையைத் தூக்கியபடி பாலத்தைக் கடந்த அப்பாவும் மகனும் கதை நினைவுக்கு வருகிறது.

மனம் சொல்வதை மதிப்பவன் துயரடைவதில்லை.

இராஜராஜேஸ்வரி said...

கார்பரேட் நண்பன்
கார்பரேட் கவியாகிப் போனான்//
புத்திசாலி வெள்ளாடு பாவம்.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.தங்களின் அனுபவ வரிகள் பாடமாகட்டும்.

சாகம்பரி said...

உண்மைதான். வெயிலில் காயும்போது வானத்தில் மேகம் தெரியுதா என்று பார்க்கிறார்கள். அதில் சிலர் செருப்பை திருடுகிறார்கள்- சாமியார் மாதிரி. நன்றி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சனிக்கிழமைக்குள் பதிவினைப் போட வேண்டும்.
அப்போது தான்பின்னூட்டம் அதிகம் வரும்"என்றான்//
இங்கே மட்டும் தான் இப்படின்னு நினைத்தேன், எல்லா இடமும் இப்படித்தானா?

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

சரள நடையில் ஒரு கவிதை....சபாஷ் போட வைத்தது!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

அடிக்ஷன் ல மாட்டிகிட்டு சிலர் படும் அவஸ்தையும் , கூட்டமாய் சமூகத்தை சீரழிப்பதும் அதிகமாகியதுதான்..

பின்னூட்ட வெறி, ஓட்டு பிச்சை :))

சமீபத்தில் நான் எழுதிய கவிதை ( பதிவில் போடவில்லை )

*சிலுவையில் அறைந்தார்கள்* :
------------------------------------------------------


முள்கிரீடம் நானே வைப்பேன் என
முந்தாநாள் விருந்துண்டவனும்
குத்தவேண்டிய ஆணி இதோவென
குடிக்கமட்டுமே வந்தவனும்..

சிலுவையை சுமக்க கொடுத்தவர்களே
சிரித்துமகிழ்ந்தவராம் சிலகாலமுன்பு..
தண்ணீர் தர மறுத்தோர் கூட இருந்து
தப்பை அன்று ரசித்தவர்களாம்..

பாதிக்கப்பட்ட பறவையோ எப்பவும்போல்
பரந்தவெளியில் உயர உயர பறக்க
சிறகொடிக்க சொல்லிக்கொடுத்தவர்கள்
சிதைந்தும் சில்லிட்டும் கைதட்டினராம் இன்று..:)

கல்லெறிய இலவச கற்கள் விநியோகம்
கயமைத்தனம் மறைக்க சிலர் வேகமாய்.
கலந்துகொள்ளாவிடில் அடுத்து நாமோவென
கள்ளமெளனத்தில் கலக்கத்தில் சிலர்..


சிலுவை சுமப்பவர் சிந்தையெல்லாம்
சிரமேற்று ஒப்புக்கொண்ட பழிமட்டுமல்ல.
சீரழியட்டும் இவனென திட்டத்தோடு
சிரிக்கும் சில யூதாஸ்களையெண்ணி..:)

அருகிலேயே சில சிலுவைகள் தயாராகின்றன
அனைவரும் எரிந்திட சில கற்களுமே.
அவையறியாமல் வழமையாய் விருந்துடனே
அவைதனில் கயமைக்கு பாராட்டுவிழாவாம்..:)



---------------------------------------------------------------------


கவிதை புரியாதவர்களுக்கு

ஏதாச்சும் செய்யனும் பாஸ்! http://socratesjr2007.blogspot.com/2011/04/blog-post_20.html

வெங்கட் நாகராஜ் said...

பதிவுலகம் பற்றிய அருமையான கவிதை.... பகிர்வுக்கு நன்றி.

Nagasubramanian said...

அருமை

அன்புடன் மலிக்கா said...

பதிவுலகத்தைப்பற்றிய தங்களின் பார்வை உண்மையிலும் உண்மை. வரிகளால் விபரம்தந்தமைக்கு வாழ்த்துக்கள்..

//ரமணி சார் உங்களின் ஒவ்வோரு பதிவும் மிகவும் அருமை.//

இது உண்மைதான் சார்..

ரிஷபன் said...

தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது

கவிதையின் மொத்த சாராம்சமும் இதிலேயே அடக்கிவிட்டீர்கள்

Murugeswari Rajavel said...

மனதில் தோன்றும் உண்மைகளை அழுத்தமாய்ப் பதிவு செய்திருக்கிறீர்கள் ரமணி சார்.தலைப்பு மிக அருமை!

vanathy said...

"ஏழ்மையை வறுமையை
தெளிவாகப் புரிந்துகொள்ள
சேரிகளைக் கண்டுபோவதாகச்" சொன்னான்
///அருமை. அழகான வரிகள் கோர்த்து, அர்த்தம் நிறைந்த கவிதை.

Lali said...

தேடலுக்காய் ஓடி.. இருப்பதையும் தொலைத்ததை போல்..
பலர் உண்மை பேசுவதில்லை.. அனுபவங்களை உண்மையாய் பகிர்வதில்லை..
இந்த பதிவில்.. உண்மை பல உணர்த்தி அருமையான அனுபவங்களை உணர செய்திருக்கிறீர்கள்..
நன்றி ரமணி!
http://karadipommai.blogspot.com/

மிருணா said...

நல்ல விறுவிறுவென்ற எழுத்து நடையில், ஆழமற்று மோஸ்தருக்காகச் செய்யும் எதுவும் நீர்த்துப் போகும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

Post a Comment