Tuesday, May 3, 2011

க-விதைகளின் வீரியம்

புரிந்து கொண்டிருப்பதாக
நம்பிக் கொண்டிருப்பவைகளுள்
புதையலாக புதைந்திருக்கிற
புரிய வேண்டிய
புரியாத் தன்மைகளை
புரியும்படியாக
படைத்து வைத்த பல கவிதைகள்
பெரும்பாலோர்க்கு புரியாது போயிருக்கலாம்
பாலையில் விதைத்த விதை  யாகியிருக்கலாம்
ஆயினும்
புரிந்து கொண்ட சிலரால்தான்
உலகில் நிகழ்ந்தது பல மாற்றம்
உலகம் கண்டது பல ஏற்றம்

சில பாண்டங்கள்
நிறைந்து வழிந்து சிலிர்ப்பதும்
சில பாண்டங்கள் 
இழந்து உடைந்து துடிப்பதும்
விதைத்ததாலோ
மேலிருந்து அளப்பதாலோ இல்லையென
விளங்கச் சொன்ன கவிதைகள்
ஆயிரம்பேருக்கு விளங்காது போயிருக்கலாம்
பாறையில் விதைத்த கதையாகியிருக்கலாம்
ஆயினும்
புரிந்து  கொண்ட சிலரால்தான்
உலகின் இருள் ஓடி ஒளிந்தது
எங்கும் ஒளி பரந்து விரிந்தது

 
உசுப்பேற்றி உசுப்பேற்றி
உடலெங்கும் விஷமேற்றி
உண் ர்வுகளின் திசை மாற்றி
பயணத்தின் திசைமாற்றும்
பண்புகெட்ட பண்டிதர்களின்
முகத்திரையை கிழித்தெறியும்
தீ நாக்குக் கவிதைகளை
அறியாமல் பலபேர்கள் வாழ்ந்தும் இருக்கலாம்
விதிவிட்ட வழிஎனப்போய்  போய் மாய்ந்தும் இருக்கலாம்
ஆனாலும்
புரிந்துகொண்டு எழுச்சிகொண்ட சிலரால்தான்
புதுமை எங்கும் பொங்கி வழிந்தது
புரட்சி எங்கும் வெடித்துச் சிரித்தது

மனச்சோர்வு முனகலாகி
எழுச்சியாக ஆவதும்
ஆர்ப்பாட்டமும் போராட்டமும்
ஆட்சிமாறச செய்வதுவும் 
விளைந்தபின் நமக்குத் தெரிபவைகளே
ஆயினும் இவைகளுக்கு
வித்தாக இருப்பவை கவிதைகளே

அர்த்தமற்ற சொற்கள் எல்லாம்
அழுகிப் போன சடலங்களே
அதனை அடுக்கிச் செய்த கவிதையெல்லாம்
சவக்கிடங்கின் அழகிய தோற்றமே
பிண்டங்களைப் பெற்று
தாயெனப் பெருமை கொள்ளல் எதற்கு?

அதற்குப் பதில் உலகத்தோர் பார்வையில்
மலடியாய் வாழ்தலே என்றும் சிறப்பு

24 comments:

கந்தசாமி. said...

///உசுப்பேற்றி உசுப்பேற்றி
உடலெங்கும் விஷமேற்றி
உண் ர்வுகளின் திசை மாற்றி
பயணத்தின் திசைமாற்றும்
பண்புகெட்ட பண்டிதர்களின்
முகத்திரையை கிழித்தெறியும்
தீ நாக்குக் கவிதைகளை//// பண்டிதர்கள் சிலருக்கு உசுப்பேற்றும் இந்த குணம் இருப்பது நிதர்சனம் தான்... ஆழமான கவிதை

A.R.RAJAGOPALAN said...

அர்த்தமற்ற சொற்கள் எல்லாம்
அழுகிப் போன சடலங்களே
அதனை அடுக்கிச் செய்த கவிதையெல்லாம்
சவக்கிடங்கின் அழகிய தோற்றமே
பிண்டங்களைப் பெற்று
தாயெனப் பெருமை கொள்ளல் எதற்கு?
அதற்குப் பதில் உலகத்தோர் பார்வையில்
மலடியாய் வாழ்தலே என்றும் சிறப்பு


எத்தனை
தீர்க்கமான
திருத்தமான
தீர்வான
தீயான
தீர்ப்பு வரிகள்

திக்கெட்டும்
திரும்பட்டும்
திரையிட்ட
திறமைகள்
திறக்கட்டும்

தீயவரும்
திருந்ததாதவரும்
தீ நாக்குக் கவிதைகளை படித்து
திருந்தட்டும் நல்லவராய்
திகழட்டும் .....................

நவரத்ன கவிதை ரமணி சார் ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அர்த்தமற்ற சொற்கள் எல்லாம்
அழுகிப் போன சடலங்களே
அதனை அடுக்கிச் செய்த கவிதையெல்லாம்
சவக்கிடங்கின் அழகிய தோற்றமே//

அழகிய தோற்றமேயாயினும் சவக்கிடங்குகள் இனியாவது, இதைப்படித்த பிறகாவது, குறையட்டும்.

நல்ல சொற்பிரயோகங்கள். வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

அருமையான அசத்தலான கவிதை..

சுந்தர்ஜி said...

சுடும் வார்த்தைகளுடன் கடும் கவிதை.அபத்தங்களின் மீதும் அனர்த்தங்களின் மீதும் சவுக்கின் விளாறல்.அருமை அருமை ரமணியண்ணா.

Lali said...

கனல் வீசும் வார்த்தைகள், நதியின் மீது இலையின் ஓட்டம் போல் ஒரு நடை, எழுத்துக்கள் எல்லாம் மறைந்தும் ஒளிந்தும் நிறைந்தும் வழிந்தும் ஒளி வீசுகின்றன.. அருமையான தாக்கம்!
http://karadipommai.blogspot.com/

சிசு said...

க-விதை.. தெளிவாகவும், ஆழமாகவும், வீரியமாகவும்.

சில இடங்களில் பன்னீர்.
சில இடங்களில் வெந்நீர்.

மொத்தத்தில் கவிதை "பத"நீர்.

vanathy said...

அருமையா எழுதியிருக்கிறீங்க. தொடர வாழ்த்துக்கள்.

மிருணா said...

கூரான கருத்து, சுத்தியடி போன்ற சொற்கட்டமைப்பு, திண்மையான இறுதிவரிகள். சமீபத்தில் படித்தவற்றில் சந்தோஷமாக உணர வைத்த கவிதை. வாழ்த்துக்கள் ரமணி சார்.

RVS said...

க-விதை - தலைப்பே அத்தனையும் சொல்லுதுங்க... அட்டகாசம். ;-))

போளூர் தயாநிதி said...

//புரிந்துகொண்டு எழுச்சிகொண்ட சிலரால்தான்
புதுமை எங்கும் பொங்கி வழிந்தது
புரட்சி எங்கும் வெடித்துச் சிரித்தது//
//புரிந்து கொண்ட சிலரால்தான்
உலகின் இருள் ஓடி ஒளிந்தது
எங்கும் ஒளி பரந்து விரிந்தது//இந்த குமுகத்திற்கு தேவையான வரிகள் உளம் கனிந்த பாராட்டுகள் நல்லதெரு ஆக்கம் ...

நாய்க்குட்டி மனசு said...

முடிவு 'நச் 'னு இருக்கு

VENKAT said...

சிந்திக்க வைக்கும் உங்கள் வலைப்பூவிற்கு ஒரு நூறு தொடர்பவர்கள்.

பஜ்ஜி சொஜ்ஜி டோல் டொப்பி போன்ற சடல அடுக்கல்களுக்கு பல நூறு தொடர்பவர்கள்.

பிரச்சனை இல்லாதவரை சிந்தனைக்கு இடம் இல்லை.

ஜெயித்தவர்களில் அதிகம்பேர் செண்டிமென்ட் வியாபாரிகள்.

திருவள்ளுவர்கூட ஜெயிப்பது கஷ்டமே. இருப்பினும் பல நூறு தலைமுறைக்கும் பயன்பட எழுதும்
க-விதை என்றும் ஜெயித்து நிற்கும்

sarujan said...

புரியாத பல புதிர்கள்
புரிய வைக்கும் கவிதை
(புரிந்து கொண்ட சிலரால்தான்
உலகின் இருள் ஓடி ஒளிந்தது)
வரிகள் அருமை

Chitra said...

சில பாண்டங்கள்
நிறைந்து வழிந்து சிலிர்ப்பதும்
சில பாண்டங்கள்
இழந்து உடைந்து துடிப்பதும்
விதைத்ததாலோ
மேலிருந்து அளப்பதாலோ இல்லையென
விளங்கச் சொன்ன கவிதைகள்
ஆயிரம்பேருக்கு விளங்காது போயிருக்கலாம்
பாறையில் விதைத்த கதையாகியிருக்கலாம்
ஆயினும்
புரிந்து கொண்ட சிலரால்தான்
உலகின் இருள் ஓடி ஒளிந்தது
எங்கும் ஒளி பரந்து விரிந்தது


...simply superb!

Chitra said...

சரளமாக கவிதை வந்து இருக்கிறது. அர்த்தங்கள் ஆயிரம்! அருமை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டு போக முடியல.

sakthi said...

பிண்டங்களைப் பெற்று
தாயெனப் பெருமை கொள்ளல் எதற்கு?
அதற்குப் பதில் உலகத்தோர் பார்வையில்
மலடியாய் வாழ்தலே என்றும் சிறப்பு

கடைசி வரிகள் மனதை கலங்கடிங்க வைக்கும் வல்லமை படைத்தவை

sakthi said...

தீ நாக்குக் கவிதைகளை
அறியாமல் பலபேர்கள் வாழ்ந்தும் இருக்கலாம்
விதிவிட்ட வழிஎனப்போய் போய் மாய்ந்தும் இருக்கலாம்

நிஜம் சொற்பிரயோகங்கள் அருமை

ஸாதிகா said...

//அர்த்தமற்ற சொற்கள் எல்லாம்
அழுகிப் போன சடலங்களே
அதனை அடுக்கிச் செய்த கவிதையெல்லாம்
சவக்கிடங்கின் அழகிய தோற்றமே
பிண்டங்களைப் பெற்று
தாயெனப் பெருமை கொள்ளல் எதற்கு?
அதற்குப் பதில் உலகத்தோர் பார்வையில்
மலடியாய் வாழ்தலே என்றும் சிறப்பு// என்ன ஒரு அருமையான கவிதை வரிகள் கூடவே உங்கள் கவிதை வாசிக்கையில் கண்ணதாசனின் இந்தப்பாடல் நினைவுக்கு வருகின்றது. கிளிக் செய்து பாருங்கள்

G.M Balasubramaniam said...

க”விதை” களின் வீரியம் நெத்தியடியாக கூறிஉள்ளீர்கள்.ரமணி சார். இருந்தாலும் ஒரு ஆதங்கம். வீரியமான விதைகள் பாலையிலும் பாறையிலும் புரியப்படாமல்விதைக்கப்படவேண்டுமா. ?ஏன் உங்கள் கவிதை போல் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி இருக்கக்கூடாது.?

சாகம்பரி said...

என்ன சார் அறம் பாடிட்டீங்க. இனியாவது அர்த்தமற்ற சொற்கள் போகட்டும்.
//புரியாத் தன்மைகளை
புரியும்படியாக
படைத்து வைத்த பல கவிதைகள்
பெரும்பாலோர்க்கு புரியாது போயிருக்கலாம்//
அவை காலத்தால் எடைபோடப்படும். இறந்தபின்பும் வாழும் வரம் இலக்கியத்தாலேயே கிட்டும். இன்று நாம் பதிவு செய்யும் அனைத்தும் பல வருடங்கள் டிஜிட்டல் அலைகளாக உயிர் வாழும் . தரமானவை நிருபிக்கப்படும்.

ரிஷபன் said...

பிண்டங்களைப் பெற்று
தாயெனப் பெருமை கொள்ளல் எதற்கு?
அதற்குப் பதில் உலகத்தோர் பார்வையில்
மலடியாய் வாழ்தலே என்றும் சிறப்பு

சபாஷ்

கே.ஆர்.பி.செந்தில் said...

அமர்க்களமான கவிதை...

மதுரை சரவணன் said...

கவிதை அற்புதம்... அர்த்தமற்ற சொற்களில் வாழ்த்து சொல்ல மனமில்லாமல் வாழ்த்துக்கிறேன்.

Post a Comment