Saturday, September 1, 2012

தங்கக் கவிதையும் கவிதைத் தங்கமும்

மிக ஆழத்திலிருந்து
எடுக்கப்படுவதனாலோ என்னவோ
இரண்டுக்குமான மதிப்பு
என்றென்றும்
கூடிக்கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது

குன்றாத மதிப்பினால் மட்டுமல்லாது
காலச் சூழலுக்கு தக்கவாறு
தன்னை உருமாற்றி
நிலை நிறுத்திக் கொள்ளும்
திறத்தினாலே கூட
இவையிரண்டும்
என்றென்றும்
இளமைத் திறனுடன்
இருப்பதாகப் படுகிறது

அழகைச் சார்ந்தும்
உணர்வைச் சார்ந்தும்
இன்னும்  மிகச் சரியாகச் சொன்னால்
அழகுப் பெண்களைச் சார்ந்தும்
அதிகம் இருப்பதாலேயே
இவையிரண்டின்  கவர்ச்சியும்  மோகமும்
 என்றென்றும்
குறையாது கூடிக்கொண்டேச்
செல்வதாகப் படுகிறது

 இரண்டுக்குமான ஒற்றுமை
இதுபோல நிறைய இருப்பினும்
ஒன்றிருக்குமிடத்தில்
ஒன்றில்லாது இருப்பதும்
ஒன்றை ஒன்று நெருங்கிவிடாது
 இரண்டும் விலகியே திரிவதும்
ஏன் என்பது மட்டும்
எப்படி யோசித்த போதும்
 துளியும் விளங்குவதில்லை

ஆயினும்
ஒன்றின் பாதையில்
பாதி சென்றவன் மடடுமே
மற்றொன்றை எண்ணி  ஏங்குகிறான்
ஒன்றைக் குறித்து தெளிவாக  அறிந்தவன் எவனும
மற்றொன்றை  விட்டு
விலகி இருக்கவே   விரும்புகிறான்

ஏனெனில்
பார்வைக்கு நாணயத்தின்
இருபக்கம்போல் காட்டிக்கொள்ளும் 
அவைகள் இரண்டும் உண்மையில்
இரு  வேறு துருவங்கள் என்பது
தெளிந்தவனுக்குத்தான் தெளிவாகத்தெரியும்  


33 comments:

துரைடேனியல் said...

ஒன்றைப பெற்றவர் மற்றொன்றை
அடையத் துடித்துத் தோற்பதுவும்
ஏன் தெரியுமா சார்?

போதுமென்ற மனதில்லை. அதனால்தான். எனக்கென்னவோ தங்கத்தைவிட கவிதையே உயர்ந்ததாக தெரிகிறது. ஏனென்றால் ஆயிரம் பொன் கொடுத்தாலும் இப்படி ஒரு கவிதை கிடைக்குமா எங்களுக்கு? அருமையான படைப்பு சார்.

அன்பு உள்ளம் said...

இரண்டுக்குமான ஒற்றுமை
இதுபோல நிறைய இருப்பினும்
ஒன்றிருக்குமிடத்தில்
ஒன்றில்லாது இருப்பதும்
ஒன்றை ஒன்று
ஈர்த்துக் கொள்ளத் துடித்துத் தோற்பதுவும்
ஏன் என்பது மட்டும்
எப்படி யோசித்த போதும்
துளியும் விளங்கவில்லை எனக்கு

ஏனிந்தக் குழப்பம் ?....கவிதைகள்
கற்பனைக் கடலிலே மூழ்கிப் பெறும்
முத்துக்கள் ஆகும் .அவை கவிஞனின்
கற்பனைத் திறனைப் பொறுத்து இலகுவாகும் .
அதிலும் அகக் கவிதை ,புறக் கவிதை என
இரண்டு வகைகளாக வெளிவரும்போது
இரண்டிக்கும் இடையில் ஒற்றுமை சில சமயம்
வேறு படுவதுபோல் தெரிந்தாலும் அதன்
சிறப்புத் தன்மை எப்போதும் ஒன்றுதான்
என்பது என் கருத்து .தங்கள் குழப்பமும்
தீர்க்கும் பதில் ஏதேனும் விரைவில் கிட்ட
வாழ்த்துக்கள் ஐயா .(இன்றைய என் ஆக்கத்துக்கு
உங்கள் கருத்தும் இருதால் மகிழ்ச்சியே .)
மிக்க நன்றி பகிர்வுக்கு .

அன்பு உள்ளம் said...

உங்கள் கவிதைகளும் எப்போதும்
சிறப்புடைய கவிதைகளே அதற்கு
என் வாழ்த்துக்கள் ஐயா .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதைத் தங்கம் நீங்கள். தங்கக் கவிதை உங்கள் படைப்பு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம 3

வெங்கட் நாகராஜ் said...

//ஒன்றின் எல்லையில்
பாதி சென்றவன் மடடுமே
மற்றொன்றை எண்ணி ஏங்குகிறான்
எல்லைகளைத் தொ ட்டவன் எவனும
மற்றொன்றை விட்டு
விலகி இருக்கவே விரும்புகிறான்//

தங்க வரிகள்....

த.ம. 6

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
அழகைச் சார்ந்தும்
உணர்வைச் சார்ந்தும்
இன்னும் மிகச் சரியாகச் சொன்னால்
அழகுப் பெண்களைச் சார்ந்தும்
அதிகம் இருப்பதாலேயே/
///////////


உண்மை ஐயா...!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகாக ஒற்றுமை வேற்றுமையை அழகுற சொல்லியிருக்கிறீர்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரண்டும் ஒருவரிடத்தில் இருப்பதில்லை...

இது உலகத்தில் நியதியோ...!

Seeni said...

haa haa!

unmaithan ayya!

MARI The Great said...

அழகான கவிதை!

தனிமரம் said...

கவிதை தங்கத்தைவிட உயர்த்தி போல இருக்கு! வாழ்த்துக்கள் ஐயா!

NKS.ஹாஜா மைதீன் said...

எளிய நடையில் அழகிய கவிதை....அருமை சார்

ஹேமா said...

இயல்பாய் விளங்கக்கூடியதாக வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் கவிதை வடிவில் சொல்லி வைக்க உங்களால் மட்டுமே முடிகிறது ஐயா !

”தளிர் சுரேஷ்” said...

ஓப்பீட்டு கவிதை மிக அழகு! சிறப்பானதொரு படைப்பு! நன்றி!

இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

சசிகலா said...

தெளிந்தவனுக்குத்தான் தெளிவாகத்தெரியும் ...
சொல்லிச்சென்ற விதம் அழகு ஐயா.

r.v.saravanan said...

ஒற்றுமை வேற்றுமையை அழகுற சொல்லியிருக்கும் விதத்தை ரசித்தேன் ரமணி சார்

Unknown said...

அழகிய ஒப்பீடு அய்யா! அருமை

கோமதி அரசு said...

ஒன்றைக் குறித்து தெளிவாக அறிந்தவன் எவனும
மற்றொன்றை விட்டு
விலகி இருக்கவே விரும்புகிறான்//

நல்ல ஒப்பீடு கவிதை.
த.ம 13.

ஆத்மா said...

ஆகா பிரமாதம் பிரமாதம் வாழ்த்துக்கள் சார்....

ஆத்மா said...

ஆரம்ப வரிகளே கவிதையின் மொத்தத்தை சொல்லிச் செல்கிறது....
////////////////////////////
மிக ஆழத்திலிருந்து
எடுக்கப்படுவதனாலோ என்னவோ
இரண்டுக்குமான மதிப்பு
என்றென்றும்
கூடிக்கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது


த. ம..13

அப்பாதுரை said...

தலைப்பும் கருத்தும் மிக ஆழம்.
சந்திரபாபு சொன்னதாகப் படித்ததும் ஏனோ நினைவுக்கு வருகிறது: "கலைஞனுக்கு காசு தராதீங்க". எந்த contextல் அப்படிச் சொன்னார் என்று தெரியாது, ஆனால் தன் வாழ்க்கையின் கடைப் பகுதியில் மிக ஏழ்மையில் இருந்தபோது சொன்னதாகப் படித்திருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள் சார்... நன்றி... வாழ்த்துக்கள்...
(15)

Unknown said...

கவிதையும் பொருளும் அழகு..வாழ்த்துக்கள்!

Anonymous said...

''...மிக ஆழத்திலிருந்து
எடுக்கப்படுவதனாலோ என்னவோ
இரண்டுக்குமான மதிப்பு
என்றென்றும்
கூடிக்கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது...''
உண்மையே!. ஒப்புவமை சிறப்பு.
மதிப்புடை கவிதை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Rasan said...

சிறப்பாகவுள்ளது.ஒப்புமை நன்றாகவுள்ளது.அழகான வரிகள்.
//பார்வைக்கு நாணயத்தின்
இருபக்கம்போல் காட்டிக்கொள்ளும்
அவைகள் இரண்டும் உண்மையில்
இரு வேறு துருவங்கள் என்பது
தெளிந்தவனுக்குத்தான் தெளிவாகத்தெரியும் // தொடருங்கள் ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

பார்வைக்கு நாணயத்தின்
இருபக்கம்போல் காட்டிக்கொள்ளும்
அவைகள் இரண்டும் உண்மையில்
இரு வேறு துருவங்கள் என்பது
தெளிந்தவனுக்குத்தான் தெளிவாகத்தெரியும்

தங்கக் கவிதையும் கவிதைத் தங்கமும் என தங்கமான கவிதைக்கு பொன்னான பாராட்டுக்கள்..

கரந்தை ஜெயக்குமார் said...
This comment has been removed by the author.
கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான ஒப்பீட்டுக் கவிதை

மோகன்ஜி said...

தலைப்பே ஒரு கவிதையாய் கொஞ்சம் என்னை நிறுத்தி அசைத்துப் பார்த்தது. அருமையான கவிதை நண்பரே!

தி.தமிழ் இளங்கோ said...

தங்கக் கவிதை என்றால் என்ன? கவிதைத் தங்கம் என்றால் எது? புரிந்து கொண்டால்தான் நகர முடியும் போலிருக்கிறது. " இக்கரைக்கு அக்கரை பச்சை”

கதம்ப உணர்வுகள் said...

தலைப்பு அட்டகாசம், வித்தியாசமான சிந்தனை ரமணி சார்....

உண்மையே.... தங்கம் எடுக்க உடல் உழைப்பு அவசியம், கவிதை எழுதவோ சிந்திப்பது அவசியம்...

இன்று எழுதிய வரிகள் நம் காலத்திற்கு பிறகும் நிலைத்து நிற்கும் நம் பெயரை சொல்லிக்கொண்டு.. நம் கருத்துகளை தாங்கிக்கொண்டு... உதாரணத்திற்கு இன்றும் பாரதியாரின் பாடல்களை, கண்ணதாசனின் கவிதைகளை ரசிப்பதுண்டு....

தங்கமும் அதே போல தான்... இன்று வாங்கி வைக்கும் தங்கம் எத்தனை வருடம் ஆனாலும் கெட்டும் போகாது... கலப்படம் இல்லாதது.. மாறாக அதன் மதிப்பு மட்டும் கூடிக்கொண்டு தான் போகிறது.. தங்கம் விற்கிற விலையை பார்த்தால் தலைச்சுற்றுகிறதே....

கவிதையில் தான் எத்தனை எத்தனை வகைகள்... அத்தனையும் ஒவ்வொருவரின் சிந்தனை பிரதிபலிப்புகள்... காலத்துக்கும் நிலைத்து நிற்கும் கல்வெட்டுகள்.... அதனாலேயே நீங்கள் சொல்வது போல் மதிப்பு கூடிக்கொண்டு தான் போகிறது... உண்மை தான் அது....

சத்தியமான உண்மை இது... கவிஞர்களுக்கு வயதாகலாம் மூப்பு வரலாம்.. ஆனால் அவர்களின் எழுத்துகள் இன்றும் என்றும் ரசிக்கும் வண்ணம் வயது கூடாமல் எத்தனை வருடங்கள் எடுத்து பார்த்தாலும் படித்தாலும் பாடினாலும் கேட்டாலும் மனம் கிறங்கி போவது உண்மை..... கண்ணதாசனின் கவிதைகள், பாடல்களில் நான் என்னை மறந்து ரசிப்பதுண்டு இன்றும்... தங்கத்திற்கும் அதே நிலை தான்... எத்தனை காலம் ஆனாலும் துணியாக துவண்டுவிடாமல், காகிதமாய் கிழிந்துவிடாமல், இரும்பாய் துருப்பிடிக்காமல் தனக்கான நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு நமக்கு அழகு கூட்டுவதுண்டு....

கதம்ப உணர்வுகள் said...

நச் நச் நு எழுதுறீங்க ரமணி சார்... தங்கத்தால் அலங்கரித்து கண்ணாடியில் பார்க்கும்போது மூச்சே நிற்கும் அபாயம் ஏற்படும்.. ஏனெனில் அழகைக்கூட்டும் சக்தி தங்கத்திற்கு உண்டு... சரியான வார்த்தை.... கவிதையில் ஒரு பெண்ணை வர்ணிக்கும்போது அதைப்படிப்போர் ரசிக்கும் விதமாக இருக்கும்போது என்னவோ தனக்கே எழுதியதை போல தோன்றும்... கவிதை வரிகள் அழகு, உணர்வுகள் எல்லாவற்றையுமே பிரதிபலிப்பதுண்டு.... தங்கத்தின் மீதும் கவிதையின் மீதும் கவர்ச்சியும் மோகமும் கூடிக்கொண்டு தான் போகிறது... உண்மை உண்மை.... குறைவதில்லை இரண்டுக்குமான மதிப்பு...

ஆமாம்பா... லக்‌ஷ்மி இருக்கும் இடத்தில் சரஸ்வதி தங்குவதில்லை, சரஸ்வதி தங்குமிடத்தில் லக்‌ஷ்மி தங்குவதில்லை... ஒற்றுமை இரண்டுக்கும் நீங்கள் சொன்னது போல இருந்தாலும்... மிக அற்புதமா சொல்லி இருக்கீங்க.... அருமையான கவிஞர்கள் சோபித்தாலும் வறுமையில் தான் உழல்வதை கண்டிருக்கிறோம்... மகா கவி பாரதியாரின் வீட்டில் அடுப்பு என்றோ ஒரு நாள் தான் எரியும்.. வீட்டில் அனைவரும் பட்டினியில் கிடந்தாலும் பாரதியாரின் கவிதை வரிகள் மட்டும் பிரவாகமாய் ஓடும் சிந்தனையில்....

உண்மைக்கவிஞன் பணத்துக்காக ஏங்குவதில்லை... பொருளுக்காக தன் கவிதையை விற்பதில்லை... அதனாலேயே அவன் உயர்வாக கருதப்படுகிறான். இறைவனின் வரப்ரசாதம் அவனுக்கு கவிதை ஊற்று அவனில் பிறந்து நமக்கு கிடைப்பது... ஆனால் குன்றுமணி தங்கம் என்பது அவனின் எட்டாக்கனவாகவே இருக்கும்.... மிக அழகிய சிந்தனை ரமணி சார்... ரசித்து வாசித்தேன்.. கவிதைக்காக வாழ்பவன் தங்கத்துக்காக ஏங்குவதில்லை.... ஆனால் அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல் இடையில் தத்தளிப்போரின் நிலை தான் பரிதாபகரமானது... மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்... தன் கவிதைகளை தன் படைப்புகளை தன் குழந்தையாக பாவிக்கிறான்.. போற்றி பேணுகிறான்.... அதை காசுக்காக விற்பதில்லை... அதனால் தங்கமோ சொத்தோ பணமோ காசோ எல்லாமே அவன் துச்சமாக கருதுகிறான்.. அதை எல்லாம் விட உயர்வாக தன் படைப்பை கருதுகிறான்... அதனால் தான் துணிவாக விட்டு விலகி இருக்கவே விரும்புகிறான்...


கடைசி பத்தியில் நெத்தியடியா சொல்லிட்டீங்க... சட்டுனு பாக்க நாணயத்துக்கு ரெண்டு பக்கம் ஒரே மாதிரி இருந்தாலும் ஒன்றோடு ஒன்று சேருவதுமில்லை.. ஒன்றைப்போல் ஒன்றும் இருப்பதில்லை... மிக அழகிய உவமை ரமணி சார்....

தெளிந்தவன் மட்டுமே ஞானியாகிறான்.. தெளியாதவன் தான் இன்னமும் குழப்பத்தில் தன்னை மாய்த்துக்கொள்கிறான்.. தன் வசம் இழக்கிறான்.. இதுவா அதுவா என்று அல்லல்பட்டு அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல் இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கிறான்....

உங்கள் சிந்தனை எப்போதும் மிகத்தெளிவாக இருப்பதால் தான் கவிதைகளை படைக்கும்போது கருவை மையமாக்கி கொடுக்கும்போதும் அதில் கருத்தையும் உட்புகுத்தி படிப்போருக்கு பயனுள்ளதாக மட்டுமல்லாமல் அவசியமானது என்பதைக்கூட அழுத்தமாக சொல்லிச்செல்கிறது உங்கள் கவிதைகள்....

அம்மா ஒவ்வொரு முறை உங்கள் கவிதைகளை நான் வாசித்து முடித்தப்பின் சொல்வாங்க. எப்படி இப்படி சிந்திக்கமுடிகிறது அவரால்?? சிந்திக்க மனிதர் மெனக்கெட வேண்டும்... சிந்தித்ததை உருவாக்க சிரத்தையோடு உழைக்கவேண்டும்... உழைத்ததை வடிவமைக்க செதுக்க வேண்டும்.. செதுக்கியதை ரசிக்கும்படி பரிமாறவேண்டும்.. இதெல்லாமே கனகச்சிதமாக இருக்கும் உங்கள் கவிதை வரிகளில்.... படிக்கும்போதே... நம் எண்ணங்கள் வேறொரு அர்த்தம் சொல்லிக்கொண்டே வரும்போது கடைசி பத்தியின் வரிகள் நச்னு சொல்லும் இது தான் கருத்து என்று..... உங்கள் கவிதைகள் புத்தகமாக வெளியிட்டதற்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரமணி சார்... வாழ்வியலை படிக்கமுடியும், அறியமுடியும், அதன்படி நடக்கவும் முடியும் உங்கள் கவிதை வரிகள் படித்துக்கொண்டே வந்தால்....

தங்கமான கவிதை... மனதில் தங்கவைக்கவேண்டிய கருத்து.... கவித்துவம் சொல்லும் வைர வரிகள்... அத்தனைக்கும் அன்பு வாழ்த்துகள் ரமணி சார்...

Post a Comment