Friday, February 1, 2013

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
வழிகாட்டும் தடங்கள்
ஏதும ற்ற வெளிதனில்
என்னை விட்டுப் போ
நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை
என்னைப் புரிந்து கொள்

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன
என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு
குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே
என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்
நகர்ந்து எனக்கு வழிவிடு

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு
பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு

மீள்பதிவு 

28 comments:

ரமேஷ் வெங்கடபதி said...

இது மேலான பதிவு..! நன்று..வாழ்த்துக்கள்!

rajalakshmi paramasivam said...

இது ஒரு 12 வயது சிறுவன் அல்லது சிறுமியின் ஆதங்கமோ. ?

ஆதங்கம் அழகான கவிதையாகியிருக்கிறது

ராஜி

Avargal Unmaigal said...

இந்த கால குழந்தையின் மனநிலையை மிக அழகாக கவிதையின் மூலம் படம் பிடித்து காண்பித்து இருக்கிறீர்கள் ரமணி சார்

Anonymous said...

தீயைத் தீண்டிப் பார்த்தல் தானே தெரியும் சுடும் என்று !
சுட்ட பின் பொன்னாக மின்னும் !
மிக அருமை !

இராஜராஜேஸ்வரி said...

விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு

மலரத்துடிக்கும் அரும்புகளின்
மனமொழிகளை
மறுக்கமுடியாத கவிதைகளாய்
மலரவைத்ததற்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள் ஐயா.

G.M Balasubramaniam said...


இந்தப் பதிவு நான் எழுதி இருந்த என்னை நானே உணர வை என்ற பதிவைப் படிக்க வைத்தது.ராஜலக்ஷ்மி பரமசிவம் ஒரு 12 வயதுப் பையன் அல்லது பெண்ணின் ஆதங்கமோ எனக் கேட்கிறார். என் பதிவைப் படித்தால் என்ன பின்னூட்டம் இடுவாரோ என்ற கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

இது தான் இன்றைய குழந்தைகள் மன நிலை.
அருமை..
அப்படித்தான் நாமும் போகிறோம்.
போக வேண்டும்.
நன்றி .
இனிய வாழ்த்து.
வேதா.இலங்காதிலகம்.

s suresh said...

அருமையான கவிதை! என்னை நானே அறியவிடு! உண்மைதான் அப்போதுதான் சுயமான சிந்தனையும் உலக அனுபவமும் கிடைக்கும்! நன்றி!

கவியாழி கண்ணதாசன் said...

விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு//
உண்மையான விருப்பமானால் உதவிக்கு யாரும் தேவையில்லை

கோமதி அரசு said...

வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு//

அருமையான கவிதை.
நம் குழந்தைகள் அவர்கள் விழுந்தால் அவர்களே எழுந்து கொள்வார்கள். நாம் ஆசிர்வதிப்பது மட்டும் தான் நம் வேலை.

Seeni said...

nalla
pakiv ayyaa..!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பார்வை....

//விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு//

மிகவும் பிடித்த வரிகள்....

த.ம. 4

thamilselvi said...

அருமையான கவிதை

thamilselvi said...

எந்த வரி பிடித்தது என்று எடுத்து ஆள எண்ணினேன், அனைத்து வரிகளும் உயிர்ப்போடு அதனால் பாகுப்படுத்த விரும்பவில்லை

தி.தமிழ் இளங்கோ said...

உன்னை நீயே அறிவாய் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

Anonymous said...

பிரமாதம். மீண்டும் மீண்டும் படித்தேன். படம் போட்டு வீட்டில் மாட்டி வைக்க வேண்டிய கவிதை.

//விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை//
அருமை!

மனதை தொட்ட கவிதை.

அருணா செல்வம் said...

கவிதை...
தன்னம்பிக்கையை ஊட்டுகிறது இரமணி ஐயா.
த.ம. 7

விமலன் said...

நல்ல கவிதை .நம்ம்மை நாம் அறிந்தாலே எல்லாம் சரியாகிப்போகிறதுதானே?

Suresh Kumar said...

//பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு//

சிறிய வயதில் எனது பெற்றோர் என்னை வழி நடத்தும்போது தோன்றிய வார்த்தைகள், சிறிது நேரம் உங்கள் கவிதையின் வரிகள் மூலம் வாழ்ந்து மீண்டு வந்தேன். முக்கியமாக கடைசி வரிகள் மிகவும் அருமை...... தொடர வாழ்த்துக்கள்.

RAMVI said...

இக்காலத்தில் இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.எதையும் அவர்களே உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள்.
மிக அழகான கவிதை.

சேக்கனா M. நிஜாம் said...

வாசிப்போரை தன்னம்பிக்கை வளர்க்ககூடிய இருக்கு

தொடர வாழ்த்துகள்...

கோவை2தில்லி said...

சிறப்பான வரிகள். தானே தெரிந்து கொள்ள வேண்டுமென்று தான் நினைக்கிறார்கள்.

சந்திரகௌரி said...

எப்படி சார் உங்கள் சிந்தனைகள் ஒவ்வொன்றும் மனிதன் வாழ்வை துலங்கச் செய்கிறது . வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் . சொல்லித் தெரிய வேண்டியதில்லை . இதுவென்று சுட்டிக் காட்டி தெரிந்து கொள்வதை விட தேடித் பெறுவதுதான் என்னும் உண்மை தத்துவம் புரிய வைக்கின்றீர்கள்

T.N.MURALIDHARAN said...

அப்பப்பப்பா! ஆழமான கருத்துக்கள் குவிந்துள்ள கவிதை
த.ம. 8

Ranjani Narayanan said...

//என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு
பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு//

ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த கவிதை!

பாராட்டுக்கள்.

Vathsala Dhanasekaran said...

very good thinking!god bless you.

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

உன்னை அறிந்தால் உலகம் வயப்படும்!
பொன்னை நிகா்த்த புகழ்வரி! - அன்ளை
அருந்தமிழ் மி்ன்ன அளிக்கும் இரமணி
பெருந்தமிழ்ச் செல்வரெனப் பேணு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்ஃ கம்பன் கழகம்

Bala subramanian said...


தேட விடு
அறிய விடு
என்னை மலரவிடு
என்னை நானே

Post a Comment