Friday, April 26, 2013

ஒரு கோடிச்சொல்லும் ஒரு சிறு செயலும் ....

எதிர்படும் யதார்த்தங்களை
எதிர்கொள்ளும் துணிவற்றதால்தான்

கற்பனைத் தேரேறி
கவிதையூர்  செல்கிறேனோ ?
கண்ணை மூடிக் காட்சி தேடும்
கபோதி யாகிறேனோ ?

மிதிபடும் துரும்பெடுக்கவும்
குனிவதற்கு தெம்பற்றுத்தான்

எண்ணத்தால் மலையசைத்து
இறுமாந்துத் திரிகிறேனோ ?
வார்த்தைகளால் உலகத்தை
ஏமாற்றித் திரிகிறேனோ ?

துரத்துகிற துயரங்களை
எதிர்க்கின்ற  துணிவின்றித்தான்

வான்நோக்கி மண்ணில் நடந்து
ஞானியாக முயல்கிறேனோ ?
வெறும் கையில் முழம்போடும்
கவிஞனாகி மகிழ்கிறேனோ ?

கனவுகளில் கற்பனையில்
சுகித்திருத்தல் தனைவிடுத்து
புறவெளியின் புழுதியினை
என்று ரசிக்கப் போகிறேன் ?

மாடம் விட்டு கீழிறங்கி
மண்ணில் நடக்கப் போகிறேன்?
மனித வாழ்வின் உன்னதத்தை
நிஜமாய் உணரப்  போகிறேன் ?

கோடிக் கோடி வார்த்தையது
ஒருசிறு செய லதற்கு
ஈடு இல்லை என்பதனை
என்று தெளியப் போகிறேன் ?

பிண்ட மதனைப் பெற்றுவிட்டு
தாயெனவே  மகிழ்வதற்கு
மலடிப்பட்டம்  சிறந்ததென
என்று உணரப் போகிறேன் ?

28 comments:

கீதமஞ்சரி said...

கற்பனாவாதிக்கும் யதார்த்தவாதிக்கும் உள்ள வேறுபாட்டை கற்பனாவாதியின் கண்ணோட்டத்திலேயே அழகாக விளக்கிப்போகும் கவிதை. கடைசி பத்தி மொத்தக் கவிதையின் சாரத்தையும் சுள்ளென்று எடுத்துரைக்கிறது. பாராட்டுகள் ரமணி சார்.

சின்னப்பயல் said...

துரத்துகிற துயரங்களை
எதிர்க்கின்ற துணிவின்றி////

G.M Balasubramaniam said...


கற்பனையையும் யதார்த்தத்தையும் பிரித்துப்பார்க்கும் அருமையான கவிதை, நடையழகு, சொல்லழகு. பொருளழகு. எல்லாமே அழகு. பாராட்டுக்கள்.

இராய செல்லப்பா said...

“வார்த்தைகளால் உலகத்தை ஏமாற்றித் திரிகிறேனோ ?” என்று ஐயம் வரலாமா? ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிவிட்டுப் போவோமே! கவிதையால் தானே ஏமாற்றப் போகிறோம்?

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன ஒரு கற்பனை + நிஜம்...!

”தளிர் சுரேஷ்” said...

கோடிக் கோடி வார்த்தையது
ஒருசிறு செய லதற்கு
ஈடு இல்லை என்பதனை
என்று தெளியப் போகிறேன் ? // அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி ஐயா!

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி //

கற்பனாவாதிக்கும் யதார்த்தவாதிக்கும் உள்ள வேறுபாட்டை கற்பனாவாதியின் கண்ணோட்டத்திலேயே அழகாக விளக்கிப்போகும் கவிதை. கடைசி பத்தி மொத்தக் கவிதையின் சாரத்தையும் சுள்ளென்று எடுத்துரைக்கிறது.


தங்கள் முதல் வரவுக்கும்
படைப்புக்கு கூடுதல் பெருமை சேர்க்கும்படியான
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சின்னப்பயல் //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

கற்பனையையும் யதார்த்தத்தையும் பிரித்துப்பார்க்கும் அருமையான கவிதை, நடையழகு, சொல்லழகு. பொருளழகு. எல்லாமே அழகு. பாராட்டுக்கள்//

.தங்கள் உடன் வரவுக்கும்
படைப்புக்கு பெருமையும்
படைப்பாளிக்கு உற்சாகமூட்டும் படியான
அருமையான விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

Chellappa Yagyaswamy //

“வார்த்தைகளால் உலகத்தை ஏமாற்றித் திரிகிறேனோ ?” என்று ஐயம் வரலாமா? ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிவிட்டுப் போவோமே! //

முதலில் "றோம்" என
பன்மையில் முடியும்படியாகத்தான் எழுதினேன்
யாரேனும் என் கருத்தை மிகச் சரியாகப் புரியாமல்
பின்னூட்டமிட்டு விடுவார்களோ என்கிற எண்ணத்தில்
ஒருமையில் தன்மை நிலையில் மாற்றிவிட்டேன்
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
.
என்ன ஒரு கற்பனை + நிஜம்..//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

அருமையான வரிகள்! சிறப்பான கவிதை!//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சேக்கனா M. நிஜாம் said...

அருமையான வரிகள்!

தொடர வாழ்த்துகள்...

கவியாழி said...

மனித வாழ்வின் உன்னதத்தை
நிஜமாய் உணரப் போகிறேன் ?
அருமைங்க சார்,ஆமாம் தேடல்கள் தெளிவைக் கொடுக்கும்

RajalakshmiParamasivam said...

//கனவுகளில் கற்பனையில்
சுகித்திருத்தல் தனைவிடுத்து//
அது சுவாரஸ்யமாய் தானிருக்கும்.
என் அதை விடுக்க வேண்டும் என்கிறீர்கள்.
யதார்த்தம் எப்படியும் நம்மை துரத்தத் தான் போகிறது.
அது வரை மகிழ்ந்திருப்போமே கற்பனையில்.

மனோ சாமிநாதன் said...

//கனவுகளில் கற்பனையில்
சுகித்திருத்தல் தனைவிடுத்து
புறவெளியின் புழுதியினை
என்று ரசிக்கப் போகிறேன் ?//

மிக அருமை!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ரமணி ஐயா ...
என்ன சொல்ல உங்கள் சொல் வளத்தையும்
பொருள் வளத்தையும்...

'' சும்மா வாய்ச்சொல்லில் வீரனாக இல்லாமல்
செயலில் என்று இறங்கப்போகிறேன்.."'
சுட்டிக்காட்டும் நான்
தட்டிக்கொடுத்து
கட்டிக்கொள்ள என்று பழகப்போகிறேன் என்று
மிக அருமையாக பொருள் பொதிந்த கவியமைத்தமை
மிக அழகு.

கோமதி அரசு said...

கோடிக் கோடி வார்த்தையது
ஒருசிறு செய லதற்கு
ஈடு இல்லை //

அருமையாக சொன்னீர்கள்.
ஒருவர் துன்ப பட்டுகொண்டு காண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு எத்தனை கோடி வார்த்தைகள் சொன்ன போதிலும் அவர்கள் துயர் தீராது, ஆனால் அன்பால் அராவணைத்து தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தால் அந்த அன்புக்கு ஈடு இல்லைதான். அது சிறு செயல்தான் ஆனால் அவர்களை அது ஆற்றுப்படுத்தும்.

Seeni said...

unmai thaanga ayya!

nalla sollideenga...!

கரந்தை ஜெயக்குமார் said...

கோடிக் கோடி வார்த்தையது
ஒருசிறு செய லதற்கு
ஈடு இல்லை என்பதனை
என்று தெளியப் போகிறேன் ?

அனுபவ வரிகள் அய்யா

தேன் நிலா said...

வார்த்தைகளில்லை.. பாராட்ட...!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா குரு அசத்தல்....!

Anonymous said...

''..பிண்ட மதனைப் பெற்றுவிட்டு
தாயெனவே மகிழ்வதற்கு
மலடிப்பட்டம் சிறந்ததென
என்று உணரப் போகிறேன் ?...'''
என்ன குளப்பம்?....
என்ன தடுமாற்றம்?
புரியவில்லை.....
அடுத்து காசியாத்திரையா!
அப்டிப் பார்த்தால் பிறப்பே வேண்டாமல்லவோ!
புரியாமலே...
எல்லோரது சிந்தளையையும் குளம்பும்..
வேதா. இலங்காதிலகம்.

மாதேவி said...

நன்றாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

சக்தி கல்வி மையம் said...

அருமையான கவிதை...

பூ விழி said...

எண்ணத்தால் மலையசைத்து
இறுமாந்துத் திரிகிறேனோ ?
வார்த்தைகளால் உலகத்தை
ஏமாற்றித் திரிகிறேனோ ?//

முடியலங்க முடியல நெஞ்சை பிராண்டும் வரிகள்

இப்பதான் உங்கள் ப்ளாகுக்கு வருகிறேன் உங்கள் பிளாகின் தலைப்பு நெஞ்சை உலுக்கும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரி என்ன சொல்வது என்றே புரியவில்லை உங்கள் எழுத்துகள் எல்லாம் மிகவும் முதிர்ச்சிவாய்ந்தவைகளாக.......... அதை விமர்சிக்க கூட தயக்கமாக இருக்கிறது

abdul said...

intha kavithai en thalayil kottiyathu pol ullathu

ADHI VENKAT said...

அருமையான மனதை தொட்ட வரிகள்.

Post a Comment