Saturday, July 6, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (18 )

கணேசன் வெளியே கிளம்பலாம் எனச் சொன்னதும்
நானும் உடனடியாக கிளம்ப ரெடியாகிவிட்டேன்.
அவன் வெளியில் சாப்பிடமாட்டான் ஆகையால்
இருவருமே சாப்பிடும்படியாக மதியம் சாப்பாடு
தயார்செய்யும்படி மனைவியிடம் சொல்லிவிட்டு
அவன் வண்டி ஓட்டி சிரமப் படவேண்டாம் என
எனது வண்டியிலேயே பின் சீட்டில்
அவனை ஏற்றிக் கொண்டு"எந்தப் பக்கம் போகணும்"
என்றேன்

"டேய் நாம நாகமலைப்புதுக்கோட்டைவரை
ஒருஅலுவலக நண்பரைப் பார்க்கப் போகணும்,
அதற்கு முன்னால்உன்னிடம் கொஞ்சம் பேசணும்
.போகிற வழியில்ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள
பூங்காவில் கொஞ்சம் நிறுத்து,
பேசிவிட்டுப் பின் போகலாம் :என்றான்

மதுரை  டி வி எஸ் நகரில் உள்ள அந்தப் பூங்கா
மதுரை முக்கியப் பிரமுகர் சிபாரிசில்
அமைக்கப்பட்டதோடுஅல்லாமல் அந்த நகர்
குடியிருப்பு வாசிகளும்கொஞ்சம் சமூக சிந்தனை
உள்ள மனிதர்களாக இருப்பவர்கள் ஆதலால்
அந்தப் பூங்கா கொஞ்சம் நல்லவிதமாகவே இருக்கும்
,
யார்  தொந்தரவும் இல்லாமல் மனம் திறந்து பேச
அந்தப் பூங்கா மிகச் சரியான இடம்தான்

வண்டியை பார்க் ஓரம் பார்க்செய்து விட்டு
வெய்யில் வர வாய்ப்பு இல்லாத ஒரு பெஞ்சில்
இருவரும் அமர்ந்து கொண்டோம்

வழக்கம்போல சிறிது மௌனம்  காத்து பின்
பேசத் துவங்கினான்.

"உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நானே
நாம் வந்த மறு நாளே இங்கே டாக்டரைப் பார்த்தேன்
அவரும் ரிபோர்ட்டையெல்லாம் படித்துவிட்டு
கொஞ்சம் சீரியஸான நிலைதான்,ஒரு மூன்று
மாதத்திற்கான மருந்துகளை டாக்டர்
கொடுத்திருப்பதாகவும் அதைச் சாப்பிட வேண்டிய
அளவும் முறையும் சொன்னார்.

சாப்பிடுகையில் உடல் ரீதியாக மோசனில்
அல்லது முழுங்குவதில் அல்லது வாந்தி ஏதும்வந்தால்
உடன் அவரைச் சந்திக்கும்படியும் சொன்னார்

நான் டாக்டரிடம் ஓபனாகவே கேட்டுவிட்டேன்
சார் சென்னை டாக்டர் சொன்னதைவைத்தே நான்
மரணத்தைச் சந்திக்கத் தயாரகிவிட்டேன்
அதனால்தான் வேறு அசுர டிரீட்மெண்ட் எல்லாம்
வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.ஆகையால்
தயவு செய்து எனக்குள்ள கிரேஸ் டைம்
எவ்வளவுன்னுமட்டும் சொல்லுங்கள் டாக்டர்"
என்றேன்

அவருக்கு சட்டென கோபம் வந்துவிட்டது
ஆனாலும் என் மேல் இரக்கப்பட்டோ என்னவோ
கொஞ்சம் பொறுமையாக "தம்பி டாக்டர்கள்
எல்லாம் கடவுள்கள் இல்லை
நாங்கள் சொல்வதெல்லாம் வேத வாக்கும் இல்லை
கடைசி நொடி வரை நாங்கள் நோயாளியைக் காக்கப்
போராடவும் கடைசி மூச்சுவரை நோயாளிக்கு
நம்பிக்கையூட்டவும்தான் படித்துவந்திருக்கிறோம்
எனவே இப்படியெல்லாம கேள்வி கேட்காமல்
ஒழுங்காக மருந்து சாப்பிட்டு சொல்கிறபடி
டயட்டில் இரு.

கூடுமானவரையில் குடலுக்கு
சிரமம் தர வேண்டாம்.

மஞ்சள் காமாலை அல்லது
விடாத வயிற்றுப்போக்கு வரும்படியாக ஆனால்
கொஞ்சம் சிரமம்தான் என்றார் "எனச் சொல்லி
நிறுத்தினான்

"சரி அதைவிடு இப்போ போற வேலைக்குக்
கிளம்பலாமா ? அங்கே எதுக்குப் போறோம்னு
முதலில் சொல்லு "என்றேன்

அவன் சிரித்தபடி "அதற்குள் அவசரப்பட்டால் எப்படி ?
நீயும் கிரிக்கெட் பிளேயர்தானே நான் சொல்வதற்கு
மட்டும் பதில் சொல்லு.
கடைசி ஒரு பால் மட்டும் இருக்கு
ஜெயிக்க ஆறு ரன் வேண்டியிருக்கு
தடுத்து ஆடுவது புத்திசாலித்தனமா ?
அல்லது ஆனது ஆகட்டும் என அடித்து ஆடுதல்
புத்திசாலித்தனமா ?" என்றான்

இந்தக் கேள்விக்கு பதில் நிச்சயம் ஒன்றுதான்
என்பதால் அவன் முடிவும் எப்படிப்பட்டதாக இருக்கும்
என யூகிக்க முடிந்ததால் எனக்குள் பயம்
விஸ்வரூபம் எடுக்கத் துவங்கிவிட்டது

(தொடரும் )

29 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் விளையாட்டாக சொன்னாலும், மனது மிகவும் வருத்தப்படுகிறது...

Anonymous said...

''.. பயம்
விஸ்வரூபம் எடுக்கத் துவங்கிவிட்டது...''
Vetha.Elangathilakam.

கரந்தை ஜெயக்குமார் said...

எங்களுக்குள்ளும் பயம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது.

துளசி கோபால் said...

:(

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கடைசி ஒரு பால் மட்டும் இருக்கு
ஜெயிக்க ஆறு ரன் வேண்டியிருக்கு
தடுத்து ஆடுவது புத்திசாலித்தனமா ?
அல்லது ஆனது ஆகட்டும் என அடித்து ஆடுதல்
புத்திசாலித்தனமா ?" //

நல்லதொரு உதாரணம். யோசிக்க வேண்டியது தான். ;(

Ranjani Narayanan said...

என் தந்தையை இந்த மாதிரி நிலையில் பார்த்திருக்கிறேன். மனசு துக்கத்தில் மூழ்குகிறது.

கவியாழி கண்ணதாசன் said...

தயவு செய்து எனக்குள்ள கிரேஸ் டைம்
எவ்வளவுன்னுமட்டும் சொல்லுங்கள் டாக்டர்"//எனக்கே மனது வலிக்கிறது ....

தி.தமிழ் இளங்கோ said...

எதுவும் நம் கையில் இல்லை என்றபோது என்னத்த எழுதுவது?

T.N.MURALIDHARAN said...

கணேசனின் இறுதி நாட்களை விவரிக்க விவரிக்க திக் திக் திக் .என்று மனது அடித்துக் கொள்கிறது.

T.N.MURALIDHARAN said...

t.m 5

அருணா செல்வம் said...

தொடருகிறேன் இரமணி ஐயா.

வெங்கட் நாகராஜ் said...

எங்களுக்குள்ளும் பயம்.... திகிலோடு தொடர்கிறேன்.

த.ம. 6

இரவின் புன்னகை said...

நல்ல படியா முடிப்பீங்கன்னு நம்பறோம்... தொடருங்கள், காத்திருக்கிறோம்...

த.ம. 7

அமைதிச்சாரல் said...

பாவமாயிருக்கு..

இளமதி said...

ஐயா... தொடர்ந்து என்ன வரப்போகுதோன்னு திகிலாக வேதனையாக இருக்கிறது. தாங்கிக்க திராணி இல்லாமல் போனாலும் உங்க பதிவை படிக்காமலும் போக முடியலை...

வலிக்கிறது. தொடர்கிறேன்....

Seeni said...

yaa !
allaah..

கி. பாரதிதாசன் கவிஞா் said...


வணக்கம்!

நட்பின் பெருமையை நல்கும் வரிபடித்தேன்!
கொட்டும் தமிழில் குளிர்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

MANO நாஞ்சில் மனோ said...

பயம் பந்து மாதிரி வயித்துக்குள்ளே உருளுதே குரு.

கோமதி அரசு said...

தயவு செய்து எனக்குள்ள கிரேஸ் டைம்
எவ்வளவுன்னுமட்டும் சொல்லுங்கள் டாக்டர்"
என்றேன்//

இது எவ்வளவு கொடுமையானது!

வலைச்சரத்தில் உங்கள் பதிவு இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

s suresh said...

மரணம் நெருங்கியதும் பக்குவம் அடைந்தவராக காணப்படுகிறார் உங்கள் நண்பர்! வலியுடன் தொடர்கிறேன்! நன்றி!

கீத மஞ்சரி said...

அடித்து ஆடப்படும் பந்தாய் நண்பரின் ஆழ்மனத்தில் உருவேற்றியிருக்கும் எண்ணம் என்னவாக இருக்கும்? இப்படி காலக்கெடு தந்த காலனின் கெடுவை நினைத்து வருந்துவதைத் தவிர நம்மால் வேறென்ன செய்யமுடியும்?

ezhil said...

எதுவும் பாதகமானதாக இருக்கக்கூடாதென மனம் அடித்துக்கொள்கிறது.....

சங்கவி said...

தொடரும் என்று போட்டு எதிர்பார்ப்பை அதிகமாக்கிட்டீங்க சார்...

புலவர் இராமாநுசம் said...

எங்களுக்கும் தான் ....!

மாதேவி said...

எங்கள் மனமும் உருளுகிறது.

பால கணேஷ் said...

பலரின் மனநிலையும் ஒரே மாதிரி இருப்பதைக் கவனிக்க முடிகிறது. வருத்தம் + வேதனை... அதே சமயம் படிக்காமலும் இருக்க முடியலை. அதனால ரெண்டு ரெண்டு பகுதிகளா இனி வெளியிட்டுடுங்க ரமணி ஸார். நண்பரின் நிலை குறித்த கவலை+ பயத்துடன் தொடர்கிறேன் நான்!

கோவை2தில்லி said...

வருத்தத்தோடு தொடர்கிறேன்....

G.M Balasubramaniam said...


கிரிக்கட் ஆடத்தெரிந்த எவரும் தனக்குப் பின்னே ஆட யாரும் இல்லாத பாட்ஸ்மேனாக இருந்தால் தடுத்தாடி ட்ரா செய்ய முயல்வார். தனக்குப் பின்னே ஆட இன்னும் ஆட்கள் இருந்தால் சிக்சர் அடித்து வெல்லவே முயல்வார். முடியாவிட்டாலும் ட்ரா தானே

Post a Comment