Wednesday, October 29, 2014

கத்திக்கு எதிராய் ஒரு குண்டூசி

வயிற்றின் அளவினை
உடற்கூறு முடிவு செய்யாது
மனோவிகாரங்களே முடிவு செய்வதால்
வயிறு நிறையவோ
"இட்டிலி" மிஞ்சவோ
வாய்ப்பே இல்லையென்பதால்
மிஞ்சியது அடுத்தவன் "இட்டிலி" என்கிற
பேச்சுக்கு இங்கு இடமேயில்லை

எனவேதான்
வயிறுபசித்தவன் "பசியினை"
அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க
வயிறு பெருத்தவன்
"இட்டிலியினை"
தன் ஏழு தலைமுறைக்குக் கடத்துவதோடு
தன் செயலுக்கு ஆதரவாய்ச் சில
தத்துவங்களையும் உதிர்த்துப்போகிறான்

என்ன செய்வது
சொல்லவேண்டியதை
சொல்லவேண்டியவன்
உரக்கச் சொல்லுகிற சக்தியற்றுப்போனதால்
உணரச் சொல்லுகிற சக்தியற்றுப் போனதால்

சொல்ல வேண்டியதை
சொல்லக் கூடாதவன்
உரக்கச் சொல்லித் தத்துவங்களை
நீர்த்துப்போகச் செய்வதோடு அல்லாது
தானும் கூடுதல் சக்தியும் பெற்றுக் கொள்கிறான்

என்னசெய்வது
சொல்ல வேண்டியதை
சொல்ல வேண்டியவன்
சொல்லும் சக்திபெறும்வரை நாமும்
நொந்து வீணாகித் திரியாது இதுபோல்
சந்துமுனைச் சிந்து பாடியேனும் திரிவோம்

11 comments:

ஆத்மா said...

இதுவும் ரொம்ப ஷார்ப்பான குண்டூசியா இருக்குதே
நன்று :)

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
தங்களால் மட்டுமே
இதுபோல் கவி வரைய முடியும்
நன்றி ஐயா
தம 2

வை.கோபாலகிருஷ்ணன் said...

தலைப்பும் விஷயங்களும் குண்டூசிபோல மிகவும் ஷார்ப் ! :) பாராட்டுகள்.

கவியாழி said...

குண்டூசியை வைத்தே கவிதை? குத்துகிறது

Yarlpavanan said...

கத்தி வெட்டும் குண்டூசி குத்தும்
இது வெட்டும் கவிதையல்ல
குத்தும் கவிதையே!
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனதில் குத்தும் அளவு உள்ள கவிதை. மதுரையில் தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. வலைப்பூ நட்பினைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.1

குண்டூசி சிறிதெனினும் தங்கள் கவியின் வரிகள் ஆழமாய் சென்று மனதை தாக்குகின்றன.!

சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.!

நனறியுடன்,
கமலா ஹரிஹரன்.

”தளிர் சுரேஷ்” said...

கத்தியில் குத்திய குண்டூசியின் கூர்மை சிறப்பு! வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

மிக அருமையான நறுக்குத் தெரித்தார் போன்ற கூரிமையான வரிகள்! அருமை!

சிவகுமாரன் said...

அருமையாகச் சொன்னீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

Post a Comment