Saturday, June 6, 2015

முடிவின் விளிம்பில்

 குழப்பம் என்னுள் சூறாவளியாய்
சுழன்றடிக்கிறது
நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?
இருக்கிறேன் என்பது சரியா?
அல்லது
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உணர்வு அற்றுப்போனதா?
கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாது இருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் 

புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன
பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறல்களே பரவிச் சிரிக்கின்றன
பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்


மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி
முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது
விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்
என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன
எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எரிந்துகொண்டிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்துணை  அவஸ்தைகளுக்கும் மத்தியில்
இவைகளுக்கெல்லாம்

 தொடர்பே இல்லாததுபோல்
தென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோடு

 தங்கத்தின் தகதகக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்
கொத்தின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்துணை வலிகளும்
அத்துணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர
அது கடந்த வழியெல்லாம் சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம் பரவசம்  பரந்து விரிய
நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் சேரவேண்டிய வெட்டவெளிக்கும்
இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது
இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினிில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி
"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்
கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?
காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?
காலவெளியில் காலத்துளி

 மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
உயிர்த்துளி என்னை விலக்கிப் பறக்கிறது
நான் பிணமாகிறேன்
அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது



(மரண அவஸ்தையை  ,அந்த நொடியைச் சொல்ல 
ஒரு சிறு முயற்சி  )

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

(மரண அவஸ்தையை, அந்த நொடியைச் சொல்ல
ஒரு சிறு முயற்சி )

படிக்கவே மிகவும் பயமாகத்தான் உள்ளது. :)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல பொருண்மை எடுத்து பகிர்ந்தவிதம் நன்று. பட்டினத்தாரின் பாடல்கள் நினைவிற்கு வந்தன.

S.P.SENTHIL KUMAR said...

கவிதையின் ஆரம்ப வரிகளை படிக்கும் போது இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் கொடுத்த பேட்டிதான் நினைவுக்கு வந்தது.
த ம 3

திண்டுக்கல் தனபாலன் said...

மரண பயணத்தின் உண்மையான பதற்றம்...

G.M Balasubramaniam said...

மரணம் கண்டு ஏன் பயப்பட வேண்டும் பிறப்பது தெரியும். இறப்பது தெரியும் முன்னரே நிகழ்ந்து விடும். இருந்தாலும் கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.

Post a Comment