Thursday, June 4, 2015

இருண்மை

எழுதுதலை கொஞ்சம்
நிறுத்தி இருந்தான் நண்பன்
காரணம்கேட்டேன்

"புரியாததை
புரியாதபடியே
படிப்பவர்களும்
புரிந்து கொள்ளாதபடியே
மறை பொருளாய் எழுதினேன்
பலர் முகம் திருப்பிப் போனார்கள்

மாறுதலாக
புரிந்ததை
புரிந்து கொண்டபடி
படிப்பவர்களும் புரிந்து கொள்ளுபடி
தெளிவாக எழுதிப் போனேன்
பலரும் பாராதே போனார்கள்
அதுதான் எழுதுவதில்லை "என்றான்

நான் சிரித்துக் கொண்டேன்

"பட்டப் பகலும்
நடு நிசியும்
அதிகம் போற்றப்படுவதில்லை
பாடப்படுவதும் இல்லை
பட்டப் பகலில் எல்லாமே தெளிவாகத் தெரியும்
அதில் சொல்ல என்ன இருக்கிறது

நடு நிசியில் எதுவுவேதெளிவாகத் தெரியாது
அதில் சொல்ல என்ன இருக்கிறது

விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
அப்படி முயற்சி செய்

அம்மணம் நிச்சய ம்  ஆபாசம்
முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
ஒளிவு மறைவே பேரழகு என்றேன்

புரிந்தது போலவும்
புரியாதது போலவும்
தலையாட்டிப் போனான் அவன்

என்ன புரிந்து கொண்டான்  என்பது
அடுத்த கவிதையில் தான் தெரியும் 

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒளிவு மறைவே பேரழகு - சரி தான் ஐயா...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெரும்பாலானோர் நிலை அதுவே.

ப.கந்தசாமி said...

புரிந்தும் புரியாததும் - நல்ல சொற்றொடர்.

Jayakumar Chandrasekaran said...

சொல்லவந்ததை நேரடியாகச் சொல்லிவிட்டால் அது கதை ஆகும். சொல்லவந்ததை சொல்லாமல் விட்டால் அது பிதற்றல் ஆகும். அன்று தொட்டு இன்று வரை கவிதையில் காண்பது; சொல்லில் பாதி ஊகத்தில் மீதி என்பதே ஆகும். ஊகத்தில் மீதியைக் கண்டுபிடிக்கும் போது கிடைக்கும் உவகையே கவிதையின் மேன்மை.

--
Jayakumar

KILLERGEE Devakottai said...

அம்மணம் நிச்சய ம் ஆபாசம்
முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
ஒளிவு மறைவே பேரழகு என்றேன்

அருமையான உவமை ரசித்தேன்
தமிழ் மணம் 3

G.M Balasubramaniam said...

முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை என்று சொல்லியே அம்மணம் ஆபாசம் என்கிறீர்களே

மனோ சாமிநாதன் said...

கவிதை என்பது இங்கு ஒரு உதாரணம் மட்டும் என்று தான் நான் உணர்கிறேன். வாழ்க்கைத்ததத்துவத்தை அழகாய்ச் சொல்லியி விட்டீர்கள். சொல்ல வேண்டியதை அழகாய்ச் சொல்லி, சொல்லாததையும் உணர வைப்பது தானே கவிதை?

Anonymous said...

''..விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்..''

S.P.SENTHIL KUMAR said...

முற்றாக இல்லாமல் மறைந்திருப்பதில்தான் கவிதையின் சுவை இருக்கிறது என்பதை அழகா சொன்னது அழகோ அழகு!
த ம 4

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அற்புதமான உவமைகள் மூலம்நிறைவாக கருத்தை தந்துள்ளீர்கள்வாழ்த்துக்கள் ஐயா.த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒளிவு மறைவே பேரழகு என்றேன்//

அருமை. மிக அருமை. பாராட்டுகள். :)

ராமலக்ஷ்மி said...

அருமை.

Unknown said...

விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
அப்படி முயற்சி செய்

உண்மைதான்! இரமணி அருமையான, வித்தியாச மான சிந்தனை!

Post a Comment