Sunday, February 26, 2017

இவையெல்லாம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்...

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா
அவர்களை நீதிமன்றம் குற்றவாளி எனத்
தீர்மானித்து அதற்கான உத்தரவினைப்
பிறப்பித்த பின்னும்...

செல்வி ஜெயலலிதா அவர்களை குற்றவாளி
எனக் கூறுதல் கண்டனத்துக்குரியது
என டிடிவி தினகரன் அவர்கள் கூறுவதும்...

"ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்களுக்கு நன்மை
பயக்கும் திட்டம். ஒரு நாடு நன்றாக
இருக்கவேண்டுமென்றால்
ஒரு மாநிலத்தைத் தியாகம் செய்யலாம் "
என நம் மாநிலத்தைச் சேர்ந்த
இல. கணேசன் அவர்கள்
நம்  மாநிலத்தில் இருந்தே சொல்வதும்...

பகுத்தறிவுப் பிரச்சாரத்தையே
அடிப்படையாகக் கொண்ட தி. மு. க கட்சியின்
செயல் தலைவர் தன் அறுபதாம் ஆண்டுக்குரிய
வைபவத்தை கோவிலில் வைதீக முறைப்படி
செய்து முடித்து வெளிவர அதுகுறித்து
நிருபர்கள் கேள்வி எழுப்ப அது என் தனிப்பட்ட
விஷயம் எனக் கூறுவதும்...

அரசியல் அரிச்சுவடி கூட அறியாத
எந்த அரசியல் இயக்கங்களிலும்
பங்குபெறாத திருமதி , தீபா அவர்கள்
 உறவு என்பதாலேயே
ஒரு இயக்கத்தைத் துவக்குகிற தைரியமும்
மிகத் துணிச்சலாக முன்னோடி
இயக்கத் தலைவர்களுடன் தன் பெயரையும்
இணைத்து கட்சிப் பெயரிடுவதும்

நிச்சயம் இது தமிழ் நாட்டில் மட்டுமே
சாத்தியம் என நினைக்கிறேன்...

பழம் பெருமைகளிலும்,
நிகழ் காலச் சிறுமைகளிலும்
சிறந்து விளங்குவது எது என ஒரு போட்டி
வைக்கப்படுமானால் நிச்சயம்
இரண்டிலும்நம் தமிழகமே
முதல் பரிசு தொடர்ந்து பெறும்
என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு

உங்களுக்கு ?

Friday, February 24, 2017

சுனாமியாய்ச் சீற இருக்கிற எதிர்ப்புக்கு ...

ஒளிந்து நெளிந்து ஓடும்
சிற்றோடை
எதை சாதித்து விடப் போகிறது
என நகர வாசி நினைக்க

நாளை வரவிருக்கும்
காட்டாற்றுக்குச் சிற்றோடை
வழியமைத்துப் போகிறது
எனப்புரிந்து கொள்கிறான மலைவாசி

அனாதையாய்,ஒடுங்கிப் போகும்
ஒற்றயடிப் பாதையால்
பயன் என்ன இருந்துவிடப் போகிறது
எனப் பாமரன் நினைக்க

நாளை வர இருக்கும்
நாற்கரச் சாலைக்கு ஒற்றையடிப் பாதையே
மையக் கோடாய் இருக்குமெனப்
புரிந்து கொள்கிறான் பொறியாளன்

ஒளிந்து மறைந்து எதிர்ப்பை
முனகலாய் வெளிப்படுத்துவோரால்
என்ன செய்து விட முடியும்
எனக் கொக்கரிக்கிறான் அதிகாரமுள்ளவன்

தேர்தல் காலங்களில்
சுனாமியாய்ச்  சீற   இருக்கிற எதிர்ப்புக்கு
இந்த முனகலே ஆரம்ப அறிகுறி எனப்
புரிந்து கொள்கிறான் அரசியல் அறிந்தவன்

Thursday, February 23, 2017

இரண்டுக்கும் இடையில் உள்ளது.....

"இரண்டுக்கும் இடையில் உள்ளது
சரியாய் இருந்தால்
எல்லாம் சரியாய் இருக்கும்

இரண்டுக்கும் இடையில் உள்ளது
தவறாய் இருந்தால்
எல்லாம் தவறாய் இருக்கும் "
என்றான் என் நண்பன்

"எது இரண்டு
எது நடு
விளங்கவில்லை " என்றேன்

"நீயே யோசித்துச் சொல்
நான் அதுவா எனச் சொல்கிறேன்"
என்றான்

"துணைப் பொதுச் செயலாளருக்கும்
மக்களுக்கும் இடையில் இருக்கும்
சட்டமன்ற உறுப்பினர்களா ? "என்றேன்

"அசிங்கத்தை விடு
வேறு சொல் " என்றான்

"நோயாளிக்கும் மருத்துவனுக்கும்
இடையில் இருக்கும்
கார்ப்பரேட் மருத்துவ முதலாளிகளா ? "

வாசகனுக்கும் படிப்பாளிக்கும்
இடையில் இருக்கும்
ஆசை கொண்ட பிரசுரகர்த்தாக்களா ?

மாணவனுக்கும் பேராசியருக்கும்
இடையில் இருக்கும்
படிப்பறியா கல்வித் தந்தைகளா ?

பக்தனுக்கும் கடவுளுக்கும்
இடையில் நிற்கும்
கபடப் போலிப் பூசாரிகளா ?

விவசாயிக்கும் நுகர்வோனுக்கும்
இடையிலிருக்கும்
பேராசை வியாபாரப் புள்ளிகளா ?

வாங்குபவனுக்கு விற்பவனுக்கும்
இடையில் இருக்கும்
பேராசைத் தரகர்களா ?

நன்கொடை தருபவனுக்கும் பெறுபவனுக்கும்
இடையில் இருக்கும்
போலிச் சமூக இயக்கங்களா ?

நான் சொல்லிக் கொண்டே போக
சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவன்
முடிவாக ..

"உலகைச் சுற்ற
முருகனைப் போல் ஏன்
மயிலில் ஏறுகிறாய்

அம்மைஅப்பனைச் சுற்றினால்
அது போதாதா ?" என்கிறான்

"இன்னும் குழப்புகிறாய்"
என்கிறேன் எரிச்சலுடன்

பின் அவனே

" உடலுக்கும் உயிருக்கும்
இடையிலிருக்கும்
பேராசை நோய்ப்பிடித்த
நம் அனைவரின் மனது "
என்றான்

Tuesday, February 21, 2017

வீரப்பன் சமாதியும்....

சில வருடங்களுக்கு முன்பு
சந்தனக்  கடத்தல் வீரப்பன்
சமாதி இருந்த ஊரின்
வழியாக வரும் சந்தர்ப்பம் நேர்ந்தது

அன்று சமாதியில் அதிகக் கூட்டமும்
மலர் மாலைகளும் நிறைந்திருந்தன

என்ன காரணம் எனக் கேட்டேன்

அது அவரது நினைவு நாளெனவும்
அந்த நாளில் அவரது குடும்பத்தவரும்
அவரால் பயனடந்த கிராமத்தவர்களும்
வந்து அஞ்சலி செலுத்திப் போவார்கள்
என்றார்கள்

"மந்திரிகள், மக்கள் பிரதிநிதிகள்,
உயர் அதிகாரிகள் யாரும் வந்து போவார்களா ?"
என்றேன்

அந்தக் கிராமத்தான் என்னை மிக
இகழ்ச்சியாகப் பார்த்தபடிச் சொன்னான்

"ஏன் சார் சட்டப்படி குற்றவாளி யென
தீர்மானிக்கப்பட்ட ஒருவரை அதிகாரிகளோ
மந்திரிகளோ வந்து அஞ்சலி செலுத்திப் போனால்
அவர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள்
என ஆகிப் போகாதா ?

சட்டத்தை மதிப்பேன்,அதன்படி நடப்பேன்
என உறுதி ஏற்றுப் பதவி ஏற்றவர்கள்
அதை மீறியவர்கள் என ஆகிப் போகாதா ?

அவர்கள் இவ்விடம் வந்து உன் வழியில்
நடப்பேன் என உறுதி ஏற்றால்
கேலிக் கூத்தாகிப் போகாதா ?
பதவி  பறிபோகாதா " என்றான்

அப்போது அவன் கூற்று அவ்வளவு
முக்கியமானதாகப் படவில்லை

இப்போது ஏனோ அதிக நேரம்
அது குறித்து யோசிக்க வைக்கிறது 

" மெயில் விடுத் தூது "

சிறுத்து
இனித்த இரவுகள்
நீண்டுக் கசக்கிறது

போர்வையாய்
கதகதத்த இருள்
மிரட்டிக் கனக்கிறது

தோழனாய்
அரவணைத்தத் தனிமை
நெருப்பாய் எரிக்கிறது

தாயாய்த்
தாலாட்டிய உறக்கம்
விழிகளைக் கிழிக்கிறது

மெழுகாய்
உருகி ஒளிர்ந்து
இருள் ஓட்டிய அற்புதமே

உடலுள்
உயிராய் நிறைந்து
உணர்வூட்டிய அதிசயமே

பிளவுகளாய்த்
தொடக்கத்தில்  தெரிந்த
சின்னச் சின்னப் பிரிவுகள்

இப்போது
பூகம்பமாய் வெடித்து
சிதறவைத்துப் போகிறது

என் சிந்தனையை
சிதிலமடையச்
செய்து போகிறது

பாமரனை
பாவலனாக உயர்த்தி
இரசித்தப் பைங்கிளியே

மீண்டும் நான்
பாமரனாவதற்குள்
உடன் வந்துச் சேர்

(  ஒரு காதலர்  பிரிவுக் கவிதையைப்
படிக்க  வந்த கோபத்தில்/ சோகத்தில்
பிறந்த கவிதை )

Sunday, February 19, 2017

122 இன் மனச்சாட்சி யும் மக்களின் எதிர்ச்சாட்சியும்

122 இன் மனச்சாட்சி : 

"நீங்கள் ஒருவகையில்
மாஃபியா கும்பலின்
அட்டகாசங்களை அழிக்க
முயன்றால்

நாங்கள் ஒருவகையில்
அதன் அட்டூழியங்களை
அழிக்க முயல்கிறோம்

குடிபோதையில் கையில்
ஆயுதங்களை வைத்து
மிரட்டுபவனை
அடக்க நினைத்தால்..

முதலில் எப்படியும்
அவன் கையில் உள்ள
ஆயுதத்தைக் கைப்பற்ற
முயற்சிக்கவேண்டும்

இல்லையேல்
அப்பாவி ஜனங்களுக்கு
நிச்சயம் ஆபத்துத்தான்

அந்த மாஃபியா கும்பலிடம்
உள்ள வலிய ஆயுதமே
பணபலமே

அதைக் குறைக்கவே
நாங்கள் உல்லாச உலகத்தில்
சில நாள் உலவினோம்

பேரத்திற்கு சம்மதித்தோம்

அரசு பறிக்க இருக்கிற
130 உடன்
எங்கள் வகையிலும்

 நிச்சயம் போகுமானால்

நிச்சயம் கொட்டம்
அடங்கத்தானே செய்யும்

அவர்கள் கொட்டத்தை அடக்க
உங்கள் வழி
தேர்தல் என்றால்
எங்கள் வழி
தேர்தலைச் சந்திக்கத்
திராணியற்றுப் போகவைப்பதே
எங்களைப் புரிந்து கொள்ளுங்கள்

நாங்களும் பாதிக்கப்படாது
உங்களுக்கென
செலவழித்த காசைத் தேற்ற
இது ஒன்றே சுருக்கு வழி  

நம் இருவருக்கும்
வழிதான் வேறு வேறு
இலக்கு ஒன்றுதான்

இலக்கில் கூடிய விரைவில்
சந்திப்போம்

வாழ்த்துக்களுடன்  ...."

மக்களின் எதிர்ச்சாட்சி :

"சோரம் போனவர்கள் எல்லாம்
அதற்கு ஒரு
மிகச் சரியான காரணம் வைத்திருப்பார்கள்
உங்களதும் அந்த வகையே

மகா எரிச்சலுடன்... 

Saturday, February 18, 2017

முதல் குற்றவாளி சமாதி ஆகிப்போக .....

முதல் குற்றவாளி
சமாதி  ஆகிப்போக

இரண்டாம் குற்றவாளி
மற்றும்
மூன்றாம் நான்காம்
குற்றவாளிகள்
சிறைக்கைதிகளாக

அவர்களையே

ஆசிர்வதிப்பவர்களாக
வழிகாட்டிகளாக
காட்டிக் கொள்பவர்கள்
எவ்வித குற்ற உணர்வுமற்று
ஆள்பவர்களாக

அவர்களை
கண்மூடித்தனாமாய்
ஆதரிப்பதே கடமையெனக்
கொண்டவர்களே
மக்கள் பிரதிநிதிகளாக

தன் முட்டையை
விழுங்கும்
நாகம் கண்டும்
கையறு நிலையில்
கதறித் திரியும்
காகங்களாய்
பொது ஜனங்களாக

மல மேட்டிலமர்ந்து
அறுசுவை உணவருந்தும்
நிலை வந்தததுபோல்
இங்கு வாழநேர்ந்ததுக் குறித்து
மனம் வெறுத்துப்  போக

சாக்கடையை
அரசியலுடன் ஒப்பிடுவது கூட
சாக்கடையை இழிவுபடுத்தும் ஒப்பீடு
என்பது நிதர்சனமாகிப் போக

தர்மம் தன்னை
சூது கவ்வும்
பின் மெல்ல மெல்ல
கடித்து விழுங்கும் என்னும்
புது மொழி  இங்கு நிஜமாகிப் போக..

தமிழகம் மட்டுமே
இப்போது
தலைகவிழ்ந்த நிலையில்.....

என்ன செய்யப் போகிறோம் ?

"மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ ? "....

கூவத்தூர் ரிசார்ட்டை
சீரமைப்பதற்காக
மூன்று நாள்தான் மூடி இருக்கிறார்கள்

தவறுக்கு பிராயச்சித்தமாக
ஹோமங்கள் செய்து
மீண்டும் கூட
அதைத் திறக்கச் சாத்தியம் உண்டு

மக்கள்
தங்கள் மனக்கதவை
உங்களுக்கு எதிராக
நிரந்தரமாக மூடிவைத்துவிட்டார்களே

என்ன செய்யப் போகிறீர்கள் ?

"மக்கள் தீர்ப்புக்கு
எதிராக அரசாளவோ ? "
என்கிற புரட்சித்தலைவரின்
பாடல் அடிக்கடி
நினைவில் வந்து
எங்களுக்கு நம்பிக்கை தந்து போகிறது

அதே பாடல்
உங்கள் அடிவயிற்றைக்
கலக்கிப் போகும் என்பதில் எங்களுக்குத்
துளியும் சந்தேகமில்லை

பார்ப்போம்....

Friday, February 17, 2017

இனியேனும் வாக்களிக்கையில் விழித்திருக்க முயலுங்கள்...

இதற்கு மேல்
நிச்சயம் எங்களுக்கு
உயர்வில்லை
உயர்வதற்கான தகுதியும்
எங்களுக்கில்லை

இதை நழுவ விட்டால்
மீண்டும் இதுகிடைக்க
நிச்சயம் வாய்ப்புமில்லை

செலவழித்ததை இனி
இருந்து சம்பாதிப்பதும்
அதற்குத் தோதாய்
பதவி பறிபோகாது
காத்துக் கொள்வதற்கும்

கூடுதலாய்க் கிடைக்கிற
பரிசுகளை
உல்லாசங்களை
விடாது அனுபவிப்பதற்கு
என்ன செய்ய வேண்டும் என்பதே
எங்களின் இன்றைய நிலைப்பாடு

எங்களிடத்தில் துளியும்
குழப்பமில்லை

உங்களைச் சந்தித்து
கெஞ்சிக் கூத்தாடி
மீண்டும் வெற்றி கொள்ளும்
எண்ணம் ஏதும் எங்களுக்கில்லை

அதற்கான வாய்ப்பும் இல்லை என்பது
எங்களுக்கு மிகத் தெளிவாய்த் தெரியும்

காரணம்
கொள்கைக் கோட்பாடு
கச்சடாக்கள் எல்லாம்
எங்களிடத்து அறவே இல்லை

எங்களைப் பொருத்தவரை
அது தேவையுமில்லை

துண்டுக்காக
வேட்டியை இழப்பது
அப்படியொன்றும்
கேவலமான விஷயமாக
எங்களுக்குத் தோன்றியதே இல்லை

நாங்கள் உங்களை மிகச் சரியாப்
புரிந்து கொண்டுள்ளோம்

நீங்கள்தான் எங்களை மிகச் சரியாய்ப்
புரிந்து கொள்ளாது அவதிப்படுகிறீர்கள்

நாங்கள் சுதந்திரமாய்
இல்லையென்றாலு கூட
உல்லாசமாகச் சந்தோஷமாகத்தான் உள்ளோம்

நீங்கள் சுதந்திரமாய்
இருந்தாலும் கூட
வேதனையில்தான் வெந்து கொண்டிருக்கிறீர்கள்

இதற்குமேல் எப்படி
மனம் திறப்பது ?

இப்போது நொந்து விழித்திருந்துப் பயனில்லை

இனியேனும்
வாக்களிக்கையில் விழித்திருக்க முயலுங்கள்

Thursday, February 16, 2017

தமிழினத்தின் நிஜமான திருநாள்

சிலரோட ஆசைக்கு
பலபேரின் தேவைகளைப்
பலிவாங்கும் நாடாகிப் போச்சே--நாடே
பலிபீடம் போலாகிப் போச்சே

சிலகோடிக் காசுக்கு
பலகோடி பொதுஜனத்தின்
நிலைமறந்தோர் வசமாகிப் போச்சே-அரசியல்
கூவத்தினும் மோசமாகிப் போச்சே

சபதமதும் தியானமதும்
நல்லோர்க்கு என்றிருந்த
வழக்கொழிந்து நாசமாகிப் போச்சே-தீயோர்
கைத்தடியாய் அதுவுமாகிப் போச்சே

பணபலமும் அராஜகமும்
இரதமேறிப் பவனிவர
இனமானம் குப்பையென ஆச்சே-எல்லாம்
பழங்கதையாய் வெறும்கனவாய்ப் போச்சே

ஆடுவோர்கள் ஆட்டமெல்லாம்
அடங்கிவிடும் நிச்சயமாய்
மாறுபாடு இல்லையிதில் தம்பி--நீ
மனதிலிதை பதித்திடுவாய் நம்பி

புலம்பலதை  மனக்கசப்பை
புயலாக நெருப்பாக
சிதறாது  மாற்றிடுவோம்  ஒருநாள்---அதுதான்
தமிழினத்தின் நிஜமான திருநாள்

மீட்பின்றி சபிக்கப்பட்ட" பொது ஜனங்களாய் "


ஊழல் பெருச்சாளிகளுக்கும்
உதவாக்கரை தலைவர்களுக்கு மிடையில்
ஈட்டி ஏந்திய கோழைகளாய்
வெறும் வாக்காளிக்கும் எந்திரங்களாய்

புரட்டு மதவாதிகளுக்கும்
முரட்டு பகுத்தறிவாளருக்கு மிடையில்
சுழலில் மாட்டிய படகுகளாய்
இரு தலைக் கொல்லி எறும்புகளாய்....

திமிங்கல  நிறுவனங்களுக்கும்
உள்நாட்டு  முதலைகளுக்கு மிடையில்
தீயில் உருகும் மெழுகாய்
ஏழ்மையில் கரையும் உயிரினங்களாய்.

சிகரத்தைப் பார்த்து ஏங்கியபடி
பாதாளம் பார்த்துப் பயந்தபடி
சரிவினில் தொங்கிடும் ஜந்துக்களாய்
பரிதவித்தே சாகும்  விலங்கினங்களாய்..

பல்லாண்டு அலைந்து திரிகிறோம்
நல்லதொரு மேய்ப்பனைத் தேடி
தீராத பாவப்பட்ட ஜென்மங்களாய்
மீட்பின்றி சபிக்கப்பட்ட" பொது ஜனங்களாய்  "

Wednesday, February 15, 2017

இன்றைய அரசியல் சூழல்.. ஒரு யதார்த்தப் பார்வை

அ.இ.அ.தி.மு. க வைச் சேர்ந்த பெரும்பாலான
சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து
மன்னார்குடி குடும்ப அதிக்கம் உள்ள பக்கம்
நீடிப்பது அவர்கள் அறியாமல் செய்கிற
தவறு இல்லை

அது அவர்கள் அறிந்தே செய்வதுதான்

அவர்களைப் பொருத்த வரையில் அவர்கள்
அதிக பட்சம் அறிந்தது சசிகலா அம்மா அவர்களைத்தான்.
அவர்கள் தேர்தலில் சீட்டுபெற்றதும், தொடர்ந்து
தொடர்பில் இருந்ததும் சசிகலா அம்மாவுடன் தான்

ஏனெனில் அவர்களுக்கான எந்தத் தகவலும்
உத்தரவும் சசிகலா அவர்கள் மூலம்தான்
பெரிய அம்மா சொன்னதாகப் பெறப்பட்டிருக்க
வாய்ப்பு இருந்திருக்கிறதே அன்றி
இவர்கள் நேரடியாக கருத்தைச் சொல்லவோ
அல்லது கருத்தைப் பெறவோ வாய்ப்பு
நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை

அவர்களுகெல்லாம் நிச்சயம் தெரியும்
இனி இரட்டை இலை சின்னத்தில் நிற்கும்
வாய்ப்பு கிடைத்தாலும்  தேர்தலில்
வெல்லும் வாய்ப்பு நிச்சயம் இல்லை

இருக்கிற பதவியைத் தக்க வைத்துக் கொண்டு
திரிசங்குச் சொர்க்கம்போல
மீதம் இருக்கிற காலத்தை ஓட்டுவதைத் தவிர
அவர்களுக்கு வேறு வழி இல்லை

நம்மைப் பொ ருத்தவரை ...

கட்சித் தலைமை மட்டுமல்லாது வேட்பாளரின்
தகுதி அறிந்தும் வாக்களிக்க வேண்டிய
அவசியத்தை நிச்சயமாக இந்தச் சூழல்
மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறது

கொள்ளை யடிக்கப்பட்ட பணம் இனி
இயல்பாய் வெளி வர வாய்ப்பு இல்லாததால்
தேர்தல் வருமாயின் கூடுமானவரையில்
இப்போதை விட கொஞ்சம் மேம்பட்ட
சட்டமன்ற உறுப்பினர்கள் வென்று வரவும்
வாய்ப்பும் இருக்கிறது

கண்ணுக்குத் தெரிந்த பெரிய விஷ மரத்தை
நீதி வீழ்த்திவிட்டது

கட்சிக்குள் பரவி உள்ள அதன் ஆணி வேர்கள்
விஷ மரத்தை மீண்டும் துளிர்க்க விடாதுச்
செய்ய வேண்டிய பொறுப்பு...

உண்மையான அண்ணா தி.மு.க தொண்டர்களுக்கு
மட்டுமல்ல

எதிர்கட்சிக்கும் இருக்கிறது

என்ன செய்யப்போகிறார்கள்

பொருத்திருந்து பார்ப்போம்

Tuesday, February 14, 2017

ஊழல் பிறவிகளின் "கைத்தடிகளை " அரியணையில் வைத்து...

தெய்வப் பிறவிகளின்
"பாதுகைகளை "
அரியணையில் வைத்து
ஆட்சிபுரிந்த வரலாறுகள்
நம்மிடையே உண்டு

ஊழல் பிறவிகளின்
"கைத்தடிகளை "
அரியணையில் வைத்து
ஆட்சிப்புரிந்த வரலாறுகள்
நம்மிடை இருந்ததில்லை

விஷம்
நெருப்பு
பகை
இவைமட்டுமல்ல

ஊழலின் எச்சங்களையும்
மிச்சம் வைத்தால்
தொடரவைத்தால்
நிச்சயம் மீண்டும்
தன் குணம் காட்டவே செய்யும்

கட்சியைக் கூட
சகித்துத் தொலைக்கலாம்
குடும்ப ஆக்கிரமிப்பை  ?
.......................................

இனியேனும்
 மக்கள் பிரதி நிதிகள்
மக்களின் எண்ணங்களை
பிரதிபலித்தலே
நாட்டுக்கு மட்டுமல்ல
அவர்களுக்கும் நல்லது

பார்ப்போம் ...

Monday, February 13, 2017

தர்மம் தன்னை சூது கவ்வும்.....

தர்மம் தன்னை
சூது கவ்வும்
ஆயினும்
இறுதியில் தர்மமே வெல்லும்

என்பதனை

தர்மம் தன்னை
சூது கவ்வும்
இருபது ஆண்டுகள் ஆயினும்
இறுதியில்
தர்மமே வெல்லும்

என இனிச் சொல்லலாம்

நீதியின் மீதும்
சட்டத்தின் மீதும்
நாம் இழந்து கொண்டிருந்த நம்பிக்கையை
மீட்டுக் கொடுத்த
நீதிபதிகளுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றியும்
நல்வாழ்த்துக்களும்

காதல் என்றால் இதுதானா ?

அவர்கள் காதலிக்கத் துவங்கியதிலிருந்து

அவனைப்பற்றி அவன் நினைப்பதை
அடியோடு மறந்துத்  தொலைந்தான்
எப்போதும் அவள்  குறித்த
 நினைவிலேயே  அலைந்து திரிந்தான்

அவளும் அவளைப்பற்றி
நினைப்பதை  அடியோடு விடுத்து
அவனைக் குறித்த சிந்தனையிலேயே
 நாளையும் பொழுதையும்  கழித்தாள்


அவளுடைய தேவைகள் குறித்தே
அவன் அதிக கவனம் கொண்டான்
அவனது  தேவைகளை மறந்தே போனான்

அவளும் அதுபோன்றே
அவனது தேவைகளையே
 நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்

அவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து

அவன் அவனுக்காக வாழுதலை
அடியோடு விட்டொழித்து
அவளுக்காகவே வாழத் துவங்கினான்

அவளும் தனக்காக வாழுதலை விடுத்து
அவனுக்காகவே வாழத் துவங்கினாள்

அவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து

அவன் அவளைக் காணும் போதெல்லாம்
இமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தான்

அவளும் அவனைக் காணும் போதெல்லாம்
ஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தாள்

இந்த அதிசய மாறுதலுக்கு காரணம் புரியாது
நான் குழம்பிக்கிடந்த  வேளையில்
காதலித்துக் கொண்டிருந்த நண்பன்
 இப்படிச் சொன்னான்

"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்
இடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது

 தானிருந்த உடலை அதிசயித்து
அசையாது பார்த்துக் கொள்ளுவதும்
மீண்டும் அதற்குள் குடியேற முயன்று
காலமெல்லாம் தோற்கிற துயரமும்
 அது காதலர்களுக்கு மட்டுமே புரியும்
தேவ ரகஸியம்

அவரவர் உயிர்களை
அவர்களிடமே வைத்திருப்போருக்கு
நிச்சயம  இது புரியச சாத்தியமில்லை "என்றான்

நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்

( அனைவருக்கும் இனிய காதலர் தின
நாள் வாழ்த்துக்கள்
.குறிப்பாக
காதலைப் புரிந்து காதலிப்பவர்களுக்கு )


Sunday, February 12, 2017

மவுத் டாக்கும் சசி மேடமும்

சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் தெரியும்
முன்பெல்லாம் ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனவுடன்
அதன் வெற்றித் தோல்விக் குறித்து அறிய...

எம்ஆர்.டி.கே எனச் சினிமா  டிஸ்ரிபூஷன் துறையில்
சுருக்கமாக அழைக்கப்படும் மதுரை ராமனாதபுரம்
திருநெல்வேலி, மதுரை ரிஸல்டை அதிகம்
எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் இங்கு ஏ,சென்டர்
பி.சென்டர் மற்றும் சி சென்டரின் கலவை
மிகச் சரியாக இருக்கும்.இங்கு மதிப்பிடப்படும்
மதிப்பீடு கூடுமானவரையில்
மிகச் சரியாகவே இருக்கும்

ஏனெனில் இங்குள்ளவர்கள் எதையும்
நாகரீகம் என்னும் போர்வையில்
மௌனமாக இரசிக்காது சப்தம் போட்டே
இரசிப்பார்கள்.அதற்காகவே தமிழ்பட முன்னணி
இயக்குநர்களும்,குறைந்த கட்டணத்தில் உள்ள
இருக்கையில் அடையாளம் தெரியாமல் அமர்ந்து
பார்க்க வந்த செய்தியெல்லாம் முன்பு
அடிக்கடி பத்திரிக்கையில் வரும்

படம் மட்டும் அல்ல.அரசியல் நிகழ்வுகள் கூட
இங்கு கணிக்கப்படுகிற கணிப்பு
கூடுமானவரையில் மிகச் சரியாகவே இருக்கும்

நானும் கூடுமானவரையில் சில சமூக
இயக்கங்களில் சங்கங்களில் சம்பந்தப்பட்டதால்
பல்வேறு நிலைகளில் உள்ள மக்களை
அன்றாடம் சந்திக்கவேண்டிய சூழலில்
எப்போதும் இருப்பேன்

அன்று முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள்
உடல் நிலை சௌகரியம் இன்றி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல்
இறுதி வரை யாருமே பார்க்க அனுமதிக்கப்படாமல்
இர்கசியம் காத்தது தொடங்கி,

இராஜி ஹாலில் மொத்தக் குடும்பமும்
முதல்வர் மற்றும் முன்னணி அரசியல்
வாதிகளை எல்லாம் பின் தள்ளி
தேவுடு காத்தது ,

இறுதிச் சடங்கின் போது அவரது
அண்ணன் பையனையே பின் வரச் செய்து
தானே முன்னால் மதச் சடங்குகள் செய்து
அனைவரையும் அதிர்ச்சி கொள்ளச் செய்தது

சுடுகாட்டு மண் ஈரம் காயும் முன்
பொதுச் செயலாளர் பதவிக்கு
முயன்று காய் நகர்த்தியது,

முதல்வருக்கு எதிராக அமைச்சர்களை
தன்னை முதல்வர் பதவிக்கு முன் நிலைப்படுத்திப்
பேசவைத்தது

அடுத்து நடந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 
கட்சிக்கூ ட்டத்தில்முதல்வரை ஒரு ஓரம் வைத்து
அவமானப்படுத்தியது,

தீர்ப்பு மிகச் சில நாளில் வருவது வரைக் கூடப்
பொறுக்காது முதல்வரை ராஜினாமா
செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியது

இப்போது சட்டமன்ற உறுப்பினர்களிடம்
பேசுகையில் கொஞ்சம் கூடுதல் வன்முறைத்
தொனித் தெரியும்படிப் பேசியது

இவையெல்லாம் தொடர்ந்து திருமதி
சசிகலா அவர்கள் மீது அனைவருக்கும்
தைரியமானவர் என்பதை விட
திமிர் பிடித்தவர் எனத்தான் எண்ண வைத்துப்
போனதைத் தவிர, தைரியமானவர் என்கிற
பிம்பத்தை உருவாக்கப் பயன்படவில்லை

இதே போன்று ஒரு நிலையை
ஜே ஜெ அவர்கள் செய்திருந்தால் அவர்களை
மிகத் துணிச்சல்காரர் என்கிற பிம்பத்தைக்
கூட்டுக் காட்டி இருக்கும்

காரணம் அவர் மிகப் பெரும் சோதனைகளை
மக்கள் மற்று தொண்டர்களிடம் இருந்த
செல்வாக்கின் காரணமாக
அந்த ஆணவம் பிடித்தவர் என்கிற பிம்பத்தை
உடைத்து துணிச்சல் மிக்கவர் என்கிற
பிம்பத்தை உண்டாக்கி இருந்தார்

என்வே அவர் எதைச் செய்தாலும் அது
அவர் அவர் குறித்து உண்டாக்கி வைத்திருந்த
பிம்பத்தைக் கூட்டிக் காட்டுவதாக் இருந்தது

மாறாக சசிகலா அம்மையாரைப் பொருத்தவரை
மிகச் சரியாகச் சொன்னால் ஜேஜே அவர்களின்
அரசியல் சரிவுக்கு எல்லாம் சசிகலா அவர்களும்
அவர்களது குடும்பத்தார் அனைவரும்தான்
காரணம் என்கிற அசைக்கமுடியாத கருத்து
அனைத்துத் தரப்பு மக்களிடம் இருக்கிற காரணத்தால்

இவர் செய்கிற துணிச்சசலான நடவடிக்கை எல்லாம்
அவர் அவர் குறித்து உண்டாக்கி வைத்திருக்கிற
சூனியக்காரி என்கிற பிம்பத்திற்குத் தான்
வலுசேர்த்துப்போகிறது

இனித் திரும்பமுடியாத அளவு தவறானபாதையில்
வெகு தூரம் வந்து விட்டதால்
இனி சரிவை மட்டுமே சசிகலா அவர்கள்
சந்திக்க நேரிடும் என்பதே நான் சந்தித்த
அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருக்கிற
திட்டவட்டமான அபிப்பிராயம்

இந்த நிலையில் ஆளுநரின் முடிவு எப்படி
இருக்கும் அல்லது எப்படி இருந்தால் அது
மக்களின் மன நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும் ?

சக்திவாய்ந்த புரட்சித் தலைவியின்
இயக்கம் இந்த நிகழ்வுகளுக்குப் பின்
என்னவாகும் ?

(சசி  மேடம்  உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்

நீங்கள்  உயிரைக்  கொடுத்தெல்லாம்  கட்சியை
காப்பாற்ற வேண்டாம் . நீங்களும் உங்கள்
குடும்பமும்  ஒதுங்கினாலே  கட்சி
நிச்சயம் உச்சம் தொடும் )

மக்கள் கருத்தின் அடிப்படையில் அது அடுத்தப்
பதிவாகத் தொடரும்

Saturday, February 11, 2017

பன்னீரா...கழிவு நீரா

வழக்கம்போல்
குழம்பி இருக்கிற குட்டையை
மீன் பிடிக்கத் தெரியாதவர்கள்தான்
மீன் பிடிக்க முடியாதவர்கள்தான்
அதிகம்  குழப்புகிறார்கள்

பந்திக்கே அழைக்கப்படாதவர்கள்தான்
இலைப்பீத்தல் என்று
அதிகம் அங்களாய்க்கிறார்கள்

நாம் தெளிவாய் இருப்போம்

இன்றைய நிலையில்
பூதாகாரமான
கேள்விக்கான பதில்
இரண்டில் ஒன்றுதானே ஒழிய

இரண்டும் அல்லது
இரண்டுமல்ல
என்பதல்ல

இரண்டில்
நிச்சயம் வேண்டாதது எது
சகித்துத் தொலைக்கவேண்டியது
என்பதுதானே ஒழிய

இரண்டையும்
ஒழிப்பதல்ல
இரண்டையும் ஆதரிப்பதுமில்லை

மூன்றாவது
இரண்டில் ஒன்றை
சில காலம் ஆதரிப்பதன் மூலம்

முதலாவதாக
நிச்சயம் வாய்ப்புண்டு

அதற்கும் தேவை
பொறுமையும்
அரசியல் சாதுர்யமுமே

பார்ப்போம் .....

Friday, February 10, 2017

திருமதி சசியும் பிரேக் இல்லா வண்டியும்

" பிரேக் " பிடிக்காத வண்டியில்
வீடு போகும் சூழ் நிலை நேரின்
மெதுவாகச் செல்லுதலே
புத்திசாலித்தனம்

மாறாக
விபத்து நேரும் முன்
வீடு செல்லவேண்டும் என
விரைந்து ஓட்டுபவன்
நிச்சயம்
வடிகட்டிய முட்டாளே

தீர்ப்பு
வெளியாக இருக்கிற சூழலில்
அதை எதிர்பார்த்துப்
பொறுத்திருத்தலே
புத்திசாலித்தனம்

மாறாக
தீர்ப்பு வரும் முன்
பதவியை அடைந்துவிடவேண்டும்
என வெறி கொள்பவரும்
நிச்சயம்
வடிகட்டிய முட்டாளே

முன்னதில்
விபத்து நேரவே
அதிக வாய்ப்பு

பின்னதில்
வெறுப்புக் கூடவே
அதிக வாய்ப்பு

போதனைகள்
போதை கொண்டவர்களிடம்
செல்லுபடியாவதில்லை
அனைவரும் அறிந்ததுதான்

இருப்பினும்
பதிவின் மூலம்
" நீர்த் " தெளித்து வைப்போம்

தெளிந்தால்
தெளியட்டும்

இல்லையேல்

இருப்பதையும் இழந்து
அடியோடு
ஒழிந்தால்
ஒழியட்டும்

பணிவிற்கு இலக்கணமாய் இருந்த ஓ.பி.எஸ் அவர்களை.....,

இன்று தமிழகம் காணும் அனைத்து
அவலங்களுக்கும் அசிங்கங்களுக்கும்
அனைத்து நிலைகளில் உள்ளவர்களிடமும்
பொறுப்பின்மையும் பொறுமை இன்மையும்
நிறைந்திருப்பதே முழுமையான காரணம்

பந்தியில் பரிமாறிக்கொண்டிருக்கும் போதே
அள்ளித் தின்னத் துவங்கும் பாமரனுக்கும்
காரியம் கைகூடிவரும் வேளை வரும்வரை
பொறுத்துக் கொள்ள முடியாத
தன்மையுடையவர்களுக்கும்
நிச்சயம் அதிக வித்தியாசமில்லை

தனித் தலைமைத் திறமும்,அசாத்தியத்
துணிச்சலும்,மக்கள் செல்வாக்குப் பலமும்
கொண்டிருந்த தலைவியை ஒரு இயக்கம்
இழக்கையில், ஒரு தடுமாற்றம்,சிறு தத்தளிப்பு
நேருதல் என்பது இயற்கையே

அதுவும் மிகச் சாதுர்யமாய்,அனைவரும்
ஏற்றுக் கொள்ளும்படியாக அடுத்த நிலைத்
தலைவர்கள் உருவாகிவிடக் கூடாது என
கங்கணங்கட்டிக் கொண்டு அரசியல் நிகழ்வுகளைக்
கையாண்ட ஒரு இயக்கத்தில்
நிச்சயம் இது கூடுதல் சாத்தியமே

புரட்சித் தலவருக்குப் பின்
புரட்சித் தலைவரைப் போல் வெகு ஜனமக்களின்
பேராதரவைப் பெற்றவர்கள் அ.இ.அ.தி.க வில்
இல்லை.இப்போது பொறுப்பில் இருப்பவர்கள்
எல்லாம் ( மந்திரிகள் என்பதால்
தமிழகம் முழுமைக்கும் )
அந்த அந்த மாவட்ட அளவில்
அறியப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்

மாறாக இருமுறை முதல்வராக இருந்ததால்
மரியாதைக்குரிய ஓ.பி.ஸ் அவர்கள் மட்டும்
கட்சிக் கடந்து மாநிலம் முழுமைக்கும்
அறியப்பட்டவராக இருக்கிறார்.

(அறியப்பட்டவராகத்தான்.செல்வாக்கு உடையவராக
இல்லை என்பதுவும் உண்மை )

அதனால்தான்
அவர் மீண்டும் முதல்வராக முன்மொழியப்பட்டது
உறுத்தல் இல்லாத விஷயமாகப்பட்டது

அதனால்தான் எடப்பாடி அவர்களின் பெயர்
முதல்வர் பதவிக்கென முன்மொழியப்படுவதாக
தகவல் வர அது பொது ஜனங்களுக்கு அத்தனை
விருப்பமான விஷயமாகப்படவில்லை

அதைப் போலவே கட்சியின்
பொதுச் செயலாளராக திருமதி சசிகலா அவர்கள்
பதவி ஏற்றுக் கொள்ளுகையில்.
புரட்சித் தலைவியின் அரசியல் வாழ்வில் ,சரிவும்
களங்கமும், திருமதி சசிகலா அவர்களாலும்
அவர்களது குடும்பத்தாரினாலும்தான் ஏற்பட்டது
என்கிற எண்ணம் திண்ணமாக அனைவரிடத்தும்
இருந்ததால்,கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள்
மற்றும் பொது ஜனங்கள் எல்லாம் அதை ஒரு
கசப்பான விஷயமாகவே கருதினார்கள்

ஆயினும் அது கட்சி சம்பந்தப்பட்ட விஷயம்
என்கிற அளவில் விருப்பமில்லை என்றாலும்
பல்லைக் கடித்தபடி விழுங்கியும் தொலைத்தார்கள்

நிச்சயம் இந்த கசந்த உணவு
செரிக்கும்வரையாவது  கொஞ்சம் பொறுமையைக்
கையாண்டிருந்தால் நிச்சயம் இத்தனை
அவலங்கள் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை

மாறாக முதல்வராக பொறுப்பேற்ற மதிப்பிற்குரிய
ஓ.பி.எஸ் அவர்கள் அவரது முதல்வர் பொறுப்பில்
ஏற்பட்ட அசாதாரணமான சூழலை பொறுமையாய்
பொறுப்பாய் சமாளித்த விதம்...

அறியப்பட்டவராய் மட்டுமே இருந்தவர்
மதிக்கத் தக்கவராய், தன்னிகரற்ற தலைவராய்
மாறிவிடுவாரோ என ஏற்பட்ட அச்சமே

அவரை அசிங்கப்படுத்தும் விதமாக,அலட்சியப்
படுத்தி அவ்மானப்படுத்தும் விதமானச் செயல்களைச்
செய்யும்படியான  பிறழ்மன நிலையை திருமதி.
சசிகலா அவர்களுக்கு உண்டாக்கிவிட்டது

அந்த முதிர்ச்சியற்ற, தலைமைப்பண்பற்ற
அடாவடிச் செயல்களே

தன் பதவியின் மதிப்பு மறந்து காலில்விழுந்து
ஆசிப்பெற்ற பணிவிற்கு  இலக்கணமாய் இருந்த
ஓ.பி.எஸ் அவர்களை,தலை நிமிரச் செய்திருக்கிறது
சரி நிகராய் சமர் செய்யவும் செய்திருக்கிறது
என்றால் அது மிகை இல்லை

இது எப்படி முடியும் ? அல்லது
முடிய வேண்டும்

(அடுத்த பதிவில் )

Thursday, February 9, 2017

முக்கியம்விஷயம் மட்டும் இல்லை அதைக் கொடுக்கும் விதமும்...

தொலைக்காட்சியில் விவாத மேடையில்
பேசுபவர்கள் எல்லாம் பேசுகிற பொருள் குறித்து
அந்தப் பொருள் குறித்து
அவர்கள் சார்ந்திருக்கிற இயக்கங்களின்
கொண்டிருக்கிற கருத்துக் குறித்தெல்லாம்
தெளிவாகப் பேசுகிறார்கள்

ஆனால் விவாதிப்பது எப்படி என்று
மட்டும் தெரியாமல் பேசுவது
பார்க்கவும் கேட்கவும் எரிச்சலூட்டுகிறது

முதலில் இதுபோல் நிகழ்ச்சிக்கு
அழைப்பவர்களை பிரபலமானவர்களா
எனப் பார்க்காமல்,விவாதித்தல் குறித்த
அடிப்படை அறிவுள்ளவர்களா எனப்
பார்த்து தேர்ந்தெடுத்தல் நல்லது

தெருவோரக்கடைக்கும்,
ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கும் உள்ள
வித்தியாசம் ருசி, என்பது மட்டும் இல்லை
அதை விட உணவைக் கொடுக்கும்
விதமும்  மிக மிக முக்கியம் இல்லையா ?

அன்னியர்கள் பிரவேசிக்கக் கூடாது
அல்லது அனுமதிப் பெற்று வரவும்
என எழுதப்பட்ட சமையலறையுள்
எட்டிப்பார்த்தோம் எனில்....

அந்தச் சூழலையும் வேர்வையில்
குளித்து வெற்று உடம்புடன் இருக்கும்
சரக்குமாஸ்டரையும் தோசை துடைப்பத்தையும்
பார்த்தோமெனில், நிச்சயம் நெய்ரோஸ்ட்
கசக்கவே செய்யும்.. முக்கியம்

மாறாக டிப்டாப்பாக உடையணிந்து
மிகப் பவய்மாய் பறிமாறும் சர்வரை
தோசை ஊற்றச் சொல்வோமெனில்
நிச்சயம் நெய்ரோஸ்ட் வாயில் வைக்க
விளங்காதுதானே ?

அதைப்போலத்தான் இதுவும்....

நமக்குத் தேவை
விஷயம்  மட்டும்  இல்லை
அதைக் கொடுக்கும் விதமும்...முக்கியம்

நிகழ்ச்சி ஏற்பாடு செய்வோர் இனியேனும்
கவனம் கொள்வார்களா ?

Wednesday, February 8, 2017

எதிரில் இருப்போனிடம் சிறப்புக்கள் இருப்பினும் முறைத்தே நகரவும்....

முதல்வரே நீர்
எதிர்கட்சித் தலைவரைப் பார்த்து
முறைத்திருக்கலாம்
முகம் சுழித்திருக்கலாம்
அல்லது
முடியுமானால்
பல்லை நற நறவெனக்
கடித்திருக்கலாம்

மாறாக

இப்படிச் சிரித்துத் தொலைத்து
நம் பண்பாடு மறந்தீரே
நம் கலாச்சாரம் மறந்தீரே

அதனால்
பதவியையும்
இழக்க இருக்கிறீர்களே

தன் மனைவியைக்
கவர்ந்து சென்றவன் ஆயினும்
ஆயுதங்களை இழந்து நிற்கையில்
இன்று போய் நாளை வா
எனச் சொன்னவர்
நம்மவரில்லை

இறுதி அஞ்சலிக்கு
முதல்வரும்
எதிர்கட்சிக்காரரும்
சேர்ந்து வரும் அநாகரீகம் ( ? )
நிச்சயம் பண்பாட்டுச் சூழலுக்கு
உகந்ததே இல்லை

இதனை மறந்து
எதிராக இருப்பதால்
எதிரி இல்லை என நினைத்துச்
சிரித்துத் தொலைத்தீரே
முதல்வரே
அதனால்
பதவியையும்
இழந்துத் தொலைத்தீரே

இனியேனும்...............
உடன் இருப்போன்
துரோகியாயினும்
சிரித்து வைக்கவும்

எதிரில் இருப்போனிடம்
சிறப்புக்கள்  இருப்பினும்
முறைத்தே   நகரவும்

அதன் மூலம்
நம் பண்பாடும்
தொடர்ந்து
நிலைக்கவும்  செழிக்கவும் ( ? ) ......

Tuesday, February 7, 2017

பன்னீரும் வெந்நீர் ஆனது...

மக்களின் எண்ணங்களை
அவர்தம் உணர்வுகளை
எது எதற்கோ சோரம்போய்

அரிதில் கடத்திகளாகச்
செய்தித் தாள்களும்
ஊடகங்களும் ஆகிப்போனதால்தான்

முக நூல் சுவர்களும்
வாட்ஸப்  திண்ணைகளும்
பதிவர் மேடைகளும்

உண்மைக் கடத்திகளாக
எளிதில் கடத்திகளாக
ஆகிப் போனதால்தான்

இளைஞர்களின்
எழுச்சியும் சாத்தியமானது

மெரினாவும்
மக்கள் சதுக்கமானது

ஜல்லிக்கட்டும்
சாத்தியமானது

அதன் தொடர்ச்சியாய்
இன்று பன்னீரும் வெந்நீர் ஆனது

இனிப் படிப்படியாய்
கபட வேடதாரிகளின்
வேஷம் நிச்சயம் கலையும்

இனிப் படிப்படியாய்

"போலித் தலைமைகளின் "
தான்தோன்றித்தனங்களும்
நிச்சயம் மண்ணைக் கவ்வும்

அதற்காகவேணும்

நாட்டு நடப்பினில் கூடுதல்
கவனம் கொள்வோம் வாரீர்

மனதில் பட்டதை நேர்மையாய்த்
தொடர்ந்து எழுதுவோம் வாரீர் 

Sunday, February 5, 2017

எழுதிக் கொண்டே இருப்போம்

எழுதிக் கொண்டே இருப்போம்--நாம்
எழுதிக் கொண்டே இருப்போம்

வலிமை கொண்டு அதர்மம்-இங்கு
எளிதாய் வெல்லும் சூழல்
அழிவு காணும் வரையில்--முழுதாய்
அடங்கி ஒடுங்கும் வகையில்      (எழுதிக் )

எளிமை தூய்மை  எல்லாம் _இங்கு
ஏற்றம் கொள்ளும் சூழல்
நிலையாய் ஆகும் வரையில்-என்றும்
நிலைத்து வாழும் வகையில்     (எழுதிக் )

பொய்மைப் போலி எல்லாம்--இங்குத்
தலைமை ஏற்கும் சூழல்
நைந்து போகும் வரையில்-முழுதாய்த்
தொலைந்துச் சாகும் வகையில்   (எழுதிக் )

உண்மை நேர்மை எல்லாம்--இயல்பாய்
ஏற்றம் கொள்ளும் சூழல்
திண்மை கொள்ளும் வரையில்--நல்லோர்
துணிவு கொள்ளும் வகையில்    (எழுதிக் )


Saturday, February 4, 2017

பல்லவிக் கிடைத்தப் புலவன் போல.....

பல்லவிக்  கிடைத்தப்  புலவன் போலப்
பாடிக் களிக்கிறேன்-பந்தய
எல்லையைத் தொட்ட வீரன் போல
தாவிக் குதிக்கிறேன்
கருவிழி பார்த்தப்  பார்வை ஒன்றில்
கவிழ்ந்து போகிறேன்-உன்
ஒருமொழி கேட்டக்  கணத்தில் நானும்
கவிஞன்  ஆகிறேன்

நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனமும்  கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய்ச்  சுரக்குதே

உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே -உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே- உன்
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே

பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ-அந்தத்
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும்  நிகராமோ

Friday, February 3, 2017

சிரிப்பின் சுகமறிவோம்

 சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
கொடிய  விந்தையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

Wednesday, February 1, 2017

சின்னச் சின்ன அடிகள் வைத்து

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து   ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது

சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்

முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே

தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

ஜல்லிக்கட்டு.. ...போராட்டமும் முடிவும்

காலங்காலமாய்
துவக்கி வைத்துக் கொண்டிருந்தவர்கள்
அல்லது துவக்குவதாய்
நடித்துக் கொண்டிருந்தவர்கள்
அறியாமலேயே
இது துவங்கி இருந்தது

அவர்கள் அதிர்ச்சியுடன்
அதை எட்ட நின்றுக்
கவனித்துக்கொண்டிருந்தார்கள்

காலங்காலமாய்
தொடர்ந்து கொண்டிருந்தவ்ர்கள்
அல்லது
தொடர்பவர்களாக
நடித்துக் கொண்டிருந்தவர்கள்
தொடராமலேயே
அது மிகச் சிறப்பாய்த்
தொடர்ந்து கொண்டிருந்தது

அவர்கள் மிரட்சியுடன்
அதைக் கவனமாய்க்
கவனிக்கத் துவங்கினார்கள்

காலங்காலமாய்
வென்று கொண்டிருந்தவர்கள்
அல்லது
வென்றதாக நடித்துக் கொண்டிருந்தவர்கள்
இல்லாமலேயே
அது வெல்லத் துவங்கி இருந்தது

அவர்கள் அதிர்ச்சியுடன்
அது குறித்துச்
சிந்திக்கத் துவங்கினார்கள்

துவங்குவதும்
தொடர்வதும்
வெல்வதும்
சுயம்புவாய் ஆகக் கூடுமெனில்
நம் நிலை என்ன என்பது
அவர்களுக்குள்
ஒரு எரிமலையை உருவாக்க

அவர்கள் மீண்டும்
வழக்கம்போல
மெல்ல மெல்லத் துவங்கி
மெல்ல மெல்லத் தொடர்ந்து
முடிவாய்
வழக்கம்போல
முடித்தும் வைத்துவிட்டார்கள்

வழக்கமான
ஒரு போராட்டம் என்பதைப் போலவே

ஆயினும்........