Friday, June 30, 2017

கணினி உலகம்

உலகைச் சுற்றி
உலகை அறிந்து கொள்வதை விட
"மௌசைத் "தட்டி
அறிந்து கொள்ளுதல்
எளிதாகவும்
விரைவாகவும்
முடிவதை நினைக்க

ஞானப் பழம் பெற
உலகைச் சுற்றிய முருகனும்
தாய் தந்தையரைச் சுற்றி
ஞானப் பழம் பெற்ற
"மூஸிக "வாகனனும்
நினைவில் வந்து போவதைத்
தவிர்க்க இயலவில்லை

உடன்
கணிப்பொறி இல்லையெனில்
உலகின் இயக்கமே
இல்லையென்றாகிப் போன
இன்றைய சூழலில்

அம்மையப்பன் தான் உலகம்
உலகம்தான் அம்மையப்பன்
என அருளிய
அம்மையப்பனின் அருளுரையும்...

Tuesday, June 27, 2017

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

காலம் சிரித்தபடி எப்போதும்போல்
நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
பயனற்றதாகிப் போனது
அந்தக் குறிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

ஒரு பார்வையற்றவனின்
உன்னத இசையில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாம் நானே என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனமாயிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள் சுமைதாங்கிகள்
அளவீடுகளின் எல்லையினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழத்தெரிந்தவானாகிப்போக
அதை அறியாதவனே  அற்பனாகிப்போகிறான்

Monday, June 26, 2017

முகமற்று ஏன் முக நூலில்...

பார்வைக் குறையுடன்
பிறந்த குழ்ந்தைக்கு
கண்ணாயிரம் எனப் பெயர் வைத்த
பெற்றோரின் மன நிலையைப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

வீராச்சாமி எனப்
பெயரிடப்பட்டவன்
எதற்கும் எப்போதும்
பயந்தவனாய் உலவுவதைப்
புரிந்து கொள்ளமுடியவில்லை

மாண்பு மிகு என
அது கொஞ்சம் குறைவானவர்கள்
போட்டுக் கொள்வதனைக் கூட
மனச்சாட்சி உறுத்தல் எனப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

முக நூலில்
தங்கள் முகம் மறைத்து
காரசாரமாய்
பிரச்சனைக்குரிய பதிவுகளாய்
பதிவிடுபவர்களை ஏனோ
புரிந்து கொள்ளமுடியவில்லை

பெண்கள் யுவதிகள்
என்றால் கூட
அதற்குப் போதிய காரணங்களிருக்கின்றன
ஆண்கள் பதுங்கிட
அப்படி என்ன அவசியமிருக்கிறது

குற்றாலம் போய்
குளிரடிக்கிறது என
குளியலறையில் சுடு நீரில்
குளிப்பதைக் கூடச்
சகித்துக் கொள்ளமுடிகிற எனக்கு

அருவியில்
குளிருக்கு அடக்கமாய் இருக்கட்டுமென 
போர்வையினைப் போர்த்திக் குளிப்பவரை
காணச் சகிக்கவில்லை
சிரிப்புத்தான் வருகிறது

ஆம் முகம் மறைத்து
முக நூலில்
உலவுவோர் நிலையினைப் போலவும்...

Sunday, June 25, 2017

முக நூலும் வலைத்தளமும்

திருமண வரவேற்பில்
கூடுதல் அந்தஸ்துக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்த கச்சேரியை
கண்டும் காணாது பலரும் கடக்கிறார்கள்

விருந்துண்ண
இடம் கிடைக்காதோர்
அல்லது உண்ட அலுப்புத் தீர
சிறிது அமர்வோர் மட்டும்
இரசித்துக் கேட்கிறார்ப்  போல
கொஞ்சம் பார்க்கிறார்கள்

அது மனவருத்தம் தருவதுபோல்
இருந்தாலும்
தன்னை அறிமுகம் செய்து கொள்ள
அதுவும் பாடகனுக்குத்
தேவையாகத்தான் இருக்கிறது

சங்கீத சபாக்களில்
ரசிப்பதற்கென்றே
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்தக் கச்சேரியை
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
கேட்டு இரசிக்கிறார்கள்

எண்ணிக்கை சிறிதாயினும்
மிகச் சரியாய்
உணர்ந்து இரசிப்போராய்
அவர்கள் இருப்பதால்
பாடகனின் வளர்ச்சிக்கு
அதுதான்  அவசியமாகப்படுகிறது

(முக நூலில் தொடர்பவர்கள் நான்காயிரமாய்
உயர்ந்திருக்கிறார்கள்  .சும்மா ஒரு .  தகவலுக்காக  )

Saturday, June 24, 2017

புத்தம் புது காலை ..


கிழக்கு வெளுக்கத் துவங்கியது 
தேவாலயம் கிளம்பிய அந்தோணி  
நாட்காட்டியைப் பார்த்தார் 
                                                       அது  2017 ஜூன் 25  என்றது

மசூதிக்கு
தொழக்கிளம்பிய ராவுத்தர்
நாட்காட்டியைப்  பார்க்க
அது ஷவ்வால் ரம்ஜான் 29 என்றது

                                              கோவிலுக்கு
                                             கும்பிடக் கிளம்பிய ஏகாம்பரம்
                                             அதனைப் பார்க்க
                                             ஹேவிளம்பி ஆனி 11 என்றது

நாட்காட்டி அறியாதப்
பறவைகள் எல்லாம்
என்றும்போல
இந்தப் புத்தம்  புது காலையை
நன்னாளை
வரவேற்கும் விதமாய்
உற்சாகமாய்
பாடியபடிச் சிறகு விரித்தன

                                               நாளுக்கே காரணமானவன்
                                               ஏதும் அறியாதவன் போல்
                                               என்றும் போல்
                                               ஒளியாய்
                                              சிரிக்கத் துவங்குகிறான்

உலகம் மெல்ல மெல்ல
அழுக்கு உதிர்த்து
வெளுக்கத் துவங்குகிறது 



  

Thursday, June 22, 2017

. இது குறையாது இருக்கிற இடம் ...

நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்

 "இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப்போனார் 
ஒரு கருஞ்சட்டைக் காரர் 

"எல்லாம அவன் கொடுத்தது
அவனிடம் எப்படிக்  கணக்குப் பார்ப்பது "
மொத்தமாக உண்டியலில்
பணத்தை கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்தி பெருத்தக் " கன "வான்

"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகபுலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்

"மூன்றும்  மாறுபட்ட  நிலையாய் இருக்கிறதே
 இதில் எது சரி
மூன்றும்  சரியாய் இருக்கவோ
மூன்றும்  தவறாய் இருக்க   வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான நண்பன்

" இங்கு நம்பிக்கையின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை

வெறுங் கையுடன் வருபவர்கள்
கையளவே  கொண்டு போகிறார்கள்

அண்டாவுடன் வருபவர்கள்
அள்ளிக் கொண்டு போகிறார்கள்
.
இது என்றும் குறையாது
எல்லாம்இருக்கிற இடம்
ஆயினும்  கொடுக்கிற இடமில்லை

அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துச்  செல்கிற இடம் " என்றேன்

நண்பன் கீழ் மேலாய்  தலையாட்டினான்
அது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது

Wednesday, June 21, 2017

சின்னச் சின்ன அடிகள் வைத்து சிகரம் ஏறுவோம்...

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலங்  கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்டக்  கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவால்  ஆனது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டித்  திமிராய் நிற்கும்
மலையே ஆயினும்
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Tuesday, June 20, 2017

எந்த அரசும் விசித்திர பூதங்களே...

கோடிக் கண்களும்
கோடிக் காதுகளும்
பல கோடிக் கைகளும் கொண்டு
மூளையும் காதுகளும் அற்று இருப்பின்
 அவைகள்  விசித்திர பூதங்கள் தானே

.குடிமக்களின் தலையைக் காக்க
தலைக் கவச ஆணையைக்
கட்டாயப் படுத்தத்  தெரிந்த அவைகளுக்கு
மது பானம் மூலம்
குடல் கருகுவது தெரியாதிருக்கிறதெனில் 

 மிக்ஸியும் கிரைண்டரும்
இலவசமாய் தரும் அவைகளுக்கு
அதனைப் பயன்படுத்த
மின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்
அதற்குப் புரியாதிருக்கிறதெனில் 

மக்களின் பசித்துயர் தீர்க்க
விலையில்லா அரிசி தரும் அவை களுக்கு
எரி பொருள் விலையேற்றமோ
மளிகைப் பொருட்கள் விலை நிலவரமோ
அதற்கு ஒரு பொருட்டாய் தெரியவில்லையெனில்

அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவைகளுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூடத் துளியுமில்லையெனில்

எதிர்ப்பாளர்களை மிகச் சரியாகக்  கண்டறிய
கோடிக் கண்களும்
எதிர்ப்புகளை ஒரு நொடியில் நசுக்கி எறிய
ஆயுதங்களுடன் கூடிய
கோடிக் கைகளும் கொண்ட
 மூளையும் காதுகளும் அற்ற
இந்தக் கொடிய பூதங்கள்
நிச்சயம் விசித்திர பூதங்கள்  தானே

நாம் இப்படிப்   பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த  பூதத்திற்காயினும்  சரி
இனி வர இருக்கிற  பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை
இதுவும் நிச்சயம் தானே 

Sunday, June 18, 2017

பதினாறு வயது உளறல்கள் அல்லது ! விஞ்ஞானக் காதல்!

அவன் அவசரமாய்
அவளுக்குக்  குறுஞ்செய்தி அனுப்பினான்

"இப்போது வேதியல்  வகுப்பில்
உன்னைக் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் "

" என்னைக் குறித்தா?
அதுவும்வேதியல்  வகுப்பிலா ?"
அவள் பதில் செய்தி அனுப்பினாள்

"ஆம்.
தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்
பக்கத்தில் இருக்கும் பொருளை
மாறுதலடைச் செய்யும் பொருளை
டீச்சர் கிரியா ஊக்கி என்கிறார்
நான் அது நீ என்கிறேன் சரியா ? "
அவன் இப்படிப் பிதற்றினான்

"இங்கு  இயற்பியல்  வகுப்பில் கூட
நம்  எதிர்காலம் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் " என்றாள் அவள்

"இயற்பியல் வகுப்பிலா ?
அதுவும் நம்   எதிர்காலம் குறித்தா "
அவன் அதிசமாய்க் கேட்டான்

அவள் இப்படி செய்தி அனுப்பினாள்
"எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு என்கிறார் சார்

 படிக்கிற நேரத்தில் இப்படிச்
செய்தி அனுப்பிக் கொண்டிருந்தால்
எதிர்விளைவாய் நாம்
 நடு ரோட்டில்தான்  இல்லையா  ? "

அவன் பதில் செய்தி அனுப்பவில்லை

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Image may contain: drawing

முன்னறித்  தெய்வப்பட்டியலில்
இரண்டாவதாயிருப்பதுக்  குறித்து
அவர்கள் கவலைப்பட்டதே இல்லை

குழந்தைகளின்முன்னேற்றம் குறித்துச்
சிந்திப்பதில் அவர்கள் எப்போதும்
முதலாவதாகவே இருக்கிறார்கள்

மாதா எனத் துவங்கி தெய்வத்தில் முடியும்
அந்த நால்வர் பட்டியலில்
குருவுக்கு முன்னர் இடம்பெற்றது
வெறும் வார்த்தை ஜாலத்திற்காக இல்லை

உலகைப் புரிந்து கொள்ளக்
கற்றுக் கொடுப்பதில் அவர்கள்
அனைத்து விஷயத்திலும் என்றென்றும்
குருவுக்கு முன்னால்தான் இருக்கிறார்கள்

அன்னையர் தினம் அளவு
தந்தையர் தினம் கொண்டாடப்படாதது  குறித்து
அவர்கள் சஞ்சலப்படாதே இருக்கிறார்கள்

ஆணுக்கென இந்தச் சமூகம் விதித்திருக்கும்
சில விசித்திர விதிகளினால்
அவர்கள்  உணர்வுகளை எப்போதும்
உள்ளத்தில் அடக்கிவைத்தே அலைகிறார்கள்

நம்மை வயிற்றில் சுமக்காது போயினும்
காலமெல்லாம் நெஞ்சில் சுமந்தே  சுகங்காணும்

நமக்குப் பாலூட்டி வளர்க்காது போயினும்
காலமெல்லாம் சிகரத்தில் வைக்கத்  தினம்சாகும்

தந்தையரின் தியாகங்கள்
யாருக்கும் எந்த விதத்திலும்
என்றும் சளைத்ததல்லை

ஆம் ...நிச்சயமாக

 தந்தையராய் இருப்பது மாபெரும் தவமே

ஆணினத்திற்கு இறைவன் அருளிய ஆகப்பெரிய வரமே

அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Thursday, June 15, 2017

திரிசங்கு நரகத்தில்....

செல்வம்
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
செல்வந்தர்களின்
உடலையும் மனத்தையும்
சுகத்தில் நிலை நிறுத்திப்போகிறது

வறுமை
இரவை இரவாகவும்
பகலை பகலாகவும்
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து
ஏழைகளின்
உடலையும் மனத்தையும்
நலத்தில் நிலை நிறுத்திப்போகிறது

எப்படி முயன்றும்
முடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்

ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்

 பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி  ஏங்கியே தேய்கிறது

கௌசிக  மனம் தானே  படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று  வாழ்ந்தே சாகிறது

Tuesday, June 13, 2017

கண்ணன் வாயில் பூமி என்றால் கண்ணன் நின்றது ?.....

கண்ணன் திருவாய்த் திறக்க
அதில் உலகம் தெரிந்ததாய்
சிறுவயதில் கேட்டக் கதை
எனக்குச் சிரிப்பை
வரவழைத்ததுண்டு

பின்னர்
கல்லூரிக் காலங்களில்
கண்ணன் வாயில் பூமி என்றால்
கண்ணன் நின்றது எங்கே என்று
ஒரு பகுத்தறிவுவாதி சொல்ல அதை
மிகவும் இரசித்ததுண்டு

இப்போது
யசோதையினைப் போலவே

எனது கணினிவாய்த் திறந்து
அதன் மூலமே
உலகம் முழுவதையும்
மிக எளிதாய்க் கண்டு வருகிறேன்
உலகில் இருந்து கொண்டே

முன்னர் சிரித்ததையும்
பின்னர் இரசித்ததையும்
மெல்ல அசைபோட்டப்படி
அவைகளை
மறுபரிசீலனக்கு உட்படுத்தியபடி

Monday, June 12, 2017

இழந்த உறவுகளின் அருமைகளே....






பின்னிப் பிணைந்து
தொடருகிற உறவுகளைவிட
விலகியவிட
அறுந்த
பகையாகிப்போன
உறவுகளே
அன்றாடம் மனதில்
நிலைத்திருக்கிறது

தவறு அவர்களுடையதே ஆயினும்
சகித்திருக்கலாம்
பொறுத்திருக்கலாம்
எனும்படியாகவும்...

தவறு நம்முடையதாயின்
வருத்தம் தெரிவித்து இருக்கலாம்
மன்னிப்புக் கோரி இருக்கலாம்
எனும்படியாகவும்...

அதன் காரணமாகவே
இனியேனும்
தொடர்கிற உறவுகளில்
எதையும் தவறியும்
இழந்து விடக்கூடாதெனும்
உறுதி கொள்ளும்படியாகவும்..

இழந்த உறவுகளின்
அருமைகளே
பெருமைகளே
நினைவுகளே
எப்போதும் வழிகாட்டிப் போகிறது

அதன் காரணமாகவே
இப்போதெல்லாம்
இருக்கிற உறவுகளை விட
இழந்த உறவுகளே
எப்போதும் மனதில்
நீங்காது நிலைத்திருக்கிறது


Sunday, June 11, 2017

கடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்...

.கவிதைத் தேர்வுக்குத்தன்னைத்
தயார்செய்துகொள்ளும்படியான
கடும் பயிற்சியிலிருக்கின்றன
வார்த்தைகள் அனைத்தும்

நாணலினும்
இன்னும் நெகிழ்வாய்

கூரிய வாளினும்
இன்னும் கூர்மையாய்

மலர் இதழ்களினும்
இன்னும் மென்மையாய்

குளிர் நிலவினும்
இன்னும் தண்மையாய்

தேக்கு மரம் போல்
மிக்க உறுதியாய்

மொத்தத்தில்
கவிஞனின் எந்த மன நிலைக்கும்

கவிதைக்குள் கிடைக்கும்
எந்தச் சிறு இடைவெளியிலும்

மிகச் சரியாய்த்
தன்னைப் பொருத்திக்கொள்ளும்படியாய்..

கடும் பயிற்சியிலிருக்கின்றன
தமிழ் வார்த்தைகள் அனைத்தும்

வள்ளுவனின் விழிபட்ட
கம்பனின் கைத்தொட்ட
வள்ளலாரின் கருணைப்பெற்ற
பாரதியின் நாவு நவின்ற
அவன் தாசனால் எழுச்சிப் பெற்ற
வார்த்தைகள் போல்

காலம் எத்தனைக் கடந்தும்
மலர்ந்து மணம் வீசும்
புத்தம் புது மலராய்
மணக்க வேண்டுமெனில்

மாற்றங்கள் எத்தனை நேரினும்
மதிப்பில் உயர்ந்தே நிற்கும்
முத்தாய்ப் பவளமாய்ப் தங்கமாய்
ஜொலிக்க வேண்டுமெனில்

கவிஞனின் கருணைப் பார்வையில்
படும் படியாய்
அவன் கவிதைக்குள் பொருத்தமாய்
விழும் படியாய்
அதற்குரிய தகுதிகள் அனைத்தும்
பெறும் படியாய்
இருந்தால் மட்டுமே சாத்தியமென
உணர்ந்த படியால்

கடும் பயிற்சியிலும்
தொடர் முயற்சிலும்
இருக்கின்றன
அழகுத் தமிழ் வார்த்தைகள்

வார்த்தைகளின்
அசுர பலமறியாது
உயர் நிலையறியாது
அதை உமிழ்ந்துச்  செல்வோரே
சற்று விலகியே செல்லுங்கள்

ஆம் தவமனைய
அதன்கடும் பயிற்சிக்கு
அதன் பெரும் முயற்சிக்கு
பங்கம் வந்துவிடாது

மௌனமாய்   ......
ஆம்
மௌனமாய்
முடிந்தால்ஆசிர்வதிச்சு மட்டும் செல்லுங்கள்

தமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கலாம்.

Saturday, June 10, 2017

கம்பனும் கடவுள் வாழ்த்தும்...

எல்லோருக்கும் எப்போதும்
மாலை நேரத்தில் மயக்கம்தான் வரும்
எனக்கென்னவோ சில நாட்களாய்
குழப்பம்தான் வருகிறது

துவங்கிய நிகழ்வு
தடங்கலின்றி முடிய
கடவுள்வாழ்த்து அவசியமென
எல்லோரும் நம்புகிறோம்
தவறாதும் சொல்லுகிறோம்

ஆனாலும்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்மகன் வாழ்வில்
அது ஏன் தவறாகிப் போனது?


அம்பிகாபதி பாடிய நூறு பாடல்களில்
கடவுள் வாழ்த்தினைக்
கணக்கில் கொள்வதா?
கொள்ளாமல் விடுவதா?
என்று எழுந்த கேள்வியே


கவிஞனைக் கொல்வதா?
கொல்லாமல் விடுவதா? என்ற
குழப்பத்தினை உண்டாக்கி
முடிவில்
கடவுள்வாழ்த்துக் கணக்கே
அவனைக் கொன்றும் போட்டதால்.....

தடங்களின்றிக்  காரியம் முடிய
கடவுள்வாழ்த்து
அவசியத் தேவையா?
அல்லது
அனாவசியச்  சேர்க்கையா?
என்கின்ற பெருங்கேள்வி என்னை
குழப்பிக்கொண்டே இருந்தது

குழப்பத்தின் உச்சத்தில் நான்
ஓய்ந்துபோய் உறங்கிப் போக
கவிச்சக்கரவர்த்தி கம்பனே என்
கனவில் வந்து நின்றான்.

அவன்
கமலப்பாதங்களைத் தொட்டு வணங்கி
என் கேள்வியை நான் கேட்கும் முன்பே
கையமர்த்தி என்னை அமரச்சொல்லி
கண்கலங்க இப்படி சொன்னான்

"கடவுள்வாழ்த்துக் கணக்கில் நான்
என் கண்மணியை இழந்தாலும்
ராம காதையில்
நானதைச் சொல்ல மறந்தேனா?
கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்


அம்பிகாபதியின் அவல மரணம்
அனைவருக்கும் சொல்லும் செய்தி இது"

எனக் கண்கலங்கச் சொல்லிப் போனான் கம்பன்

நான் அதிர்ந்து விழித்து எழுந்தபோது
விடிந்தும் இருந்தது


என்னை வாட்டி எடுத்த குழப்பமெங்கோ
தொலைந்தும் இருந்தது

Friday, June 9, 2017

நடுவிலிருப்பவனே என்றென்றும் ...

நடுவிலிருப்பவனே
அனைத்திற்கும்
காரணமாய் இருக்கிறான்

கீழிருப்பவனின் அறியாமையையும்'
மேலிருப்பவனின் பேராசையையும்
மிகத் தெளிவாய்ப்
புரிந்துவைத்திருக்கும்...   (நடுவிலி )

கீழிருப்பவனுக்கு மேலிருப்பவன் மேல்
அதிகக் கோபமூட்டி
அந்தக் கோபத்தைக் காட்டியே
மேலிருப்பவனுக்கு அச்சமூட்டி...
                                     (நடுவிலி)
கீழிருப்பவனுக்கு எனச் சொல்லி
கிடைத்ததில் பாதி ஒதுக்கிக்
கீழிருப்பவன் பரம்பரையாய்
கீழேயே இருப்பதற்கு          (நடுவிலி)

மேலேறவும் திறனில்லாது
கீழிறங்கவும் மனம் இல்லாது
மூன்று இரண்டாகிவிடவோ
ஒன்றென மாறிவிடவோ  விடாது
                                    (நடுவிலி)
நடுவிலிருப்போனின் நயவஞ்சகத்தை
மேலிருப்போனும் கீழிருப்போனும்
உணர்ந்து தெளியாதவரையில்
அவனை ஒதுக்கி வைக்காதவரையில்

இன்னும் எத்தனைக் காலமாயினும்
இன்னும் எவர் எவர் வழிகாட்டினும்
அத்தனையையும் மடைமாற்றி
வழக்கம்போல் திசைமாற்றி

நடுவிலிருப்பவனே என்றென்றும்
காரியவாதியாக இருப்பான்
தொடரும் அவலங்கள் தொடர்ந்து நிலைக்க
அவனே காரணமாகவும் இருப்பான்

Thursday, June 8, 2017

காலக் கண்ணாடிகளே வாரீர்

கவிஞர்களே வாருங்கள்
காலக் கண்ணாடிகளே வாருங்கள்

காலத்தை நாம்
மிகச் சரியாய்
பிரதிபலிக்கவில்லையெனில்
காணாமல் போய்விடவே
வாய்ப்பு மிக அதிகம்

வாருங்கள் கவிஞர்களே வாருங்கள்
சமூகத்தை மிகச் சரியாய்
பிரதியெடுப்போம்

முன்பு வழி தேடி அலைபவருக்கு
"ஆலமரம் பக்கத்தில்,
பெருமாள் கோவிலுக்கு நேரெதிரே
சிந்தாமணித் தியேட்டருக்குப்
பக்கத்து சந்து"
எனச் சொன்னதெல்லாம் பழங்கதை

இன்று
"குமார் ஒயின்சுக்கு அடுத்து
அந்த ஏ.சி பாருக்கு இடதுபுறம்
ஏழாம் நம்பர் கடைக்கு எதிர்புறம்'"
எனச் சொல்பனே சரியான வழிகாட்டி

"கால் காசுக்குப் பயனுண்டா
அரைக்காசுக்குத் தேறாது
பைசா பெறாதப் பிரச்சனை"
என்ற ஒப்பீடெல்லம் அரதப்பழசு

இன்று
"ஆஃப்புக் தேறுமா
குவார்டருக்குப் பிரயோஜனம் இல்லை
ஒரு ஃபுல் அடிச்ச மாதிரி "
என் ஒப்பிடுபவனே சரியான மதிப்பீட்டாளன்

கதைக்கானக்  கரு எல்லாம்
பொது நீதி சொல்வதாகவும்

கதைக் களமெல்லாம்
குடும்பமாகவும், காதலாகவும்

இலக்கியத்தின் நோக்கமெல்லாம்
மென்மையுறச் செய்வதாகவும்
இருந்தது எல்லாம் பழைய பஞ்சாங்கம்

இன்று
கதைக் கரு என்பதெல்லாம்

தீயவனின் எழுச்சியையும்
வளர்ச்சியையும்

கதைக்கான களமெல்லாம்
பார்களாகவும்,
ஓட்டல்களாகவும்

இலக்கியத்தின் நோக்கமெல்லாம்
காசு சேர்ப்பதற்காகவும்
எழுச்சியூட்டுவதாகவும்

இல்லையெனில்
நாம் ஒதுக்கப்படவும்
ஒருமாதிரியாய் பார்க்கப்படவுமே
சாத்தியம் மிக அதிகம்

காலத்தோடு
ஒட்ட ஒழுகவில்லையெனில்
கஞ்சிக்கு இலாயக்கற்று
ஒழிந்து போகவும் வாய்ப்பு அதிகம்

எனவே
காலக் கண்ணாடிகளே வாரீர்

'பாரின்" சிறப்புக் குறித்துப்
பல்சுவை விருந்தளிப்போம்

போதை தரும் சண்டைகள் குறித்தான
பரணிகள் படைப்போம்

அதன் காரணமாய்
நாமும் கவிஞரென
மார்தட்டிக் கொள்வோம்

அதன் காரணமாய்
நாடு நாசமானால் என்ன ?
நாம் "ஹிட்" அடிப்போம் வாரீர்

Wednesday, June 7, 2017

கலைஞரின் குணச் சிறப்பு ( 3 )

கலைஞர் என்று சொன்னாலே அவர்
மேடப் பேச்சுத் திறனும்,சாணக்கியத்தனமும்
சினிமாவும் மொத்தத்தில் முத்தமிழும்
உடன் ஞாபகம் வருகிற அளவு
அவரது தனிமனிதச் சிறப்புக்கள் அதிகமாக
பேசப்படவில்லை.அதனாலேயே என்னவோ
நடுத்தர மற்றும் அதற்கு மேல் நிலையில்
உள்ளவர்களைக் கவர்ந்த அளவு அவர்
பாமர மக்களைக் கவரவில்லை என்பதே
என் கருத்து

(இதற்கு நேரெதிரானவர் புரட்சித் தலைவர்
என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை )

அதற்காகவே எனக்குத்தெரிந்த ஒரு சிறு
தகவலைப் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்

என்னுடைய நண்பரின் மாமனார் திரைப்படத்
தயாரிப்பாளராக இருந்தார். அவரும் அவருடைய
நன்பர்களும் சேர்ந்து உமையாள் ப்ரொடக்ஸனஸ்
என்கிற பெயரில் மூன்று தமிழ்ப் படங்களைத்
தயாரித்திருக்கிறார்கள்.அது அவன் பித்தனா,
தங்கத் தம்பி, உலகம் இவ்வளவுதான் என ஞாபகம்

இதில்  அவன் பித்தனா என்கிற திரைப்படத்திற்கு
திரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர் அவர்கள்
இது அவர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில்
சிறைப்படுத்தப் பட்டிருந்த நேரத்தில் எழுதப்பட்டது

தயாரிப்பாளார் என்கிற முறையில்
எனது நண்பரின் மாமனார் அவ்வப்போது
சிறைச்சாலைச் சென்று கலைஞர் அவர்களைச்
சந்தித்து வருவதுண்டு

அங்கு அப்போது சிறைகாவலாராய் இருந்த ஒருவர்
கலைஞர் மீது தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த
பற்றின் காரணமாக அவருக்குத் தேவையான
உதவிகளை மிகச் சிறப்பாகச்செய்து வருவாராம்.
அந்தச் சேவை அப்போதைய தனிமைச்சிறை
என்கிற நிலையில்  கலைஞருக்கு மனரீதியாக
அதிக உற்சாகம் தந்ததாகச் சொல்வாராம்.

இது நடந்து சில ஆண்டுகள்  கழிந்து
தேர்தல் வந்ததும், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும்
பின் அண்ணா அவர்கள் மறைந்ததும்
கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்ற
சமயம்...

மரியாதை நிமித்தமாக என் நண்பரின் மாமனார்
கலைஞர் அவர்களைச் சந்திக்க,அந்தச் சந்திப்பில்
அந்தப் படத் தயாரிப்புச் சம்பந்தமான
நினைவுகளையும்சிறைச்சாலை நினைவுகளையும்
 பகிர்ந்து கொண்டகலைஞர் மறக்காது
அந்த சிறைக்காவலர் குறித்தும்அதிகம்
விசாரித்திருக்கிறார்.முடிந்தால் அவரைச்
சந்திக்கச் சொல்லும்படியாகவும்
தகவல்தெரிவித்தாராம்.

கலைஞரின் விருப்பமறிந்த நண்பரின் மாமனாரும்
உடன் அவரைத் தேடிக் கண்டுபிடித்து
விவரம் சொல்லி கலைஞர் அவர்களைச்
சந்திக்கும்படியானஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்

இந்த நிலையில் இந்த விஷயங்களை அறிந்த
காவ்லரின் உறவினர், செல்வந்தர் ஒருவர்
அவருடைய மகனை மருத்துவக் கல்லூரியில்
சேர்ப்பதற்காக முயன்று கொண்டு இருந்திருக்கிறார்

அதன் காரணமாக முதலவரைச் சந்திக்கச்
செல்லும் காவலரிடம்,தன் மகனுக்கு
உறவினர் என்கிற முறையில் மருத்துவக்
கல்லூரியில் ஏதாவது சிறப்புஒதுக்கீட்டினபடி
சேர்க்க ஆவன செய்யக்
கேட்டுக் கொண்டிருக்கிறார்

வெறுமனே சந்தித்துத் திரும்புகையில்
இந்தக் கோரிக்கையையும் வைத்துப் பார்க்கலாமே
என்கிற எண்ணத்தில் உறவினரின்
வேண்டுகோளையும் ஒரு மனுவாகக் கொண்டு
கலைஞர் அவர்களைச் சந்தித்திருக்கிறார்

கலைஞர் அவர் வந்ததும் மிக உற்சாகமாக
எழுந்து வரவேற்று உடன் இருந்தவர்களிடம்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி,அரசின் கோபத்திற்கும்
அஞ்சாது அவர் செய்த பணிவிடைகளை
நினைவு கூர்ந்து மகிழ்ந்திருக்கிறார்

பின் குடும்ப விஷயம் அனைத்தையும் விசாரித்து
ஏதும் உதவி தேவை எனில் தவறாது
தன்னைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்த
உடன் காவலர் தான் கொண்டு வந்திருந்த
கோரிக்கை மனுவைக் கொடுத்திருக்கிறார்

அதை பரிசீலித்த கலைஞர் அவர்கள்
அவர்கள் எந்த வகையில் உறவு,அவருக்கு
உதவுவதால் அவருக்கு என்ன லாபம் என
மனம் திறந்து விசாரித்து, அன்றைய நிலவரப்படி
மருத்துவக் கல்லூரி இருக்கையின் மதிப்பு
குறித்துச் சொல்லி அந்த மதிப்பை  இழக்காமல்
ஆவன செய்து கொண்டுப்   பின் தனக்கு தகவல்
தெரிவிக்கும்படியும் பின் விதிகளுக்கு
உட்பட்டு சிறப்பு விதிகளின் கீழ்
ஆவன செய்வதாகக் கூறியதோடு
அப்படியே செய்தும் கொடுத்தாராம்

இதை முழுவதும் மிகச் சந்தோஷமாக
விவரித்த நண்பரின் மாமனார்,ஞாபக சக்தியில்
மட்டுமல்ல,தனக்குப் பொதுவாழ்வில் உதவிய
ஒவ்வொருவருக்கும் தேடித் தேடி உதவி செய்த
கலைஞரின் மாண்பை,குணச் சிறப்பை
இன்னும் சில உதாரணங்களுடன் விளக்கினார்.

எதனாலோ கலைஞர் அவர்களின்
சாணக்கியத்தனம், முத்தமிழ் பாண்டித்தியம்
மேடைப்பேச்சு முதலான பொதுச் சிறப்புக்கள்
குறித்தே அதிகம் பேசப்பட்டு
அவரது தனிப்பட்ட குண நலன்கள்
மிக அதிகமாக பகிரப்படாதது கூட
மாறாக எதிர்மறையான தனிக்குணங்களே
அதிகமாகப்  பகிரப்பட்டதாலேயே கூட
பின்னாளில் தனிப்பட்டகுண நலன்களால்
பெரும்பான்மையோரைக் கவர்ந்த
புரட்சித்தலைவருக்கு ஈடு கொடுக்க
முடியவைல்லையோ என்கிற எண்ணம் கூட
எனக்கு உண்டு

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

கண்ணுக்குப் பச்சை அழகு

இது என்கதை அல்ல  நான் எழுதியதும் இல்லை
 ஒரு புண்ணியவான் எழுதியது .பெயர் கீழே உள்ளது
படித்தேன் .பிடித்திருந்தது . உங்களுக்கும் பிடிக்கலாம்
படித்துப் பாருங்களேன்

நாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது?

பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல் ரசவடை, லட்சுமி தியேட்டர் தரை டிக்கெட் சினிமா என்று சிறுவயது வாழ்க்கை. அப்புறம் மணிமேடை ஜங்ஷனில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் கிளார்க் வேலை. மாமா மகள் சரோஜாவோடு கல்யாணம். கறிவேப்பிலைக் கொழுந்தாக மகன் மணி. படிப்பில் படு சுட்டி. சென்னை ஐ.ஐ.டி.யில் எஞ்சினீயரிங் படித்தான். அமெரிக்காவில் மேற்படிப்பு. அங்கேயே தங்கிவிட்டான். தங்கமான பையன். நாங்கள் பார்த்துவைத்த தூரத்து சொந்தக்காரப் பெண் கலாவோடு திருமணம். இரண்டு பேரும் கூகிள் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். ஆதித் என்று நான்கு வயது மகன், இரண்டு வயது மகள் ஆத்யா. இருவரும் டே கேர் போகிறார்கள்.

மணி குடும்பத்தோடு வருடாவருடம் எங்களைப் பார்க்க வருவான். ஒவ்வொரு தடவையும், அவனும், கலாவும் அமெரிக்காவுக்கு வரும்படி சொல்லுவார்கள். சரோஜா அழகாகப் பதில் சொல்லுவாள், "நீங்க செடியாக இருக்கறப்ப அமெரிக்கா போய்ட்டீங்க. அங்கே வேரூன்ற முடிஞ்சுது. நாங்க மரம்டா, அறுபது வயசு மரம். எங்களைப் பிடுங்கி நடாதே. இந்த ஊரைவிட்டு எங்களால் வரவே முடியாது."

மகராசி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அவளால் முடிந்தது. இந்த வருஷம், அவளுக்கு அறுபது வயசுப் பிறந்த நாள். நாகராஜா கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பினோம். அசதியாக இருக்கிறது என்று படுத்தாள். நெஞ்சு வலித்தது. என் மடியில் படுத்துக்கொண்டே போய்விட்டாள். "நாம் யாருக்குமே கெடுதல் நெனைச்சது கிடையாது. அதனால், நமக்கு அநாயச மரணம்தான் வரும் உங்களுக்கு அப்புறம்தான் நான் போகணும். ஏன் தெரியுமா? காப்பிகூட உங்களுக்குப் போடத் தெரியாது, திண்டாடித் திணறிடுவீங்க" என்று அடிக்கடி சொல்லுவாள். அவள் பாதிப் பிரார்த்தனை பலித்துவிட்டது. அநாயசமாகப் போய்விட்டாள். நான் மாட்டிக்கொண்டேன்.

மணி வந்தான். காரியங்கள் முடிந்தன.

"அப்பா, நீங்க எங்களோட அமெரிக்கா வர்றீங்க."

"நான் பக்கத்துத் திருவனந்தபுரம் தவிர, தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கேயும் போனதே கிடையாதே? எப்படிடா வருவேன்? என்னை விட்டுடு."

"உங்களைத் தனியா விட்டுப் போகமாட்டேன். நீங்க வந்தே ஆகணும்."

"ரெண்டு நாள் தா. ஆலோசிச்சுச் சொல்றேன்."

பால்ய சிநேகிதன் ஹரியோடு பேசினேன். அவன் சொன்னான், "நம்ம ஊர்ல என்னடா இருக்கு? நம்ம வயசுக்காரங்கள்லே நாமும், சாமிநாதனும்தான் மிச்சம். இந்தக் காலத்துல பசங்க அப்பா, அம்மாவை வெச்சுக் காப்பாத்தறதே ஆச்சரியம். உனக்கு, மகன், மருமகள் ரெண்டு பேருமே பிரியமாக் கூப்பிடறாங்க. தயங்காமப் போயிடு."

மணிக்கும், கலாவுக்கும் ஒரே சந்தோஷம். "யூ ஆர் கமிங் வித் அஸ் தாத்தா" என்று ஆதித் கட்டிக்கொண்டான். என்னவென்றே புரியாமல் குழந்தை ஆத்யாவும் Huggy தந்தாள்.

ஆமாம், அறுபத்து ஐந்து வயது மரம், தன் வேர்களைப் பெயர்த்துக்கொண்டு அமெரிக்காவில் வேரூன்ற முடிவெடுத்துவிட்டது. ஹரி, பழையாறு, நாகராஜா கோவில், மணிமேடை ஜங்ஷன் எல்லாத்துக்கும் டாட்டா சொன்னேன். நாகர்கோவிலுக்குத் திரும்பிவருவேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

அமெரிக்கா வந்துவிட்டேன். மணியும், கலாவும் எனக்காக லீவு எடுத்திருந்தார்கள். ஆதித், ஆத்யா டே கேர் போகவில்லை. நாள் முழுக்க அரட்டை, குழந்தைகளோடு விளையாட்டு. பெரிய வீடு. சுற்றிலும், சிகப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள். ஒவ்வொரு பூவும் பெரிசு பெரிசாய்… நாகர்கோவில் கலைவாணர் பூங்காவில்கூட இத்தனை தினுசு இத்தனை பெரிசு கிடையாது. வீட்டின் பின்புறம், பிள்ளைத்தாய்ச்சி போல் ஆரஞ்சு, ஆப்பிள் மரங்கள். ரோஜாக்களைத் தொட்டுத் தடவுவேன். ஆப்பிளை மரத்திலிருந்து பறித்துச் சாப்பிடுவேன். அனுபவம் புதுமை. அமெரிக்கா சொர்க்கமாக இருந்தது.

இரண்டு வாரங்கள் ஓடின. மணி சொன்னான், "அப்பா, நாளை முதல் நானும், கலாவும் ஆபீஸ் போகணும். ஆதித், ஆத்யாவுக்கும் கிரெஷ் ஸ்டார்ட்டிங்."

மறுநாள் காலை. ஆறு மணிக்கே வீடு அல்லோல கல்லோலப்பட்டது. பச்சைக் குழந்தைகளை அரைத் தூக்கத்தில் எழுப்பினார்கள். ஏழரை மணிக்கு எல்லோரும் ரெடி. காலையில் மணி குழந்தைகளை டே கேரில் விடுவானாம், மாலை ஆறு மணிக்குக் கலா கூட்டிக்கொண்டு வருவாளாம். இப்படிப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடு.

புறப்படும்போது மணி சொன்னான், "அப்பா, இந்த ஏரியா பத்திரமானதுதான். ஆனால், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்."

"அப்படீன்னா…!"

"யாராவது கதவைத் தட்டினா திறக்காதீங்க. நான் சன் டிவி, ஜெயா டிவி, ஹீரோ டாக்கீஸ் கனெக்‌ஷன் எல்லாம் வாங்கியிருக்கேன்."

எப்படி டி.வி. போடுவது, சினிமா பார்ப்பது என்றெல்லாம் விளக்கினான். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் போய்விட்டார்கள். நான் மட்டும் தனியாய். ஒரே நிசப்தம். என்னை அறியாமலே மனம்முழுக்கப் பயம். வாழ்க்கையில் இத்தனை நிசப்தத்தை நான் அனுபவித்ததே கிடையாது. ஒழுகினசேரியில், குழந்தைகள் விளையாட்டு, அக்கம் பக்கப் பெண்களின் அரட்டை, ஆண்களின் அரசியல் விவாதங்கள், டிவி அலறல் என்று கிராமமே அதிரும். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ரோட்டில் கார்கள்கூட அதிகம் காணவில்லை. மனிதர்களே இல்லாத அத்துவானக் காட்டில் என்னை யாரோ விட்டுப்போனதுபோல் வெறுமை.

வயிறு பசித்தது. டேபிள்மேல் காலைக்கு இட்டிலி, மதிய உணவு, ஃபிளாஸ்க் நிறையக் காப்பி. மருமகள் கலா அன்போடு சமைத்துவைத்துப் போயிருந்தாள். எனக்கு ஒரு குணம். தானாகவே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவது நான் வெறுக்கும் சமாச்சாரம். இதற்கு முக்கிய காரணம் என் தர்மபத்தினி சரோஜாதான். கல்யாணம் ஆகும்வரை அம்மா பரிமாறுவாள். அப்புறம் அத்தனை நாளும் சரோஜாதான். சில கல்யாணங்களில் பஃபே விருந்து இருக்கும். அங்கேயெல்லாம் சரோஜாவே தட்டில் போட்டு எனக்குத் தந்துவிடுவாள்.

இட்டிலி சாப்பிடத் தொடங்கினேன். நானே எடுத்துச் சாப்பிடும்போது, ஒவ்வொரு விள்ளலும் தொண்டைக்குக் கீழ் இறங்க மறுத்தது. டிவி போட்டேன். அதுவும் போரடித்தது. படுத்தேன். என்னை அறியாமலே தூங்கிவிட்டேன். மதியம். கடனே என்று சாப்பாடு.

சாயந்தரம் வந்த கலா பதறிவிட்டாள்.

"மாமா, நீங்க சாப்பிடவேயில்லையே? உப்பு, காரம் ஏதாவது அதிகமாகப் போட்டுட்டேனா? உங்க உடம்பு சரியா இருக்கில்ல?"

"இல்லம்மா. உன் சமையல் சூப்பர். என் உடம்பும் நல்லாத்தான் இருக்குது. ஏதோ ஊர் நினைப்பு."

கலா அப்புறம் மணியோடு வந்து பேசினாள்.

"உங்களுக்கு போரடிக்குதுன்னு நினைக்கிறேன். ஸில்வன் பார்க் பக்கத்தில்தான் இருக்குது. நடக்கிற தூரம்தான். இந்தச் சனி, ஞாயிறு உங்களைக் கூட்டிட்டுப் போய்க் காட்டறேன். நீங்க தினமும் சாயந்தரம் போகலாம்."

சனி, ஞாயிறு போனேன். நிறைய இந்தியக் குடும்பங்கள். ஆதித், ஆத்யாவோடு பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடினேன். ஜாலியான நேரங்கள்.

தினமும் ஸில்வன் பார்க் போகத் தொடங்கினேன். ஒரே ஒரு பிரச்சனை. வீட்டைப் பூட்டினோமா என்று சந்தேகம். இழுத்து, இழுத்துப் பார்ப்பேன். சாவியைப் பத்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறோமா என்று மனசு வேகமாக லப், டப் அடிக்கும். அடிக்கடி சட்டைப் பாக்கெட்டைச் செக் பண்ணிக்கொள்வேன். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன், டென்ஷன்.

அமெரிக்காவில் காலெடுத்து வைத்தாலே வாழ்க்கை எந்திரகதி ஆகிவிடும் போலிருக்கிறது. திங்கள் டு வெள்ளி டிவி, ஸில்வன் பார்க்: சனி, ஞாயிறு சன்னிவேல் கோவில், காஸ்ட்கோ போய் மளிகைச் சாமான்கள், நம்மூர் ஹோட்டலில் சாப்பாடு.

இரண்டு மாதத்தில் அமெரிக்கா வெறுத்துவிட்டது. அதிலும், ஸில்வன் பார்க்கில் பெரும்பாலும் வருபவர்கள் இந்தி, தெலுங்குக்காரர்கள். ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி, தெலுங்கு பேசினார்கள். எனக்கு இரண்டுமே சுட்டுப்போட்டாலும் புரியாது, வராது. ஒரு வயதான தமிழ்த் தம்பதியைப் பார்த்தேன். சிரித்தேன். பதிலுக்குச் சிரித்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னார்கள். அப்புறம், நான் பக்கத்தில் நிற்பதையே மறந்துவிட்டு, அவர்களுக்குள் பேசத் தொடங்கினார்கள். நான் நகர்ந்தேன்.
பார்க் கிரவுண்டில் நான் போகும்போதெல்லாம் சின்னப் பையன்கள் ஸாக்கர் விளையாடுகிறார்கள். அதைப் பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதேநேரம், மனக்குரங்கு எங்கெங்கோ அலைபாயும். வேலை வெட்டி இல்லாத மூளை சாத்தானின் கூடாரமாகும். அமெரிக்கா வந்ததே தப்போ, நாகர்கோவிலிலேயே இருந்திருக்கலாமோ, மணியும், கலாவும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்தது உண்மையாகவே என்மீது இருக்கும் பாசத்தாலா, அல்லது ஆதித், ஆத்யாவுக்கு விளையாட்டுப் பொம்மையாகவா? இப்படி நினைத்த சில நிமிடங்களிலேயே, இப்படிக் கீழ்த்தரமாகச் சிந்திக்கிறோமே என்று என்னையே திட்டிக்கொள்வேன்.

ஒரு வாரமாக ஒரு புதுப்பையன் வருகிறான். ஒன்பது, பத்து வயசு இருக்கலாம். பளிச் முகம். சூம்பிப்போன கால்கள். போலியோ பாதிப்பு. ஊன்றுகோல்களோடு மெள்ள நடந்து வருவான். உடையைப் பார்த்தால், அதிகம் வசதி உள்ளவனாகத் தெரியவில்லை. ஸாக்கர் மைதானம் அருகே ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். தன்னால் விளையாட முடியவில்லையே என்னும் சோகம் அவனுக்குள் நிச்சயம் இருக்கவேண்டும். அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்ப்பான். ஆனால், ஏதோ தயக்கம் தெரியும். என்னிடம் பண உதவி எதிர்பார்க்கிறானோ? எதற்கும், கவனமாக இருப்பது நல்லது.

இன்று அந்தப் பையன் என்னருகே வந்தான்.

"தாத்தா, நீங்க தமிழா?"

"ஆமாம். ஏன்? நீ தமிழா?"

"ஆமாம். நான் உங்க பக்கத்திலே உட்காரலாமா? உங்ககூடக் கொஞ்சம் பேசணும்."

என் மனக்குறளி சொன்னது, "இந்தப் பயல் டாலர்தான் கேட்கப் போறான்."

"தாத்தா, என் பேரு கண்ணன். எங்க ஊரு தர்மபுரி."

"சேலம் பக்கத்தில் இருக்கிற ஊர்தானே?"

"ஆமாம். எங்க அப்பா ரொம்பக் குடிப்பாரு. என் மூணு வயசுலேயே இறந்து போயிட்டாரு. அம்மாதான் என்னை வளத்தாங்க. போன வருஷம், ஒரு கார் விபத்தில் அவங்க உயிர் போயிடிச்சு. ராமகிருஷ்ண மடம் சாமிகள் என்னைக் கூட்டிட்டுப் போய்ப் படிக்கவெச்சாங்க. அங்கே சாமிக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா வந்தாங்க. அரசாங்க அனுமதி வாங்கி என்னைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. நல்லாப் பாத்துக்கறாங்க. வீட்டிலே இங்கிலீஷ் சொல்லித் தர்றாங்க. சீக்கிரமே ஸ்கூல்லே சேப்பாங்க. நான் நல்லாப் படிச்சுப் பெரிய ஆளா வருவேன்."

"ஆசீர்வாதம் தம்பி."

"நன்றி தாத்தா. எனக்கு உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். தப்பா நினைக்க மாட்டிங்களே?"

ஒருவழியாப் பயல் பணந்தான் கேட்கப் போறான்.

"சொல்லுப்பா."

"நீங்க எப்பவும் ஏன் சோகமா உட்கார்ந்திருக்கீங்க?"

"ஏதோ நெனைப்புகள் தம்பி."

"தாத்தா. நான் அநாதை. கால் நடக்கமுடியாது. ஆனால், ராமகிருஷ்ண மடம் சாமியார் என்னைக் கிராமத்திலிருந்து கூட்டிட்டுப் போனது என் அதிர்ஷ்டம். சாந்தி அம்மா அமெரிக்காவுக்கு அழைச்சு வந்தது என் அதிர்ஷ்டம். இதை நெனச்சு, நெனச்சு, நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?"

"நெஜமாவா? எப்படிடா?"

அந்தப் பொடியன் என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனை, என்னிடம் காசுக்குக் கையேந்தி வருகிறவனா நெனைச்ச நானெல்லாம் ஒரு மனுஷனா!

"ராமகிருஷ்ண மடம் சுவாமிஜி எனக்கு ஒரு கதை சொன்னார். மனசுலே வருத்தம் வர்றப்போ எல்லாம், அந்தக் கதையை நினைவுபடுத்திக்கச் சொன்னார்."

"என்னப்பா கதை அது?"

"ரொம்ப நாள் முன்னாடி, ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி. வைத்தியர்கள் வகை வகையா மருந்து கொடுத்தும் குணமாகலே. ஒரு ஜோசியர் வந்தார். ராஜா பச்சை நிறத்தை மட்டும் பாத்துக்கிட்டேயிருந்தா தலைவலி போயிடும்ன்னு சொன்னார். நாடு முழுக்கப் பச்சைப் பெயிண்ட் அடிச்சாங்க. நாட்டில் எல்லோரும் பச்சை டிரெஸ் மட்டுமே போடலாம்னு கட்டளையிட்டாங்க. ஆனா, குதிரை யானை, வானம் நிறங்களை மாற்ற முடியுமா? இவற்றை ராஜா சிலசமயம் பார்த்துவிடுவார். தலைவலியால் துடிப்பார். ராஜாவுக்குத் தெனாலிராமன் மாதிரி ஒரு விகடகவி. ஒரு சுலபவழி சொன்னார், நீங்க பச்சைநிறக் கண்ணாடி அணியுங்க. அப்புறம் நீங்க எதைப் பாத்தாலும், தலைவலி வராது. ராஜா அதைப் பின்பற்றினார். அவர் தலைவலி போயே போச்."

நான் பிரமிப்பில். சந்தோஷம் வெளியில் இருந்து வருவதில்லை. நமக்குள்தான் இருக்கிறது. நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால், இனியெல்லாம் சுகமே என்னும் தத்துவம் இந்தக் குட்டிக்கதைக்குள்ளா?

"தாத்தா. லேட் ஆகுது. சாந்தி அம்மா தேடுவாங்க. வீட்டுக்குப் போறேன். நாளைக்குக் கட்டாயம் உங்க கதையைச் சொல்லுங்க."

ஊன்றுகோல்களின் டொக் டொக் சப்தம். திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறான். எனக்குள் பிரம்மாண்டக் கேள்வி - இவன், வெறும் தர்மபுரிக் கண்ணனா, அல்லது கீதோபதேசக்காரரின் மறுபிறவியா?

வீட்டுக்கு வருகிறேன். என் நடையில் என்னை அறியாமலே, ஒரு துள்ளல். மணி வந்தவுடன், கலா அவனிடம் மெள்ளச் சொல்கிறாள், "ரொம்ப நாளைக்கு அப்புறம், மாமா இன்றைக்குச் சந்தோஷமா இருக்கார்."

நான் மகனிடம் போகிறேன்.

"மணி, பொழுதை வீணாக் கழிக்க எனக்குப் பிடிக்கலே. எங்கேயாவது பார்ட் டைம் வாலன்டியரா ஒர்க் பண்ண முடியுமா?"

"என் ஃபிரண்ட் முகுந்த் நிறைய சோஷியல் ஒர்க் பண்றான். அவன்கிட்டே சொன்னா, உடனே ஏற்பாடு பண்ணுவான். அது சரி, திடீர்னு ஏன் உங்களுக்கு இந்த யோசனை?"

சத்தியமான பதில் என்னை அறியாமலே வரத் துடிக்கிறது, 'நான் கண்ணாடியை மாத்திட்டேன்!'

இதைச் சொன்னால் மணிக்குப் புரியாது. வெளியே வரத்துடிக்கும் வார்த்தைகளை விழுங்குகிறேன். சிரிக்கிறேன். அப்பனுக்கும், மகனுக்குமிடையே புன்முறுவல்கள் ஆயிரமாயிரம் சேதிகள் சொல்லும்.

S.L.V. மூர்த்தி,
மௌன்டன்வியூ, கலிஃபோர்னியா

Tuesday, June 6, 2017

"கவிஞர்கள் எல்லாம் பைத்தியங்கள்தான்

"கவிஞர்கள் எல்லாம்
ஒரு வகையில்
பைத்தியங்கள்தான் " என்றார்
நான் விரும்பும் கவிஞர்

நான் குழம்பிப் போய்
"ஏன் அப்படி ? " என்றேன்

"விரும்பிய ஊருக்குப் போகாமல்
கால்கள் வேறு ஊர் போக
மனம் குழம்பாது
இதுவும் முன்பு
வர விரும்பிய ஊர்தான்
இங்கும் வந்த வேலையைப் பார்ப்போம்
என்பவனை என்ன சொல்வாய் " என்றார்

"நிச்சயம் பைத்தியம்தான் "என்றேன்

"தேடிய பொருள் கிடைக்காது
வேறு பொருள் கிடைக்க
மனம் சலிக்காது
இதுவும் முன்பு
வாங்க விரும்பிய பொருள்தான்
என மகிழ்வாய்  வாங்குபவனை
என்ன சொல்லி அழைப்பாய் " என்றார்

"சத்தியமாய் பைத்தியம்தான் " என்றேன்

"இப்போது பாரேன்
நான் விரும்பியது சரியாய் வராது
வேறொன்று மனதில் தோன்ற
மனம் சலிக்காது
இதுவும் முன்பு எழுத நினைத்ததுதான்
இதை ஒழுங்காய் எழுதுவோம்
என எழுதத் துவங்குகிறேன்
என்னை என்ன சொல்வாய் ?"என்றார்

இப்போது எனக்கு
என்ன சொல்வதென்று தெரியவில்லை

Monday, June 5, 2017

மணத்தோடு மனமும் கொண்ட ...

உலகின் பார்வைக்கு
உன்னுடன்வாழ்வதானப்
போர்வையினைப்போர்த்தியபடி
உன்னுடன் ஒன்றாய்
இருந்து கொண்டிருக்கிறேன் நான்

ஒரு பொழுது கடப்பது
சில வருடங்கள் கடப்பதாய்
ஒரு நாள் கடப்பது
சில யுகங்கள் கடப்பதாய்
ஊர்ந்துக்  கொண்டிருக்கிறது

வலிமையுள்ளதே
வாழத் தகுந்ததான
காட்டு விதிகளின்படி
ஆணெனப்பட்டவனே
ஆளத் தகுந்தவனான
மமதைக் கொண்ட உன்னுடன்
நான் பதுங்கியபடியே
ஜீவித்திருக்கிறேன்

சம்போகத்தில்
வன்முறை ஒரு தனிச்சுகம்
என எண்ணும் நீ
சரச சல்லாபங்களின்
சங்கீதச் சுகங்களைச்
சுகித்தறிய வாய்ப்பே இல்லை

புல்லாங்குழலில்
துளையில்லாதிருப்பின்
அடுப்பூத   உதவும் என்ற  உன்னுடன்
நட்சத்திரங்கள் சொல்லும்
சங்கேத உணர்வுகள் குறித்து
எப்படிச்  சம்பாஷிக்க முடியும்  ?

 அதிகம் கொடுத்து
அதிகம் பெறுதலின்றி
எடுத்தல் ஒன்றே நோக்கமெனக்
கொண்ட உன்னுடன்
என் மன உணர்வுகளை
எப்படி விரித்து வைக்க முடியும்  ?

இப்போது கூட
என் கவிதைகளுக்கு  ஊற்றான
நித்திய இரசிகர்களான
தோட்டத்து ரோஜாக்களை
 
"இன்றாவது  பறித்துவை .
குல்கந்துக்காகும் "
எனச் சொல்லிச் செல்கிறாய்
கூடுதல் சப்தமாகவே

விடிதலை
வாய்ப்பாக உணரத்
தயாரிக்கப்பட்ட நீ 

மலர்களுக்குக்  கேட்டிருக்குமோ
பதறுமே ,பதட்டமுறுமே
என அச்சமுற்றபடி
தோட்டம் விரைகிறேன்
  
விடிதலை
மலர்தலாக  உணரப்
பயிற்றுவிக்கப் பட்ட  நான்

பறிக்காமலே
உதிர்க்காமலே
ஒவ்வொரு மலராய்
என மடி விழத் துவங்குகிறது
மணத்தோடு மனமும் கொண்ட
அந்த செந்நிற மலர்கள்

என் கண்கள்
கலங்கத் துவங்குகிறது

Sunday, June 4, 2017

கலைஞரும் காவேரியும் ( 2 )

தலைப்பைப் படித்ததும் காவேரி நீர்க்குறித்தும்
அது தொடர்பான கலைஞரின் நிலைப்பாடுகள்
குறித்தும் எதுவோ எழுதப் போகிறேன்
என நினைத்திருப்பீர்கள்.
இந்தப் பதிவு அது குறித்தல்ல

எங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த
காவேரி மணியன் குறித்தும் அவர் தொடர்பாக
கலைஞரின் சாமர்த்திய பேச்சுக் குறித்தும்.

1971 இல் எங்கள் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினராக
இருந்தவர் காவேரி மணியம் அவர்கள்.
இவர் வழக்கறிஞர்.எங்கள் ஊர்க்காரர்.
மதுரை நகர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர்
சிறந்தப் பண்பாளர்.

இவரின் செயல்பாடுகள் சட்டமன்ற உறுப்பினராக
இருக்கையில் எப்படி இருந்தது என்பதற்கு
ஒரு உதாரணம்வேண்டுமானால் சொல்லலாம்

இவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கையில்தான்
மிஸா சட்டம் அமல்படுத்தப்பட்டது

அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு. க. மீது
 அதிகாரிகள் மத்தியிலும் மக்கள்
மத்தியிலும் ஒரு கசப்புணர்வு இருந்தது நிஜம்

பல இடங்களில் தி. மு. க கட்சியின் பொறுப்பாளர்கள்
மக்கள் பிரதிநிதிகள் எல்லாம்
கைது செய்யப்பட்டபோது
மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.

சிலர் மிக மோசமாக தாக்கவும்பட்டார்கள் என்பதும்
அனைவரும் அறிந்த விஷயம்

அந்தக் கைது செய்யப் படவேண்டிய நள்ளிரவில்
இவரைக் கைது செய்ய வீடு வந்த மாவட்டப்
போலீஸ் அதிகாரி இவரிடம் கைது வாரண்டைக்
காண்பித்து "உங்களை உடன் கைது செய்து
எங்கள் பொறுப்பில் மறு உத்தரவும் வரும் வரை
வைத்திருக்க உத்திரவு.மாநிலத்தில் கட்சியில்
அனைத்து உயர் பொறுப்பில் இருந்தவர்களியெல்லாம்
கைது செய்து காவல்  நிலையத்தில் வைத்து
இருக்கிறார்கள். தாங்கள் கைது செய்யப்பட்டதாக
உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பி விடுகிறேன்
தாங்கள் வீட்டிலேயே மறு உத்தரவும் வரும்வரை
வெளியில் செல்லாமல் இருக்கவும் " என கேட்டுக்
கொண்டு சென்று பின் அழைத்துச் சென்றது
என்பது அப்போது மிகப் பெரிய விஷயமாகப்பட்டது

காரணம் அப்போது காவல் செய்யக் 
கிடைத்த வாய்ப்பை தாங்கள் கொண்டப் 
பகைமையைத் தீர்த்துக் கொள்ள
பல காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்திக்
கொண்டிருந்த வேலையில்,இவ்வளவு
மரியாதையாக நடத்தப்பட்டவர் நிச்சயம்
இவராகத்தான் இருக்கச் சாத்தியம்.காரணம்
இவர் பதவியில் இருக்கையில்
அவரின் அணுகுமுறைஅத்தனை
சாத்வீகமாக இருக்கும்

மேலும் மதுரையில் மிஸாவில்
கைது செய்யப்பட்டவர்கள்எல்லாம்
மருத்துவக் காரணம் காட்டி,அல்லது
மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளிவர
இவர் மட்டும் சட்ட ரீதியாக விடுதலை
செய்யும் மட்டும்சிறையிலேயே காலம் கழித்தவர்

இத்தனைச் சிறப்புக்களையும் விரிவாகக் சொல்லிச்
சொல்லிச் சென்றால்தான் அடுத்துச் சொல்ல வருகிற
விஷயம் சுவாரஸ்யப்படும்

இந்தச் சூழலில் தி.மு.க சார்பாக
ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு செய்யப்படவேண்டிய
நிலையில் ,அதில் ஒருவர் மதுரையைச் சார்ந்த
புறநகர் மாவட்டச் செயலாளரான அக்கினி ராசு
அவர்கள் அல்லது காவேரிமணியன்
அவர்கள் ஆகிய இருவரில் யாருக்கேனும்
ஒருவருக்கு என இருக்க

முடிவாக  அந்தப் பதவிக்கு அக்கினிராசு
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
இந்த விஷயம் காவேரிமனியம் அவர்கள் மீது
அபிமானம் கொண்டவர்கள் அனைவருக்கும்
கொஞ்சம் மனம் வருத்தம் தந்த
நிகழ்வாக அமைந்தது

இந்தச் சூழலில் காவேரிமணியம் வீட்டு
இல்ல விழா ஒன்றில் கலைஞ்ர் அவர்கள்
தலைமையேற்று நடத்திக் கொடுக்க
வந்திருந்தபோது

அந்தக் கூட்டத்தில் பேசிய முக்கியஸ்தர்கள்
சிலர் காவேரிமணியம் அவர்கள் மிகச் சரியாக
கௌரவிக்கப்படவில்லை என்பதை மிக
நாசூக்காகப் பேசிவைக்க,அதற்கு பதில்
சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற
சூழல் அந்தக் கூட்டத்தில் இருந்தது
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும்
ஒரு எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில்
கலைஞர் அவர்கள் தனது சிறப்புரையில்
இப்படிப் பேசினார்

"சிலர் அக்கினிக்கு முக்கியம் தரப்பட்டது
குறித்தும் காவேரிக்கு முக்கியத்துவம் தராதது
குறித்தும் தங்கள் ஆதங்கத்தினைப் பதிவு
செய்தார்கள்

இதுகுறித்து இங்கு விரிவாகப் பேசமுடியாது
என்றாலும் கூட ஒரு விஷயத்தை நான் இங்குக்
குறிப்பிடமுடியும்.

அது அக்கினியின் ஜுவாலை எந்தச் சூழலிலும்
மேல் நோக்கியதாகவும்காவேரி நீரின் பயணம்
கீழ் நோக்கியதாகவே இருக்கும்

அதன் பொருட்டே ஒன்று சிறப்புப்பெற்றது
என நாசூக்காக சொல்லிப் போனார்

மேல் நோக்கிய பயணம் என்னவென்பது
கலைஞருக்கும் சம்பந்தப்பட்ட இருவருக்கும்
அவர்களுடன் நெருக்கமாக இருந்த சிலருக்கும்
மட்டுமே இன்று வரை தெரிந்த ராஜ இரகசியம்

ஆனாலும் இதற்கான பதிலை எதிர்பார்த்து
ஆவலுடன் இருந்த கூட்டத்தினருக்கு
ஒரு தவிர்க்க முடியாத, சொல்லமுடியாத
ஒரு விஷயத்தைச் சொன்னதுபோலவும்
ஏதோ காரணம் இருப்பது போல் ,ஒரு
இலக்கியத் தரமாக ஒரு சூசகமாக
ஒருவிஷயத்தை சொன்ன ராஜதந்திரத்தை
அந்தக் கூட்டம் இரசித்தது

அதில் நானும் இருந்து மிகவும்இரசித்தேன்

அந்த மேல் நோக்கிப் பாய்ந்த இரகசியம்
என்ன வென்று தெரிந்தவர்களில் நானும்
ஒருவனாக இருந்ததால் கொஞ்சம்
கூடுதலாகவே...

Saturday, June 3, 2017

கலைஞரும் சமயோசிதமும் ( 1 )...

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில்
ஒரு நிகழ்ச்சி.அது கவிதைப் போட்டியில்
வென்றவருக்கு பரிசு வழங்கிக் கௌரவிக்கும்
நிகழ்வாய் இருந்ததால் முதல்வராக
கலைஞர் அவர்களும்,
மற்ற அமைச்சர் பெருமக்களும்
தமிழ் அறிஞர்களும் பெருந்திரளாகக்
கலந்து கொண்ட ஒரு அருமையான நிகழ்வு

(அன்று இரவில் தான் ஆட்சிக் கலைக்கப்பட்டு
மிஸா அமலபடுத்தப்பட்டதாக ஞாபகம்)

மேடையில் ஒருபுறம் கலைஞர் உட்பட
அமைச்சர் பெருமக்கள் அனைவரும்
இருக்கையில் அமரவைக்கப்பட்டிருக்க
தமிழ் அறிஞர்கள் அனைவரும் அவர்களைக்
கௌரவிக்கும்விதமாக மிகச் சிறப்பாக
சம தளமாக படிக்கட்டு அமைப்பில்
அமைக்கப்பட்டிருந்த மேடையில்
அமர வைக்கிப்பட்டிருந்தார்கள்

அதன் காரணமாக அமைச்சர் பெருமக்கள்
அனைவரும்  கலைஞர் உட்பட  எழுந்து வந்து
 நின்றுஒலி வாங்கியின் முன் பேசும்படியாகவும்
அறிஞர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில்
தங்கள் இடத்திலிருந்தே பேசும்படியாகவும்
அமைந்தது

இந்த அமைப்பை மேடையில் இருந்த
அனைவரும் கீழே இருந்து இரசித்துக்
கோண்டிருந்த அனைவரும்தான்
 பார்த்துக் கொண்டிருந்தோம்
எங்களில் யாருக்கும் , ஏன் சிறப்புரையாற்றிய
அறிஞர் பெருமக்கள் யாருக்கும் கூட
அந்த அமைப்புக்கு குறித்து ஏதும்
தோன்றவில்லை  

ஆயினும் கலைஞர் தனது சிறப்புரையில்
"இந்த அரசு தமிழின் பால்  தமிழறிஞரின்பால்
அதிக மரியாதையும் மதிப்பும்
கொண்டிருக்கிறது

அதன் காரணமாகவே
அமைச்சர் பொறுப்பில் இருக்கிற
நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று பேச
தமிழ் அறிஞர் பெருமக்கள் எல்லாம்
அமர்ந்தபடியே உரையாற்ற ஏற்பாடு
செய்ததைக் கொண்டே நீங்கள் இதைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள் " என
அந்தச் சூழலை மிகப் பொருத்தமாகப்
பயன்படுத்திப் பேசியதை இரசித்த
கூட்டத்தின் கரகோஷம் அடங்க
வெகு நேரம் பிடித்தது

அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாய்
இருந்து அவரின் சமயோசிதமாய்ப் பேசியதை
இரசித்து மகிழும்படியான வாய்ப்புக் கிடைத்ததை
இன்று அவருக்கே ஆன நாளில் நினைவு
கூர்வதிலும் அதிப் பதிவு
செய்வதிலும் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

உழைப்பு என்றும் சலியாத உழைப்பு அதுவே
கலைஞரின் சிறப்பு என்பதை பதிவு செய்வதிலும்...

Friday, June 2, 2017

மாட்டுக் கறி குறித்து ... ..

ன்று இன்று தமிழகத்தில் 10 ஆண்டுகள் பூர்த்தியான மாடுகளை அதை இறைச்சி கூடங்களில் நேரடியாக விற்கலாம். சந்தைகளில் விற்க கூடாது.
விவசாய பயன்பாட்டுக்காக மாடுகளை சந்தையில் விற்கலாம். ஆனால் சந்தையில் இருக்கும் அதிகாரிகளிடம் வாங்குபவர், விற்பவர் விவசாயியாக இருக்க வேண்டும்.
இறைச்சி கூடங்களில் 10 வயதிற்கு குறைவான மாடுகளை கொள்முதல் செய்யகூடாது. ஏன்னா இன்னும 10 குட்டி போட்டு, பால் குடுக்க தகுதியான மாட்டை இளம் வயதிலாயே கொல்லக்கூடது என்பது தான் அரசின் நோக்கம்.
சந்தைகளில் விவசாயிகளிடம் வாங்கும் மாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு மறுவிற்பனை செய்ய கூடாது. காரணம் விவசாயிகள் என்னும் போர்வையில் சந்தையில மாட்டை வாங்கி அடுத்த நாளே மறுவிற்பனையாக அடிமாட்டுக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது.
இறைச்சி ஏற்றுமதியாளர்கள் 10 வயதிற்கு மேலான மாடுகளை விவசாயிகளிடம் நேரடியாக , மாடு அறுவை கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்யலாம். இது தான் அரசு கொண்டு வந்துள்ள விதிமுறை
. இதில் எங்கேயுமே மாட்டு கறி கூடாதென்றோ..., மாடுகளை விற்க கூடாதென்றோ குறிப்பிடவில்லை. ஒரு மாட்டை கறிக்காக விற்கும் போது குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என தான் கூறியுள்ளது

இதை தான் கேரள உயர்நீதிமன்றமும் சொல்லி, பினராய் விஜயன் அரசை குட்டியுள்ளது

முக நூலில் நண்பர் Raja Udaykumarபதிவு செய்ததிலிருந்து ...நன்றியுடன்

Thursday, June 1, 2017

சென்னை சில்க்ஸின் பாதிப்பும் அதன் பெருந்தன்மையும்...

கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்
அவரை விழ்த்துவதற்கென்றே
மிகத் துல்லியமாக வீசப்பட்ட  ஒரு பந்தை
அவதானிக்கையில் சிறு கவனப்பிசகு
நேர்ந்தாலும் ஸ்டம்பினைத் தகர்க்கும்
நிலையில்

மிகச் சரியாகக் கவனித்து அதை
ஒரு சிக்ஸராக மாற்றுபவர் எப்படி
மிகச் சிறந்த பேஸ்மெனாக கருதப்படுகிறாறோ

அதைப் போல...

சமாளிக்கவே முடியாத சோதனை
ஏற்படுகையில் அதில் தனக்கு நேர்ந்த
இழப்புகள் குறித்து மட்டும் கவனம்
கொள்ளாது,

அதனால் தன்னைச் சார்ந்துள்ள
யாரும் பாதிக்கப்பட்டுவிடாமல் இருக்கும்படியாக
அதிகம் கவனக் கொள்கிற நிறுவனமும்
நிர்வாகத்தினரும் மிகச் சிறந்த நிர்வாகமாகவும்
நிர்வாகத்தினராகவும் மதிக்கப்படுவர்

அந்த வகையில் மிகப் பெரிய பாதிப்பை
அடைந்த போதும் அது குறித்து மட்டுமே
கவன்ம் கொள்ளாது, உடன் தங்கள்
நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்
அனைவருக்கும் தாமதம் செய்யாது
இம்மாத ஊதியத்தை
உடன்பட்டுவாடா செய்ததோடு,

உடன் அவர்களை தன் நிறுவனத்தில்
 பிற கிளைகளில்பணியமர்த்த ஏற்பாடுகளைச்
செய்து கொண்டிருக்கிற
சென்னை சில்க்ஸ் நிறுவனம்
மக்கள் மனங்களில் ஒரு போற்றத்தக்க
மதிப்பினைப் பெற்றுள்ளது என்றால்
நிச்சயம் அது மிகையில்லை

அந்த நிறுவனம்  இந்தப் பேரதிர்வில்
இருந்து விரைவில் மீளவும், மீண்டும்
தனக்கான மதிப்பான நிலையைத்
தொடர்ந்து தங்க வைத்துக் கொள்ளவும்
இத்தனைப்பெரிய மோசமான சம்பவத்திலும்
உயிர் இழப்பு ஏதும் நேராதபடி அருளிய
எல்லாம் வல்ல இறைவன் இதற்கும்
அருள் புரியவேண்டிக் கொள்வோமாக  

முயன்று அடைந்தே மகிழ்வோம்

"முயலாமைக் கதையில் "
ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே


யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   ஆயினும்
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க

 சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே


முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு


மெத்தனத்தில் ஜெயித்த
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
முயன்று  அடைந்தே மகிழ்வோம்