Wednesday, June 20, 2018

காலா ( 2 )

(http://yaathoramani.blogspot.com/2018/06/blog-post_13.html க்குத் தொடர்ச்சியாக )
 )

காலா வெளியாகி முதல் வார ஞாயிறு
என்பதால் கொஞ்சம் முன்னதாகவே போகலாம்
என நினைத்து அரை மணி நேரம் முன்னதாகவே
தியேட்டருக்குப் போனோம்

நான்கு தியேட்டர் உள்ள வளாகம் என்றாலும்
கூட்டம் அவ்வளவாக இல்லை. மிகக் குறிப்பாய்
நம்மவர்கள் மிகக் குறைவாக இருந்தார்கள்.
அதில் மிக லேசாகப் புன்னகைத்தவரை நெருங்கி
எப்போது அனுமதிப்பார்கள் எனக் கேட்டுச்
சினேகம் ஏற்படுத்திக் கொண்டேன்

"நீங்கள் ரஜினியின் தீவீர இரசிகரா " என்றார்
அவர்

"இல்லை அப்படியெல்லாம் இல்லை
ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் " என்றேன்

"இல்லை பொதுவாக இங்கு முதல் வாரத்தில்
அபிமான நடிகரின் தீவிர ரசிகர்கள் தவிர யாரும்
படம் பார்க்க வரமாட்டார்கள். காரணம்
முதல் வாரத்தில் டிக்கெட் விலை 20 டாலர்
மறுவாரம் என்றால் 7 டாலர் தான். அதுதான்
கேட்டேன் " என்றார்

"என்ன் இருபது டாலரா அப்படியானால்
வந்திருக்கமாட்டேனே.என் பெண் ஆன்லயனில்
டிக்கெட் எடுத்துக் கொடுத்துப் போய்ப் பார்த்து
வாருங்கள் என்றாள்.டிக்கெட் விவரமெல்லாம்
சொல்லவில்லை " என்றேன்

"சரிதான் சொன்னால் நிச்சயம் நீங்கள் வேண்டாம்
எனச் சொல்லிவிடுவீர்கள் எனச் சொல்லாமல்
இருந்திருக்கலாம். ஆன் லயன் டிக்கெட் என்றால்
நீங்கள் இங்கு நிற்க வேண்டாம். நேரடியாக
இந்த வழியாக உள்ளே செல்லலாம் " என
ஒரு வழியைக் காட்டினார்.

நான்கு தியேட்டர் உள்ள அந்த தியேட்டர்
வளாகத்தில் டிக்கெட்டைக் காண்பித்து
உள்ளே சென்று அமர்ந்தோம்,எமக்கு முன்பாக
ஒரே ஒரு குடும்பம் மட்டும் அமர்ந்திருந்தது

நாங்கள் எங்களுக்கு விருப்பமான இடத்தை
தேர்வு செய்து அமர்ந்தோம்
அப்போதுதான் புறப்படும் முன்பு என் பெண்
எப்போதும் சொல்லும் "அப்பா அமெரிக்கா வந்தால்
எப்பவும் நீ ஒரு பழக்கத்தை விடணும்.ஒன்னு
இந்தியாவுடன் எதெற்கெடுத்தாலும்
கம்பேர் பண்ணிப் பார்ப்பது மற்றொன்று
எந்தச் செலவையும்
ரூபாய்க்கு கன்வெர்ட் பண்ணிப் பார்ப்பது "
எனச் சொன்னது ஞாபகம் வந்தது

என்னால் கம்பேர் பண்ணிப் பார்க்காமல் எப்படி
இருக்கச் சாத்தியம்.எண்பது பைசா டிக்கெட்டே
அதிகம் என்று எழுபது பைசாவுக்கு முயன்ற நான்
ஒரு டிக்கெட் ஏறக்குறைய 1300/ ரூபாய் என்றால்..?

அனேகமாக என் வாழ் நாளில் அதிகப்
பணம் கொடுத்துப் பார்க்கிற படம் இதுதான்
நிச்சயம் கடைசியாக இருக்கும்
இனி எப்போது இங்கு சினிமா டிக்கெட் எடுத்து
போனாலும் விலை விசாரித்துதான் போக வேண்டும்
என முடிவெடுத்துக் கொண்டிருக்கையில்
தவிர்க்க இயலாமல் நான் முதன் முதலாகப் பார்த்த
சினிமாவின் ஞாபகம் நெஞ்சில் நிழலாடியது

மெல்லச் சிரித்துக் கொண்டேன்.விவரித்தால்
உங்களாலும் சிரிக்காமல் இருக்க முடியாது

( தொடரும் )

20 comments:

K. ASOKAN said...

மண் வாசனை விடுமா சார் பாராட்டுகள்

Yaathoramani.blogspot.com said...

Asokan Kuppusamy //

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
முதல் வரவுக்கும் சுருக்கமான
ஆயினும் அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

காலம் மாறினாலும், நம் இயல்பை மாற்றுவதென்பது கொஞ்சம் கடினந்தான். அடுத்து என்னவென்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Avargal Unmaigal said...

இந்த ரஜினிகாந்த் படத்திற்குதான் அதிக கூட்டமில்லை இதற்கு முன்பு வந்த படங்களுக்கு எல்லாம் மிக அதிக கூட்டம் வரும் .. நான் அவரின் பட்த்தை கடைசியாக தியோட்டரில் பார்த்தது சிவாஜிபடம்தான் அதுவும் என் உறவினர் ஒருவர் டாக்டர் அவர் கான்ப்ரண்ஸிற்காக் நீயூஜெர்ஸி வந்த போது அதற்கு செல்லாமல் அதிகாலையிலே க்யூவில் நின்று மதியம் படத்திற்கு டிக்கெட் வாங்கி எங்களை கூப்பிட்ட பின்பே படம் பார்க்க சென்றோம் மிக சரியான கூட்டம் தமிழகத்தில் படம் பார்பது போன்று ஒரு உணர்வு...

ரஜினியின் படம் பார்க்க சென்றால் அவ்ர் எப்படி நடித்து இருக்கிறார் நல்ல கதையாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் ஆனால் நம் தமிழர்கள் அவரின் அரசியல் பேச்சை பார்த்து புறக்கணித்து இருக்கிறார்கள். அரசியலில் வேண்டும் என்றால் அவரை புற்க்கணிக்கலாம் ஆனால் படம் பார்க்காமல் அரசியலுக்காக தை புற்க்கணிப்பது என்பது சரியல்ல

ஸ்ரீராம். said...

உங்கள் அந்த முதல் பட அனுபவத்துக்காகக் காத்திருக்கிறேன். எதையும் இந்திய மதிப்பில் கன்வெர்ட் பண்ணிப் பார்ப்பதை விட்டுவிட வேண்டும் என்று உங்கள் மகள் சொன்னது சரிதான்!

KILLERGEE Devakottai said...

வெளிநாடு செல்பவர்கள் இந்திய மதிப்பீட்டை ஒப்பிடாமல் இருக்கவே முடியாது. ஒரு சிலரைத் தவிர...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முதல் பட அனுபவம் எப்படியோ? கிட்டத்தட்ட அதே தொகையைக் கொடுத்து தமிழ்நாட்டிலும் பலர் காலாவை பார்த்ததாக செய்தி.

G.M Balasubramaniam said...

ஏன் படம் பார்க்க வேண்டும். சில நாட்கள் போனால் யாரும்சீந்தாமலேயே படம்பார்க்க முடியும் என்றால்

வை.கோபாலகிருஷ்ணன் said...

// "அப்பா அமெரிக்கா வந்தால்
எப்பவும் நீ ஒரு பழக்கத்தை விடணும்.ஒன்னு
இந்தியாவுடன் எதெற்கெடுத்தாலும்
கம்பேர் பண்ணிப் பார்ப்பது மற்றொன்று
எந்தச் செலவையும்
ரூபாய்க்கு கன்வெர்ட் பண்ணிப் பார்ப்பது "//

அவர்கள் மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். என் பிள்ளையும் அப்படித்தான் என்னிடம் சொன்னான். ஆனால் நம்மால் அதுபோலெல்லாம் சுலபமாக நம்மை நாமே மாற்றிக்கொள்வதும் இயலாது ஒன்றுதான்.

தொடரட்டும்..............

வெங்கட் நாகராஜ் said...

1300 ரூபாய் கொடுத்து சினிமா - வித்தியாச அனுபவம் தான்.....

தொடர்ந்து தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //அவர்கள் மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். என் பிள்ளையும் அப்படித்தான் என்னிடம் சொன்னான்//.

ஆம் இரண்டையும் செய்தால்
இங்கு எதையும் திருப்தியாய் அனுபவிக்க
முடிவதில்லை/ஆனாலும் பழக்கதோஷம்
தவிர்க்கவும் முடியவில்லை


Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam /
விமர்சனங்களும் பிறரின் கருத்துக்களும்
நம்முள் படம் குறித்த ஒரு அபிப்பிராயத்தை
ஏற்படுத்தும் முன்பு பார்க்க நினைப்பதால்
வருகிற அவசரம்தான்.நீங்கள் சொல்வதும் சரிதான்

Yaathoramani.blogspot.com said...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University //
உண்மைதான் ஆயினும் பழைய வேகம் இல்லை
எனவும் சொல்கிறார்கள்

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //

நீங்கள் சொல்வது மிகச் சரி
மிகச் சிலராலே மட்டும்தான்
அப்படி இருக்கச் சாத்தியம்

Yaathoramani.blogspot.com said...

Kamala Hariharan //தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal said..//.ரஜினியின் படம் பார்க்க சென்றால் அவ்ர் எப்படி நடித்து இருக்கிறார் நல்ல கதையாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் ஆனால் நம் தமிழர்கள் அவரின் அரசியல் பேச்சை பார்த்து புறக்கணித்து இருக்கிறார்கள். அரசியலில் வேண்டும் என்றால் அவரை புற்க்கணிக்கலாம் ஆனால் படம் பார்க்காமல் அரசியலுக்காக தை புற்க்கணிப்பது என்பது சரியல்ல//

ஆம் இதை படம் எடுப்பவர்களும்
நடிப்பவர்களும் உணர்ந்தால் நல்லது இல்லையா

வை.கோபாலகிருஷ்ணன் said...

2004-ம் ஆண்டு நான் துபாய் சென்றிருந்த போது, பிள்ளையார் சதுர்த்திக்கு முதல்நாள், ஒரு களிமண் பிள்ளையார் வாங்க வேண்டி, போகவர காரில் சுமார் 100 கிலோமீட்டர் போய், பார்க்கிங் ஸ்லாட் கிடைக்காமல் சுற்றிச் சுற்றி வந்து, ஒரு வழியாக கட்டணம் கட்டி, காரைப் பார்க் செய்து, கொஞ்ச தூரம் ஒரு சந்தினில் நடந்து சென்று, அங்கு தமிழில் விளம்பரப் பலகை வைத்திருந்த ‘பெருமாள் பிள்ளை பூக்கடை’ என்ற கடையில் ஒரு மிகச்சிறிய களிமண் பிள்ளையார் வாங்கிவந்தோம்.

’காலா’வுக்கான தங்கள் மகளின் ஆன்லைன் புக்கிங் போல, என் மகன் ஏற்கனவே அந்தக்கடைக்கு போன் செய்து, ரிஸர்வேஷன் புக்கிங் செய்யப் பட்ட களிமண் பிள்ளையார் அது. மேலும் இன்னொரு பிள்ளையார் கேட்டு யாரேனும் வந்தால் அங்கு ஸ்டாக் கிடையாது. நம்மூரில் அந்த காலத்தில் ரூ. 10 அல்லது ரூ. 20க்கு வாங்கக்கூடிய அந்த களிமண் விநாயகருக்காக அன்றைய செலவு (Including all overheads) சுமார் ரூ. 1000 இருக்கும்.

இதைப்பற்றி கூட என் பதிவினில் அப்போதே வேடிக்கையாக விவரித்து எழுதியுள்ளேன்.

அதற்கான இணைப்புகள்:

(1) http://gopu1949.blogspot.com/2011/08/1-of-2.html

(2) http://gopu1949.blogspot.com/2011/08/2-of-2_31.html


தலைப்பு: காலம் மாறிப் போச்சு [ பகுதி-1 & பகுதி-2 ]

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //.’காலா’வுக்கான தங்கள் மகளின் ஆன்லைன் புக்கிங் போல, என் மகன் ஏற்கனவே அந்தக்கடைக்கு போன் செய்து, ரிஸர்வேஷன் புக்கிங் செய்யப் பட்ட களிமண் பிள்ளையார் அது. மேலும் இன்னொரு பிள்ளையார் கேட்டு யாரேனும் வந்தால் அங்கு ஸ்டாக் கிடையாது. நம்மூரில் அந்த காலத்தில் ரூ. 10 அல்லது ரூ. 20க்கு வாங்கக்கூடிய அந்த களிமண் விநாயகருக்காக அன்றைய செலவு (Including all overheads) சுமார் ரூ. 1000 இருக்கும்.

இதைப்பற்றி கூட என் பதிவினில் அப்போதே வேடிக்கையாக விவரித்து எழுதியுள்ளேன்.//
இணைப்பைத் தொடர லிங்க் கொடுத்தமைக்கு நன்றி
ஏற்கெனவே படித்தது செய்தியாக நினைவிலிருந்தாலும்
மீண்டும் படிக்கச் சுவையாக இருந்தது
வாழ்த்துக்களுடன்...


இணைய திண்ணை said...

படத்தின் டிக்கெட் விலை நிர்ணயப்பதில் இவ்வளவு சூட்சமம் இருக்கிறதா? நம்ம ஊர் என்றால் ப்ளாக்கில் விற்று பணம் பார்த்திருப்பார்கள்.

உங்கள் முதல் பட அனுபவ பகிர்விற்காக காத்திருக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

இவ்வளவு தொகை கொடுத்துப் படம் பார்க்கத்தான் வேண்டுமா?
தமிழகத்திலும் இப்படித்தான் பணத்தைக் கொட்டிக் கொடுத்துப் பார்க்கிறார்கள்

Post a Comment