Friday, February 14, 2020

கவியாகும் காதலன்...

நிச்சயமாகச் சொல்கிறேன்
நான் கவிஞனில்லை
கற்பனைக்கும் எனக்குமான தூரம்             எப்போதும் மிக மிக அதிகமே
தொடர் சிந்தனைக்கும் எனக்கும்                      என்றும் தொடர்பு இருந்ததே இல்லை

ஆயினும்
என்னுடன் இருந்து நீ பிரிந்த
சில நிமிடங்களில்...

திரு விழா முடிந்த மறு நாளில்
அனைத்து அலங்காரங்ளையும் இழந்து
அலங்கோலமாய்க் கிடக்கும்
வெட்டவெளி மைதானமும்

அறுவடை முடிந்து அம்மணமாகி
வானம் பார்த்து வெறித்து
அடுத்த விதைப்புக்கு ஏங்கிக் கிடக்கும்
பொட்டலான வயல்வெளியும்

கடைசிப் பேருந்தும் போய்விட
அழுது வடியும் தெரு விளக்கு வெளிச்சத்தில்
விடியலுக்கு ஏங்கிக் கிடக்கும்
கிராமத்துப் பேருந்து நிலையமும்

கோடை விடுமுறைப் பள்ளியும்
நீர் நின்று போன தெருவோரக் குழாயடியும்....

இன்னும் இதுபோல் பிறவும்
தொடர்ச்சியாய் காட்சியாய்                               
 என்னுள் நிறைய
கவிஞனாகி விடுவேனோ என.   
எனக்கே  பயமாயிருக்கிறது

எனக்காக இல்லையெனினும்
பாவம் கவிதையைக் காப்பாற்றவாவது
என்னை விட்டுப் பிரியாதிருக்க முயற்சி செய்

5 comments:

Kasthuri Rengan said...

பிரிவு தானே கவிதை தரும்...

சிகரம் பாரதி said...

//இன்னும் இதுபோல் பிறவும்
தொடர்ச்சியாய் காட்சியாய்
என்னுள் நிறைய
கவிஞனாகி விடுவேனோ என.
எனக்கே பயமாயிருக்கிறது//

இதை விட வேறு என்ன கவிதை வேண்டும்? அருமை. பின்னிட்டீங்க. உவமைகளும் தனிச்சிறப்பு.

நீண்ட நாட்களுக்குப் பின் வலைத்தளத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம் ◌ா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

/இன்னும் இதுபோல் பிறவும்
தொடர்ச்சியாய் காட்சியாய்
என்னுள் நிறைய
கவிஞனாகி விடுவேனோ என.
எனக்கே பயமாயிருக்கிறது/

கவிஞர் வடித்த கவிதை அருமை. ஒவ்வொரு வரிகளும் உவமானத்துடன் அழகாக பிறந்திருக்கிறது. மிகவும் ரசித்தேன்.
ஒன்று மட்டும் உண்மை...! கவிதைக்கும், உங்களுக்கும் எந்நாளும் எப்போதும் பிரிவென்பதேயில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த பொய்யான பயத்தை ரொம்பவும் ரசித்தேன்...

Post a Comment