Thursday, February 27, 2020

காக்கை தந்த ஞானம்..

கடிகார முட்கள் கூட
தவறான நேரத்தைக் காட்டி விடக்கூடும்
அந்தக் காக்கைகள் மட்டும்
நேரம் தவறி  வந்ததே இல்லை

"அந்தச் சனியன்கள் மிகச் சரியாக வந்துவிடும்
உலை வைக்கணும் " என
கோபப்படுவது போல் பேசினாலும்
காக்கைகளின் மேல் பாட்டிக்கு
வாஞ்சை அதிகம்

முதல் நாள் சாப்பாடு மிஞ்சிய நாட்களில்
எங்களுக்காக சமைக்காவிட்டாலும் கூட
"பிடிச்சபிடி " என காக்கைக்கென
தனியாக உலைவைப்பாள் பாட்டி

பாட்டி மரித்துப்போன அந்த நாளில்
வந்திருந்த காக்கைகளுக்கு
உணவிட முடியவில்லை
அவைகளும்  செய்தியறிந்து வந்ததுபோல
எப்போதும் போலக் கூச்சலிடாது
வெகு நேரம் மரத்தின் மேல்
அமர்ந்திருந்து போயின

சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து
பாட்டியின் நினைவாக
நாங்களும் காக்கைக்கு உணவு கொடுக்க
எத்தனை முறை முயன்றபோதும்
அந்தக் காக்கைகள் மட்டும் ஏனோ
வீட்டுப் பக்கம் வரவே இல்லை
அன்று அதற்கான காரணமும் புரியவில்லை

சம்பிரதாயத்திற்கும் அன்னியோன்யத்திற்குமுள்ள
சிறு மாறுபாடு எனக்குப் புரிகிற இந்த நாளில்
கடனெனச் செய்தலுக்கும் படைப்பதற்குமுள்ள
பெரும் வேறுபாடு பறவைகளுக்கும் புரியும் எனப்
புரிந்து கொள்கிற இந்த வேளையில்

கான்கிரீட் காடுகளில் காலத்தின் கட்டுப்பாட்டில்
கையாளாகாதவர்களுள் ஒருவனாய்  நான்...
மனிதன் மீது நம்பிக்கை முற்றாக இழந்து
கண்காணாது நிம்மதியாய் எங்கோ அவைகள்.

7 comments:

balu said...

ஆஹா. அருமை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

ஆதங்கமான பகிர்வு. காக்கைகளின் குணாதிசயத்தை அழகாய் விளக்கியுள்ளீர்கள்.

/கான்கிரீட் காடுகளில் காலத்தின் கட்டுப்பாட்டில்
கையாளாகாதவர்களுள் ஒருவனாய் நான்...
மனிதன் மீது நம்பிக்கை முற்றாக இழந்து
கண்காணாது நிம்மதியாய் எங்கோ அவைகள்./

காக்கைகளுக்கு உணவிடும் பழக்கம் அன்றிலிருந்து நம்மிடையே விடாது இருந்து வந்தது. மேற்கண்ட வரிகளில் உள்ளது போல் காலத்தின் கட்டுப்பாட்டில் நாம் அதை எதுவும் செய்ய முடியாத சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அவைகளும் நம்மீது நம்பிக்கை இழந்து வெகு நாட்களாகி விட்டது. உண்மை..மிகவும் அழகாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

அன்பான பாட்டியை தேடிக் கொண்டு இருக்கோ!

வைக்கும் நேரத்தில் மறந்து விட்டால் வந்து குரல் கொடுத்து கேட்கும். தட்டு காலி என்றாலும் மீண்டும் சத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் மீண்டும் கொண்டு போய் வைத்தால் மீண்டும் குரல் கொடுத்து நன்றி சொல்லி சாப்பிடும்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

ஆதங்கம் வேதனையாய்...

வெங்கட் நாகராஜ் said...

ஆதங்கம் தான்...

ஸ்ரீராம். said...

ஆச்சர்யமான நிகழ்வு.   யானைகள் பற்றி அப்படி ஒரு நிகழ்வு சொல்வார்கள்.  அந்த யானைக்கு மருத்துவம் பார்த்த அந்த ஆங்கிலேயே மருத்துவர் மரித்ததும் தொலைதூரத்திலிருந்து ஏதோ தந்தி வந்தது போல வரிசையாக ஒரு ஒழுங்கில் யானைகள் வந்து பார்த்துச் சென்றதைப் படித்திருக்கிறேன்.

Post a Comment