Monday, June 15, 2020

மாடிமனை கோடியென..

மாடிமனை கோடியெனத்
தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
மனதுக்குள் என்னமாற்றம் செய்யும் ? -அது
இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

பகலிரவாய் நூறுபெண்ணை
வகைவகையாய் அனுபவித்தும்
சுகம்போதும் எனமனமா சொல்லும் ?அது
அடுத்தொன்றைத் தேடித்தான் செல்லும்

நடுக்கமுடல் எடுத்தபின்னும்
நரைதிரையும் நிறைந்தபின்னும்
இருந்ததெல்லாம் போதுமென்றா எண்ணும் ?-மனது
இருக்கநூறு காரணங்கள் சொல்லும்

மொத்தமாகக்  கற்றுவிட்ட
வித்தைகளும் தத்துவமும்
சித்தமதில்  என்னவினை செய்யும் ?-அது
கூடுதலாய்க்குழப்பத்தான் செய்யும்

குட்டியிலே சங்கிலியில்
வளர்ந்தவுடன்  சணல்கயிற்றில்
கட்டிவைத்தால் யானையது  அடங்கும்-மாறிச்
செய்துவைத்தால் சங்கடந்தான் மிஞ்சும்

மனமதனை அடக்கிவைத்து
அறிவதனை வளர்த்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்

மதமென்ற ஓரமைப்பை
முன்னோர்கள்  ஆக்கிவைத்த
மகத்துவத்தை  மனமுணர்ந்தால்  போதும் -முன்னே
சொன்னதெல்லாம் மிக எளிதாய் விளங்கும்  

7 comments:

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே
கோர்வையான சொற்களில் அழகிய வார்ப்பு.

G.M Balasubramaniam said...

வேண்டதது என்று தெரிந்தும் அநாடும்மனம் மதத்தால் கட்டமுடியுமா

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

சொற் கோர்வைகள் அழகாக அடுக்கப்பட்டுதெளிவான கருத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

நன்றி
அன்புடன்
ரூபன்

ஸ்ரீராம். said...

வழக்கம்போல இல்லாமல் புதிய பாணியில் இருக்கிறதோ கவிதை?  அருமை.

வல்லிசிம்ஹன் said...

அருமையாகப் பாடச் சொல்லும் வரிகள்.அடுக்கடுக்காகக்
கற்பனையைக் கிளறச் சொல்லும் சிந்தனைகள்.
அழகு மிக அழகு. வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை. பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இது தான் மகத்துவம்
என்றுரைத்தால்
அழிவே மிஞ்சும்...

Post a Comment