Saturday, June 6, 2020

சைக்கிள்தானே...

மதுரை மக்களை ஆச்சரியப்படுத்தும் ‘சைக்கிள் டாக்டர்!

மதுரை அப்போலோ மருத்துவமனையில் மிக பிசியான மருத்துவர் எஸ். மீனாட்சி சுந்தரம். நரம்பியல்துறை  வல்லுநர்! சிறப்பு மருத்துவர்! டாக்டர் SMS என்று அன்புடன் அழைக்கப்படுகிற அன்பான மருத்துவர். 

இவரைப் பற்றிய சுவாரசியமான இந்தச் செய்தி எப்படி இரண்டு நாளாகியும் என் கண்ணில் படாமல் போனது?
அலுவலகங்களுக்கு சொகுசு கார், பைக்குகளில் செல்பவர்களுக்கு மத்தியில் மதுரையில் நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர் ஒருவர், தான் வைத்திருந்த காரை விற்றுவிட்டு, சைக்கிளில் தினமும் மருத்துவமனைக்கு எளிமையாகச் சென்று வருகிறார்.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ். மீனாட்சிசுந்தரம் (49). நரம்பியல்துறை சிறப்பு மருத்துவர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று வருகிறார். 18 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் இருக்கும் இவர், ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு மற்ற மருத்துவர்களை போல் காரில்தான் சென்று வந்துள்ளார். அதன்பிறகு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அருகில் உள்ள பூங்காவுக்கு நடைப் பயிற்சி செய்வதற்காக காரை பயன்படுத்தாமல் சைக்கிளில் செல்லத் தொடங்கினார்.
மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்பட்டதால், தினமும் வீட்டிலிருந்து தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு தற்போது சைக்கிளில் சென்று வருகிறார். அருகே உள்ள கடைகளுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கச் செல்வது முதல், நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மருத்துவக் கருத்தரங்குக்கும் செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்தி வருகிறார். நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்த சைக்கிள் டாக்டர் மீனாட்சி சுந்தரத்தை சந்தித்தோம்.
அவர் கூறியதாவது: ‘‘நானும் ஆரம்பத்தில் டவேரா காரில்தான் மருத்து வமனைக்குச் சென்று வந்தேன். ஒருநாள் எனது நண்பர் மதுரையைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணர் கண்ணன்தான், சைக்கிள் ஓட்டும்படி பரிந்துரைத்தார். சைக்கிள் ஓட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும், குண்டாக இருக்கிறாய், எடையைக் குறைக்கும்படி அறிவுரை கூறி அவரே சைக்கிளையும் வாங்கித் தந்தார்.
2015-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி முதல் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். சைக்கிளை உடற்பயிற்சிக்காக ஓட்டக்கூடாது. கார் வைத்திருந்தால் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வராது என்பதால் காரை விற்று விட்டேன். அதன்பிறகு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தபின், காரை பயன்படுத்துவதே இல்லை. எங்கு போனாலும் சைக்கிளில்தான் செல்வேன்.

ஆரம்பத்தில், நான் சைக்கிளில் செல்வதை பார்த்து சிரித்தவர்கள், தற்போது என்னை வியந்து பாராட்டுகிறார்கள். என்னைப் பார்த்து என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், எனது மருத்துவ நண்பர்கள் பலரும் தற்போது சைக்கிளுக்கு மாறி விட்டனர். சைக்கிளில் சென்றால் நிதானமாக பரபரப்பு இல்லாமல் வேலைக்குச் செல்ல முடிகிறது. சைக்கிளில் சென்றால் லேட்டாகும் என்று சொல்வதில் துளிகூட உண்மையில்லை. தொலை தூரத்துக்கு செல்ல வேண்டுமென்றால் அது பொருந்தும். நகர் பகுதியில் சைக்கிள்தான் சிறந்த வாகனம்.
 உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டினால் சில நாள்கள் ஓட்டிவிட்டு பிறகு விட்டு விடுவோம். சைக்கிள் நமது வாழ்க்கையோடு இணைய வேண்டும். என்னைப் பார்த்து எனது மகன்களும் பள்ளிக்கு சைக்கிளில் செல்ல ஆரம்பித்து விட்டனர். ஆரம்பத்தில் எனது மனைவிக்கு சைக்கிளில் செல்வது பிடிக்கவில்லை. பாதுகாப்பாக இருக்குமா, மற்றவர்கள் கேலி செய்வார்களே என நினைத்து வருந்தினார். தற்போது எனது உடல் ஆரோக்கியம் மேம்பட்டதை பார்த்து அவரே என்னை சைக்கிளில் செல்ல வழியனுப்பி வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலும் ‘சைக்கிள்’ பயணம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெனீஸ் அருகே லீடோன் என்ற குட்டித் தீவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கருத்தரங்கு நடந்த இடத்துக்கு காரில் செல்ல ஒரு முறைக்கு 8 யூரோ கொடுக்க வேண்டியிருந்தது. அதனால், சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்றேன்.
எனது நண்பர்கள், கார் வாடகை, சாப்பாடு உள்ளிட்ட மற்ற அனைத்துக்கும் ஒரு நாளைக்கு 30 யூரோ வரை செலவு செய்தார்கள். ஆனால், நான் அங்கு தங்கியிருந்த 6 நாட்களும் சைக்கிளை குறைந்த வாடகைக்கு எடுத்து மருத்துவக் கருத்தரங்குக்குச் சென்றேன். தீவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களையும் சைக்கிளில் எளிதாக சுற்றி பார்க்க முடிந்தது. கார் வாடகை பணமும் மிச்சமானது. மதுரையில் சைக்கிளில் செல்வதற்கு முன்பாக ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் வரை பெட்ரோலுக்கு செலவழித்தேன். தற்போது அந்தப் பணமும் சேமிப்பாகி விட்டது. என்கிறார் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்...படித்ததில் பிடித்தது...

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மருத்துவர் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

சைக்கிள் ஓட்டுவது மிகவும் நல்லது. நல்ல விஷயத்தினைச் செய்கிறார் அந்த மருத்துவர். செய்தியை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

மாதேவி said...

ஜிம் நிலையங்களுக்கு சென்று வேண்டாத உடல் தொல்லைகளை வாங்கி வரும் மக்கள் மத்தியில் ஆரோக்கியமாக இருக்க செலவில்லாமல் நல்ல வழியை கைக்கொள்ளும் டாக்டர் வழியை ஏனையோரும் பின்பற்றுதல் நன்மையே.

ஸ்ரீராம். said...

ஆச்சர்யமான / ஆரோக்யமான மருத்துவர்.

Jayakumar Chandrasekaran said...

சைக்கிள் ஓட்ட ரோடு வசதி தற்போது இல்லை. ஏன்  ரோடில் நடக்கவே முடியவில்லை. டூ வீலர்களின் அசாத்திய பாய்ச்சல் எல்லோரையும் ஓரம் கட்ட வைத்து விடுகிறது.

 Jayakumar

Thulasidharan V Thillaiakathu said...

சைக்கிள் ஓட்டுவது நம் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. மருத்துவர் செய்வது ஆச்சரியமான விஷயம்.

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

சைக்களின் பயன் தெரிந்து அதனுடனே எங்கும் பயணம் என்ற முடிவெடுத்த மருத்துவர் திரு. எஸ் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

சைக்கிள் இங்கே பிரபலம்.
உடல் நிலைக்கும் ,அதன் மேம்பாட்டுக்கும் நல்லது.
நம் ஊரில் சைக்கிளில் செல்லும் மருத்துவரை மிகவும் பாராட்டவேண்டும். அதிவேக வாகனங்கள் மத்தியில் செல்லப் பொறுமை மிகத் தேவை.
நலமுடன் இருக்க வாழ்த்துகள்.பாராட்டுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்

Post a Comment