Sunday, October 25, 2020

கற்றலின் கேட்டலே சிறப்பு

 மூன்றாவது 

கவிதை நூலுக்கான வேலைகளில்

மிகத் தீவீரமாய் இருந்தான் என் நண்பன்


ஏற்கெனவே வெளியிட்ட

இரண்டு நூல்களும் பெருவாரியாய்

அறையை அடைத்துக் கிடக்க

மீண்டும் இவன் படும் அவஸ்தை

என்னை ஆச்சரியப்படுத்தியது


"எதற்காக எழுதுகிறாய்

உன்னை உலகுக்கு நிரூபிக்கவா ?

சொல்லவேண்டியவைகளை

உலகுக்கு சொல்லித்தான் ஆகவேண்டும்

எனும் உந்துதலை திருப்திப்படுத்தவா ? "

என்றேன்


நான் எதிர்பார்த்தைப் போலவே

ஒருவிதத்தில் 

எல்லா இலட்சிய எழுத்தாளர்களைப் போலவே

இரண்டாவது காரணத்தைத்தைத்தான் சொன்னான் அவன்.


"சரி ஒருமுறை

எத்தனைப் பிரதிகள் வெளியிடுவாய்"என்றேன்


"முதலில் ஆயிரம் அடுத்தது ஐநூறு

இப்போது முன்னூறு " என்றான்


"ஏன் குறைந்து கொண்டே போகிறது "எனக் கேட்க


"அவ்வளவுதான் போகிறது " என்றான்


தயாரிப்புச் செலவு

வெளியீட்டுச் செலவு எல்லாம் 

அவன் சொல்லச் சொல்ல

மலைப்பாக இருந்தது


"நானும் சில விஷயங்களை

உலகுக்கு சொல்லத்தான் நினைக்கிறேன்

அதற்காகவே பதிவுகளாக

என் பாணியில் எழுதுகிறேன்


குறைந்த பட்சம் நாளொன்றுக்கு

இருநூறு பேர் வாசிக்க

வருடத்திற்கு அறுபதாயிரம்  கணக்கில்

இப்போது பத்து வருடத்தில்

ஆறு இலட்சத்தைக் கடந்து கொண்டிருக்கிறேன்

அதுவும் உள்ளூரில் மட்டுமல்ல

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில்..."

நெட் செலவு தவிர வேறு செலவில்லை..."

எனச் சொல்லி நிறுத்த....


அதை ஹாலில் அமர்ந்து

கவனிக்காதது போல் இதுவரை

கவனித்துக் கொண்டிருந்த

அவருடைய மனைவி

சட்டென எழுந்து உள்ளே போய்

தட்டுடன் திரும்பி வந்து.....


"முறுக்கு நான் செய்து அண்ணே

சாப்பிட்டுக் கொண்டே பேசுங்க அண்ணே " 

என்றார்


அவரின் குறிப்பு எனக்குப் புரிந்தது


குறிப்பை என் இலட்சிய நண்பனுக்கும்

புரிய வைக்க முயன்று கொண்டிருக்கிறேன்...

9 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல குறிப்பு. அவர் மனைவி உணர்த்தியதை அவரும் உணர்ந்து கொண்டால் சரி. சிரமங்கள் குறையும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

அவரும் புரிந்து கொள்வார்!  உங்களுக்கும் வாழ்த்துகள்.

நெல்லைத்தமிழன் said...

வெளியிட்ட புத்தகங்கள் வீட்டில் ஏன் அடைந்துகிடக்க வேண்டும்? புத்தக வெளியீட்டாளர்கள் எழுத்தாளருக்கு பணத்துக்குப் பதில் புத்தகங்களை தலையில் கட்டிவிடுவார்களா?

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி...

திண்டுக்கல் தனபாலன் said...

மீண்டும் அரசாங்க அனுமதியுடன் ஒரு மாநாடு போட்டு விடுவோமா ஐயா...?

Yaathoramani.blogspot.com said...

கற்பூரத் தன்மை கொண்ட தனபாலனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..(நம் பதிவர்கள் மாநாட்டில் இலவசமாக ஆயினும் மிக அருமையாக நூல் வெளியீடுகள் நடந்தது....அறியாதவர்களுக்காக இந்தக் கூடுதல் தகவல்..)

Bhanumathy Venkateswaran said...

யதார்த்தம்! நண்பர் புரிந்து கொண்டால் சரி!   

வல்லிசிம்ஹன் said...

புத்தகம் வெளியிடுவது இப்போது மின்னூலாகி இருக்கிறதே.

உங்கள் நண்பரும் புரிந்து கொள்வாராயிருக்கும். பாவம் அவர் மனைவி.

Thulasidharan V Thillaiakathu said...

யதார்த்தமான கருத்து. உங்கள் நண்பர் புரிந்து கொண்டுவிடுவார் விரைவில். இப்போதுதான் மின்னூல்கள் போட வசதி உள்ளதே.

கீதா

Post a Comment