Wednesday, October 13, 2021

A.V.M..

 


வரலாற்றில் இன்று


ஏவி.எம் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் அக்டோபர் 14,1945.


    ஏவி.மெய்யப்பன் 1934-ம் ஆண்டிலிருந்து திரைப்படத் துறையில் இருந்தாலும், 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதிதான் முதன்முதலில் ‘ஏவி.எம் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

    சென்னை, மைலாப்பூரில், சாந்தோம் பகுதியில், தெற்கு தெரு, எண் - 60 என்ற முகவரியில் இருந்த ஒரு வாடகை கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏவி.எம் புரொடக்சன்ஸ் நிறுவனம், முதலில் மின்சாரத் தேவையின் காரணமாக காரைக்குடியில் இயங்க ஆரம்பித்தது. 

     முதலில் ‘நாம் இருவர்' படத்தை தயாரித்து 14.01.1947-ல் வெளியிட்டார் ஏவிஎம். இதில் பாரதியாரின் பாடல்கள் காட்சிகளாக இடம் பெற்றிருந்தன. இதற்காக பாரதியார் பாடல்களின் உரிமையை முறைப்படி பெறப்பட்டு பின்னர் அது நாட்டுடமையாக்கப்பட்டதென்பது வரலாறு.

     1948-ல் ‘வேதாள உலகம்' படத்தை காரைக்குடியில் இருந்து வெளியிட்டவுடன், ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றினார் ஏவி.எம். செட்டியார்.

    சென்னையில் 1948 முதல் இன்றுவரை ஏவி.எம் ஸ்டூடியோஸ் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் புதுப்பித்து நிலைத்து நின்று, இந்தியாவின் பழமையான ஸ்டூடியோ என்ற புகழைப் பெற்றுள்ளது. 

     தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் சிங்கள மொழிகளிலும் 175-க்கும் மேற்பட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

     1937-ல் பின்னணி பாடும் முறையை ‘நந்தகுமார்' என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார் ஏவி.மெய்யப்ப செட்டியார். பிரபல பாடகி லலிதா வெங்கட்ராமன் இந்தப் படத்தில் பாடல்களை பாடியிருந்தார்.

    அதேபோல படங்களை டப்பிங் செய்யும் முறையையும் ஏவி.எம். நிறுவனம்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. முதல் டப்பிங் படம் 1938-ல் ‘ஹரிச்சந்திரா' என்ற கன்னட படம் ஏவி.எம். நிறுவனத்தால் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் ‘டப்பிங்' படமாகும்.

      அடுத்தது ‘இணையம்'தான் உலகை ஆளப் போகிறது என்பதை உணர்ந்து, அதற்காக ‘இதுவும் கடந்து போகும்' என்ற படத்தையும் தயாரித்து இதை இணையத் தளங்களில் மட்டுமே வெளியிட்டது ஏவி.எம். 

     1980-ம் ஆண்டுகளில் சின்னத்திரையான தொலைக்காட்சியும் வளரத் தொடங்கியபோது சின்னத்திரைத் தொடர்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பெரும் வெற்றியைப் பெற்றது ஏவி.எம். நிறுவனம். 

     இப்படி இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை படைத்த ஏவி.எம். நிறுவனம் தனது வெற்றிகரமான கலை உலகப் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது.

3 comments:

ஸ்ரீராம். said...

வெற்றியின் மறுபெயர் ஏ வி எம்.  இன்றும் கூட வேதாள உலகம் படத்தை ரசிக்க முடியும்.  ராஜசிம்மனையும் ராஜீவியையும் தத்தாத்ரேயனையும் ரசிக்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை படங்கள்.... அவர்கள் எடுத்த படங்களை இன்றைக்கும் ரசிக்க முடியும். தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்கள் அருமை...

Post a Comment