Friday, November 12, 2021

இசை அரசி.பி.சுசிலா



         ....   *'பி. சுசீலா'* அல்லது *புலப்பாக்க சுசீலா* *(பிறப்பு: நவம்பர் 13, 1935)* இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப், பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக *25,000* பாடல்களுக்கு

மேல் பாடி, கோடானு கோடி ரசிகர்களின் இதயங்களில்

குடி கொண்டுள்ளார்.


     சுசீலா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் *புலப்பாக்க முந்தராவ் - சிறீசம்மா* தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். சுசீலாவுக்கு 5

சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். இவரது தந்தை

ஒரு வக்கீல்லாக இருந்தார். சுசிலா அங்குள்ள பெண்கள் உயர்நிலைப்

பள்ளியில் கல்வி பயின்றார். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை

மேதையான, துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக

இசை பயின்றார்.


    சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் *”பாப்பா மலர்”* நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். சுசீலாவின் இசைத்

திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ், தனது

*’பெற்றதாய்’* படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த அப்படத்தில் ஏ.எம்.ராஜாவுடன்

இணைந்து, பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில்,

*”ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு”* என்று துவங்கும் பாடலைப் பாடினார்.


   1953 ஆம் ஆண்டில் சிவாஜி நடித்த *‘அன்பு’* படத்தில் பாடுவதற்கு

இப்படத்தின் இசையமைபாளர் டி.ஆர்.பாப்பா இவருக்கு சந்தர்ப்பம் அளித்தார். ஆனால் சுசிலாவின் தமிழ் உச்சரிப்பு சரியாக

அமையாத காரணத்தால் அப்படத்தில் பாடும் வாய்ப்பை இழந்தார்.


     இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில், எஸ்.ராமராவ் இசையில், *'மனம்போல் மாங்கல்யம்'* படத்தில்,

*‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’* என்றப் பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த *'கணவனே கண் கண்ட தெய்வம்'*

படத்தில் இடம்பெற்ற *”எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்”*,

என்ற பாடலும் *“உன்னைக் கண் தேடுதே”* என்றப் பாடலும்

இவரது இனிய குரலில் மிகவும் புகழ் பெற்றதோடு இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தன. ஆர்.சுதர்சனம் இசையமைத்த

*"டொக்டர்"* என்ற சிங்களப் படத்திலும் சுசிலா பாடியுள்ளார்.


    டி.எம்.சௌந்திர ராஜனோடு இணைந்து முதன் முதலாக, 1955 இல்

*‘செல்லப்பிள்ளை’* படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் சுசிலா

பாடினார். இதனைத் தொடர்ந்து 1956 இல் *‘பெண்ணின் பெருமை’* படம் உள்ளிட்ட ஏராளமானப் படங்களில் சௌந்திரராஜனோடு

இணைந்து சுசிலா பாடினார். இவ்விருவரும் இணைந்து பாடியிருக்கும் எண்ணற்றப் பாடல்கள் ரசிகர்களின் ஏகோபித்த

வரவேற்பைப் பெற்றவையாகும்.


      சுசிலா, சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, டி.ஏ.மோதி, ஏ.எம்.ராஜா, டி.ஆர்.மகாலிங்கம், பி.பி.ஸ்ரீனிவாஸ்

பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ்,

மலேசிய வாசுதேவன், ஜெயசந்திரன் போன்ற ஏராளமானப்

பாடகர்களுடன் இணைந்தும் தனித்தும் காதுக்கினிய கானங்கள்

பலவற்றை காணிக்கையாக்கியிருப்பது ஒரு சாதனையாகப்

போற்றப்படுகிறது.


    தவிரவும் பழம்பெரு இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன் தொடங்கி, பல்வேறு மொழிகளின் இசையமைப்பாளர்களின்

இசையமைப்பில் இவர் அழியாப் பாடல்கள் பலவற்றைப் பாடி

உலகெங்கிலுமுள்ள இவரது அபிமான ரசிகர்களுக்கு இன்ப

இசை விருந்து படைத்திருப்பதை சாதாரணமாகக்

கருதுவதற்கில்லை. தனித்துவமான தனது இனியக் குரலால்,

இதயங்களை ஈர்க்கும் வசீகரத் தன்மை சுசிலாவிடம் குடி கொண்டிருந்தது.


   *’அமுதைப் பொழியும் நிலவே’, ’மன்னவன் வந்தானடி தோழி'*,

*‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ’அழைக்காதே நினைக்காதே’*,

*‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல’*, *’நாளை இந்த வேளை பார்த்து’*, *‘ஒருநாள் யாரோ’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’*,

*’ஆலயமணியின் ஓசையை’, ‘உன்னை நான் சந்தித்தேன்’*,

*‘அழகே வா அருகே வா’*, *‘என்னை மறந்ததேன் தென்றலே’*,

*‘இதுதான் உலகமா’*, *‘என் வேதனையில் உன் கண்ணிரண்டும்’*,

போன்றப் பாடல்கள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா

இடம் பெற்றவை.


    இவர் தாம் பாடிய பலப் பாடல்களுக்கு ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த *’சில நேரங்களில்’* என்ற திரைப் படத்தில்

*“பொட்டு வைத்த”* என்றப் பாடலைப் பாடியிருந்தார்.


    1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரை சுசிலா

திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். வயது முதிர்ச்சியால் சுசிலா தற்போது திரைப்

படங்களில் பாடுகின்ற வாய்ப்பை இழந்து விட்டாலும், அவர்

ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு

விருந்தினராகவும் தொடர்ந்து பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.



            

4 comments:

Unknown said...

நல்ல செய்தி மகிழ்ச்சி

Unknown said...

Life time achivement by Smt p Susila in tamil films also in other films.Ever green songs sung by her in her life history.

ஸ்ரீராம். said...

இவர் குரல்வளம் தெய்வம் நமக்குத் தந்த பரிசு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

Post a Comment