24-02-2022
-------------------
"அருட்செல்வர்" ஏ.பி.நாகராஜன் 94 வது பிறந்தநாள் நினைவு.🙏
------------------------------------------------------------
பூர்வீகம்: சங்ககிரிக்கு அருகே உள்ள அக்கம்மாபேட்டை ஜமீன் பரம்பரை.
பெற்றோர்: திரு.பரமசிவம், திருமதி.லட்சுமி அம்மாள்.
இயற்பெயர்: குப்புசாமி.
பிறந்த தேதி: 24-02-1928
சிறு வயதிலேயே தந்தை, தாயை இழந்த குப்புசாமியின் பாட்டி மாணிக்கத்தம்மாள் அவரை டி.கே எஸ் நாடக குழுவில் சேர்த்து விட்டார். தன் வாழ்நாளில் பள்ளிக்கூடமே சென்றிராத குப்புசாமி, நாடக குழுவில் இலக்கியப் புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து தனது இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழை அழகாக எப்படி ஏற்ற இரக்கத்தோடு பேசுவது, வசனங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று எல்லாமே டி.கே.எஸ் சகோதரர்களின் பால சன்முகானந்த சபாவில் கற்றுக் கொண்டார்.
டி.கே.எஸ் நாடக குழுவில் இவர் பெயரிலேயே இன்னொரு குப்புசாமி இருந்தார். இவர் தப்பு செய்வதற்கெல்லாம் அந்த குப்புசாமி திட்டு வாங்குவார். ஒருமுறை இதே மாதிரி பிரச்சினை டி.கே.எஸ் அவர்களிடம் வந்தது. இந்தமுறையும் செய்யாத தவறுக்கு நாம் திட்டு வாங்க வேண்டுமா என்று யோசித்த அந்த இன்னொரு குப்புசாமி, "அவர் செஞ்ச தப்புக்கெல்லாம் தப்பே செய்யாத நான் ஏங்க உங்ககிட்ட திட்டு வாங்கணும்?" என்று நடந்ததை டி.கே.எஸ் அவர்களிடம் சொல்லி விட்டார். இதை விசாரித்து தெரிந்து கொண்ட சண்முகம் அவர்கள் "இனிமே உன்பேர் குப்புசாமி இல்ல, நாகராஜன்" என்று சொல்லி விளையாட்டுத்தனமாக சிறு சிறு தவறுகள் செய்து வந்த குப்புசாமியின் பெயரை மாற்றினார்.
டி.கே.எஸ் அவர்கள் அப்படி பெயர் மாற்றிய வேளை நாகராஜன் நாடகங்களில் புகழ்பெற்று விளங்கினார். டி.கே.எஸ் நாடக குழுவில் அதிகமாக பெண் வேடம் ஏற்று நடிப்பவர் சண்முகம் அண்ணாச்சி தான். சில நேரங்களில் அவருக்கு நிகராக நாகராஜனும் பெண் வேடத்தில் நடிப்பார்.
"பெண் வேடத்தில் நாகராஜன் மிகவும் அழகாக இருப்பார். அவர் ஒவ்வொரு முறையும் பெண் வேடத்தில் நடித்தால், நாடகம் முடிந்ததும் ரசிகர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றி ரூமுக்கு அழைத்து வர பெரும்பாடாகிவிடும் எங்களுக்கு. அவருக்கு Boduguard ஆக நான் மற்றும் என்னுடன் நாலைந்து பேர்கள் அவருடன் எப்பவுமே இருப்போம். நாகராஜன் மட்டும் பெண்ணாகவே பிறந்திருந்தால் நிச்சயம் இந்திய அழகி பட்டத்தை வென்றிருப்பார்".
என்று நடிகர் வி.கே.ராமசாமி அவர்கள் ஒரு பேட்டியின்போது நாகராஜனைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
ஒருமுறை இதுபோல் நாகராஜன் பெண் வேடத்தில் நடிக்க, அவருடன் டி.கே.எஸ் அவர்களும் நாகராஜனின் கையைப் பிடித்துக் கொண்டு சில வசனங்களைப் பேசி நடிக்க, இதை டி.கே.எஸ் அவர்களின் மனைவிக்கு சகித்துக் கொள்ள முடியவில்லை. நாடகம் முடிந்து சண்முகம் அண்ணாச்சி வீட்டுக்கு வந்ததும், அவர் மனைவி அவரிடம் எப்போதும்போல் சகஜமாக பேசவில்லை. முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டார். இதைப் பார்த்த சண்முகம் அண்ணாச்சிக்கு அதிர்ச்சி. எப்பவும்போல் இல்லாமல் இன்னிக்கு ஏன் இப்படி உட்கார்ந்துருக்கான்னு அவளிடமே கேட்டு விடலாம் என்று தன் மனைவியின் அருகே சென்று "என்னாச்சுன்னு இப்படி உம்முனு மூஞ்சிய தூக்கி வைச்சுட்டு உட்கார்ந்துருக்கே" என்று கேட்டார். "பின்னே, நாடகத்துல அந்தப் பொண்ணு கையப் பிடிச்சி வசனம் பேசி நடிக்கரீங்க, ஏன் தள்ளி நின்னு நடிக்க கூடாதா?" என்று பதிலளித்தார் அவர் மனைவி. "அட இதுக்காகவா இப்படி உட்கார்ந்துருக்க, கொஞ்சம் இரு வரேன்" என்று சொல்லிய சண்முகம் அண்ணாச்சி நேராக நாகராஜன் தங்கியிருக்கும் அறைக்கு வந்து நாகராஜனிடம், "நாடத்துல எப்படி பெண் வேஷத்துல இருந்தியோ அதே வேஷத்தோட இப்ப நீ எங்கூட வா" என்று சொல்லி அவரை தன் வீடுக்கு அழைத்து வந்து சண்முகம் அண்ணாச்சி தன் மனைவியிடம் நாகராஜனின் கூந்தலை எடுத்து விட்டு, "நாடகத்துல எங்கூட அதிகமா பெண் வேஷத்துல நடிச்சது இவன் தான். பேரு நாகராஜன். நான் "குமாஸ்தாவின் பெண்" நாடகத்தில் தொட்டு தொட்டு நடிச்ச பொண்ணு. இதுக்காகவா நீ மூஞ்சிய தூக்கி வைச்சுகிட்ட" என்று சொன்னதும் சண்முகம் அண்ணாச்சியின் மனைவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. நாகராஜனைப் பார்த்து விட்டு வெட்கத்துடன் உள்ளே சென்று விட்டார்.
நாகராஜனைப் பார்த்த சண்முகம் அண்ணாச்சி, "பார்த்தியா, இதுவரை என் வீட்டுல இதுமாதிரி குழப்பம் வந்ததேயில்ல. இப்ப வந்துருக்குன்னா அதுக்கு நீதாம்பா காரணம். பெண் வேஷத்துல நீ அவ்வளவு அழகா இருந்தது தான். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குப்பா. நீ நிச்சயம் எல்லோரும் போற்றும்படி பெரிய ஆளா வருவே" என்று வாழ்த்தினார்.
அதன்பின் சக்தி நாடக சாபாவில் சில காலம் நாடகங்கள் எழுதி நடித்துவந்த காலங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காகா ராதாகிருஷ்ணன் போன்ற பிரபலங்களின் நட்பு நாகராஜனுக்கு கிடைத்தது. அதன்பின் பழநி கதிரவன் நாடக சபா என்ற நாடக குழுவைத் தொடங்கி அவரே எழுதி நடித்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் சில காலம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் நாகராஜன். அங்கு கே.சோமு, எம்.ஏ.வேணு போன்றவர்கள் நட்பும் அவருக்கு கிடைத்தது.
1953 ஆம் ஆண்டு சங்கீதா பிக்சர்ஸ் நிறுவனம் ஏ.பி.நாகராஜன் எழுதிய "நால்வர்" கதையை அதே பெயரில் திரைப்படமாக தயாரித்தது. இதில் கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக நாகராஜன் நடித்தார். அவருக்கு ஜோடியாக நடித்தவர் குமாரி தங்கம். இப்படம் வெற்றி பெற்றதன் மூலம் "நால்வர்" நாகராஜன் என அழைக்கப்பட்டார்.
மாடர்ன் தியேட்டர்ஸில் ஏ.பி.என் பணியாற்றியபோது எம்.ஏ.வேணு அங்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார். சேலம் செவ்வாய்பேட்டை தான் அவருடைய ஊர். அதிகம் படிக்காதவர். மாடர்ன் தியேட்டர்ஸில் சாதாரண வேலையில் நுழைந்த அவர், தனது திறமையால் படிப்படியாக மேலே வந்து தயாரிப்பு நிர்வாகியாக உயர்ந்தார். அதன்பின் அவர் மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து விலகி எம்.ஏ.வி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஏ.பி.ஏன் அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து 1954 ஆம் ஆண்டு "மாங்கல்யம்" என்றொரு படத்தை தயாரித்தார். இப்படத்தின் கதை, வசனத்தையும் நாகராஜனையே எழுத வைத்தார் வேணு. இயக்கியவர் கே.சோமு. ஏ.பி.நாகராஜனுடன் பி.எஸ்.சரோஜா, எஸ்.ஏ.நடராஜன், எம்.என்.நம்பியார் ஆகியோருடன் ராஜசுலோசனா இதில் தான் அறிமுகம். மாங்கல்யம் வெற்றியைத் தொடர்ந்து, ஏ.பி.நாகராஜன், கண்ணாம்பா, சூரியகலா நடித்த "பெண்ணரசி" (1955) என்ற படத்தையும் தயாரித்தார் வேணு. இப்படம் "மனோகரா" கதையமைப்பில் இருந்ததால் வெற்றி பெறவில்லை.
தமிழ் திரையுலகில் நால்வர் படம் மூலம் தடம் பதித்த நாகராஜன் அவர்களுக்கு 1955 ஆம் ஆண்டு நிறைய படங்களில் நடிக்கவும், கதை வசனம் எழுதவும் வாய்ப்பு வந்தது. இவர் பங்களிப்பில் 6 படங்கள் வெளிவந்தது.
1. நல்ல தங்கை (05-02-1955), இதில் கதை, வசனம் மட்டுமே எழுதினார் நாகராஜன். எஸ்.ஏ.நடராஜன் நடித்து தயாரித்து இயக்கினார். இதில் எஸ்.ஏ.நடராஜன், எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, வி.எம்.ஏழுமலை, ஏ.கருணாநிதி, புளிமூட்டை ராமசாமி, கே.சாய்ராம், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, சாண்டோ சின்னப்பா தேவர், டி.ஆர்.நடராஜன், சி.கே.சௌந்தரராஜன், டி.கே.சின்னப்பா, எம்.வி.ராஜு, மாதுரிதேவி, ராஜகுமாரி, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.என்.லட்சுமி, லலிதா, புஷ்பலதா, கே.பி.சுந்தராம்பாள் நடித்திருந்தனர். இசையமைப்பு இசை மேதை ஜி.ராமனாதன்.
2. பெண்ணரசி (14-04-1955)
இதில் கதை, வசனம் எழுதி நடித்திருந்தார் நாகராஜன். இவருடன் கண்ணாம்பா, நம்பியார், சுரியகலா, பி.எஸ்.வீரப்பா, ராஜசுலோசனா நடித்திருந்தனர். எம்.ஏ.வி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வெளியிட்டவர் எம்.ஏ.வேணு. இயக்கியவர் கே.சோமு.
3. நம் குழந்தை (27-05-1955)
இதில் நாகராஜன் நடித்தது மட்டும் தான். கதை, வசனத்துடன் பாடல்களும் எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள். தயாரித்தவர் வின்னர் புரொடக்சன்ஸ் சார்பில் W.M.S.தம்பு. இயக்கியவர் ஜெமினி நிறுவனத்தின் சக்கரதாரி படத்தை இயக்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். (இவர் இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அல்ல). ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வரலட்சுமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம் மற்றும் பலர்.
4. ஆசை அண்ணா அருமை தம்பி (29-06-1955)
இதிலும் நாகராஜன் நடித்தது மட்டுமே. கதை: எஸ்.முகர்ஜி. திரைக்கதை, வசனம்: சக்தி கிருஷ்ணசாமி. இயக்கியவர் ஜி.ஆர்.ராவ். இதில் டி.ஆர்.ராமச்சந்திரன், வி.எம்.ஏழுமலை, ராஜசுலோசனா ஆகியோருடன் நடித்து தயாரித்தவர் நடிகை மாதுரிதேவி.
5. டவுண் பஸ் (13-11-1955)
இதில் நாகராஜன் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதினார். நடித்தவர்கள்: என்.என்.கண்ணப்பா, அஞ்சலிதேவி, எம்.என்.ராஜம், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி, டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி மற்றும் பலர். எம்.ஏ.வி பிக்சர்ஸ் மூலம் தயாரித்தவர் எம்.ஏ.வேணு. இயக்கியவர் கே.சோமு.
6. நல்ல தங்காள் (30-12-1955)
இதில் நாகராஜன் நடித்தது மட்டுமே. கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ.கே.வேலன். இயக்கியவர் பி.வி.கிருஷ்ண ஐயர். மெட்ராஸ் மூவிடோன் தயாரித்தது. நடித்தவர்கள்: ஆர்.எஸ்.மனோகர், ஜி.வரலட்சுமி, ஜே.பி.சந்திரபாபு, மாதுரிதேவி மற்றும் பலர்.
இவை தவிர இயக்குனர் கே.சோமு, நடிகர் வி.கே.ராமசாமி இவர்களுடன் இணைந்து சில படங்களில் நாகராஜன் பணியாற்றினார்.
"நான் பெற்ற செல்வம்" (1956), கதை வசனம் மட்டும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜி.வரலட்சுமி நடித்தது.
"மக்களை பெற்ற மகராசி" (1957), கதை வசனம் மட்டும், நடிகர் வி.கே.ராமசாமி உடன் நாகராஜன் தயாரித்திருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.பானுமதி நடித்தது.
"நல்ல இடத்து சம்பந்தம்" (1958) திரைக்கதை, வசனம் மட்டும், (கதை எழுதி நடித்தவர் வி.கே.ராமசாமி) வி.கே ராமசாமி உடன் நாகராஜன் தயாரித்தார். நடிகவேள் எம்.ஆர்.ராதா, பிரேம் நசீர், சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம், வி.கே.ராமசாமி நடித்தது.
"சம்பூர்ண ராமாயணம்" (1958) திரைக்கதை வசனம் மட்டும், என்.டி.ராமாராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி, பி.வி.நரசிம்ம பாரதி, டி.கே.பகவதி, சாண்டோ கிருஷ்ணன், வி.நாகையா, புஷ்பவல்லி, ஜி.வரலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, வி.கே.ராமசாமி, சந்தியா, எம்.என்.ராஜம் மற்றும் பலர் நடித்தது.
"நீலாவுக்கு நிறைஞ்ச மனசு" (1958) திரைக்கதை வசனம் மட்டும். டி.ஆர்.ராமச்சந்திரன் ஸ்ரீராம், தங்கவேலு, பண்டரிபாய், எம்.என்.ராஜம், வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்தது.
"தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை" (1959) கதை, திரைக்கதை, வசனம் மட்டும், (வி.கே.ராமசாமி உடன் நாகராஜன் தயாரித்தார்). ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, கே.சாரங்கபாணி, எம்.என்.ராஜம், பண்டரிபாய், கண்ணாம்பா மற்றும் பலர் நடித்தது.
"அல்லி பெற்ற பிள்ளை" (1959) திரைக்கதை, வசனம் மட்டும். எஸ்.வி.சஹஸ்ரநாமம், பண்டரிபாய், வி.கே.ராமசாமி, எம்.என்.ராஜம் மற்றும் பலர் நடித்தது.
"பாவை விளக்கு" (1960) நாவலாசிரியர் அகிலன் அவர்களின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, பண்டரிபாய், எம்.என்.ராஜம், குமாரி கமலா, கே.பாலாஜி, ஸ்ரீராம், எம்.ஆர்.சந்தானம் மற்றும் பலர் நடித்தது.
"வடிவுக்கு வளைகாப்பு" (1962) கதை, வசனம் மட்டும். இயக்கியவர் கே.சோமு தான் என்றாலும் படத்தின் டைட்டிலில் ஏ.பி.நாகராஜன் என்று தான் இடம்பெற்றது. வி.கே.ராமசாமி உடன் நாகராஜன் தயாரித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வி.கே.ராமசாமி, சாவித்திரி, சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா மற்றும் பலர் நடித்தது.
தவிர ஏ.பி.நாகராஜன் அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, சரோஜாதேவி, கே.சாரங்கபாணி, ஆர்.எஸ்.மனோகர், சந்தியா மற்றும் பலர் நடித்த "குலமகள் ராதை" திரைப்படத்தின் கதை நாவலாசிரியர் அகிலன் அவர்களின் "வாழ்வு எங்கே" என்ற நாவல்.
அதன்பிறகு நாகராஜன் அவர்கள் விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் தொடங்கி முதல் படமாக "நவராத்திரி" (1964) திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து நாகராஜன் அவர்களுக்கு ஏறுமுகம் தான்.
"திருவிளையாடல்" (1965), தேசிய விருது பெற்றது.
"சரஸ்வதி சபதம்" (1966) "திருவருட்செல்வர்" (1967),
"தில்லானா மோகனாம்பாள்" (1968), தேசிய விருது பெற்றது.
"திருமலை தென்குமரி" (1970) தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது.
ஆகிய படங்களை தயாரித்து இயக்கிய நாகராஜன் அவர்கள் "அகத்தியர்" (1972) திரைப்படத்தை இந்நிறுவனத்தின் மூலம் இயக்கி விநியோகித்தார்.
பிற தயாரிப்பு நிறுவனம் மூலம் நாகராஜன் அவர்கள் இயக்கிய திரைப்படங்கள்:
வா ராஜா வா (1969) இப்படத்தின் மூலம் முதல் முதலில் இசைமணி சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்களை காவல்துறை அதிகாரியாக நடிக்க வைத்த பெருமை நாகராஜன் அவர்களையே சேரும்.
கந்தன் கருணை (1967),
சீதா (1967),
குரு தட்சணை (1969), விளையாட்டு பிள்ளை (1970), கண்காட்சி (1971),
திருமலை தெய்வம் (1973), திருமால் பெருமை (1968), ராஜராஜ சோழன் (1973), காரைக்கால் அம்மையார் (1973), குமாஸ்தாவின் மகள் (1974), மேல்நாட்டு மருமகள் (1975),
ஜெய் பாலாஜி (1976) இந்தி, நவரத்தினம் (1977) இவற்றுடன் நாகராஜன் அவர்கள் இயக்கி அவர் காலமான பின் வெளிவந்த திரைப்படம் "ஸ்ரீகிருஷ்ண லீலா" (26-10-1977).
ஏ.டி.கிருஷ்ணசாமி அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய "அருட்பெருஞ்ஜோதி" (1971) திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இன்று வரை புராண திரைப்படங்களை ஏ.பி.நாகராஜன் அவர்களைப் போல் யாரும் இயக்கியதில்லை என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய புகழையும், கௌரவத்தையும் பெற்றவர். வசனங்களில் தனித்துவம் வாய்ந்ததாக அவர் இயக்கிய பக்தி திரைக்காவியங்கள் இன்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன.
நல்ல ஒழுக்கமும், அயராத உழைப்பும், கூடவே இறைபக்தியும் ஒருவனுக்கு இருந்தாலே போதும். உலகில் மிகச்சிறந்த மனிதனாக விளங்க முடியும் என்பதற்கு அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் எடுத்துக்காட்டு.
தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும்.
...By Muktha film 60(சினிமா தொடர்பான நாம் அறியாத அற்புத அபூர்வ தகவல்களுக்கான முகநூல் பக்கம்)
2 comments:
இத்தனை படங்களில் இவர் நடித்திருக்கிறார் - அதுவும் கதாநாயகன் வேடத்தில் - என்பதை இப்போதுதான் அறிகிறேன்.
தகவல் தொகுப்பு அருமை...
Post a Comment