Wednesday, February 23, 2022

பகுத்தறிவாளர்கள்...

 பரம்பரையாய்த் தொடர்ந்த

மன்னராட்சியை ஒழித்து

மக்களாட்சியைக் கண்டதாக

பெருமிதம் கொண்ட நாம்தான்..


பரம்பரையாய்த் தொடரும்

குடும்ப ஆட்சிக்கு

வழிவகுத்துக் கொடுத்து

மகிழ்ந்துத் திரிகிறோம்


இதனை ஜனாநாயகம் என்றும்

பினாத்தித் திரிகிறோம் 


போதிய தகவிலின்மையால்

அறியாமையில் உழல்வதாய்

வளர்ச்சியின்று அவதியுறுவதாய்

அங்கலாய்த்து வந்த நாம்தான்


தகவல் பொதிக்குள்

மூச்சுமுட்ட மூழ்கி

இருக்கிற அறிவையும்

இழந்துத் தவிக்கிறோம்


இதனைத் தகவல்புரட்சியென

கொண்டாடியும் தொலைக்கிறோம்


பயன்படும் பொருட்கள்

பயன்தரும் பொருட்கள்

அளவாக அருகிருக்க

அற்புதமாய் வாழ்ந்த நாம்தான்


பயன்குறைவு ஆயினும்

வசதிகாட்டும் பொருட்கள்

இல்லமெங்கும் நிறைந்திருக்க

அதனிடுக்கில் வாழ்கிறோம்


இதனை நாகரீக வாழ்வென்று

நவின்றும் திரிகிறோம்


மொத்தத்தில்....

..

எதனையும் பகுத்து அறியும்

அறிவினை இழந்து

பகுத்தறிவாளர்கள் என்று

பெருமிதமும் கொள்கிறோம்

1 comment:

ஸ்ரீராம். said...

இவர்கள் நம்மை நன்றாக ஆள்வார்கள் என்று நினைத்து யாரும் வாக்களிக்கவில்லை.  அப்போதைய அவர்கள் சிறு லாபத்தையும், தனக்கும் சுரண்ட எதுவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்கிற மனப்போக்குமே காரணம்.

Post a Comment