Sunday, June 4, 2023

கவனம் கொள்வோம்..

 கனத்தச் சொற்களைக் கையாள்வதில்

கவனமாய்  இருக்க வேண்டியிருக்கிறது

வாதாடுகையில்
கோபமாய் இருக்கையில் மட்டுமின்றி
கவிதை புனைகையிலும்
கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது

கனத்தச் சொற்கள்
வாதத்தின் போக்கை
கோபத்தின் காரணத்தை
மடை மாற்றிவிடுதலைப்போலவே

கவிதையிலும் கன த்தச் சொற்கள்
தன் மீது கூடுதல் கவனம் ஈர்த்து
கவிதையின் உள்ளார்ந்த பொருளை
உணரவிடாதுச் செய்து போவதால்...

படைப்பின் நோக்கத்தைப்
பாழாக்கிப் போவதால்..

கனத்தச் சொற்கள் விஷயத்தில்
கொஞ்சம் கூடுதல்
கவனமாகவே இருக்க வேண்டி இருக்கிறது

சமையலில்
கூடுதலாகிப் போன
உப்போ காரமோ
தன் இருப்பைக் காட்டி
சமையலின் தரத்தைக்
குறைத்து விடுவதைப் போலவும்

அணிவகுப்பில்
தன்னை பிரதானப்படுத்த எண்ணி
விரைந்துச் செயல்படுபவன்
அணியின் கம்பீரத்தை
அசிங்கப்படுத்தி விடுவதைப் போலவும்

கவிதையும்
பாழாகிவிடாதிருக்க அவசியம்
கனத்தச் சொற்கள் விஷயத்தில்
படைப்பாளிகள் எப்போதும்
கூடுதல் கவனமாகவே இருக்கவேண்டி இருக்கிறது

1 comment:

Post a Comment