Monday, September 2, 2024

தீர்மான மாற்றம்..

 ஆடைகளை

பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினைப்
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் செல்வாக்கும்  தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்

தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க

கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச்  சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....

சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு 

5 comments:

ஜீவி said...

எதிர்மறைப் பார்வையில் ஒவ்வொன்றையும் எதிரெதிராக நிறுத்தாமல் நேர்மறை சிந்தனையில்
நிறுத்தி சமூகத்தைக் கிண்டலடித்தால்
எப்படியிருக்கும் என்று பார்க்கட் தோன்றியது:

உதாரணமாக:

பகட்டும் நாகரிகமும் தீர்மானிக்க
பளபளப்பும் பாராட்டும் பல்லிளித்தன.
.

Jayakumar Chandrasekaran said...

//தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க​//
​நல்லதோ, கெட்டதோ தீர்மானங்கள் பெரும்பான்மையால் முடிக்கப்படுகின்றன என்று நீங்களே உங்கள் கவிதையில் கூறியிருக்கிறீர்கள். செயலிழக்கவில்லை, ஆனால் எதிர்ப்பு என்ற ஒன்றும் இருக்கிறது.
ஆனாலும்
//கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச் சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....

சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு ​//

​இக்கவிதை தற்போதைய நடைமுறையை பாவிக்கிறது.
Jayakumar

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை. இன்றைய வாழ்வியல் யதார்த்தம். அருமை ஐயா

ஸ்ரீராம். said...

நன்று.

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய நிலை இது தான். சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

Post a Comment