Saturday, January 18, 2025

நேரம்..


செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. 


அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். 


செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். 


எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.


“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”


“நான் எமதர்மராஜனின் ஏவலாள். 


இன்றோடு, 


இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. 


புறப்படு என்னோடு!”


“நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. 


நீ போய்விட்டு சில காலம் கழித்து வா!”


“அது முடியாது. 


நீ கிளம்பு என்னோடு!”


செல்வந்தனுக்கு இம்முறை சற்று கோபம் வந்தது. 


“நான் யார் தெரியுமா? 


இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர்களுள் ஒருவன்!”


“அனைவரையும் நான் அறிவது போலவே, நீ யார் என்பதும் தெரியும். 


உன் வரலாறு என்ன என்பதும் எனக்கு தெரியும். 


பேச நேரம் இல்லை. 


புறப்படு!”


“என்னுடைய சொத்து மதிப்பில் ஒரு 10 % உனக்கு தருகிறேன். 


அதுவே 50 கோடிகளுக்கு பெறும். 


எதுவுமே நடக்காத மாதிரி போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு மாசம் கழிச்சாவது வாயேன்!”


“நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ? 


நீ உடனே கிளம்புகிறாயா இல்லை, உன்னை கட்டி இழுத்துக்கொண்டு போகவா?”


அடுத்த சில நிமிடங்களில், தன்னுடைய நேரத்தை நீட்டிப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த எமதூதனுடன் மும்முரமாக இறங்கினான். 


ஒரு மாதம் என்பதை ஒரு வாரம் ஆக்கினான். 


சொத்தில் பாதியை தருவதாகவும் சொன்னான். 


கடைசியில் சொத்தில் முக்கால் பங்கு தருவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டான். 


ஆனால் எமதூதன் எதற்குமே மசியவில்லை.


இறுதியில், 


தன்னால் எமதூதனை படியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டான்.


தனது தோல்வியை ஒப்புக்கொண்டு “சரி… இறுதியாக இதையாவது செய். 


என்னுடைய சொத்து முழுவதையும் கிட்டத்தட்ட பல நூறு கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது, அத்தனையும் உனக்கு எழுதித் தருகிறேன். 


எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவகாசம் கொடு. 


என் பெற்றோரையும், மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து நான் அவர்களை பிரியப்போவதாகவும் நான் அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்லவேண்டும். 


இதுவரை நான் அவர்களிடம் என் அன்பை சொன்னதேயில்லை. 


அப்புறம் நான் என் வாழ்க்கையில் மிகவும் காயப்படுத்திய இருவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்! 


எனக்கு தேவையெல்லாம் ஐந்து நிமிடம் மட்டும் தான்! 


இதையாவது செய் ப்ளீஸ்!!” எமதூதன் பார்த்தான். 


“நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். 


இந்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை சம்பாதிக்க உனக்கு எத்தனை காலம் பிடித்தது?”


“30 வருஷம் நண்பா. 30 வருஷம். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துக்கு 30 வருஷமா நான் சம்பாதிச்ச சொத்தை தர்றேன்னு சொல்றேன். 


இது ரொம்ப பெரிய டீல். 


பேசாம வாங்கிக்கொண்டால் உன் வாழ்க்கையில் இனி நீ ஒரு நாள் கூட வேலை செய்யவேண்டாம். 


பத்து தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்!”


“எனக்கு உண்மையிலேயே இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவே முடியலே. 


முப்பது வருஷமா நீங்க பாடுபட்டு சம்பாதிச்சதை 5 நிமிஷத்துக்காக தர்றேன்னு சொன்னா… 


வாழும் போது ஏன் அந்த ஒவ்வொரு நிமிடத்தோட மதிப்பையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க? 


முடிவு வரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா? 


நேரத்தை நீங்க உண்மையிலேயே எப்படி மதிப்பிடுறீங்க? 


உங்களோட முக்கியத்துவங்கள் (PRIORITIES) என்ன? 


வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம் செய்யலே? 


யார் எத்தனை கோடிகள் கொட்டிகொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது!!”


அடுத்த சில நொடிகளில், 


செல்வந்தனின் உயிர் அவனது உடலில் இருந்து பிரிந்தது. 


அவனுடைய பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களால், கடைசியில் அவன் செய்ய விரும்பிய செயலை செய்ய ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடங்களை கூட வாங்க முடியவில்லை.


நேரத்தை ஒரு போதும் வீணடிக்காதீர்கள்.


வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் உணருங்கள்.


உங்கள் குடும்பத்தார் உட்பட அனைவரையும் நேசியுங்கள். 


நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்... படித்ததில் பிடித்தது..

2 comments:

Post a Comment